Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
 width=
 width=ஏப்ரல் 2009

கயர்லாஞ்சி : உடைபடும் மாயைகள்
முற்போக்கு மாநிலம் – நாகரிக சமூகம் – பெரும்பான்மை மக்கள்
ஆனந்த் தெல்தும்டே


மகாராட்டிரம் ஒரு முற்போக்கான மாநிலம் என்ற மாயை, மகாராட்டிரத்தின் பொருளாதார வளர்ச்சியை, குறிப்பாக மும்பை – புனே பகுதிகளைச் சுற்றி நடைபெற்றுள்ள பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. இந்த வளர்ச்சி யானது, மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளா தார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களை மாற்றி, அதனை ஒரு வளர்ச்சியடைந்த மாநிலம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இம்மாநிலத்தின் பிற பகுதிகளின் வளர்ச்சி, நாட்டின் மிக பிற்போக்கான பகுதிகளோடு பொருந்தக் கூடியதாகவே உள்ளது என்பதை அது புறந்தள்ளுகிறது. இந்த மாயைக்கு வலு சேர்க்கும் மற்றொன்று, ஜோதிபா புலே மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரால் தொடங்கப்பட்ட பார்ப்பனர் அல்லாதோர் மற்றும் தலித் இயக்கங்கள். இம்மாதிரியான சமூக இயக்கங்கள் இருந்த போதும், மகாராட்டிரம் வேறு எந்த மாநிலத்தையும் போலவே சாதியால் ஆதிக்கம் செலுத்தப்படக் கூடிய மாநிலமாகவே இருக்கிறது என்பது வெட்கக் கேடானது. தலித்துகள் மீதான வன்முறைகள் குறித்து ஒரு மோசமான வரலாறையே அது கொண்டிருக்கிறது.

"பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணைய'த்தின் 5 ஆவது அறிக்கையில் (1998 – 1999) அளிக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, ஒரு லட்சம் மக்களை சராசரியாகக் கொண்ட ஆய்வில், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களில் மகாராட்டிரம் நாட்டின் 35 மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மகாராட்டிரம் முற் போக்கானது என்பதும். தலித்துகள் மீது கரிசனம் கொண்டது என்பதும் இந்த விவரங்களின் மூலம் முற்றிலுமாகத் தகர்ந்து விடுகின்றன. 2005இல் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களில், மகாராட்டிரம் 10 ஆவது இடத்தில் இருந்தது. மகாராட்டிரம் சமூக நீதியின் அடைக்கலம் என்ற மாயை போதுமானதாக இருக்கிறது. அதனால்தான் அரசும் சரி, சமூகமும் சரி, சாதி உணர்வை எதிர்க்க சிறப்பு முயற்சிகளை எடுப்பதில்லை. இறுதியாக, கயர்லாஞ்சி இந்த மாயையை உடைத்திருக்கிறது. இம்மாநிலத்தின் மக்கள், புலே – அம்பேத்கரின் வழி வந்தவர்கள் என்று உரிமை கொண்டாடும் தார்மீக உரிமையை அது மறுக்கிறது.

வன்கொடுமைகளை செய்பவர்கள் மீது உடனடியான, சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதே வன்கொடுமைகளை குறைப்பதற்கான ஒரே வழியாகும். வன்கொடுமை வழக்குகளில் தண்டனை வழங்கப்படுதல் என்பது குறைந்த அளவிலேயே இருப்பதால், வன்கொடுமைகள் செய்பவர்கள், தாங்கள் கவலைப்பட ஏதும் இல்லை என்ற போக்கில் அச்சமின்றி செயல்படுகின்றனர். பட்டியல் (1), மகாராட்டிர நீதிமன்றங்களில், பி.சி.ஆர். சட்டம் மற்றும் பி.ஓ.ஏ. சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை வழங்கப்பட்ட வழக்குகளின் விவரங்களை தெரிவிக்கிறது. அதைக் கண்டால், இரு சட்டங்களின் கீழுமே தண்டனை வழங்கப்பட்டவைகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைந்ததாகவே இருக்கிறது. தொடர்ந்த காலங்களில் எண்ணிக்கை கூடுவது போல் தோற்றமளித்தாலும், அது ஒரு சதவிகிதத்தினை சுற்றியே இருப்பதை காணலாம்.

