Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
ஏப்ரல் 2007

‘தண்ணியெல்லாம் தர முடியாது என் ஒண்ணுக்க குடிடா’
சமூக நீதியின் தலைநகரமாம் தமிழகத்தில் போலிசின் பயங்கரம்

யாழன் ஆதி
எடையாளம் கிராமத்திலிருந்து

மனித சமூகத்தின் மீது திணிக்கப்படும் வன்முறைகளில் மிகவும் மோசமானது அரச வன்முறை. நாகரீகம் முளைக்காத காலத்திலிருந்தே அது வரலாற்றின் ‘வெள்ளைப் (ஆதிக்க) பக்கங்களாக'த்தான் இருக்கிறது. உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை எத்தனையோ அறிவுறுத்தல்கள், ஆணைகள் வந்திருப்பினும், அரசின் கால்களாக செயல்படும் காவல் துறையின் வெறியாட்டம் கட்டுக்கடங்காத ஆழிப்பேரலைகளைப் போல உயர்ந்து, எளிய மக்களைச் சுட்டெரிக்கிறது. அப்சல் குருவின் உயிர்நிலையில் மின்சாரத்தைப் பாய்ச்சிய அதே கொடூரத்தின் இன்னொரு கைதான், எடையாளம் கிராமத்தின் ஒண்டுக்குடிசையில் வாழும் ஒரு தலித் இளைஞனின் தாகத்திற்கு ‘சிறுநீரை' குடிக்க வைக்க, ஆண்குறியை வாயில் வைத்திருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கத்தைக் கடந்து ஆறாவது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சுங்கச்சாவடிக்கு முன்பு வலப்பக்கமாகத் திரும்பியவுடன் தொடங்குகிறது எடையாளம் கிராமம். உழைக்கும் மக்கள் நிறைந்த சேரிப்பகுதி. கிராமத்தின் நுழை வாயிலில், விடுதலைச் சிறுத்தைகளின் கொடி கம்பீரமாகப் பறக்கிறது. இக்கிராமத்தில் உள்ள பெரும்பான்மையான ஆண்கள், சென்னையிலுள்ள கோயம்பேடு காய்கறி அங்காடியில் வேலை செய்பவர்கள். எனவே, ஊருக்குள் பெண்கள்தான் இருப்பார்கள். ஆண்கள் விடுமுறைக் காலங்களிலும், பண்டிகை நாட்களிலும் வீடுகளுக்கு வருவார்கள். தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடியில் வேலைபார்க்கும் ஆந்திராவைச் சேர்ந்த சில ஆண்கள், எடையாளம் சேரியிலுள்ள அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் மணி என்பவரின் வீட்டில் தங்கியுள்ளனர். இவர்கள் அங்குள்ள பெண்களை சீண்டியும், தெலுங்கில் அவர்களைப் பற்றி அசிங்கமாகப் பேசியும் வந்துள்ளனர். எடையாளம் கிராம இளைஞர்கள் இத்தகையோரை எச்சரித்துள்ளனர்.

ஆனால், 3.3.2007 அன்று, மாசிமகம் திருவிழாவிற்குப் பல்வேறு ஊர்களிலிருந்து வேலைக்குச் சென்றிருந்தவர்கள் வந்து சேர்ந்திருந்தனர். ஆந்திராவிலிருந்து வந்திருந்து தங்கியிருப்பவர்கள், பெண்களைப் பற்றி இழிவாகத் தெலுங்கில் பேச, அதைப் புரிந்துகொண்ட இளைஞர் ஒருவர், பேசிய ஒருவரை அடித்திருக்கிறார். இதைக்கண்டு சுங்கச்சாவடியில் வேலை செய்பவர்களும் ஒன்றாய்க்கூட, கைகலப்பு நடந்திருக்கிறது. பிறகு, ஊரிலுள்ள பெரியவர்கள் பேசி, வாடகைக்குத் தங்கியிருப்பவர்களை காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

பிறகு 5 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில், ஒரு மாருதி காரிலும், இரு சக்கர வாகனத்திலும் வந்தவர்கள் மற்றும் சுங்கச்சாவடியில் வேலை செய்பவர்களும் ஒரு சேர வந்து எடையாளம் கிராமத்தைச் சேர்ந்த பிரபு, சிவக்குமார், சுந்தர் ஆகியோரை ஓடஓட அடித்திருக்கின்றனர். இதைத் தன்வீட்டு திண்ணையில் படுத்துக் கொண்டிருந்த கோதண்டபாணி தற்செயலாகப் பார்க்க, அவருடைய தம்பி எடிசன் மற்றும் இன்னும் சில இளைஞர்கள் திரண்டு அவர்களை விரட்டியுள்ளனர். இந்த சம்பவத்தை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியிலிருந்த காவல் துறையினர் வேடிக்கை பார்த்துள்ளனர்.

