Keetru Bank Worker's Unity
BWU Logo
அக்டோபர் 2007

வரலாறு என்பது வெறும் ராஜா ராணி கதையல்ல
ராஜன்பாபு

இந்தியாவின் மக்கள் தொகையில் 90 சதவீதத்தினர் சார்ந்திருக்கும் ஏழை வர்க்கத்தில்தான் நானும் பிறந்தேன். கோவை அரசு கலைக்கல்லூரியில் வரலாறு பாடத்தில் இளங்கலை பட்டமும், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் முதுகலை பட்டமும் படித்து விட்டு 1970 ஆம் வருடம் சென்னை விவேகானந்தா கல்லூரியில் வரலாற்றுத் துறை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன்.

கல்லூரி ஆசிரியர்கள் ஒரு விஷயத்தை தனியே பேசும்போது ஒரு மாதிரியாகவும், அதே விஷயத்தை வகுப்பினில் பேசும்போது வேறு மாதிரியாகவும் பேசும் போலித்தனங்களை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அப்போது, விவேகானந்தா கல்லூரி பல்வேறு வர்க்கங்களை இணைக்கும் சக்தியாக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தை மட்டுமே உயர்த்தும் சக்தியாக இருந்து வந்தது.

மார்க்சீயத் தத்துவத்தின்பால் ஈடுபாடு ஏற்பட்டு கார்ல் மார்க்ஸின் நூல்களைப் படித்த பிறகு, கல்வித்துறையில் சில சீர்த்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்; வரலாற்றை சொல்லித் தரும் போது பாடத் திட்டங்களை மட்டுமே சொல்லித் தராமல், அதன் பின்னணியையும், வரலாற்றின் மறைக்கப்பட்ட மறுபக்கத்தையும் மாணவர்களிடம் கூற வேண்டும் என்ற ஞானம் பிறந்தது.

அப்போது (1975) இந்தியாவில் எமர்ஜென்சி அமுலாக்கப்பட்டிருந்த நேரம். நான் இந்திய வரலாற்றை வகுப்பில் எடுக்கையில், ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த நேரத்தில் இருந்த ரௌலட் சட்ட ஷரத்துக்களையும், இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் (`மிசா') ஷரத்துகளையும், கரும்பலகையில் அருகருகே எழுதினேன். பின்னர் மாணவர்களைப் பார்த்து "இரண்டு காலத்திய இந்திய பாதுகாப்பு சட்டத்தின் ஷரத்துகளும் ஒன்றாக இருக்கின்றன; ஆனால் இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதாகக் கூறுகிறார்களே" என்ற கேள்வியுடன் வகுப்பை முடித்தேன்.

இந்த விஷயத்தை உளவுத்துறையிடம் ஒரு மாணவன் புகாராகக் கூறிவிட்டான். உளவுத் துறையில் இருந்து வந்த அதிகாரிகள் பிரின்சிபாலை சந்தித்து இது பற்றி விளக்கம் கேட்டிருக்கின்றனர். பிரின்சிபால் அந்த அதிகாரிகளை சமாளித்து அனுப்பி விட்டு, பின்னர் என்னிடம் "மாணவர்களிடம் பார்த்துப் பேசுங்கள்" என்றார். அச்சமயம் சென்னையில் பாரதியாரின் கருத்தரங்கமொன்று நடைபெற்றது. “அந்நியர்கள் யார்' என்பது கருத்தரங்கத்தின் தலைப்பு. நான் பேசும் போது, "எனக்கு உரிமையான உரிமைகளை மறுப்பவர்கள் யாரோ, அவர்களே அந்நியர்கள்" என்றேன்.

ஆன்மீக சூழல் நிறைந்த கல்லூரியில், மார்க்சீய பற்றுள்ள நான் 32 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பணியாற்றுகையில் ஏழை தலித் மாணவர்களுக்கு உதவுவதில் பெரு மகிழ்ச்சியும், திருப்தியும் அடைந்தேன். ஒருமுறை ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை பார்ப்பதற்கு நண்பரொருவர் அழைத்துச் சென்றார். அந்த அதிகாரி ராஜராஜ சோழனை வானளாவப் புகழ்ந்தார். என்னிடம் " நீங்கள் முதலில் பொன்னியின் செல்வனைப் படியுங்கள். அதைப் படித்தால் தனிநபர் ஒழுக்கத்தில் ராஜராஜன் எவ்வளவு சிறந்தவன் என்று தெரியும்", என்றார். அவர் மேல் தவறில்லை. ஆனால் வெற்றிகள் மட்டுமே ஒரு மன்னரை பெருமைக்குரியவராக ஆக்குவதில்லை.

