Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=ஏப்ரல் 2009

பாபாசாகேப் பேசுகிறார்

நம்முடைய இயக்கத்தின் நோக்கம் சமூக சமத்துவத்தை வளர்த்தெடுப்பதே
அம்பேத்கர்

ambedkar இம்மாநிலத்தில் மிகப்பெரும் தொண்டர் படை எழுப்பப் பட்டிருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் தொண்டர் படை 1926 வாக்கில் பம்பாயில் முதலில் தொடங்கப்பட்டது. சமதா சைனிக் தளம், நமது பொது அமைப்பின் பிரிக்க முடியாத அங்கமாகும். உண்மையிலேயே அதன் மிக வலிமை வாய்ந்த கருவியாகும். ஒரு காலத்தில், நமது மக்களுக்கு இந்து சமூகத்திற்குள்ளேயே சமமான இடத்தைப் பெற்றுத் தருவது நமது நோக்கமாக இருந்தது. ஆனால் இன்று, இந்துக்களுக்கு சமமாக – தனித்து, மாறுபட்டு நிற்கவே விரும்புகிறோம். நமது இயக்கத்தின் நோக்கம் மற்றும் குறிக்கோளில் ஏற்பட்ட மாற்றத்தோடு, சமதா சைனிக் தளத்தின் நோக்கத்திலும் குறிக்கோளிலும்கூட மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தங்களது அரசியல் கோரிக்கைகளை வெளியிடுவதற்குத் தகுந்த பாதுகாப்பான மேடையை அவர்கள் பெற முடியவில்லை. எனவே, இது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. இது முடியவே முடியாத காலம் ஒன்று இருந்தது. காங்கிரஸ் இயக்கம் மிகவும் வலுப்பெற்றதாக இருந்தது. அதனால் பம்பாய் நகரில் அவர்கள் வேறு எந்தக் கட்சியையும் எந்த அரசியல் கூட்டமும் நடத்த அனுமதிக்க மாட்டார்கள். அத்தகைய கூட்டங்களை காங்கிரஸ் தொண்டர்கள் வந்து கலைத்து விடுவார்கள். யாரும் கூட்டம் நடத்த முன்வர மாட்டார்கள். இந்த அச்சுறுத்தலைச் சமாளிக்க, தொண்டர் படையின் முதன்மைப் பணியோடு ஒரு புதிய பணியையும் சேர்க்க முடிவு செய்தோம். அதாவது, அவர்களை அரசியலில் பங்கேற்க வைப்பது.

காங்கிரஸ் தொண்டர்களின் கொந்தளிப்பான அடக்குமுறை நடவடிக்கைகளிலிருந்து நமது மேடைகளைக் காக்க வேண்டும். இது, காங்கிரஸ் தொண்டர்களின் அச்சுறுத்தலைச் சமாளிக்க, மிகவும் பயனுள்ள திட்டமாக அமைந்தது. முதல் வட்ட மேசை மாநாட்டிற்கு நான் புறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், பம்பாயில் நடைபெற்ற ஒரு சம்பவம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. வட்ட மேசை மாநாட்டில் நான் பங்கேற்பதை கண்டிக்கவும், நான் தாழ்த்தப்பட்ட மகக்களின் உண்மையான பிரதிநிதி அல்ல என்று அறிவிக்கவும், பம்பாயில் நான் வசித்த இடத்திற்கு அருகிலேயே தாழ்த்தப்பட்ட மக்களின் பெயரால் ஒரு பொதுக்கூட்டத்தை காங்கிரஸ் நடத்தியது.

அது தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் கூட்டமாக இருந்தால், எந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதைப் பற்றியும் நான் கவலைப்பட மாட்டேன் என்றும், அந்தக் கூட்டம் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் கூட்டம் அல்ல என்றும் கூட்ட அமைப்பாளர்களிடம் கூறினேன். அவர்கள் முடிவு செய்திருந்த நிலையிலிருந்து விலகிச் செல்ல மறுத்துவிட்டார்கள். மாலையில் கூட்டம் நடைபெற்றது. நமது தொண்டர்கள் பெருங்கூட்டமாக வந்தார்கள். காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாகும் வகையில் அந்தக் கூட்டத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். மேசை, நாற்காலி, மணி ஆகியவற்றையெல்லாம் நமது தொண்டர்கள் வெற்றிச் சின்னமாக எடுத்து வந்து விட்டார்கள். நமது தொண்டர் படை பம்பாயில் மிகவும் வலிமை வாய்ந்தது. எப்பொழுதும், எவரும் நமது தொண்டர்களுக்குச் சவால் விடத் துணிந்ததில்லை. யாருடைய தொந்தரவும் இல்லாமல் நாம் நமது அரசியல் செயல்பாடுகளை நடத்திக் கொண்டு வருகிறோமென்றால், அது நமது தொண்டர் படையின் வலிமையினால்தான். நாம் அவர்களுக்குப் பெரிதும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.

நான் என்னளவில் அகிம்சையை நம்புகிறவன். ஆனால் அகிம்சையையும் பணிவையும் நான் வேறுபடுத்திப் பார்க்கிறேன். பணிவு என்பது வலுவற்ற தன்மை. தனக்குத்தானே புகுத்திக் கொள்ளும் வலுவற்ற தன்மை சிறப்பானதல்ல என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் சிறந்த ஞானி துக்காராம் வரையறுத்திருக்கிற வடிவில், நான் அகிம்சையின் மீது நம்பிக்கை கொண்டவன். 1. அனைத்து உயிர்களிடத்தும் அன்பும் கருணையும் காட்டுதல் 2. கேடு செய்பவர்களை அழித்தல் என அகிம்சையில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன என்று துக்காராம் மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறார். அகிம்சை பற்றிய வரையறையின் இரண்டாவது பகுதி அடிக்கடி மறைக்கப்பட்டு விடுகிறது. கேடு விளைவிப்பவர்களை அழிப்பது என்பது, அகிம்சை தத்துவத்தின் மூலாதாரமான கூறு.

அது இல்லாமல் அகிம்சை என்பது வெறும் கூடு. பேரின்பம் மட்டுமே. அது ஆக்கப்பணி அற்றுப் போகிறது. யாருக்கும் தீங்கு செய்யும் கெட்ட எண்ணம் நமக்கில்லாத வரையில், கேடு செய்பவர்களை அழிக்கும் பணியில் நம்மை நாம் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் வரையில், கையகப்படுத்துவதற்கோ, வலுவைக் கூட்டிக் கொள்வதற்கோ யாரும் அற்பத்தடை விதிக்க முடியாது. எந்த விமர்சனத்திற்கும் நீங்கள் அஞ்ச வேண்டாம். வேண்டுமென்றே எவருக்கும் தீங்கு செய்வதைத் தவிர்த்து விடுங்கள். உங்கள் உதவியை நாடுகிற ஒவ்வொருவருக்கும் முனைப்போடு உதவுங்கள். நீங்கள் நமது மக்களுக்குப் பெரும் தொண்டாற்றியவர்களாவீர்கள். இதுவரை உங்கள் நடவடிக்கைகளெல்லாம் பெரும்பாலும் நமது அரசியல் வாழ்வை ஆதாரமாகக் கொண்டிருந்தன. உங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டிய வேறு களங்களும் இருக்கின்றன.

(நாக்பூரில் நடைபெற்ற சமதா சைனிக் தள் மாநாட்டில் 20.7.1942 அன்று ஆற்றிய உரை - பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(3), பக்கம் 287)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com