Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
ஏப்ரல் 2006

பூவுலகின் நண்பரை இழந்தோம்


செழியன் என்று எல்லோராலும் பாசத்துடன் அழைக்கப்பட்ட நெடுஞ்செழியன் என்ற மனித உரிமைப் போராளி இன்று நம்முடன் இல்லை; இயற்கை அவரை ஆட்கொண்டு விட்டது. மறைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பது இயல்பான ஒன்று எனினும், ஒரு சமூக மனிதராக வாழ்ந்து மறைந்தவருக்கு இரங்கல் தெரிவிப்பது, கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. 18.3.2006 அன்று சென்னையில் நடைபெற்ற செழியனின் இரங்கல் கூட்டத்திற்கு, அவருடைய உறவினர்கள் வரவில்லை; மாறாக செழியனின் சமூகச் செயல்பாடுகளில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள்தான் பங்கேற்றனர்; தங்களுடைய ஆற்றாமையைப் பகிர்ந்து கொண்டனர்.

Nedunchezhiyan தமிழ்ச் சமூகத்தில், சாதி ரீதியாக இயங்குபவர்களே மலிவாகிப்போனதொரு சூழலில், தன்னை சாதியற்றவராக மாற்றிக் கொண்டு, சமூக மாற்றத்திற்காக இறுதிவரை போராடியவர்தான் செழியன். சமூக ஆர்வலர்களை உள்ளடக்கிய "பூவுலகின் நண்பர்கள்' என்றொரு இயக்கத்தை உருவாக்கி, கடந்த 15 ஆண்டுகளில், 50க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்து, ஓர் அமைதிப் புரட்சியை அரங்கேற்றியவர் நெடுஞ்செழியன். மரம் நடுவது மட்டும்தான் சுற்றுப்புறச் சூழலுக்கு நாம் செய்யும் உதவி என்றிருந்த கருத்தை, "பூவுலகின் நண்பர்கள்' செயல்பாடுதான் மாற்றியமைத்தது. இதற்கென்று ஓர் அலுவலகமோ, பணியாளர்களோ இன்றி, தோழர்களின் துணையுடன் அவருடைய இல்லத்தையே செயல்பாட்டுக்கான களமாக்கியவர் செழியன். இருப்பினும், அவர் தன்னை ஒருபோதும் - அதன் அமைப்பாளராகவோ, செயல் தலைவராகவோ வெளிப்படுத்திக் கொண்டதில்லை.

உலக மனித உரிமைகள் அமைப்பான "அம்னஸ்டி இன்டர்நேஷனலின்' இந்தியப் பிரிவு தலைவராக அய்ந்தாண்டு காலத்திற்கும் மேல் செயல்பட்ட நெடுஞ்செழியன், அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமைப் பிரகடனத்தை எண்பதுகளின் இறுதியில் மக்களிடையே அறிமுகம் செய்து, தமிழகமெங்கும் ஒரு லட்சம் கையெழுத்துகள் திரட்டி விழிப்புணர்வூட்டினார்; "அம்னஸ்டி' அமைப்பின் செயல்பாடுகளை விளக்கி, செய்தி மடல் நடத்தினார்; கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவதை எதிர்த்தும், அணு ஆயுதங்களுக்கு எதிராகவும் தொடர் பிரச்சாரம் செய்தார்; மாற்றுக் கல்வி குறித்த விழிப்புணர்வை ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே விதைத்தார்; தமிழால் எல்லாம் முடியும் என்று தமிழ் வழிக் கல்வியை ஆதரித்து, தமிழை அறிவியல் மொழியாக வளர்த்தெடுத்துச் செல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்; ஈழ விடுதலை குறித்து ஆக்க ரீதியான பணிகளை முன்னெடுத்தார்; இந்துத்துவத்திற்கு எதிரான பயிற்சிப் பயிலரங்குகள் நடத்தினார்; சாதி ஒழிப்பு - தலித் விடுதலை குறித்து அக்கறையோடு பங்கேற்று கருத்துகளை முன்வைத்தது மட்டுமின்றி, தலித் பிரச்சினையை ஒரு மனித உரிமைப் பிரச்சினையாக மாற்ற, உலக அளவில் செயல்பட்டு வரும் ரவி நாயரோடு இணைந்து - டர்பன் மாநாடுகள் நடப்பதற்கு முன்பே அய்க்கிய நாடுகள் அவை போன்ற மனித உரிமை அமைப்புகளில் - இப்பிரச்சினையை மனித உரிமைப் பிரச்சினையாக முன்னெடுத்தார்; ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் ஈராக் மீதான போருக்கு எதிராக கருத்தரங்குகள் நடத்தினார்; நூல்கள் வெளியிட்டார். தன்னைத் தேடி வரும் இளைஞர்களைக் கருத்தியல் ரீதியாக தயார் செய்தார். எந்த சமூகப் பிரச்சினையாக இருப்பினும், அதை முதலில் விரிவாகக் கற்று, பிறர் கருத்துகளைப் பொறுமையுடன் கேட்டு, அது தொடர்பான கருத்தரங்குகளில் பங்கேற்று, விவாதித்து, இறுதியாக அதுகுறித்து ஆக்கப்பூர்வமான முறையில் பங்கேற்பதை - அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் செய்தவர்தான் செழியன். அவர், ஒரு குழுவாக இயங்குவதில் ஆர்வம் கொண்டிருந்தாலும், "குழு அரசியலு'க்குத் தன்னை ஒருபோதும் ஆட்படுத்திக் கொண்டதில்லை.

