Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=ஜூலை 2008

பெரியார் பேசுகிறார்

திராவிடர்களாகிய நாம் இந்துக்கள் அல்ல என்று பிரகடனப்படுத்த வேண்டும்

Periyar இந்நாட்டில் அநேகக் கட்சிகளிருக்கின்றன. கட்சி என்பது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற பல திட்டங்களை வகுத்துக் கொண்டு, அதை மக்களிடம் சென்று கூறி, ஓட்டு கேட்டு மந்திரிகளாவதும், பட்டம், பதவிகள் தேடுவதுமாகும். திராவிடர் கழகம் அவ்விதமான அரசியல் கட்சிகளை சேர்ந்ததல்ல. அது ஓர் இயக்கமாகும். இயக்கமென்பது குறிப்பிட்ட அதிகாரத்துக்கோ, பட்டம் பதவிகளுக்கோ மட்டும் பணியாற்றுவதென்பது இல்லாமல், மக்களிடையே சென்று பயனுள்ள காரியங்களை எடுத்துக்கூறி, அவர்களின் நல்வாழ்வுக்கு அடிகோலுவதும், அந்த நிலைக்கு மக்களிடம் மனமாற்றமடையும் வகையில் பிரச்சாரம் செய்வதுமாகும்.

மந்திரிகளாவதோ, பட்டம் பதவி பெறுவதோ என்ற கொள்கை மட்டுமிருப்பவர்கள் மக்களுக்கு சீக்கிரத்தில் நல்லவர்களாகிவிடலாம்; தேசபக்தர்களாக, தீரர்களாக, தியாகிகளாக ஆகிவிடக்கூடும். ஏனெனில், மக்களை அந்த சந்தர்ப்பத்தில் அதாவது, ஓட்டு வாங்கும் நேரத்தில் என்ன கூறினால் உற்சாகமடைந்து நம்பிவிடுவார்களோ, அவைகளை வாய் கூசாது பிரமாதமாக உறுதி கூறிவிட்டு, பின்னர் பதவியில் போய் அமர்ந்தவுடன் தாங்கள் கொடுத்த வாக்குறுதியில் ஒரு சிறிது கூட நடைமுறையில் செயலாற்ற முடியாமைக்குக் கொஞ்சமேனும் வெட்கமோ, நாணமோ கொள்ளாமல் பதவி மோகத்திலேயே உழன்று கிடப்பார்கள்.

ஆனால், இயக்கம் என்று சொல்லக்கூடிய தன்மையிலுள்ள நாங்கள் அதாவது திராவிடர் கழகத்தார், மக்களிடம் குடிகொண்டுள்ள மேற்கண்ட மடமைகளை ஒழிக்க, மனதில் ஒன்றும் மறைத்து வைக்காமல், வெளிப்படையாக நாங்கள் மனதில் எண்ணுவதைக் கூறி வருகிறோம். இதனால் மக்களின் முன்னிலையிலே நாங்கள் விரோதிகளாக, தேசத்துரோகிகளாக, கடவுள் துரோகிகளாகக் கருதப்பட்டு, கற்பிக்கப்பட்டு வருகிறோம். எந்த மக்கள் சமுதாயம் மனிதத் தன்மையடைய வேண்டுமென்று கருதி உழைக்கிறோமோ, அதே மக்கள் எங்களைத் தவறாகக் கருதுமாறு, சில வஞ்சகர்களால் கற்பிக்கப்பட்டு வந்திருக்கிறோம்.

திராவிட இயக்கமும் ஓர் அரசியல் கட்சியாக வேலை செய்திருந்து மந்திரிப் பதவிகளில் அமர்ந்திருந்தால் கூட, இன்றைய நிலையில், மக்களுக்கு ஒரு சிறு நன்மையும் பயக்க முடியாது. அஸ்திவாரமில்லாத கட்டடம் எப்படி சரிந்து விழுந்து விடுமோ, அதே போன்று மக்கள் சமுதாயத்திலே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வேரூன்றி வளர்ந்து வந்துள்ள மடமைகளை, பகுத்தறிவற்ற தன்மையை, மூடப்பழக்க வழக்கங்களை, வைதிக மனப்பான்மையை, ஜாதி, மத வெறியை அறவே ஒழித்து, அனைவரையும் அறிவுள்ளவர்களாக ஆக்காத வரையில் எப்பேர்ப்பட்ட ஆட்சியிருப்பினும், அது நீடித்து இருக்க முடியாது. நாட்டிலும் அமைதி நிலவ முடியாது. ஏன்? அமைதியில்லாவிடத்தில் அறிவு நிலைத்திருக்க முடியாதல்லவா?

மக்கள் சமுதாயத்திலே யார் யார் தாழ்ந்திருக்கின்றனரோ, அத்தனை பேருக்கும் பாடுபடுவதுதான் கழகக் கொள்கையேயன்றி, சர்க்காருடன் போட்டிப் போட்டு ஓட்டு வேட்டையாடுவது கழகக் கொள்கையல்ல. நான் இதை கட்சித் தலைவன் என்ற முறையில் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்திக் கூறி வந்துங்கூட, சிலர் வேண்டுமென்றே எங்கள் மீது தவறான எண்ணத்தை, பொய்யுரைகளைக் கூறிவருகின்றனர். நாங்கள் பாடுபடுவதெல்லாம் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவென்றும், அரசியல் ஆதிக்கம் பெறவே திராவிடர் கழகம் பாடுபடுகிறதென்றும் கூறி வருகின்றனர். இப்பேர்ப்பட்ட பித்தலாட்டக்காரர்களின் போக்கைக் கண்டு பரிதாபப்படுவதைத் தவிர வேறென்னதான் செய்வது?

சுயராஜ்யம் வந்த பின்னால்கூட பார்ப்பனர், பறையன், சூத்திரன், மேல் ஜாதி என்பவைமேலும் மேலும் வளர்க்கப்படுவதா? எனவே நம் மக்கள் இன்ப வாழ்வு பெற வேண்டுமானால், மக்களை முதலில் மனிதத்தன்மை உள்ளவர்களாகச் செய்ய வேண்டும். அதற்கு வேண்டுவது நம்மைப் பிடித்துள்ள மடமைகள், சாஸ்திரங்கள், கடவுள் பேரால் சுரண்டும் தன்மைகள், புராணங்கள், வர்ணாசிரம வைதிகக் கொடுமைகள், ஜாதி மத வெறிகள் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்.

அன்பர்களே! இக்காரியங்களில் நாம் வெற்றி பெற அதிக விலை கொடுக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். ஏனெனில், நமது எதிரிகள் இன்று மிகுந்த செல்வாக்குப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அந்த அதிக விலை என்பது என்ன? திராவிடர்களாகிய நாம் இந்துக்கள் அல்ல என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்ய வேண்டுவதேயாகும். இந்து மதம்தான் ஜாதி, மதப் பிரிவுகளை, வர்ணாசிரமத்தை வலியுறுத்தி நிற்கச் செய்கிறது. அதன் பேராலுள்ள ஆதாரங்களுக்கும் நமக்கும் இருந்து வரும் தொடர்பு அறவே அகற்றப்பட வேண்டும். இவை ஒழிந்த பின்னரே, மக்கள் சமுதாயத்தில் மறுமலர்ச்சி என்னும் பகுத்தறிவு உதயமாகும். நல்லாட்சியும் நிறுவ முடியும்.

3.4.1949 அன்று விருதுநகரில் ஆற்றிய உரை


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com