அந்தக் கிராமத்திலேயே படித்த குடும்பம் எடிசனுடையது. அவருடைய தந்தை ஓர் அரசு ஊழியர். எடிசன் துடிப்பான 26 வயது இளைஞர். ஆதிக்கத்தை தட்டிக் கேட்பவர்; காவல் துறையின் அத்துமீறல்களை எதிர்ப்பவர். அதனால் அவர் மீது மூன்று ‘சிறு வழக்குகள்' (Petty case) உள்ளன. அச்சரப்பாக்கம் காவல் துறைக்கு இதனால் எடிசன் குடும்பத்தின் மீது எப்போதும் கோபம் இருந்திருக்கிறது. சிறிது காலத்திற்கு முன்பு நடந்த ஒரு சண்டையில் எடிசனின் தாய் மற்றும் கல்லூரியில் படிக்கும் அவருடைய தங்கை இருவரையும் பொய் வழக்குப் போட்டு, 15 நாள் சிறையில் வைத்திருக்கின்றனர். இதனால் அவருடைய தந்தை அப்போது அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக இருந்த சொக்கையன் மீது வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது. எடிசன் சமூக அக்கறையுடன் அப்பகுதியில் பணியாற்றியுள்ளார் என்பதை, அப்பகுதி இளைஞர்கள் கூறுவதிலிருந்து நம்மால் உணர முடிந்தது. அச்சரப்பாக்கம் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகளின் தொண்டரணி அமைப்பாளராக உள்ள எடிசனுக்கு, அப்பகுதியிலுள்ள அனைத்துச் சேரிப்பகுதிகளும் அத்துப்படி.

அனந்தமங்கலம் என்னும் ஊரில் வசிக்கும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் அப்பகுதியின் ‘நாட்டாமை' மாதிரி நடந்து கொள்வார். அவர் வந்தால்தான் கோயில்களில் பூசையே நடக்கும். இதை எல்லாம் எடிசன் எதிர்த்திருக்கிறார்.
அவரை அடிக்க இதுதான் சந்தர்ப்பம் என்று திட்டம் தீட்டி எடையாளம் கிராமத்திற்கு வந்திருக்கிறது, அச்சரப்பாக்கம் காவல்படை. ‘மாருதி'யில் வந்தவர்களை அடித்துத் துரத்தியதற்காக, எடிசன் உள்ளிட்ட கிராம இளைஞர்களின் மீது வழக்குப் போட்டிருப்பதாகக் கூறி, எடிசனைத் தேடி அவர் வீட்டிற்கு மறுநாள் காலை வந்து எடிசனின் அண்ணன் கோதண்டபாணியிடம் விசாரித்திருக்கிறது காவல் துறை. இதை அறிந்த எடிசன் ஓடியிருக்கிறார். எடையாளம் கிராமத்திலிருக்கும் கடைத் தெருவில் உள்ள கழிப்பறையில் சென்று மறைய, காவல் துறையினர் அவரைப் பிடித்து அங்கேயே அவரின் உடைகளைக் கிழித்து முழு நிர்வாணமாக்கி தெருவில் இழுத்து வந்திருக்கின்றனர்.

கோபம், அவமானம், உக்கிரம் எல்லாம் சேர்ந்து எடிசன் வெறியுடன் கத்தி இருக்கிறார். அந்தக் கத்தலில் அதிர்ந்துபோன காவல் துறை, கிழிக்கப்பட்டு சுக்குநூறான லுங்கியை அவர் இடுப்பில் சுற்றி, ஊர் முழுக்க ஊர்வலமாய் அழைத்து வந்திருக்கிறது. வீரத்துடன் இதை எதிர்கொண்டார் எடிசன். அவருடைய அண்ணன் கோதண்டன் ‘ஏன் இப்படி செய்கிறீர்கள்?' என்று கேட்க, வழக்கே இல்லாத அவரையும் காவல் துறை அடித்து, காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றிருக்கிறது.

அச்சரப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர், எடிசனையும் கோதண்டபாணியையும் ஒரே அறையில் வைத்து அடித்துத் துவைத்திருக்கின்றனர். இரண்டு மணிநேரம் அவர்கள் இருவரையும் நிர்வாணமாக நிற்க வைத்து அடித்திருக்கிறார்கள். எடிசனின் இரு கைகளிலும் கடப்பாறையைக் கட்டி வைத்துவிட்டு, எதிரிலுள்ள விறகு மண்டியில் விறகுக் கட்டைகளை வாங்கி வந்து கொடூரமான முறையில் தாக்கி இருக்கின்றனர் - செல்வராஜ் மற்றும் சண்முகம் என்ற காவல் மிருகங்கள். உதவி ஆய்வாளராக உள்ள சுதந்திர ராஜனின் மேற்பார்வையில்தான் இவ்வளவும் நடந்திருக்கிறது.

