Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Bank Worker's Unity
BWU Logo
அக்டோபர் 2007

சம்புகர்கள் நிலம்
ஆதி

அன்புள்ள இஸ்மாயிலுக்கு,

இந்தக் கடிதம் உன்னிடம் வந்து சேர்வதற்குள் இன்னும் என்னென்ன நடந்திருக்குமோ? இரண்டு பகுதிகளை இணைக்கின்ற ஒன்றினை பாலம் என்கிறோம். இராமர் பாலமோ மனிதர்களை இருவேறு பகுதிகளாகப் பிரித்துப் போட்டிருக்கிறது. ஆச்சரியம் இத்தோடு நின்றுவிடவில்லை. பேருந்துகள் கொளுத்தப்படுகின்றன. பிணங்களின் கருகிய வாசம் ஒவ்வொருவரின் மனசாட்சிகளிலும் அலைபாய்கின்றன.

கொடுமைகள் இத்தோடு முடிந்துவிடுவதில்லை. வார்த்தைகள் ஆயுதங்களாக பிரயோகிக்கப்படுகின்றன. ஆயுதங்களில் ஒட்டிக் கிடக்கும் மனிதர்களின் இரத்தப் பிசுபிசுப்பில் மரணங்கள் ஊர்ந்து செல்கின்றன. இன்னும் இன்னும் எத்தனை பிணங்களால் நிறையுமோ பலிபீடங்கள் யாருக்கும் தெரியும்?

பெங்களூருக்கருகில் எரிந்து கருகிய பேருந்து தெரிந்த தொலைக்காட்சிப் பெட்டியில் காட்சிகள் மாறிவிட்டன. யுவராஜ் சிங்கின் ‘சிக்சர்களும்' தோனியின் முடிக்கற்றைகளும் பழைய பிம்பங்களை மறக்கடித்து விடுகின்றன. கலவரங்களால் நிகழும் உயிர்ப்பலிகள் ஒருவரி அஞ்சலியாக சுருங்கிப் போய் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத செய்தி வாசிப்பாளர்களின் வார்த்தைகளில் சிக்கி விளம்பரங்களுக்கு நடுவில் ஆத்மா சாந்தியடையாமல் அலைபாய்கின்றன.

‘ராமர் என்ன என்ஜீனியரா? வால்மீகி சொன்னதுபோல் ராமர் சோமபானம் அருந்தினார் என்றா சொல்லிவிட்டேன்?'

‘அப்படியானால் கல்லணை கட்டிய கரிகால்வளவன் மட்டும் என்ன என்ஜீனியரா?'

‘ராமரைப் பற்றிச் சொன்னவரின் தலையையும் நாக்கையும் அறுத்துக் கொண்டுவருவருக்கு, எடைக்கு எடை தங்கம் கொடுக்கப்படும்.'

அன்பைப் பேசுவதான கடவுளின் பெயரால் ஆயுதங்களைப் போலவே நாக்குகள் வார்த்தைகளை வாளைப் போல் வெட்டி வீசுகின்றன. காதுகள் கூசுகின்றன. வேதம் படித்ததற்காகத் தலை துண்டிக்கப்பட்ட சம்புகர்கள் நிலமெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள்.

இத்தனைக்கும் காரணமான இராமர் பாலமோ சேதுக்கால்வாய்க்கு வழி விடாமல் எந்த சீதையின் வரவுக்காகக் காத்திருக்கிறதோ, தெரியவில்லை. நாசா விண்வெளி விஞ்ஞானிகள் வெளியிட்ட கடலுக்கடியில் தெரியும் நீண்ட மணல் திட்டு ஆதம் பாலமா? இராமர் பாலமா? காற்றோட்டத்திலும், நீர் - எதிர் நீர் திசைப்போக்கிலும் நிலத்தட்டுக்களின் அசைவுகளாலும் இயற்கையாகவே திரண்ட மணல் மேடா? இலங்கைக்குச் சென்று சீதையை மீட்டு வருவதற்காக இராமர் கட்டிய பாலமா? வானரங்கள், எடுத்துப்போட்ட கற்குவியல்கள் அங்கிருக்குமா? அணில் சுமந்த மணல் துகள்கள் அதிலிருக்குமா?