அம்பேத்கர் "கற்பி' என்றார். அது முதலில் தன்னை சிந்தனை ரீதியாக கற்பித்துக் கொண்டு, அடுத்து தமது குடும்பத்தினரிடம் சிந்தனைத் தாக்கத்தை ஏற்படுத்துவது என்பதுதான் அடிப்படை. இன்றளவும் பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போர் செய்ய மறக்கும் பணி இது. இதில் செழியனின் பாணி தனித் தன்மையானது. அவர் தான் எடுத்துக் கொண்ட எந்த சமூகப் பிரச்சினையாக இருந்தாலும், அதைத் தமது குடும்பத்தினரிடம் விவாதித்து அவர்களை முதலில் பயிற்றுவிப்பதற்குத் தவறியதே இல்லை. சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களுடைய சாதி அடையாளத்தை ஏதாவது ஒரு சூழலில் வெளிப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், செழியன் தன்னுடைய சாதி அடையாளத்தை இறுதிவரை எங்கும் வெளிப்படுத்திக் கொண்டதே இல்லை. பெரியாருடைய கடவுள் மறுப்பு, சாதி மறுப்புக் கொள்கையை, எவ்வித விளம்பரமுமின்றி தன் குடும்ப அளவில் மெய்ப்பித்தவர். தமக்கும், தமது உடன்பிறப்புகளுக்கும் அவர் நடத்தியது அனைத்தும் சாதி மறுப்புத் திருமணங்கள்தான். சாதி ரீதியாக மக்களை அணிதிரட்டுவதுதான் எதார்த்தம் என்ற கற்பிதங்களை எல்லாம் மூர்க்கமாக எதிர்த்தவர்; அத்தகையோரிடம் பழக மறுத்தவர்.

பெரிய இயக்கங்கள், அமைப்புகள், நிறுவனங்களுடன் இணைந்து பொதுப் பிரச்சனைகளுக்காக சில தருணங்களில் பணியாற்றினாலும், அவர் ஒருபோதும் தன்னை முன்னிறுத்திக் கொண்டதில்லை. தன்னெழுச்சியாக வரும் இளைஞர்களை, அவர்களின் சிறு செயல்பாடுகளையும் ஆதரித்து, ஊக்கப்படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார். மேடை உரைவீச்சுகளின் மீது அவருக்கு நம்பிக்கை இருந்ததில்லை. குழு விவாதங்கள் மூலமே தீவிர செயல்பாட்டாளர்களை - கருத்தியல் ரீதியாக உருவாக்க முடியும் என்று உறுதியாக நம்பினார்; செயல்படுத்தினார். செழியன் ஒரு தொலைநோக்குச் சிந்தனையாளர். "பூவுலகின் நண்பர்கள்' அவர் செயல்பாட்டினால் ஈர்க்கப்பட்டதன் விளைவு, இன்று தமிழகமெங்கும் 500க்கும் மேற்பட்ட "நண்பர்கள்' உருவாகியுள்ளனர். பலரும் பல தளங்களிலும் இயங்கி வருகின்றனர் - சமூக மனிதர்களாக. அவர் உருவாக்கிய பூவுலகின் நண்பர்கள், சுற்றுப்புறச் சூழலுக்கு மட்டும் நண்பர்கள் அல்ல; மனித உரிமை, சமூக நீதி, சாதி ஒழிப்பு போன்றவற்றின் நண்பர்கள்!

கடந்த மூன்றாண்டுகளாகத்தான் அவர் "டாக்டர் அம்பேத்கர் மய்ய'த்தின் அறங்காவலராக இருந்தார். இருப்பினும், கடந்த பத்தாண்டுகளில் "தலித் முரசு' வளர்ச்சியில் அவருடைய பங்களிப்பு அளவிட முடியாதது. குறிப்பாக, "தலித் முரசி'ல் "மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கும் இதழ்கள்' என்ற தலைப்பில் எழுதிய தொடர், மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அவருடைய நினைவாக இத்தொடரை "தலித் முரசு' ஒரு நூலாக வெளியிட உள்ளது. மலேசியாவில் இருந்து செயல்படும் "பூவுலகின் நண்பர்கள்' அவரது நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் "செழியன் பெயரில் விருது' ஒன்றை அளிக்க முடிவு செய்துள்ளனர்.

நெடுஞ்செழியனை நினைவு கூர்வது என்பது, அவர் விட்டுச் சென்ற பணிகளை முன்னெப்போதைக் காட்டிலும் உத்வேகத்துடனும், தொய்வின்றியும் எடுத்துச் செல்வதுதான். மனித உரிமைகளுடன் கூடிய, சூழல் கேடுகள் அற்ற ஒரு சமூகத்தையே அவர் பூவுலகாகப் போற்றினார்.

பூவுலகின் நண்பர்கள்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com