நான் அவரிடம் "ராஜராஜன் ஒழுக்கசீலர் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்; ஆனால் அவருக்கு சட்டபூர்வமாக 12 மனைவிகள் இருந்தனர் என்பது உங்களுக்கு தெரியுமா?", என்று கேள்வி எழுப்பினேன். "அது மட்டுமல்ல. தஞ்சை நகரில் தேவதாசி முறையை ஆரம்பித்து வைத்த மகா புருஷன் அவன்தான் " என்று சொன்னேன். ராஜராஜனின் தளிச்சேரிக் கல்வெட்டு 400 பெண்டிரை பணியிலமர்த்தியதையும், அவர்களது ஊதியத்தையும் கூட பட்டியலிட்டிருக்கிறது.

தமிழர்கள் `பொன்னியின் செல்வன்' தரும் மயக்கத்திலிருந்து மீள வேண்டும். சரித்திர நாவல்களின் அடிப்படையில் சோழர் பல்லவர் வரலாறுகளைப் பார்த்து நிறைவு கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றியுள்ள ஏழு மைல்களுக்கு விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் தான், பெரிய கோவில் கட்டப்பட்டது. பராமரிப்பதற்கு விவசாய நிலங்கள் இல்லாத சிறு நில உடமையாளர்கள், பிழைக்க வேறு வழியில்லாததால் கூலி விவசாயிகளாக மாறினர். வயிற்றுப் பாட்டிற்காக கோயிலின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் கூலித் தொழிலாளர்களாக மாற்றப்பட்டது ராஜராஜசோழன் காலத்தில் தான். வரலாறு என்பது வெறும் ராஜாராணி கதையல்ல; யாரையும் பெருமைப்படுத்தி தெய்வமாக்குவதும் அதன் வேலையல்ல. சரித்திரம் என்பது பல உயிர்களை பலி வாங்கிய போர்கள், தகர்க்கப்பட்ட மாளிகைகள், ஓடிய ரத்த ஆறுகளைப் பற்றி படிக்கும் படிப்பு அல்ல. வரலாறு என்பது மக்கள் சம்பந்தப்பட்டது. பல நாகரீகங்களின் அமைப்பையும், அங்கு பரவி வளர்ந்த கலைகளையும், சமுதாய அமைப்பையும் பற்றி புதிய தகவல்களைத் தேடும் முயற்சி.

தனி மனித உரிமைகளை ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி புரிவதற்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நாம் இழந்துவிட்டோம் கட்டபொம்மு கூட மக்களின் உரிமைகளைப் பற்றி பேசவில்லை. மத உணர்வுகளைப் பற்றித் தான் மக்களிடையே பேசினான். கார்ல் மார்க்ஸ், `மதம் என்பது அபின் போன்றது' என்றார். முற்றிலும் உண்மை. அபின் பழக்கத்திற்கு அடிமையானவர்களிடம் எந்த விஷயத்தைப் பற்றியும் புரிதல் இருக்காது. அபின் பழக்கத்திற்கு அடிமையானவர்களை எளிதில் வெறியூட்டவும் முடியும்.

இந்தியாவின் இரண்டாயிர வருட வரலாற்றைப் படித்துப் பார்த்தால் மதம் என்பதை மக்களுக்கு வெறியூட்ட வைக்கும் அபினை போலத்தான் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரியும். ஆங்கிலேயர்கள் செய்த மிகப் பெரிய வக்கிரம் இந்திய வரலாற்றை மதங்களால் பிரித்ததுதான். 1817 இல் ஜேம்ஸ் மில் என்ற ஆங்கிலேயர் `பிரிட்டிஷ் இந்திய வரலாறு' என்ற வரலாற்றுத் தொகுப்பை வெளியிட்டார். அந்த நூலின் முதல் பகுதி இந்து இந்தியா, இரண்டாம் பகுதி முஸ்லிம் இந்தியா, மூன்றாம் பகுதி பிரிட்டிஷ் இந்தியா. உலகின் வேறு எந்த நாட்டின் வராலாறும் இவ்வாறு மதத்தின் அடிப்படையில் பிரித்துக் காட்டப்படவிலை.

