Keetru Bank Worker's Unity
BWU Logo
அக்டோபர் 2007

தோழர் அசீஸ் சென்: எனது தலைவர் - எனது நண்பர்

தோழர் அசீஸ் சென், விடுதலை போராட்டத்திலும் தொழிற்சங்க இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டிருந்த குடும்பத்தில் அக்டோபர் 8, 1922 அன்று பிறந்தார். அவரது தாய்மாமன்களில் ஒருவர் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர். அவரது தந்தை, காலஞ்சென்ற அஜீத் சென் இம்பீரியல் வங்கியில் (தற்போதைய ஸ்டேட் வங்கி) 1943ல் தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்கியவர். அவரது அரும்பணிகளுக்குச் சாட்சியமாய், இன்றும் ஸ்டேட் வங்கி ஊழியர் சம்மேளனம் இயங்கிக் கொண்டிருக்கும் (கல்கத்தா) அலுவலக கட்டிடத்திற்கு ‘அஜித் சென் பவன்' என்று அவரது பெயர்தான் சூட்டப்பட்டிருக்கிறது. எனவே, அசீஸ் சென் வங்கி ஊழியர் தொழிற்சங்கத்திலும் இடதுசாரி அரசியல் இயக்கங்களிலும் இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்பதில் வியப்பேதுமில்லை.

ரிசர்வ் வங்கி ஊழியர் சங்கம், தோழர் அசீஸ் 1944 ல் பணியில் சேருவதற்கு நீண்ட காலம் முன்பே துவங்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் தலைமைப் பொறுப்பேற்ற பிறகு உருக்கொண்ட போர்க்குணமிக்க சங்கமாய் அதற்கு முன் அது செயல்பட்டு வரவில்லை. அவரது தலைமைப்பண்பு அந்த நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடக்கவில்லை. வெளியே இருந்தபொதுவான ஊழியர் கவனத்தையும் அது ஈர்த்தது - முக்கியமாக, வங்கி ஊழியர் இயக்கத் தலைமகன் நரேஷ் பால் என்கிற ‘நரேஷ் பால்' அவர்களின் பார்வையும் விழுந்தது. பிறகு அந்த ஒத்த கருத்துடையோர் வரிசையில் அவர் இடம் பெற அதிக காலம் எடுக்கவில்லை.

எனக்கு இந்த ‘சம சிந்தனையாளர்களோடு' பரிச்சயம் கிடைத்தது ஆகஸ்டு 1959ல். யூனியன் வங்கி ஊழியர் அஸோசியேஷன்- கல்கத்தா உதயமான நேரம் அது. 1959 டிசம்பரில் அகில இந்திய யூனியன் வங்கி ஊழியர் சம்மேளனம் உருவான பிறகு, அந்த வட்டத்தோடு எனது நெருக்கம் மேலும் கூடியது.

நரேஷ் தா, அசீஸ் சென் இருவருக்குமிடையே இருந்த நுட்பமான வேறுபாட்டை முதன்முதலாக நான் உணர்ந்தது எப்போதென்றால், தில்லியில் 1966ல் நடைபெற்ற AIBEA மாநாட்டில் தான்! முதல் இருதரப்பு ஒப்பந்தத்திற்கு முன்பாக ஒரு உடன்பாடு எட்டப்பட்டிருந்த பின்னணியில் நடந்த மாநாடு அது. அந்த உடன்பாட்டை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதைத் தக்க தொழிற்சங்கக் கோட்பாடுகள் மூலம் நரேஷ் தா எங்களுக்கு விளக்கிச் சொன்னார். தோழர் அசீஸ் சென் மாநாட்டில் அந்த உடன்பாட்டிற்கு எதிராகக் குரல் கொடுப்பதில் முன்னணியில் நின்றார். தொழிற்சங்க இயக்கத்திற்குத் தத்துவார்த்த சுருதி சேர்ப்பவராகவும், எந்தப் பாதையில் வங்கி ஊழியர் பயணிக்க வேண்டுமென்று வெளிச்சம் காட்டுபவராகவும் நரேஷ் தாவைப் பார்த்தேன். அந்தப் பாதையில் எங்களைத் தமது வீரஞ்செறிந்த தலைமையில் அணிதிரட்டியவராக அசீஸ் சென்னைப் பார்த்தேன்.