மாநிலத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் இன்னமும் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை பட்டியல் (2) காட்டுகிறது. இது, பட்டியல் (1)இன் விளைவு எனலாம். இந்த பிற்போக்கான நிலையானது, தலித்துகள் மீதானவற்றில் மட்டுமாக இல்லை. மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விவரங்களும் இவ்வாறாகவே இருக்கின்றன. பெண் சீண்டல் வழக்குகளை எடுத்துக் கொண்டால், நூற்றுக்கு 11.5 பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது. இதே போன்ற வழக்குகளில் நாட்டின் ஒட்டுமொத்த சராசரியான 30.7அய் விட இது மிகவும் பின்தங்கி உள்ளது.

மகாராட்டிரத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் தண்டனை வழங்கப்படும் சராசரியானது நூற்றுக்கு 10.5 மட்டுமே. இது, நாட்டின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் இருப்பதிலேயே குறைவானது. தேசிய குற்றப் பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள "இந்தியாவில் குற்றங்கள் – 2006' அறிக்கையின்படி, பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் இந்தியாவில் சராசரியாக 51.8 சதவிகித தண்டனை வழங்கப்படுகிறது. அதிக கொடூரமான, வன்புணர்ச்சி, பெண்களை கடத்துதல் போன்றவற்றிலும் கூட மகாராட்டிரத்தின் 15.6 சதவிகித தண்டனை சராசரியானது, இந்தியாவின் சராசரியான 27 சதவிகிதத்தைவிட மிகக் குறைவானதே. வரதட்சிணை சாவுகள் குறித்த வழக்குகளில் தண்டனை சதவிகிதம் வெறும் 9.9 மட்டுமே. இது, நாட்டின் சராசரியான 33.7 சதவிகிதத்தினைவிட மிகக் குறைவானது என்பதோடு, இதைவிட குறைவாக (8.8%) குஜராத் மட்டுமே உள்ளது. கணவர் மற்றும் உறவினர்களின் வன்முறை தொடர்பான வழக்குகளில் மகாராட்டிரத்தின் தண்டனை சராசரியான 3.7 சதவிகிதம், நாட்டின் ஒட்டுமொத்த சராசரியான 22%க்கு எட்டாத தொலைவில் இருக்கிறது. சாதிப் பிரச்சினையில் மட்டுமல்ல, பொதுவாகவே மகாராட்டிரத்தின் முற்போக்குத் தன்மை என்பதே போலியானது.

முற்போக்கான சிந்தனை உடைய குறிப்பிடத்தக்க அளவிலான தலித் அல்லாதவர்கள் – அதாவது சாதிக்கு எதிரான ஒரு நாகரிகமடைந்த சமூகம் இருப்பதாக புகழ் பெற்ற மாயை ஒன்று இருக்கிறது. உண்மையில், முற்போக்குப் போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்கும் பெருமளவிலான மக்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் பொதுவான சமூகப் பிரச்சினைகளான மதவெறி, பாலியல் வேற்றுமை, வளர்ச்சி மற்றும் சுற்றுப்புறச் சூழல் சிக்கல்கள், பொதுவான தொழிலாளர் மற்றும் விவசாயக் கூலிகள் சுரண்டப்படுதல் போன்றவற்றில் தங்கள் முற்போக்குத் தன்மையை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் சாதி என்று வரும்போது மட்டும் மிக வசதியாக அதை தலித்துகள் பக்கம் தள்ளிவிட்டு விடுகின்றனர்.

கயர்லாஞ்சி எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியபோது, மதசார்பற்ற, விழிப்புணர்வு பெற்ற தலித் அல்லாத அறிவுஜீவிகள் முன் வந்து தங்கள் ஆதரவை தெரிவித்திருக்க வேண்டும். சொல்லப் போனால் அவர்களே போராட்டத்தை வழிநடத்திஇருக்கலாம். ஏனெனில், பரவலாக நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டங்கள் அனைத்துமே அரசியல் சார்பற்றவையாகவும், இவர்களுடன் முற்போக்குக் கொள்கைகளைப் பகிர்ந்து கொண்டவர்களால் முன்னெடுக்கப்பட்டவையாகவுமே இருந்தன. பின் ஏன் அவர்கள் அதில் இல்லை?

