Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Bank Worker's Unity
BWU Logo
ஜூன் 2007

வேலை நியமனங்களுக்கான குரல்
ஜீ.ஆர்.ரவி

ஒரு லட்சம் காலி இடங்களை நிரப்பு என்ற கோரிக்கை எழுப்பியது UFBU. தமக்குத் தேவையான ஊழியரை நியமிக்க வங்கிகளுக்கு உரிமை உண்டு என IBA. சொல்லிவிட்டது. உண்மையில் எவ்வளவு மோசமாக இருக்கிறது நிலவரம் என்பதை இந்த எளிய ஆய்விலிருந்து நீங்கள் புரிந்துகொண்டவிட முடியும்.

இந்தியாவில் ஒரு புறம் உச்சத்தில் உள்ள வேலையில்லாப் பட்டாளம். மறுபுறம் வங்கிகளில் வேலை பார்க்கும் ஊழியர்களில் ஒரு கணிசமான பகுதியினர் மீண்டும் ஒரு விருப்ப ஓய்வுத் திட்டம் (VRS) வராதா என்று நாளும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். இந்த எதிர் மறையான நிலைக்குக் காரணமென்ன?

வங்கி ஊழியர்கள் எல்லோரும் நல்ல மேனிலை அடைந்து மேற்கொண்டு ஊழியம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டதா என்ற வினா எழுவது நியாயம் தானே. சுருக்கமாகக் கூறுகையில் இத்தகைய நிலைக்கு பிரதான காரணம் ஊழியர்களின் வேலை பளு மற்றும் அதனால் ஏற்படும் மன அழுத்தம் தான் என்பது யதார்த்தமாக வரும் விடை.

இதை சற்று ஆழ்ந்து ஆராயும் பொழுது நமக்கு சில அதிர்ச்சியான உண்மைகள் தெரியவருகிறது. 1969ல் 14 வங்கிகள் தேசியமயமாக்கப் பட்டதற்குப் பிறகு வங்கி கிளைகளின் வளர்ச்சி நாலுகால் பாய்ச்சலில் சென்று கொண்டிருந்தது. அதன் பொருட்டு ஊழியர் சேர்ப்பு என்பது கணிசமாக இருந்தது. 1969ல் 14 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் ஸ்டேட் வங்கி மற்றும் அதன் உறுப்பு வங்கிகளில் உள்ள உறுப்பு ஊழியர் எண்ணிக்கை 1,75,368 ஆக இருந்தது. அதுவே 1981ல் 5,51,735 ஆகவும் 1987ல் 8,14,705 ஆகவும் 1991ல் 8,56,571 ஆகவும் வளர்ந்தது. புதிய பொருளாதார கொள்கைகள் அமுலாக்க தொடங்கிய பின்னணியில் 1992லிருந்து நிலைமை மோசமடைந்தது.

1992ல் 8,75,390 ஆக இருந்த ஊழியர் எண்ணிக்கை வெறும் 4760 மட்டுமே உயர்ந்து 1996ல் 8,80,150 அக இருந்தது. இதுவே 2000-01ல் 8,78,478 ஆகக் குறைந்து வங்கித்துறையில் முதன்முறையாக அமுலாக்கப்பட்ட விருப்ப ஓய்வுத் திட்டத்தின் மூலம் 1,25,084 ஊழியர்கள் அதாவது 14.24 சதவிகிதத்தினர் வெளியேறி 2004ல் 7,52,627 ஆக குறைந்தது. இந்த வெளியேற்றத்தின் மூலம் நிர்வாகங்களுக்கு சம்பள பட்டுவாடா ரூ. 2105 கோடி (ஒரு வருடத்திற்கு) குறைந்தது.

வங்கிகளின் பொதுவான பணி என்பது பொதுமக்களிடமிருந்து வைப்புகளைப் பெற்று கடன் வழங்குதல் ஆகும். அதன் அடிப்படையில் பார்த்தால் வங்கிகளின் வைப்பு நிதி மற்றும் கடன் வழங்குதல் பன்மடங்காக பெருகி உள்ளது. உதாரணத்திற்கு 2004ல் பொதுத்துறை வங்கிகளின் வைப்புத் தொகை 12 லட்சத்து 27 ஆயிரம் கோடியாக இருந்தது. 2005ல் 14 லட்சத்து 37 ஆயிரம் கோடியாகி 2006ல் 16 லட்சத்து 22 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. அதே சமயம் கடன் கொடுப்பது என்பத 2004ல் 6 லட்சத்து 33 ஆயிரம் கோடியாகவும், 2005ல் 8 லட்சத்து 56ஆயிரம் கோடியாகவும் 2006ல் 11 லட்சத்து 6 ஆயிரம் கோடியாகவும் உயர்ந்தது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் வைப்புத் தெகையும் கடன் வழங்கும் தொகையும் சராசரியாக ரூ.2 லட்சம் கோடி அளவில் உயரும் பொழுது ஊழியர்களின் எண்ணிக்கை மொத்தமாக 1.30 லட்சம் குறைந்துள்ளது. அதேபோல் வங்கிகளின் நிகர லாபம் 476 கோடியாக 1990-91ல் இருந்தது. தற்போது 15,646.37 கோடியாக உயர்ந்தது.

இது ஒரு புறம் இருக்க வங்கிகள் தங்களது சேவை மற்றும் பணிகளை வங்கித் தொழில் சாராத துறைகளுக்கும் விஸ்தரிக்க முற்பட்டது.

இந்த அபரிமித வளர்ச்சிக்கு ஏற்ற முறையில் ஊழியர்கள் நியமனம் செய்ய, வேலை நியமனத் தடை என்ற பெயரில் அனுமதி மறுக்கும் ஆட்சியாளர்கள் தொழில் நுட்பம் என்ற பெயரில் கோடி கோடியாக வங்கிகள் வாரி இறைக்க அனுமதியளிக்கிறார்கள். உதாரணத்திற்கு செப்டம்பர் 1999லிருந்து மார்ச் 2006 வரை பொதுத்துறை வங்கிகள் கணினி மற்றும் தகவல் தொடர்புக்கு செலவழித்த தொகை ரூ. 10,676 கோடிகள் (Source RBI Report).

இப்பொழுது புரிகிறதா ஊழியர்களின் வேலை பளு எத்தனை மடங்கு அதிகரித்துள்ளது என்று? ஆனால் பரிதாபம் என்னவென்றால் இந்த நிலைமையைக் களைய வேண்டும் என்ற எண்ணத்திற்குப் பதிலாக இதிலிருந்து தப்பித்தால் போதுமென்ற சிந்தனைதான் ஊழியர்கள் மத்தியில்பலமாக வேரூன்றி உள்ளது.

“எப்ப காம்ரேட் பென்ஷனுக்கு இரண்டாவது ஆப்ஷன் வரும், வி.ஆர்.எஸ் வருதுன்னு பேசிக்கிறாங்களே - நிஜமா," என்று ஊழியர்களோ அதிகாரிகளோ பகிரங்கமாக கேட்க முற்படுவது ஆரோக்கியமானது கிடையாது. இதை மாற்ற வேண்டிய அவசியமும் அவசரமும் பொறுப்பும் தொழிற்சங்கங்களுக்கு நிச்சயம் உண்டு.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.