Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
ஆகஸ்ட் 2008

‘இந்தியா டுடே'யின் பயங்கரவாதம்
அநாத்மா

சுதந்திர நாள் என்றாலே காவல் துறை அதிகாரிகளிடம் பத்திரிகையாளர்கள் கேட்கும் முதல் கேள்வி, “சார்! தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?'' என்பதுதான். அதற்கு அவர், மூன்று அல்லது நான்கு முஸ்லிம் பெயர்களைச் சொல்லி, அவர்களை எல்லாம் கைது செய்து பாதுகாப்பை தீவிரப்படுத்தி விட்டோம் என்பார். கைது செய்யப்பட்டவர்களின் உண்மையான பின்னணி குறித்தெல்லாம் கேள்விகள் ஏதும் கேட்காமல், போலிசார் கொடுக்கும் ‘ஒற்றைப் பத்தி' செய்திக்காக காவல் துறை சொன்னதை அப்படியே அடுத்த நாள் பத்திரிகைகளில் வாந்தியெடுத்து, தங்களின் விசுவாசத்தைக் காட்டுபவர்கள்தான் இங்குள்ள பத்திரிகையாளர்கள்.

Agitation against India Today Magazine இவ்வளவு அழும்பாய் கிடக்கும் இந்தத் துறையில் பார்ப்பனர்களும் பனியாக்களும் கைகோத்தால் என்ன நடக்கும்? 5 வயது குழந்தை குண்டு வைத்திருந்தது என்று செய்தி வெளியிட்டு அக்குழந்தையை தீவிரவாதியாக்கி, தூக்கில் போட பக்கம் பக்கமாய் எழுதுவார்கள். அதிலும் இந்து பயங்கரவாத ‘இந்தியா டுடே' பற்றி சொல்லவே வேண்டாம். தொடர்ந்து முஸ்லிம்களை தீவிரவாதிகளாகக் கட்டமைப்பதில் அதன் பங்கு, இந்திய உளவுத்துறையைக் காட்டிலும் ‘மகத்தானது'. அந்த ‘மகத்தான சேவை'யின் இன்னொரு சாதனைதான் ‘சுரணையற்ற இந்தியா' என்று தலைப்பிடப்பட்டுள்ள (ஆகஸ்டு 13) தமிழ் ‘இந்தியா டுடே'. இதே கட்டுரைக்கு ஆங்கில ‘இந்தியா டுடே' வைத்துள்ள தலைப்பு ‘ஆண்மையற்ற இந்தியா'.

அட்டைப்படக் கட்டுரை என்ற பெயரில் ‘தோற்றுப் போன தேசம்' தொடங்கி 7 தலைப்புகளில் முஸ்லிம் எதிர்ப்புக் கட்டுரைகளை அது வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு கட்டுரைக்கும் உள்ள தலைப்புகளை எடுத்துவிட்டால், அது ஒரே கட்டுரைதான். இந்தியாவில் உள்ள மொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக்கி, பின்னர் அவர்களை தூக்கில் போட்டு கொன்றுவிட்டால் இந்தியாவின் ‘தர்மம்' காக்கப்பட்டு விடும் என்ற தன்மையில் அது இருக்கிறது. மூக்கில் கட்டு, நெற்றியில் பிளாஸ்திரி போட்ட இந்து மதத்தினரின் புகைப்படங்களை வெளியிட்டு ஒப்பாரி வைக்கும் ‘இந்தியா டுடே'வுக்கு குஜராத் கொடூரங்கள் நினைவுக்கு வராது. மற்றவர்கள் மீதான நியாயத்தை அழிப்பதுதானே பார்ப்பனியம். இவ்வாறு தொடர்ந்து ‘முஸ்லிம் எதிர்ப்பு பத்திரிகை இயக்கத்தை' நடத்தி வரும் ‘இந்தியா டுடே'யின் ‘சுரணையற்ற இந்தியா'வைக் கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க சென்னை ‘இந்தியா டுடே' அலுவலகம் எதிரில் 13.8.2008 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினர்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த த.மு.மு.க.வின் மாநில துணை செயலாளர்களில் ஒருவரான ஹாரூண்ரஷீத், “அகமதாபாத், பெங்களூர் தொடர் குண்டு வெடிப்பிற்குப் பொறுப்பேற்று மெயில் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாம். அதில் குஜராத் கொலைக்கு பதிலடியாக இது செய்யப்பட்டது என்று கூறப்பட்டிருந்ததாம். இதனை யார் அனுப்பியது, எங்கிருந்து வந்திருக்கிறது என்று வேரைத் தேடிப்பார்த்தால், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் இந்த சதியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை பிரித்து தாங்கள் ஆதாயம் அடைய அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. அதே போல அமெரிக்காவிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக ‘தினமலர்' ‘இந்தியா டுடே' உள்ளிட்ட பத்திரிகைகள் செயல்படுகின்றன. “போர்க்களத்தில் கூட பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. யார் குண்டு வெடிக்கச் செய்தாலும் அது தண்டனைக்குரியது; கண்டிக்கத்தக்கது. ஆனால், எது நடந்தாலும் முஸ்லிம்கள் மீது பழிபோடுவது ஏற்புடையதல்ல. அதுவும் ஒரு மதத்தோடு முடிச்சுப் போடுவது என்பது, இங்குள்ள முஸ்லிம் மக்கள் மீது காழ்ப்புணர்வை ஏற்படுத்துகிறது.

ஜனநாயக நாட்டில் பத்திரிகையாளர்களின் பங்கு பொறுப்புடன் இருக்க வேண்டும். ‘இந்தியா டுடே' சில செய்திகளை கூறும்போது உளவுத்துறை சொல்வதாக கூறுகிறது. அது உண்மையாக இருந்தால், உளவுத்துறை அரசுக்காக வேலை செய்கிறதா அல்லது ‘இந்தியா டுடே' பத்திரிகைக்காக வேலை செய்கிறதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். சுதந்திர நாள் விழா நேரத்தில் நாகர்கோயிலில் மினி லாரி ஒன்று வெடிகுண்டு மருந்தோடு பிடிக்கப்பட்டதாக ‘தமிழ் முரசு' செய்தி வெளியிட்டது. பின்னர் நடந்த விசாரணையில் கல்குவாரிக்காக வெடி மருந்து எடுத்துச் செல்லப்பட்டது என்பது தெரிய வந்தது. இதனை எந்தப் பத்திரிகையும் வெளியிடவில்லை. அப்போது மக்கள் மனதில் எதை விதைக்க விரும்புகின்றன இந்தப் பத்திரிகைகள்?'' என்ற கேள்வியோடு முடித்தார்.

பயங்கரவாதத்தின் மூல காரணமான பத்திரிகைகளின் கருத்தியல் பயங்கரத்திற்கு முதலில் முடிவு கட்டுவோம்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com