Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Bank Worker's Unity
BWU Logo
ஜூன் 2007

ஆசிரியர்களுக்கு நூறு கண்கள் வேண்டும்
பேராசிரியர் ச. மாடசாமி

கல்வித் துறையில் இயந்திரமாகிப் போனோர் ஏராளம். பெருமூச்சுக்களோடும், புலம்பலோடும் நிலைமையை சகிப்போர் ஒருபுறம். ஆக்கபூர்வமான தலையீட்டைத் துணிச்சலாகச் செய்கிற அரிய மனிதருள் பேராசிரியர் மாடசாமி முக்கியமானவர். சமூக பிரக்ஞையுள்ள போராளி. `மூட்டா' அமைப்பு நிர்வாகியாகவும், மூட்டா ஜர்னல் ஏட்டின் ஆசிரியராகவும்... மறக்கமுடியாத ஒரு பொற்காலம் இன்றும் நிறைந்திருக்கிறது அவரது நெஞ்சில். அறிவொளி இயக்கத்தில் அவரது பங்களிப்பு சுவாரசியமானது.

Maadasamy வகுப்பறைகளை `சுதந்திர உரையாடலுக்கான வெளி' (Space) யாக சீர்திருத்த வேண்டுமென்ற ஓயாத முழக்கம் இவரை வசீகரமாகப் பார்க்க வைக்கிறது. வகுப்பறையில் எனக்குரிய இடம் எங்கே என்ற இவரது நூல் வித்தியாசமானது. பாரதி புத்தகாலயத்தின் புத்தகம் பேசுது இதழின் ஆசிரியர் குழுவில் இவரது பங்களிப்பு விவரிப்பிற்கு அப்பாற்பட்டது. 2005 உலக புத்தக தினத்தையொட்டி 100 நூல்கள் வெளியிடப்பட்டதும், தொடர்ந்து பல துறை குறித்த சிறு நூல்கள் வெளிவருவதும் சாத்தியமானதின் பின்புலத்தில் பேராசிரியரின் ஊக்கம் குறிப்பிடப்பட வேண்டியது. தமிழர் திருமணமுறைகள் குறித்த அவரது நூல் இந்த வரிசையில் ஓர் அற்புதமான பங்களிப்பு. அதைப் போலவே குழந்தைகளுக்கான அவரது கதைத் தேர்வும். மே 22 BMU ஆசிரியர் குழு கூட்டத்தில் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் ஆழமானவை.

கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இருக்கும் வடுகப்பட்டி எனும் அற்புதமான சிறிய கிராமத்தில்தான் நான் பிறந்தேன். இயற்கையெழிலோடு கூடிய அந்த அற்புதமான கிராமத்தை வராகநதி இன்னும் அழகுபடுத்திக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கும்.

பழமையான சடங்குகளோடு ஒட்டாதவர்கள் எல்லோரும் அந்த ஆற்றங்கரையில் தான் பொழுதைக் கழித்துக் கொண்டிருப்போம். வடுகப்பட்டியிலிருந்து பெரியகுளம் போகும் வழியிலிருந்து. போர்டு ஹைஸ்கூலில் தான் எனது பள்ளி படிப்பைப் படித்தேன். கவிஞர் மு. மேத்தா அப்போது ஸ்கூல் யூனியனின் சேர்மனாக இருந்தார். பள்ளிப் பிராயத்திலே புறக்கணிக்கப்பட்ட மாணவர்களின் தலைவனாக சக மாணவர்களால் உருவாக்கப்பட்டேன்.

கல்லூரி படிப்பை விருதுநகரிலிருந்த செந்தில்குமார் நாடார் கல்லூரியில் பயின்றேன். அந்தக் கல்லூரியை மற்ற கல்லூரியினர், ‘வேட்டி காலேஜ்‘ என்று கிண்டலாக அழைப்பதுண்டு.தெரியாத்தனமாக, இளங்கலையில் ‘பிசிக்ஸ்’ எடுத்து, தட்டுத் தடுமாறி படித்து முடித்தேன்.