எடிசனை பலமாக அடிக்கவே மயங்கும் தருவாயில், தாகத்திற்கு தண்ணீர் கேட்டிருக்கிறார். ‘ஏன் இப்படி அடிக்கிறீங்க?' என்று கேட்ட தண்டபாணியை, இரண்டு பேரும் பூட்ஸ் கால்களால் நெஞ்சின் மீது உதைத்திருக்கின்றனர். ‘தண்ணி தண்ணி' என்று அரற்றிய எடிசனுக்கு தலை தொங்கியிருக்கிறது. தன் பேண்ட்டின் ஜிப்பைக் கழற்றி எடிசனின் அருகில் வந்து தொங்கியிருக்கிற அவருடைய தலையை கையால் நிமிர்த்தி தண்ணியெல்லாந் தர முடியாது, என் ஒண்ணுக்க குடிடா' என்று தன் பிறப்புறுப்பை எடிசனின் வாயில் திணித்திருக்கிறார் காவலர் செல்வராஜ்.

இந்தக் கொடுமையை நேரில் பார்த்த அவருடைய அண்ணன் இதைச் சொல்லும்போது, அந்தக் குடும்பமே கதறியழுதது நெஞ்சில் தீயை வைத்துச் சுட்டதைப் போல் இன்னும் வலிக்கிறது. இப்படி கடுமையாகத் தாக்கப்பட்ட எடிசனும் கோதண்டபாணியும் மறுநாள் மதுராந்தகம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட, நீதிபதியிடம் தன் காயங்களையும் தனக்கு நேர்ந்த அவமானங்களையும் சொல்லியிருக்கிறார் எடிசன். நீதிபதி அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தியும், காவல் துறை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வெளிநோயாளிப் பிரிவில் அவர்களைக் காட்டிவிட்டு, புழல் சிறையில் அடைத்துள்ளது.

பிணையில் வெளியே வந்துள்ள கோதண்டபாணியை சந்தித்துப் பேசினோம். “கைது செய்யப்பட்ட அன்றிரவே, இவனுங்கள சும்மா உடக்கூடாது என்கவுண்டரில் போட்டுத் தள்ளனும்’ என்று போலிஸ் மிரட்டியிருக்கிறது. எடிசனைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடைபெற்றது என்கிறார் அவர். இந்த சம்பவம் நடைபெற்று, எடிசனும், கோதண்டனும் கைது செய்யப்பட்ட உடனே, எடிசனின் தாய் நாகம்மா, வெளியிலிருந்து தாக்கியவர்கள் மீது ஒரு புகாரை அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளார். ஆனால், அப்புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, எடிசன் மீது 307 போன்ற பிரிவுகளில் வழக்குத் தொடுத்துள்ளனர். எடிசனால் தாக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிற யாரும் எந்த மருத்துவமனையிலும் உள்நோயாளிகளாக இருந்து சிகிச்சைப் பெறவில்லை. ஆனால், எடிசனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் உள்ளே போட வேண்டும் என்னும் திட்டத்தில், 307 பிரிவில் வழக்கைப் பதிவு செய்திருக்கிறது காவல் துறை.

“இந்தக் கொடுமைகளுக்குக் காரணமான சுதந்திரராஜன், சண்முகம் மற்றும் செல்வராஜ் ஆகியோர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டும். இதற்கு நியாயம் கிடைக்கும் வரை விடுதலைச் சிறுத்தைகள் போராடும்’ என்று காஞ்சிபுர மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் செயலாளர் சூ.க. ஆதவன் ஆவேசத்துடன் கூறினார். காவல் துறையின் கொடூரமான வன்முறையால் ஒரு தலித் குடும்பமே அவமானப்பட்டிருக்கிறது. எடிசனுக்கு நேர்ந்திருக்கிற அவமானம் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நேர்ந்துள்ள அவமானம். ‘கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம் வேண்டும்' என்று உயிரைக் கொடுத்துப் போராடுகிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு காவல் துறை ‘எதை'த் தருகிறது என்பதை ஆட்சியாளர்களுக்கு உறைக்கும் வகையில் நாம் உணர்த்த வேண்டும். தலித் தலைவர்கள் இதையும் வழக்கமான ஒரு வன்கொடுமையாகக் கருதி, தம் பேச்சுப் பட்டியலில் சேர்த்துக் கொள்வார்கள் என்றால், அரசியல் அதிகாரங்கள் எதற்கு?



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com