பிரிட்டிஷ் இந்தியாவைப் பற்றிச் சொல்லும் ஜேம்ஸ் மில், ஆயிரம் ஆண்டுக்காலம் இந்தியாவை ஆட்சி செய்த பௌத்த இந்தியாவிற்கு முக்கியத்துவம் தரவில்லை. அசோகர் காலத்திலிருந்து ஹர்ஷவர்த்தனர் காலம் வரை பெரும்பாலான இந்தியாவில் செங்கோல் ஓச்சியது பௌத்த மதம் தான். ஆனால் ஆயிரம் ஆண்டுக்கால பௌத்த இந்தியா ஆங்கிலேயர்களால் அடையாளம் காட்டப்படவில்லை. ஆங்கிலேயர்களுக்குப் பின் வந்த இந்திய வரலாற்றாளர்கள் சிலர் இந்தியாவை, தொன்மை இந்தியா, வேதகால இந்தியா, குப்தர்கால இந்தியா என்று மூன்று பிரிவாகப் பிரித்து, குப்தர்கள் காலத்தை இந்தியாவின் பொற்காலம்' என்று கூறி முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டனர்.

அசோகரில் இருந்து ஹர்ஷர் வரை, தமிழகம் தவிர்த்த ஏனைய இந்தியப் பகுதிகள் அனைத்திலும் வியாபித்திருந்த மௌரியப் பேரரசின் காலத்தில் மக்கள் போரின்றி அமைதியாக வாழ்ந்த காலம் அதிகம். கல்வெட்டுகள், ஸ்தூபிகள், அஜந்தா - எல்லோராவின் 70 விழுக்காடு ஓவியங்கள் அனைத்தும் பௌத்தர் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன. இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு, இந்தியாவின் சிறு பகுதியில் வியாபித்து இருந்த குப்தர்களின் காலத்தைப் பொற்காலம் என்பது பொய் மட்டுமல்ல, வரலாற்றுக்கு இழைக்கப்படும் அநீதி! அது உண்மையான வரலாறும் கிடையாது.

வரலாற்று நிகழ்ச்சிகளை ‘selective edit’ பண்ணுவதால், உண்மை வரலாறு மக்களுக்குத் தெரியாமலேயே போய்விடும். இந்திய வரலாற்றின் பக்கங்களில் கொடுக்கப்பட்ட செய்திகளை விட, மறைக்கப்பட்ட செய்திகள் தான் அதிகம். அப்படி மறைக்கப்பட்ட செய்திகளில்தான் விஷமத்தனமும், வகுப்புவாதமும் இருக்கிறது. பக்தி இலக்கியங்களைப் படிக்கையில், மனித நேயத்தை விட, மத நேயமும், மத வெறியும் தான் அதிகம். கண்ணில் தென்படுகின்றது. `அன்பே சிவம்' என்று கூறிக் கொண்டே, 8000 சமணர்களைக் கூண்டோடு கழுவேற்றிய கூன் பாண்டியரும், சமணர்களை தடியால் அடித்துத் துன்புறுத்திய தண்டி நாயனரும், `பௌத்த பெண்டிரை கற்பழிக்கத் திருவுளமோ' என்று சிவனிடம் வேண்டும் ஞானசம்பந்தரும்..... இவர்களின் வரலாறுகளைப் படிக்கும் பொழுதே நமக்கு அருவருப்பு ஏற்படுகிறது. சோழர்களின் சைவ வெறியால் இராமனுஜர் ஹொய்சள நாட்டிற்குத் தப்பி ஓடி உயிர் பிழைத்தது பெரும் சோகக் கதை.