பின்னர், மதுரை தியாகராஜர் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் படித்தபோது, எனக்கு அது மிகவும் இயல்பான படிப்பாக தெரிந்தது. எனது மனம் பாடங்களில் விருப்பத்துடன் ஈடுபட்டதால், எனக்கு அங்கீகாரமும் கிடைத்தது. கல்லூரி நாட்களில் தீபம், கணையாழி, ஞானரதம் போன்ற இலக்கிய பத்திரிகைகளை தேடித் தேடிப் படித்தேன்.

படித்து முடித்தவுடன், அருப்புக்கோட்டை கல்லூரியில் ஆசிரியர்பணி கிடைத்தது. கல்லூரியில் எனது முதல் வகுப்பை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று மிகவும் திட்டமிட்டேன். (ஜூலை 12, 1971) விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்து ஒத்திகை பார்த்துக் கொண்டேன்.

முதல் வகுப்பு மதியம் 2 1/2 லிருந்து 3 1/2 மணி வரை, மாடியில். ஒரு புறநானூற்றுப் பாடலை தேர்ந்தெடுத்தேன். எனது முதல் வகுப்பை, 'மக்குத்தலையில் மகுடம் சூட்டப்பட்டது' என்று உணர்ச்சிபூர்வமாகத் துவக்கினேன். மாணவர்கள் மெய்மறந்து வகுப்பில் ஒன்றினார்கள்.

அடக்குமுறைக்கு பெயர்பெற்ற அந்தத் தனியார் கல்லூரியில் எனது முதல் வகுப்பை முடிக்கும்போது, மாணவர்கள் பலத்த கைத்தட்டல்களோடு என்னைப் பாராட்டினர். நெகிழ்ச்சியோடும், பிரியத்தோடும் பார்த்தனர்.

வகுப்பை முடித்துவிட்டு மாடியிலிருந்து கீழே இறங்கி வருகையில், என்னை 2,3 ஆசிரியர்கள் கோபமாக முறைப்பது போல் தெரிந்தது. அவர்கள் என்னை பிரின்சிபால் ரூமுக்கு அழைத்துச் சென்றார்கள். பிரின்சிபால் என்னை கோபமாகப் பார்த்து “பாழாக்கிட்டீங்களே" என்று துவங்கினார். அதுதான் முதல் வார்த்தை. எனக்குக் கிடைத்த முதல் கௌரவம். "வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே காலேஜைப் பாழாக்கிட்டீங்களே. இந்த கல்லூரியில் இதுவரை எந்த மாணவனும் கைதட்டியதில்லை. மாணவர்களிடமிருந்து தள்ளி இருங்கள். Keep the distance. அப்பத்தான் அவர்கள் நம்மை மதிப்பாங்க” என்று அட்வைஸ் செய்தார்.

மாணவர்களுடன் விஷயங்களை பகிர்ந்து கொள்வது விவாதங்களில் அவர்களைப் பங்கேற்க வைப்பது, மாணவர்களுடன் நெருக்கமாக உறவாடுவது என்பது அறவே தவிர்க்கப்பட்டு வந்த காலகட்டம் அது.

ஒரு ஆசிரியர், இன்னொரு சக ஆசிரியரைப் பார்த்து, “உங்க கிளாஸிலே பசங்க ரொம்ப அமைதியா இருக்கிறார்களே” என்று சொல்லிப் பாராட்டுவார். வகுப்பறைகள், கேள்விகளற்று விவாதங்களற்று ஒடுங்கிக் கிடப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயமா?

