Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Bank Worker's Unity
BWU Logo
ஜூன் 2007

திரைவிமர்சனம் - பெரியார்
ஜீ.ஆர்.ரவி

சமுதாயத்தில் மண்டிக்கிடந்த மூடநம்பிக்கைகளையும் வர்ணாசிரம தர்மத்தையும் தொடர்ந்து சமரசமின்றி எதிர்த்துத் தன் வாழ்நாளை அதற்கு அர்ப்பணித்து, தமிழ்நாட்டில் ஜாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நலிந்தவர்களுக்கும் ஓங்கிக் குரலெழுப்பி சமூக நீதிக்கு வித்திட்டவர் ஈரோட்டு கருஞ்சட்டைக்காரர் பெரியார். தமிழக சமூக களத்தில் அவரது பங்கு அளப்பரியது. அவருடைய வாழ்க்கையைப் படம் பிடித்து சில மணித்துளிகளுக்குள் தொகுத்து வழங்குவது என்பது சிரமமான ஒன்றுதான்.

Periyar பெரியார் என்று பின்னாளில் அழைக்கப்பட்ட ஈ.வே. ராமசாமி நாயக்கரின் வாலிப வயதிலிருந்தே தொடங்குகிறது படம். கூடவே ஜாதி, மதம், கடவுள், மூடநம்பிக்கைகள் பற்றிய அவருடைய தர்க்க வாதங்களும் பல்வேறு காட்சியமைப்புகளின் வாயிலாக சாட்டையடியாகக் கூறப்பட்டுள்ளது. ஆச்சார அனுஷ்டான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவரென்றாலும் பகுத்தறிவு சிந்தனை மேலோங்கியவராக வாழ்ந்து வந்தார் அவர்.

விதவைக் கோலம், தாலி, கர்ப்பம் என்ற நியதிகள் பெண்களை அடிமைகளாக்குவது எப்படி என்பதைத் தன்னுடைய பகுத்தறிவு வாதத்தின் மூலமாக நிறுவும் அவரது பெண்ணியம் பற்றிய கருத்துக்கள் அழகாக சொல்லப்பட்டுள்ளது. பெரியார் கண்மூடித்தனமான பிராமண எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு கொண்டவர் என்ற சிலரது எண்ணத்தை மாற்றி அவரின் வேறு சில பரிமாணங்களையும் பதிவு செய்துள்ளார்கள்.

தான் ஒரு கடவுள் மறுப்புக் கொள்கையுடைவராக இருந்தாலும் கோயில் தர்மகர்த்தா பொறுப்பிலிருக்கும் பொழுது அதை நேர்த்தியாக நிர்வகிப்பது, கோயில் என்பது பொது ஸ்தாபனம், மக்கள் சொத்து, அதை நல்லபடியாக காப்பது தன் கடமை என்று கூறுவது, மற்றொரு சமயத்தில் பிராமண பெண் பிரசவ வேதனையால் துடிக்கும் பொழுது உதவுவது போன்ற காட்சிகள் சில சான்றுகள். பெரியாருக்கும் இராஜாஜிக்கும் அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதைத் தாண்டி நட்பு மேலோங்கியிருந்தது இன்றைய (சில) அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் இவற்றுக்கு இடையில் சோவியத் நாடு சென்று கம்யூனிசத்தின்பால் ஈர்க்கப்படுகிறார். கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் சோவியத் யூனியன் சிதறிவிடும் என்று சொல்லுமிடத்திலும், வேறு ஒரு தருணத்தில் காந்தியுடன் விவாதம் செய்யும் பொழுது மதத்தின் பெயரால் சமூக மாற்றத்தைக் கொண்டுவர முடியாது, அப்படி கொண்டு வர முயற்சித்தால் அது மதவாதிகளுக்கு எதிராக இருக்கும்பட்சத்தில் உங்களைக் கொல்லவும் செய்வார்கள் என்று காந்தியிடம் சொல்கிற போதும் பெரியாரின் தீர்க்க தரிசனத்தை உணர முடிகிறது.

மணியம்மையின் வரவு, அதனால் ஏற்படும் சர்ச்சைகள், இயக்கத்தில் ஏற்படும் விரிசல்கள், திராவிட கழகம் திராவிட முன்னேற்ற கழகமாக பிரிந்து சென்றது ஆகியவை கவனமாகக் கையாளப்பட்டுள்ளது.

சத்யராஜ் முன்பாதி ராமசாமி நாயக்கரைவிட பின்பாதி பெரியாராக வாழ்ந்துள்ளார். பாராட்டுக்கள். வசனங்களால் சொல்லாமல் விட்டதை தன் பாடல்கள் மூலம் வைரமுத்து பெரியாரின் தர்க்க வாதங்களை நேர்த்தியாக பொருத்தியுள்ளார்.

நாகம்மையாக வரும் ஜோதிர்மயி சிறந்த நடிப்பு.

95 வயது வாழ்ந்த ஒரு சகாப்தத்தின் சாரத்தை 3 மணி நேரத்தில் வழங்க எடுத்துள்ள இயக்குநர் ஞான இராஜசேகரனின் முயற்சி பாராட்டுக்குரியது. இருந்தாலும் முன்பாதியை நீட்டியதாலோ என்னவோ அரசியல் மாற்றங்கள் நிறைந்த பின்பகுதி வேக வேகமாக ஆவணப்படம் போல் சொல்லப்பட்டுள்ளது. சில காட்சிகளில் தொடர்ச்சியின்மையும் சம்பவங்கள் முற்றுப்பெறாமலும் அமைந்துள்ளது.

இறுதியாக இந்த மாபெரும் சமூக சிந்தனையாளரின் இறுதி யாத்திரை, அரசு Protocol மீறி முழு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டதென்பது அவரது கொள்கைப் பற்றுக்கு அளிக்கப்பட்ட மரியாதையாகவே உள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com