Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Bank Worker's Unity
BWU Logo
அக்டோபர் 2007

ஒரு புரட்சியாளனின் கதை
சிவவர்மா

1980களில் ஒரு நாள், நான் கான்பூரிலிருந்து லக்னோவிற்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன். என் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சக பயணி ஒருவர் நான் அப்போதுதான் படித்து முடித்திருந்த ஒரு சிறிய புத்தகத்தை எடுத்துப் புரட்டிப்பார்த்தார். அது, பகத்சிங் எழுதிய, "நான் ஏன் நாத்திகn?" ஆகும். ஒரு சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு, "இந்த அளவிற்கு ஆழமான விஷயங்களை எழுதக்கூடிய அளவிற்கு, உண்மையில் அவன் திறமை படைத்தவனா?" என்று ஆச்சர்யத்துடன் அவர் கேட்டார்.

அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் தத்துவத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றுகிறாராம். ஒரு புரட்சியாளன் பற்றி அவர் வைத்திருந்த மதிப்பீடே அலாதியானது. உயரமாக, உறுதிமிக்கவனாக இருப்பான், அவன் மண்டையில் ஒன்றும் இருக்காது, நிறைய வெடிகுண்டுகளும், ரிவால்வர்களும் வைத்திருப்பான், தன்னல மறுப்பும் தைர்யமும் கொண்டிருந்தாலும் மனிதர்களைக் கொல்வதில் இன்பம் காணும் பேர்வழி, ரத்த தாகம் எடுத்த அதிதீவிரவாதி. ஆயினும் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த இளைஞர்கள் அவ்வளவு அறிவு பெற்றிருக்க மாட்டார்கள். இதேபோன்று பலர் புரட்சியாளர்கள் குறித்துச் சொல்லும் கதைகளையே இவரும் இதுவரை கேட்டிருக்கிறார். இத்தகைய மனிதர்கள் குறித்து இரக்கப்படுவதைத் தவிர நாம் வேறென்ன செய்ய முடியும்!

ஆனாலும், நம் வீரத் தியாகிகள் குறித்து வேண்டுமென்றே சீர்குலைவுப் பிரச்சாரம் மேற்கொள்வோர் குறித்து நாம் என்ன நிலை எடுப்பது, ஒரு சமயம், 1950களில் உத்தரபிரதேச மாநிலத்தின் பள்ளிகளில் எட்டாம் வகுப்புக்கான வரலாற்றுப் பாடப்புத்தகம் ஒன்றைப் புரட்டிப் பார்த்தேன். அதில் ஆசாத் குறித்து ஓர் ஐந்தாறு பத்திகள் குறிப்பிடப்பட்டிருந்தது. "சந்திரசேகர் ஆசாத் என்னும் உள் தலைப்பில், ஆசாத் ரத்தம் சிந்துவதிலும் கொள்ளையடிப்பதிலும் நம்பிக்கை கொண்டவன் என்றும், ஆனால், அதிர்ஷ்டவசமாக நாடு அவனது போராட்டப் பாதையை ஏற்றுக்கொள்ளாமல், காந்திஜியின் பாதையைத் தேர்ந்தெடுத்தது என்றும் அதை எழுதிய நபர் குறிப்பிட்டிருந்தார்.

ஏ.எல். ஸ்ரீவஸ்தவா என்கிற அந்த நபர் புரட்சியாளர்கள் குறித்து இவ்வளவு இழிவாக எழுதியிருந்ததை என்னால் நம்புவதற்கே மிகவும் கடினமாக இருந்தது. இந்த நபர் அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வாதிகளின் தயவால், புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியராகக் கருதப்பட்டவர். ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் சென்றுவிட்டாலும், அவர்கள் உருவாக்கிய அடிமைகள் அடிமைப் புத்தியுடன் இன்றும் இருந்து வருகிறார்கள் என்பதும், வெள்ளையனுக்கு வெண்சாமரம் வீசிய அடிமைப்புத்தி இன்னும் அவர்களை விட்டு நீங்கிடவில்லை என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது. அதனால்தான் இப்பேர்வழி, புரட்சியாளர்களை ரத்த தாகம் எடுத்த பேய்கள் என்றும், இவர்களுக்கு வாழ்க்கையில் எவ்விதமான கொள்கையும் லட்சியமும் குறிக்கோளும் கிடையாது என்றும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறார்கள்.

..........

பகத்சிங் புரட்சி இயக்கத்திற்கு மூன்று முக்கிய முழக்கங்களை விட்டுச்சென்றிருக்கிறார். (1) இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி வெல்லட்டும்), (2) தொழிலாளி வர்க்கம் வெல்லட்டும் மற்றும் (3) ஏகாதிபத்தியம் ஒழியட்டும் என்பதே அந்த மூன்று முழக்கங்களாகும். இந்த மூன்று முழக்கங்களைச் சுற்றியே தன் அனைத்து நடவடிக்கைகளையும் அற்புதமாக அமைத்திருந்தார். முதல் முழக்கம், புரட்சி இயக்கத்தின் கண்ணோட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. புரட்சி இயக்கத்தின் பணிகள், நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தவுடன் முடிந்துவிடாது, அது மேலும் தொடரும். மனிதனை மனிதன், ஒரு நாட்டை மற்றொரு நாடு சுரண்டுவதை அனுமதிக்கும் இந்த சமுதாய அமைப்பு முறையை அழித்தொழித்து, சமூகத்தின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பின் அடிப்படை மாற்றத்தை உருவாக்கும் வரை அதன் பணி தொடரும்.