1950 வரை ஆங்கிலோ-இந்திய ஆசிரியர்கள், முற்பட்ட வகுப்பினர்தான் கல்வி கற்றுத் தந்தார்கள். அந்த காலகட்டத்தில் ஆசிரியர் மாணவருக்கிடையே மிகப் பெரிய இடைவெளி இருந்தது. 1960களின் இறுதியிலிருந்து 1970 களின் தொடக்கக் காலம் வரை வகுப்புகளில் பெரும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. வகுப்புகளில் முனியன், கருப்பசாமி போன்ற பெயர்கள் சாதாரணமாக வலம்வரத் துவங்கியது. உண்மையில் இந்த முனியனும் கருப்பசாமியும் ஆசிரியராக வர ஆரம்பித்த பின்னர் மாணவர்-ஆசிரியர் இடையே இருந்த இடைவெளி மிகவும் குறைந்திருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் பள்ளம் இட்டு நிரப்பப்படவே இல்லை.

அருப்புக்கோட்டை கல்லூரியில், சாதாரண கிராமத்தின் பிரதிநிதியாகத் தான் ஆசிரியர் பணியாற்றினேன். அந்த கல்லூரியில் நகர்ப்புற மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் கலந்திருந்தனர். நகரத்திலிருந்து வரும் மாணவர்களிடம் சற்று கண்டிப்பு தேவைப்படும். கிராமத்து மாணவர்களிடம் சற்று பாசமாக இருக்க வேண்டும். கிராமத்திலிருந்து கல்லூரிக்கு வருபவர்கள் காலை 6 1/2 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டிருப்பார்கள். முதல் வகுப்பு ஆரம்பிக்கும் முன்பே, பசி அவர்களது வயிற்றைக் கிள்ள ஆரம்பித்திருக்கும்.


அதிகாரம்

“சார்”
ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்.
அனுப்பினேன்.

“சார்”
உடனே மற்றொருவன்
அதட்டினேன்.

நொடிகள் நகர
உள்ளேயே ஈரம்

வகுப்பு முழுவதும் நாற்றமடித்தது
என் அதிகாரம்.

- பழ. புகழேந்தி
(“கரும்பலகையில் எழுதாதவை”)

1973இல் கோடை வகுப்பிற்காக, அண்ணாமலை யூனிவர்சிடிக்குச் சென்ற போது, தமிழவனுடன் நட்பு ஏற்பட்டது. அவர் தி.க.சி. யிடம் வளர்ந்தவர். அவர் மூலம் மார்க்சிய கொள்கைகளின்பால் ஈர்ப்பு ஏற்படத் தொடங்கியது. அவரது, ‘ஆக்டோபஸும் நீர்ப்பூக்களும்’ என்ற புதுக்கவிதை நூல் பெரும் தாக்கத்தை இலக்கிய உலகில் ஏற்படுத்தி வந்த நேரம் அது. கல்லூரியில் முதல் வருடத்திலேயே நிறைய மெமோக்கள் வாங்கினேன். என்னை கல்லூரியிலிருந்து நீக்க முயற்சி செய்தார்கள். சஸ்பென்ஷன், இன்கிரிமென்ட் வெட்டு, எச்சரிக்கை (censure), டெர்மினேஷன்... ‘You made me communist' (நீங்கள் என்னை கம்யூனிஸ்டு ஆக்கினீர்கள்) என்று சொல்வார்களே, அதுதான் எனது வாழ்க்கையிலும் நடந்தது.

1975இல் ஆரம்பிக்கப்பட்ட ‘மூட்டா' இயக்கம் (Madurai University Teachers Association) எங்களைப் போன்ற புறக்கணிக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒரு பாதுகாப்பைத் தந்தது. போராசிரியர் ராஜூ எனக்கு மூட்டா அமைப்பில் நிர்வாகியாகவும் மூட்டா ஜர்னலின் மண்டல ஆசிரியராகவும் பொறுப்புத் தந்து ஊக்குவித்தார். அப்போது எனக்கு வயது 33 தான். அவர் என்னைப் போன்ற எளிமையானவர்களிடம் மறைந்திருந்த ஆற்றல்களை தேடித் தேடி வெளிக்கொணர்ந்தார்.