முஸ்லிம்களுக்கு எதிரான மத அடக்குமுறைகளை எதிர்த்து உற்சாகமாகப் போராட முன் வருபவர்களை, சாதி வன்முறைகள் ஏன் அசைப்பதில்லை? அப்சல் குருவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உண்மையான அக்கறை கொண்டுள்ளவர்கள், தலித்துகளுக்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதிகள் குறித்து ஏன் அக்கறை கொள்வதில்லை? மதவெறிக்கு எதிரான சிந்தனையும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சிந்தனையும் முற்போக்கானதாகக் கருதப்படும்போது, சாதிக்கு எதிரான சிந்தனையும் செயல்பாடும் மட்டும் ஏன் சாதியமாகவும், பிற்போக்கானதாகவும் பார்க்கப்பட வேண்டும்? இந்தியாவைப் பொருத்தவரையில் முற்போக்குச் சிந்தனை என்பது, சாதி எதிர்ப்பு நிலையை உள்ளடக்கியதாக இல்லை என்றே தோன்றுகிறது. சாதி பற்றி தங்கள் நிலையை மாற்றிக் கொண்டதாகக் கூறும் கம்யூனிஸ்டுகள்கூட, தாங்கள் அடையாளப் போராட்டங்கள் என்ற அளவைக் கடந்து செல்ல முடியும் என நினைக்கவில்லை. கயர்லாஞ்சியை எதிர்த்து அவர்கள் ஏன் தங்கள் தொண்டர்களை அணி திரட்டவில்லை?

2002இல் குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட இனக் கலவரத்தினை ஒட்டி நாகரிகமடைந்த சமூகத்தைச் சேர்ந்த பல முற்போக்கு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் முன் வந்து, முஸ்லிம்களுக்கு ஆதரவாக தங்கள் இருப்பைப் பதிவு செய்தனர். ஓர் ஆய்வின்படி, ஏறத்தாழ நூறு உண்மை அறியும் குழு அறிக்கைகள் குஜராத் மீது வெளிவந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. மிக தூரத்திலிருந்துகூட பலரும் தங்கள் நேரத்தை செலவிட்டு குஜராத்திற்கு வந்து இந்துத்துவ வன்முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களிடையே பணியாற்றினர். உண்மையில், இது ஒரு நாகரிகமான சமூகத்தின் பெருமைமிகு தோற்றத்தை அளித்தது. இதே போன்ற ஒரு கொடூரம் தலித்துகளுக்கு நிகழும்போது, இந்தப் பெருமைமிகு நாகரிக சமூகத்திற்கு என்னவாகிறது? ஏன் அவர்கள் தலித்துகளுடன் காணப்படுவதில்லை?

கிஷோர் திவாரி தலைமையில் இயங்கும் "விதர்பா ஜன் அந்தோலன் சமிதி' போன்ற தலித் அல்லாதவர்களின் பங்களிப்பை நாங்கள் முழு மனதுடன் பாராட்டுகிறோம். இந்த அமைப்புதான் முதன் முதலில் கயர்லாஞ்சியில் உண்மை அறியும் குழுவினை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு, தங்களுடைய தொடர்புகள் வழியே அதை வெளிக்கொணர்ந்தது. அதே போன்று சி.பி.எம். குழுவிற்கு தலைமையேற்ற பிருந்தா காரத், தேசிய அரசியல் அளவில் முக்கியப் பங்காற்றினார். குறிப்பாக, இந்த வழக்கை சி.பி.அய். விசாரிக்க வழிகோலியதில் அவருடைய பங்கு முக்கியமானது. சில தலித் அல்லாத பெண்கள் 1.11.2006 அன்று நடைபெற்ற பந்தாரா பேரணி முதல் மும்பையின் மந்திராலயாவை முற்றுகையிட்டது வரை, தொடக்கம் முதலே தீவிரமாகப் பங்கெடுத்து வந்துள்ளனர். ஆனால் இவர்களின் பங்கெடுப்புகள் ஓர் அளவைக் கடந்து செல்வதில்லை. மக்கள் திரள் போராட்டங்கள் மாநிலம் முழுவதும் பரவியபோது, இந்த தலித் அல்லாதவர்களை காண முடியவில்லை.

கயர்லாஞ்சி குறித்து கருத்தரங்குகள், விவாதங்கள், போராட்டங்கள், ஊடக பரப்புரைகள், இணையத்தள மனுக்கள் போன்ற எதுவும் தலித் வட்டத்தைக் கடந்து நடக்கவில்லை. இந்த முற்போக்கு சக்திகள், சாதிக் கொடுமைகள் என்று வரும்போது தங்கள் முகங்களை எதில் மறைத்துக் கொள்கிறார்கள்? சாதியை கையாள்வதில் மட்டும் தலித்துகள் ஏன் தங்கள் சொந்த வழிமுறைகளையும் வளங்களையும் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது? தலித்துகளை நோக்கி மட்டும் ஏன் இந்த நாகரிக சமூகம் அநாகரிகமாக மாறுகிறது?