இரண்டாவது முழக்கம், எதிர்காலம் உழைக்கும் வர்க்கத்திற்குச் சொந்தமானது என்று பிரகடனம் செய்கிறது. தொழிலாளி வர்க்கம்தான் புரட்சியை உந்தித்தள்ளும் சக்தியாகும். இந்த முழக்கத்தை இன்றைய தினம் சோசலிசத்தைக் காட்டிக்கொடுப்போர் கைவிட்டுவிட்டார்கள். சோசலிசத்தை உறுதியாகத் தூக்கிப்பிடித்த நம்முடைய பழைய புரட்சியாளர்களில் ஒரு சிலர்கூட இந்தப் போக்கிற்கு இரையாகி விட்டார்கள் என்பதே இதில் மேலும் துரதிர்ஷ்டவசமாகும். அவர்கள் முதலாவது முழுக்கத்தையும் மூன்றாவது முழக்கத்தையும் அழுத்தமாகக் கூறும் அதே சமயத்தில் இரண்டாவது முழக்கத்தைக் கைகழுவிவிட்டார்கள்.

மூன்றாவது முழக்கம், உடனடியாக நாம் மேற்கொள்ள வேண்டிய பணியையும் குறிப்பிடுகிறது . ஓர் அடிமை நாடு, ஒரு வர்க்கமற்ற சமுதாயத்தை நிறுவிடவோ, சுரண்டலை ஒழித்திடவோ, மக்களுக்கிடையே சமத்துவத்தைக் கொண்டு வரவோ முடியாது. இத்தகைய ஒரு நாட்டிற்கு, முதலாவதும் முக்கியமானதுமான பணி, தன்னைப் பிணைத்திருக்கக்கூடிய ஏகாதிபத்திய அடிமைச் சங்கிலியைத் தகர்த்தெறிவது என்பதுதான். வேறு வார்த்தைகளில் சொல்லுவதனால், ஓர் அடிமை நாட்டில் புரட்சி என்பது, ஏகாதிபத்திய எதிரப்பு குணம் கொண்டதாக, காலனியாதிக்க எதிர்ப்பு குணம் கொண்டதாகவே இருந்திடும். அதனால்தான், பகத்சிங் "ஏகாதிபத்தியம் ஒழியட்டும்" என்கிற முழக்கத்தை எழுப்பினார். அவர் "பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழியட்டும்" என்று சொல்லவில்லை. அப்படிக் கூறியிருந்தால், அது புரட்சித் தத்துவத்தையே சிதைப்பது போலாகிவிடும். பகத்சிங், காலனியாதிக்கத்தை அதன் வேரோடும் வேரடி மண்ணோடும் முற்றிலுமாக அழித்தொழிப்பதற்காகக் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதனால் சிலர் நம்மை நம்ப வைப்பதற்கு முயல்வது போல, அவர் ஒன்றும் குறுகிய தேசியவாதியல்ல. அவர் ஓர் விரிந்த அளவிலான சர்வதேசிய கண்ணோட்டத்தைப் பெற்றிருந்த, இந்திய மக்களை மட்டுமல்ல, உலக மனித சமுதாயத்தையே ஏகாதிபத்தியத்தின் தளையிலிருந்து பிடுங்கி எறிந்து, விடுதலையடைந்திட வேண்டும் என்று விரும்பிய மாவீரராவார்.

பகத்சிங் உண்மையில் எப்படிப்பட்ட நபர் என்பதை சாமானிய மக்கள் அறிய மாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரை, பகத்சிங், பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியவர் என்றும், லாலாஜியைக் கொன்றதற்காக, சாண்டர்ஸ் என்கிற வெள்ளை அதிகாரியைப் பழிக்குப் பழி வாங்கிய வீரர் என்றும் தான் அறிவார்கள். அதே பகத்சிங், பல்வேறு திறமைகள் பெற்றிருந்த ஒரு மாபெரும் அறிவுஜீவி என்பது பலருக்குத் தெரியாது. அதன் காரணமாகத்தான் புரட்சி இயக்கத்தின் தத்துவார்த்தப் பகுதியை அதிலும் குறிப்பாக பகத்சிங் நிலையினைச் சீர்குலைப்பதென்பது பலருக்கு எளிதாக இருக்கிறது. தங்களுக்கேற்ற வகையில் புரட்சி இயக்கத்திற்கு உருவம் கொடுப்பதற்கு இறங்கியிருக்கிறார்கள். எனவே அத்தகைய சீர்குலைவு நடவடிக்கைகளை எதிர்த்துப் போரிடுவதென்பது இன்று நம் முன் உள்ள முக்கிய கடமைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. அதனால்தான், பகத்சிங் எழுதிய அனைத்துப் படைப்புகளையும் தேடிக் கண்டுபிடித்து ஒட்டுமொத்தமாக உங்கள் முன் வைக்க முயன்றிருக்கிறேன், மாபெரும் அத் தியாகியைக் குறித்து வாசகர்கள் தாங்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறேன்.

விடுதலைப் பாதையில் பகத்சிங்
தொகுப்பு : சிவவர்மா, பூபேந்திர ஹூஜா
பாரதி புத்தகாலய வெளியீடு
448 பக்கங்கள் விலை: ரூ. 200/-


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com