விஸ்வ ஹிந்து பரிஷத் புனை புராணங்களை வரலாற்றாக மாற்றுவது அபாயகரமானது. புராணங்களை வரலாற்றாகத் திரித்துத் தர முற்படுபவர்களால் தான், வரலாற்றை நம்ப மறுக்கும் நிலைமை உருவாகியுள்ளது. கார்ல் மார்க்ஸ் மட்டுமே அறிவியல் கண்ணோட்டத்தில் வரலாற்றை ஊடுருவி நோக்கினார். அவர் மன்னர்களின் வரலாற்றிலோ, தளபதிகள் நடத்திய போர்களின் பட்டியலிலோ பிரமித்துப் போய்விடவில்லை. உழைப்பைத் தருவோருக்கும், உழைப்பைச் சுரண்டுவோருக்கும் இடையே தொடர்ந்து வரும் போராட்டங்களின் அடிப்படையில், வெகு ஜனங்களின் வாழ்க்கை எவ்விதம் மாறி வருகிறது என்பதை முதன்முதலாகக் கூறியவர்.

இந்திய வரலாற்றின் பக்கங்களில் பெண்களின் பங்கு மிகவும் மறைக்கப்பட்டிருக்கிறது. பெண்களின் பங்கு பற்றி நேர்மையான வரலாற்றுப் பார்வை இல்லை. மதுரை காஞ்சி நூலைப் படித்தால், பெண்களின் பங்கு நன்கு தெரிய வரும். அதில் பொருட்களை உருவாக்குவதில் இருந்து விற்பது வரை அனைத்தையும் பெண்கள்தான் செய்கிறார்கள். அன்று முதல் விவசாயக் கூலிகளாக பெண்கள் தான் இருக்கிறார்கள் என்பது வரலாறுகளைப் படித்தால் தெரிகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பெரியார் ஒருவர் மட்டும்தான், வரலாறு குறித்துப் பல கேள்விகளை எழுப்பினார். துரதிர்ஷ்டவசமாக இன்றைய மாணவர்களுக்குத் தரப்படும் பாடப் புத்தகங்களில் மாற்றுக் கருத்துக்களுக்கு சிறிது கூட இடம் தருவதில்லை.

மாணவர்களுக்கு வரலாற்று நிகழ்வுகளை மட்டுல்ல, தலைவர்களின் கருத்துக்களையும் கூடவே தர வேண்டும். காந்தியைப் பற்றி படிக்கும் மாணவர்கள் காந்தியிசம் பற்றிப் படிப்பதில்லை. மார்க்ஸை கற்கும் மாணவர்கள் மார்க்சீய கருத்துக்களைக் கற்பதில்லை. வரலாற்று ஆய்வுகளின் முடிவுகள் பாடப் புத்தகங்களில் இடம் பெறுவதற்கு கல்வியாளர்கள் முயற்சி செய்ய வேண்டும். அறிவியல் உண்மைகளைத் தராத வரலாறு மூடமான வரலாறு. மனிதர்களை மடையர்களாகவே வைப்பதற்குத்தான் வரலாறு பயன்பட்டு வருகிறது. அதற்கு மாறாக, மக்களை சிந்தனையாளர்களாக மாற்றுவற்கு வரலாறு பயன்பட வேண்டும்.

ஆங்கிலேயர்கள் தொகுத்த இந்திய வரலாற்றுக்கும், அதற்குப் பின்னர் இந்திய வரலாற்றாளர்கள் தொகுத்த இந்திய சரித்திரத்திற்கும் அதிக வித்தியாசமில்லை. இரண்டுமே அரசியல் கிளர்ச்சிகளுக்கும், ஆட்சி மாற்றக் கிளர்ச்சிகளுக்கும் தந்த முக்கியத்துவத்தை சமூக மாற்றக் கிளர்ச்சிகளுக்கும், விவசாயிகளின் கிளர்ச்சிகளுக்கும், தொழிலாளர்களின் கிளர்ச்சிகளுக்கும் ஏன் தரவில்லை?

இராஜாராம் மோகன்ராய், இராமகிருஷ்ண பரமஹம்சர், தயானந்த சரஸ்வதி ஆகியோர் பெறும் முக்கிய இடத்தை இந்திய வரலாற்றில், இராமலிங்க வள்ளலார், பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் ஏன் பெறவில்லை? விவசாயிகளின் தெலுங்கானா கிளர்ச்சி, வயலார் - புன்னப்புரா கிளர்ச்சி மற்றும் கோவை மில் தொழிலாளர் கிளர்ச்சி போன்றவை வரலாற்றின் பக்கங்களின் மறைக்கப்படுவதன் மர்மம் என்ன?

கணக்கில் அடங்கா கிளர்ச்சிகள்; கணக்கில் அடங்காக் கேள்விகள்!