தங்கள் மக்கள் அதிகார வர்க்கத்தில் அமர்ந்து விட்டால், அதிகார வர்க்கம் தலித்துகளுக்கு சாதகமானதாக மாறி விடும் என்று தலித்துகள் மனதில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. மற்றொரு மாயையையும் கயர்லாஞ்சி வெடித்துச் சிதறடிக்கிறது. இடஒதுக்கீட்டை ஆதரவான வாதத்திற்கு மாற்ற இந்த மாயை பெருமளவு உதவுகிறது. சாதிய வன்கொடுமைகள் நீடித்து நிற்பதற்கு அரசு எந்திரத்தின் பங்களிப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை கயர்லாஞ்சி சிறப்பாக வெளிப்படுத்துகிறது. வியக்கத்தக்க அளவில், கயர்லாஞ்சியை பொருத்த அளவில், அரசு எந்திரம் பெருமளவு தலித்துகளின் கையிலேயே இருந்தது. பண்டாராவின் காவல் துறை கண்காணிப்பாளர் (சுரேஷ் சாகர்), துணை கண்காணிப்பாளர் (வி. சுசாத்கர்), அந்தால்கான் காவல் நிலைய துணை ஆய்வாளர் (சித்தேஷ்வர் பார்னே), அப்பகுதி காவலர் (பாபன் மேஷ்ராம்), முதல் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் (அவினாஷ் ஜான் ஷிண்டே), அனுபவமிக்க மருத்துவர் இல்லாத போதே துணை மருத்துவரை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்ட மாவட்டத் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் (கே.டி. ராம்தேகே), வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை இவ்வழக்கில் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அரசு வழக்குரைஞர் (லீனா காஜ்பியே), வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரக்கூடிய பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களின் நிலையை கண்காணிக்கும் உயர் பொறுப்பில் உள்ள தலைமை அதிகாரி (ரத்நாகர் கெய்க்வாட்) ஆகிய அனைவரும் தலித்துகளே.

அதிலும் பெரும்பாலானவர்கள், போட்மாங்கே குடும்பத்தின் அதே சாதி உட்பிரிவான "மகர்' சாதியை சேர்ந்தவர்கள். இவர்களை எவரும் குறை கூறி, பார்ப்பனர்கள் தலித்துகளுக்கு எதிராக இருப்பதாக குற்றம் சுமத்திவிட முடியாது. தலித்துகளை உள்ளடக்கிய அதிகார வர்க்கத்தின் ஒட்டுமொத்த வரிசையும், ஒவ்வொரு கட்டத்திலும் நியாயத்தை வழங்கத் தவறியது. அவர்கள் போட்மாங்கே குடும்பத்தினருக்காக தனிப்பட்ட எந்த நன்மையையும் செய்ய வேண்டியதில்லை. தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை நடுநிலையோடு, உண்மையாகவும் திட்டமிடுதலோடும் செய்திருந்தாலே போதுமானது. ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை.

இது, கவனிப்பற்றுப் போகவில்லை. அம்பேத்கரின் புகழ் பெற்ற வாசகமான “படித்தவர்கள் நம்மை ஏமாற்றிவிட்டார்கள்'' என்ற தலைப்பிலேயே ஒரு தலித் நாளிதழ், குறுகிய காலத்திலேயே கட்டுரை ஒன்றை வெளியிட்டது. ஆனால் அந்த நாளிதழின் கட்டுரை ஆழமானதாக இல்லை. அது, தலித் தனி நபர்களைப் பெயரிட்டு குற்றம் சாட்டியதேயன்றி, ஒட்டுமொத்த அமைப்பை கேள்விக்குள்ளாக்குவதாக இல்லை. ஒரு தலித் தனி நபர், அதிகார வர்க்கத்திலோ, அரசாங்கத்திலோ உயர் நிலைக்குப் போவதால், ஒட்டுமொத்த அமைப்பையும் தலித்துகளுக்கு ஆதரவாக மாற்றி விட முடியும் என நம்புவது முட்டாள்தனமானது. உண்மையில், இந்த அமைப்பில் ஒரு தனி நபரின் வளர்ச்சி என்பது, அந்த அமைப்பின் தன்மைகளை அவர் உயர்த்திப் பிடிப்பதற்கு கிடைத்த வெகுமதி மட்டுமே. இதனால், பல நேரங்களில், இந்த தலித் தனி நபர்களை தனக்கு விசுவாசமுள்ளவர்களாகவும் மாற்றி விடுகிறது. வகுப்பு சிந்தனையின் பார்வையில், தலித் அதிகாரிகள் தலித்துகளின் கூட்டாளிகளாக இருப்பதில்லை. அவர்களின் பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படும் வகுப்பு மாற்றம், அவர்களை அரசியல் ரீதியாக செயலற்றவர்களாக்கி விடுகிறது.

இறுதியாக கான்ஷிராமால் முன்னெடுக்கப்பட்டு, ஓரளவு வெற்றியையும் பெற்றுத்தந்த "பகுஜன் மாயை'யை கயர்லாஞ்சி தகர்க்கிறது. பகுஜன் சமாஜ் (பெரும்பான்மை மக்கள்) கட்சி, சர்வ சமாஜ் (அனைத்து மக்கள்) என்பதை நோக்கி சென்றுவிட, பெரும்பான்மை எனும் தத்துவம் – சூத்திரர்கள், தலித்துகள் மற்றும் பிற சமூக சிறுபான்மையினருக்கு இடையிலான மாபெரும் கூட்டணி – கான்ஷிராமுக்கு உரிய நன்றியை செலுத்தியும் செலுத்தாமலும், பிரகாஷ் அம்பேத்கர், உதித் ராஜ் போன்ற தலித் தலைவர்களால் பின்பற்றப்படுகிறது. அடிப்படையில் "பெரும்பான்மை மக்கள்' வாதம் என்பது தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவதற்கான ஒரு திட்டம். சரத்பவார், "மராத்தா' சாதியை ஒத்த இடை சாதி அடையாளத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றதற்கும், முலாயம் சிங் யாதவ், "யாதவர்'களை வைத்து அதே போன்றதொரு திட்டத்தை செயல்படுத்தியதற்கும், இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. சூத்திரர்களில் கீழான சாதிகளும் , தலித்துகளும் ஒன்றிணைந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் ஒரு சக்தியாக உருவாகலாம் என "பெரும்பான்மை

மக்கள்' வாதம் நம்புகிறது. பொதுவாக, பொருளாதாரம், கல்வி போன்றவற்றில் இந்த சாதியினர் ஒரே நிலையில் வைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற பார்வையிலேயே அது முன்வைக்கப்படுகிறது. சாதி அடையாளத்தின் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும் என்று விரும்பும் "பெரும்பான்மை மக்கள்' வாதம், சாதிப் பிரிவினையில் முதன்மையான சாதி இந்துக்களுக்கும் – சாதிக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் தலித்துகளுக்கும் இடையிலானது என்பதை கவனிக்கத் தவறிவிட்டது.