நரேஷ் பாலை நரேஷ் தா என்று விளிப்பவன், அசீஸ் சென்னை அதே முறையில் குறிப்பிடவில்லை என்பதை வாசகர்கள் கவனித்திருப்பீர்கள். அவர் என்னைக் காட்டிலும் 9 வயது மூத்தவரென்ற போதிலும் ஒருபோதும் நான் அவரை ‘அசீஸ் தா' என்று அழைத்ததில்லை. எங்களிடையே நிலவிய வித்தியாசமான உறவுமுறை தான் காரணம். அது ஏதோ ஒரு தலைவனுக்கும், தொண்டனுக்குமிடையே காணப்படுவது மாதிரியோ, நெருங்கிய நண்பர்களுக்கிடையேயானது போன்றோ உள்ள உறவா என்றால் இரண்டுமாகவும் இருந்தது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் இரண்டும் இழைந்த ஓர் உறவு அது. நான் எப்போதுமே அவரைப் போற்றத்தக்க ஒரு தலைவனாகக் கொண்டாடினேன். அவர்என்னை அவரது நண்பராக பாவித்தார். இந்த உறவு, 1999ல் அவர் BEFI தலைவராகவும், நான் பொதுச் செயலாளராகவும், செயல்படத் துவங்கிய பின்னர் இன்னமும் கெட்டிப்பட்டது. எனது செயல்பாடுகள் சிலவற்றின் மீது அவருக்கு விமர்சனம் இருந்தது. அதை எப்போதும் ஆக்கப்பூர்வமாக நான் உள்வாங்கிக் கொண்டேன்.

அவரோ எனது செயல்பாடுகள் மீதான அந்த அபிப்பிராயங்களை எப்போதும் மற்ற யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை, எங்களிடையே இருந்த நெருக்கம் எப்படிப்பட்டது என்பதை சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் விளக்கும். நாங்கள் இருவரும் சென்னையில் இருந்த ஒரு சமயம். அவருக்கு எற்கனவே இருதய நோயின் அறிகுறிகள் இருந்தது. அன்று உடல்நலமின்றிப் போயிருக்கவே, சென்னை தோழர்கள் ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நானும் உடன் சென்றேன்.

அவரை பரிசோதித்த மருத்துவர் உடனடியாக அவர் புகை பிடிப்பதை நிறுத்திவிட வேண்டுமென்றார். அதன் அவசியத்தை உணர்ந்திருந்த நான், அடுத்தமுறை (அசீஸ்) புகைப்பிடிப்பதைப் பார்த்தால் அவருக்கு ஒரு அடி கொடுப்பேன் என்று அவர் எதிரிலேயே சொல்லிவிட்டேன். மருத்துவரோ, ‘நீங்கள் திரு. சென் அவர்களது நண்பரென்றால் வெறுமனே சொல்லிக் கொண்டிருக்காமல், செயலிலும் செய்து காட்டுங்கள்' என்றார். நான் என்ன சொன்னேனோ அதைச் செய்யத் துணிந்திருக்க மாட்டேன். ஆனால், வேறு யாருக்கும் அப்படிச் சொல்லக் கூட துணிவு இருந்திராது. அசீஸ் நான் பேசியதை மிக சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டார் . அதுதான் அசீஸ்!

அசீஸ் சென் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலே அடைபட்டு இருந்த காலங்களில் தொலைபேசி வழியாக பரஸ்பரம் உடல்நலம் பற்றி அடிக்கடி வினவிக் கொள்வோம். நான் அவரை தொலைபேசியில் அழைத்ததைவிட அவர்தான் அதிகம் என்னை அழைத்திருப்பார் என்பதை ஒரு குற்றவுணர்ச்சியோடு நான் ஒப்புக் கொள்ள வேண்டும்.

ஆகஸ்டு 21 அன்று மாலை அவர் என்னை தொலைபேசியில் அழைத்தார். தமது நகைச்சுவை இழையோடும் குரலில் வழக்கமான பாணியில் ‘டாக்டர் பரதன்' என்று விளித்து, எனது உடல்நலம் பற்றி விசாரித்தார். அவர் பேசிய விதத்திலிருந்து, அடுத்த நாள் காலை அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவார் என்றோ, அதுதான் எங்களிடையே நிகழ்ந்த இறுதி உரையாடல் என்றோ நான் கற்பனை செய்து கூடப் பார்க்கவில்லை.

அவரைப் பார்க்க நான் மருத்துவமனைக்குச் சென்றேன். என்னைப் பார்க்கவோ, குரலைக் கேட்கவோ முடியாத நிலையிலிருந்தார் அவர்!

பேங்க் வொர்க்கர்ஸ் ஃபோரம் இதழில் வெளிவந்த ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கம். (தமிழில் : எஸ்.வி.வி.)