மூட்டாவில் பொறுப்பு கிடைத்ததால், வகுப்பறைகளில் சுதந்திரக் காற்றை உணர ஆரம்பித்தேன். தொடக்கத்தில் ஆசிரியர் பங்கேற்பும், போகப் போக மாணவர் பங்கேற்பும் என்பதுதான் நகரும் வகுப்பறைக்கு அழகு என்பதை மூட்டா இயக்கம் எனக்கு சொல்லித் தந்தது.

ஆசிரியர் என்பவர் பார்க்கப்பட வேண்டியவரே தவிர, கேட்கப்பட வேண்டியவர் அல்ல. ஆசிரியர்கள் கல்வி கற்றுத் தரும் முறை மாற்றப்பட வேண்டும். இவர்கள் மாணவர்களுக்கு ஸ்டேண்ட் போட்டு சைக்கிள் ஓட்ட சொல்லித் தருகிறார்கள். மாறாக, அவனை சைக்கிள் ஓட்டச் சொல்லி, அவனை தாங்கிப் பிடித்துக் கொண்டு உடன் ஓடிக் கொண்டே சொல்லித் தருபவர்களாக ஆசிரியர்கள் மாற வேண்டும்.

1990இல் ஏற்பட்ட அறிவொளி இயக்கம் பல ஆக்கபூர்வமான பரிசோதனைகளை வகுப்பறைகளில் செய்ய ஆரம்பித்தது. அறிவொளி இயக்கத்தில் M.A. M.Phil படித்தவர்களை விட ஏழாவது, எட்டாவது படித்தவர்கள் மிகவும் அருமையாக கற்றுத் தந்தார்கள். நீண்ட காலம் பிரகாசித்து புகழ் பெற்றார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் 500 பேரை தனது குரல் வளத்தால் கட்டிப் போட்டு ‘நல்லதங்காள்’ கதையை சுவையாகச் சொன்ன ஒரு சிறு பெண்ணின் அற்புதமான திறமையைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

அப்போது RM. வீரப்பன் கல்வி அமைச்சராக இருந்து வந்தார். “அறிவொளி இயக்கத்துக்குள் கம்யூனிஸ்டுகள் நிறைய பேர் இருக்கிறர்கள். அவர்களை நீங்கள் களை எடுக்க வேண்டும்” என்று சிலர் அவரிடம் முறையிட்ட போது, “கம்யூனிஸ்டுகள் இருந்தா ஒழுங்கா நடக்கும்” அப்படியே விட்டுடுங்க “ என்று மிகச் சாதாரணமாக அந்த குற்றச்சாட்டை ஒதுக்கினார்.

கிராம மக்களிடையே பழக ஆரம்பித்த போது, அவர்களுடைய மொழி ஆளுமை எனக்கு ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியது. கிராமத்தில், வகுப்புக்கு வரச் சொல்லி மக்களை அழைத்தால் “நாங்களே எலந்த முள்ளிலே பட்ட சேலையாட்டம் இழுபட்டுக் கிடக்கோம். நீங்க பாடம் சொல்லித் தர வந்திட்டீங்க" என்று ஒருவர் சொல்வார். இன்னொருவர் “எலிக்கு எதுக்குடி இன்ஸ்பெக்டர் வேலை?” என்பார்.

மிகவும் அபூர்வமான விடுகதைகளை கேட்டும் வாய்ப்புக் கிடைத்தது. ஒருவர் “10 பைசாவுக்கு சரக்கு வாங்கி ரெண்டு லாரியிலே லோடு ஏத்தியும், இன்னும் சரக்கு மிச்சம் இருக்கு. அது என்னன்னு சொல்லுங்க” என்று கேட்பார். விடை தெரியாது நாங்கள் முழித்துக் கொண்டிருக்கும்போது, “மூக்குப் பொடி” என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்வார். ‘சிலேட்டு கொடுங்க சார்’ னும், ஒரு வா(ய்) சாப்பிட்டுப் போங்க சார்”னும் சகஜமாக கேட்பார்கள் கிராமத்து மக்கள்.

கல்லூரியில் எனக்கும், மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால் 2004ல் நான் பணி ஓய்வு பெறும் கடைசி நாள் வரையில் கூட, அந்த இடைவெளி இருந்து கொண்டு தான் இருந்தது. 1990 வரை வகுப்பறையை எனது அறிவாற்றலை, மேதைமையை வெளிக்காட்டுவதற்குத்தான் நான் உபயோகித்து வந்தேன். நிறைய புத்தகங்களைப் படித்து அதை வைத்து மாணவர்களை மயக்கப் பார்த்தேன்.

எனது ஆசிரியப் பணியில் முதல் 10-12 வருடங்கள் இப்படித்தான் கழிந்தன.

எனது இந்த மனப்போக்கை, “அறிவொளி இயக்கம்” முற்றிலுமாக மாற்றியது. அறிவொளி இயக்கத்திலிருந்து வந்த பின்னர், மாணவர்களை ரசிக்க ஆரம்பித்தேன்.

இந்த இரண்டாவது பகுதியில் மாணவர்களையே பாடங்களை எடுக்கச் சொன்னேன். கல்லுhரியில் இறுகின பேச்சற்ற வகுப்பறைகளை கலகலப்பான வகுப்புகளாக மாற்றி, சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்தது அறிவொளி இயக்கம்.

அதை விட முக்கியமானது. அறிவொளி இயக்கம் பாடப்புத்தகங்களை ஒழித்தது. இப்போதும் துவக்கநிலையில் ஃப்ளாஷ் கார்டுகளை வைத்து இலகுவாக கற்பிக்கும் முறையே சிறந்தது என்று கருதப்படுகிறது.

தமிழ்நாட்டு படப்புத்தகங்கள் சரியாக எழுதப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மைதான். மூன்றாம்வகுப்பு, தமிழ் புத்தகத்தில் திருக்குறளில் “இல்லறம்” பற்றி 5 பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. நான்காம் வகுப்பு புத்தகத்தில் “துறவறம்” பற்றிய பாடல்கள் இருந்திருக்கின்றன. முதல் வகுப்பில் வரும் நாமக்கல் கவிஞரின் சூரியன் வருவது யாராலே? என்ற பாடல் B.A, B.Sc. பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருக்கின்றது. இதைவிட மோசமான விஷயம், மூன்றாம் வகுப்பில் ‘குடும்பக் கட்டுப்பாடு' பற்றிய பாடம் இருக்கிறது.

மாஸ்கோவில் இருக்கும் பள்ளிகளில், Parents-Teachers Association என்பது Parents-Teachers-citizens Forum என்றே அழைக்கப்படுகிறது. அந்த அமைப்பில், மொத்தம் 10 பேர் இருந்தால் அதில் 5 பேர் மாணவர்கள், 3 பேர் பெற்றோர்கள், மீதமிருக்கும் 2 பேர்தான் ஆசிரியர்கள். இந்த மாதிரியான அமைப்பை நமது நாட்டிலும் கொண்டு வர வேண்டும்.

கல்வி என்பது பங்கேற்பாக இருக்க வேண்டும். மாணவர்களின் மேல் திணிப்பதாக இருக்கக் கூடாது. மாற்று வகுப்பறைகளை உருவாக்க வேண்டும். மாற்று வகுப்பறைகள் உருவாக்குவதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் மட்டும் போதாது. கல்வியில் மாற்றம் கொண்டு வந்த கிஜுபாய், மாண்டிசோரி போன்றவர்கள் எல்லாம் ஆசிரியர்கள் அல்லர். பாடசாலைகளுக்கு வெளியிலிருந்து வந்து கல்வியில் பெரும் மாறுதல்களைச் செய்தவர்கள் வங்கி ஊழியர்களும் மாற்று வகுப்பறையை உருவாக்க முன்வர வேண்டும்; நடத்த வேண்டும். ஆசிரியர்கள் வகுப்பறையை விட்டுக் கொடுப்பதாக இல்லை. நமக்கு கேட்பதற்கு ஆள் வேண்டும். அதை வகுப்பறையில் இருந்து தான் செய்ய முடியும்.