"பெரும்பான்மை மக்கள்' வாதம், அரசியல் தளத்தில் ஓரளவு உதவலாம். இதை உத்தரப்பிரதேசத்தில் பி.எஸ்.பி. வெற்றி பெற்றதில் காணலாம். ஆனால் அது, சமூக அளவிலான வெற்றியாக மாறுவதில்லை. நடைமுறை உண்மை என்னவெனில், தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் தொடர்ந்து மோதிக் கொண்டுதான் இருக்கின்றனர். கயர்லாஞ்சி இதை மிக வெளிப்படையாக சித்தரிக்கிறது. சொல்லப்போனால், ஒவ்வொரு சாதிய வன்கொடுமையையும் மிகவும் பரவலாக அறியப்பட்டவைகளான தமிழ்நாட்டின் கீழ்வெண்மணி (1968), ஆந்திராவின் கரம்சேடு (1984) மற்றும் சுண்டூர் (1991), அரியானாவின் ஜஜ்ஜார் (2002) ஆகிய அனைத்திலும் இடைசாதி சூத்திரர்களே தலித்துகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். கயர்லாஞ்சியில் சூத்திரர்களுக்கு மேலான சாதியினர் இருக்கவில்லை. வன்முறையில் ஈடுபட்ட அனைவரும் சூத்திரர்களே. பொருளாதார அடிப்படையில் நோக்கினால், கிராமத்தினர் அனைவருமே ஒரே வகுப்பில் வரக்கூடும். ஆனால் அவர்களுக்கு அந்த உணர்வு இருக்கவில்லை. நான் கூறுவது நடைமுறை சாத்தியமற்றது போல் பலருக்குத் தோன்றலாம். ஆனால் உண்மையான வகுப்புணர்வை ஏற்படுத்துவதே, எதிர்காலத்தில் கயர்லாஞ்சிகளை தவிர்க்க உதவும். கயர்லாஞ்சியோ, இந்தியாவெங்கும் நடைபெறும் பிற சாதிய வன்கொடுமைகளோ – "பெரும்பான்மை மக்கள்' வாதம் ஒரு மாற்றத்திற்கான திட்டம் என்பதை முற்றிலுமாக மறுத்து நிற்கின்றன. "பெரும்பான்மை மக்கள்' வாதம் எப்போது ஒரு மாற்றத்திற்கான திட்டமாக இருக்குமென்றால், சமூகத்தின் அனைத்து கீழ் வகுப்பினருக்கு இடையிலும் சாதிகளை மீறிய ஓர் ஒற்றுமையை உருவாக்கும்போது மட்டுமே சாத்தியமாகும். ஆனால் சாதி அடையாளங்கள் இத்தகைய ஒற்றுமையை சாத்தியமற்றதாக ஆக்குகின்றன. சாதி குழுக்களுக்கு இடையிலான முரண்களைக் கடப்பது இயலாததாக இருக்கிறது. சாதிப் படிநிலையை வலியுறுத்துவது ஒற்றுமைக்கு எதிரானது. "பெரும்பான்மை மக்கள்' என்பது ஓர் அடையாளத்திற்குப் பயன்படலாம். ஆனால் போராட்டக் களத்தில் அது பயனளிக்காது.

சாதி அடையாளங்களின் அடிப்படையிலான "பெரும்பான்மை மக்கள்' வாதம், பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி.) க்கு தேர்தல் வெற்றிகளைப் பெற்றுத் தந்ததைப் போல பயன் தரலாம். ஆனால் நடைமுறையில் சாதிகளுக்கு இடையிலான சமூக முரண்பாடுகளில் சிறிதளவு மாற்றத்தை ஏற்படுத்தவும் அது உதவாது. சான்றாக, பி.எஸ்.பி. ஆட்சிக்கு வந்த பிறகு, உத்தரப்பிரதேசத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் குறைந்திருப்பதற்கு எந்த சான்றும் இல்லை. காது செவிடாகும் அளவுக்கு "தலித் ஆட்சி' குறித்து தொடர்ந்து உரக்கப் பேசப்பட்டாலும், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளில், பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் உத்தரப்பிரதேசம் தொடர்ந்து முன்னணியில்தான் இருக்கிறது!

தனது பகுஜன் கூட்டாளிகளின் வற்புறுத்தலினால், பி.எஸ்.பி. தலைவரும் மாநில முதல்வருமான மாயாவதி, மாவட்ட நீதிபதியின் அனுமதியின்றி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக்கூடாது என்ற உத்தரவை பிறப்பிக்க நேர்ந்தது. ஒரு காலத்தில் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முன்னணியில் இருந்தவர்; அதை தலித் சட்டமாகவே புகழ் பெற வைத்தவர். தற்போது அதைத் "தவறான முறையில் பயன்படுத்தக்கூடாது' என்பதைப் பற்றி தொடர்ந்து பேசுகிறார்.

கயர்லாஞ்சி இந்த அனைத்து மாயைகள் மீதும் ஒரு நடைமுறை கேள்வியை வைக்கிறது. மாயைகள் பார்வையை மறைக்கின்றன. சிந்தனையைத் தடுக்கின்றன. சிந்தனை எனும் தெளிவான நீரோடை, இந்த மாயைகளைக் கழுவி தூய்மைப்படுத்த வேண்டும் என்பதே கயர்லாஞ்சி முன்வைக்கும் செய்தி.

Khairlanji: A strange and bitter crop by Anand Teltumbde - இந்நூலில் "உடைபடும் மாயைகள் : உலகமயமாக்கல், குடிமைச் சமூகம், பெரும்பான்மை மக்கள்' என்ற தலைப்பிலான கட்டுரையின் இரண்டாவது (இறுதி) பகுதி, இங்கு வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் : பூங்குழலி


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com