‘பதினேழரை லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இராமாவதாரம் கட்டிய பாலம் என்று இதிகாசங்கள் சொல்கின்றன. இது இறை நம்பிக்கை சார்ந்தது. இதிலென்ன கேள்வி?' - இப்படி ஒரு சிலர்.

‘தற்போதுள்ள மனித இனச் சுவடுகளின் வழியே சென்று பார்த்தால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உயிரினமே இல்லை. குரங்குகள் கூட தோன்றியிருக்காத ஒரு காலகட்டம். அப்படியென்றால் பதினேழரை லட்சம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பாலம் கட்டப்பட்டது என்பதை ஆராய்ச்சிப்பூர்வமாக நம்பமுடியாது' - இப்படி ஒரு சிலர்.

எதை நம்புவது? எதை நம்புகிறோமோ இல்லையோ எது சரியானது என்று காலம் காட்டிவிடும்.

சூரியன் பூமியைச் சுற்றிவருகிறது என்று தாலமியின் கண்டுபிடிப்பில் நம்பிக்கை வைத்திருந்த போது சூரியன்தான் மையம். பூமியும் பிற கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்று சொன்ன கோபர் நிகஸ்ஸின் வார்த்தைகளைச் சீரணிக்க முடியாமல் ஸ்தம்பித்துப் போனது உலகம். ஆனால் கடைசியில் கோபர் நிகஸை உலகம் சுற்றிவந்தது.

பூமி தட்டையானது என்று பைபிள் குறிப்பிட்டது. பூமி உருண்டையானது என்று டெலஸ்கோப்பை வைத்துக் காட்டிய கலிலியோவை பைத்தியக்காரன் என்று பழித்தது. சிறையிலடைத்தது. ஆனால் கலிலியோவை என்ன செய்தாலும் கடைசிவரை பூமி தட்டையாக மாறவேயில்லை. எந்தக் கட்சியால் முதலில் தொடங்கப்பட்டதோ அதே கட்சியால் எதிர்க்கப்படுகிறது ஒரு திட்டம். ஜனநாயகத்தின் சக்தியைப் பார்த்தாயா நண்பனே.

464 கடல் கிலோ மீட்டர்கள் வீண் பயணத்தைக் குறைக்கவும், 36 மணி நேர விரயத்தை மிச்சம் பண்ணவும் தீட்டப்பட்ட சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை இராமர் பாலம் வழி மறிக்கிறது. வேறு எந்தப் பாதையில் கால்வாய் வெட்டினாலும் சுற்றுச்சூழலுக்கு அதிகக் கேடுகள்தான் என்று சொல்கிற வல்லுனர்களின் ஆய்வுகள் கடலுக்கடியில் கொட்டப்படுகின்றன.

வெறும் புராணங்களிலும் இதிகாசங்களிலும் இருந்து தரவுகள் தயாரிக்க முடியாத தொல்லியல் துறை வரலாற்று பூர்வமான அடிப்படையில் இராமர் பாலம் என்பது இல்லை - ராமர் வாழ்ந்ததற்கான ஆதாரம் கிடையாது என்று நீதிமன்றத்தில் அரசுக்கு எதிரான வழக்கில் பதில் மனு தயாரித்தது குற்றம் என்றால் கோபர் நிகஸ் சொன்னது குற்றம். கலிலியோவின் கண்டுபிடிப்பு குற்றம்.

இதயங்களில் பாலங்களை இடித்துத் தகர்த்துவிட்டு இந்திய சமுத்திரத்தில் எந்த பாலத்தை இவர்கள் காப்பாற்றப் போகிறார்கள்? மசூதி இருந்த இடத்தை இராம ஜென்மபூமி என்பதும், மணல் திட்டை இராமர் பாலம் என்பதும் அரசியலுக்கு எதிரான ஆன்மீக விளையாட்டு. எந்த நேரத்திலும் ‘ராம் ராம்' என்று சொல்லும் ராம பக்தர்கள்தான் இதற்கு பலியாகப் போகிறார்கள்.

இவர்களது நம்பிக்கைப்படியே, இராமர் அன்று கால்நடையாக வந்தார். கடக்கப் பாலம் தேவைப்பட்டது. இன்று வந்தால் கப்பலோடு தான் வருவார். கடக்க கால்வாய் தேவைப்படலாம். நீ என்ன நினைக்கிறாய் நண்பா?

இப்படிக்கு
விஜய்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP