KeetruCinemaNews
சற்று முன் கிடைத்த தகவல் - பாலசுப்பிரமணியன்

திரைக்கு வர இருக்கும் புதிய தமிழ் படங்களில் ஒன்றான "சற்று முன் கிடைத்த தகவல்" படத்தின் பாடல்களை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. வார்த்தைகளை மூழ்கடித்து மூச்சுத்திணற செய்யும் இன்றைய தமிழ் திரைப்பாடல்கள் நடுவே இளையராஜாவின் அன்றைய 80 களை நினைவூட்டும் வகையில் புது ரத்தம் பாய்கிறது பாலாவின் பாடல்களில். இவர் இந்தப் படத்தில் தான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

சுட்டிப்பூவே...(பாடகர்கள்:அனுராதா ஸ்ரீராம்-மகேஷ்)

அமைதியான நதியின் ஓட்டம் போல மெல்லிசையாய் வழியும் பாடல். அனுராதா ஸ்ரீராமின் இழையும் குரலில் புல்லாங்குழல் கசிந்துருக அருமையான அன்பான வரிகளில் உள்ளம் கவரும் பாடல். புதிய பாடகர் மகேஷின் உயிரோட்டம் நிறைந்த குரலில் ஒரு நல்ல மெலொடி என நாளை பேசப்படும்.

கொஞ்சும் மொழி...(பாடகர்கள்:ஹரீஷ் ராகவேந்திரா-சின்மயி)

ஹரீஷின் குரலில், சட்டென ஒரு விமானம் வானில் எழும்புவது போல பீறிடும் வயலின்கள் பின்னணியில் கிளம்பும் பாடல். பாடகர்களின் தெளிவான தமிழ் உச்சரிப்பில் தமிழ்-கொஞ்சும் மொழியாக இனிக்கிறது. ஹரீஷ்-சின்மயி குரல்கள் பாடலுக்கு அழகு சேர்க்கின்றன.

சாய்-சாய்...(பாடகர்கள்:கார்த்திக்-மதுமிதா)

ஆங்கில இசையின் ஆல்பம் சாயலில் இன்னொரு மெல்லிசைப் பாடல். கவிதையான வரிகள். பாடலின் இசை-தாளம் போட வைக்கிறது. இளம் வயதினரை ஆடவும் வைக்கலாம் இநதப் பாடல்.

ரோஜா வனம்...(பாடகர்: அனுராதா ஸ்ரீராம்)

ஆளுமை நிறைந்த அனுராதா ஸ்ரீராமின் அதட்டும் குரலில் மிரட்டுகிறது இந்தப்பாடல். எல்.ஆர்.ஈஸ்வரிக்குப் பிறகு இவர் அதிரடியாகப் பாடும் விதம் அற்புதம். பாடலின் இடையில் ராப் இசையுடன் மென்மையும் வன்மையும் மாறிமாறித்தோன்றும் இசை நம்மை கேட்கும் போதே வெவ்வேறு தளத்திற்கு கொண்டு செல்கின்றன.

ஹிட்சு காக்கு...(பாடகர்கள்: ராம் ஷங்கர்-சாய்இமகேஷ்)

வேகமாக செல்லும் இந்த பாடலும் கேட்பதற்கு இனிமையாய் இருந்தாலும் பாடல் வரிகளும் இசையும் ஜனரஞ்சகத்துக்கு இசையமைப்பாளர் செய்து கொண்ட சமரசமாகவே தோன்றுகிறது. ஒருவேளை படத்தின் காட்சி அமைப்புக்கு ஏற்றதாக இருக்கலாம்.

பிச்சாவரம் குப்பத்துல்ல...(பாடகர் திப்பு)

குத்துப்பாடலாக இருந்தாலும் திப்புவின் குரலும் பழைய பாடகர் ஜெயசந்திரன் போன்ற தெளிவான தமிழ் உச்சரிப்பில். பாலாவே எழுதி இசையமைத்திருக்கிறார். பாடலின் பிரம்மாண்டமும் இசை செறிவும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தவே செய்கின்றன.

படத்தின் இசையமைப்பாளர் பாலா, இயக்குனர் தக்காளி சீனிவாசன், பாடகர் மகேஷ் அனைவரும் கோவை பி.எஸ்.ஜி பொறியல் கல்லூரி நண்பர்கள் என்பதும் காலம் அவர்களது கலை தாகத்தை கலைத்து விடாமல் காத்து வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- பாலசுப்பிரமணியன் ([email protected])