தொடக்கத்தில் ஆசிரியர் பங்கேற்பு, போகப்போக மாணவர்பங்கேற்பு என்பதுதானே நகரும் வகுப்பறைக்கு- வளரும் வகுப்பறைக்கு அழகு. மாற்று வகுப்பறைகள் மற்ற துறைகளைச் சேர்ந்த அறிஞர்களைதான் உருவாக்க வேண்டும். மாற்று வகுப்பறைகள், மாணவர்களை விவாதம் செய்ய வைத்து அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக மாணவர்களை மாற்றாமல், மாற்று வகுப்பறைகள் மாணவர்களின் கற்பனைத் திறனையும் சுயமாகப் படைக்கும் திறனையும் வளர்ப்பதற்கு உதவ வேண்டும். அப்படி நாம் உருவாக்கும் ‘ரோல் மாடல்’கள் நிச்சயம் சமூகத்தில் மாறுதல்களை உருவாக்குவார்கள்.

“ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு நட்சத்திரம் இருக்கிறது; அதைக் கண்டுபிடிக்க கண்கள் வேண்டும்" என்றார் எமர்சன். உண்மைதான். ஆசிரியர்களுக்கு நூறு கண்கள் வேண்டும். அப்போது தான் ஆற்றலுள்ளவர்களைத் கண்டுபிடித்து ஆசிரியர்கள் ஊக்குவிக்க முடியும். 'நல்ல மார்க்' வாங்கினால், ஒரு பத்து பேர் ஆசிரியர் கண்ணுக்குத் தெரிவார்கள். விளையாட்டில் முன் நிற்கும் ஒரு ஐந்து பேர், பாடக்கூடியவர்கள், வரையக் கூடியவர்கள் என்று ஒரு ஐந்து பேர் தெரிவார்கள். இந்த இருபது பேர்களைத் தவிர மிச்சமிருக்கும் நாற்பது மாணவர்களை வெளிச்சத்திற்கு வருவதே இல்லை. அதற்கு உரியர் வாய்ப்பினைத் தருவது மிகவும் முக்கியம். வகுப்பிலிருக்கும் படிக்கக் கூடியவன், பாடக் கூடியவன்,ஓடக் கூடியவனைத் தவிர விடுபட்டவர்களை, மற்ற ஆற்றல்கள் பெற்றிருந்தும் வெளிச்சத்திற்கு வரக் கூசுபவர்களை இனம் கண்டு, அத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். அதற்கு ஆசிரியர்களுக்குத் தேவையான கண்களும், காதுகளும் இருக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை, திறமைகள் பெற்றிருந்தும் வெளிவராத, எளிமையான மாணவர்களை இனம் கண்டு, அவர்களை ஊக்குவிப்பதே எனது இயல்பாகிப் போனது.

தொழிற்சங்கம் கூட ஒரு வகுப்பறை மாதிரிதான். சங்க இளம் தலைவர்களிடம் முதலிலேயே ‘பர்ஃபெக்ஷன்’- ஐ எதிர்பார்க்கக் கூடாது. அது எப்போது வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் சங்கத்தின் மீது ஈடுபாடு என்பது மிகவும் அவசியம். பொறுப்பில் இருப்பவர்களுக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்புகளைத் தராமல், தலைமை ஏற்கும் ஆற்றல் பெற்ற புதிய தலைவர்களை தொழிற்சங்கங்கள் இனம் கண்டு, அவர்களது ஆற்றல்களை வளர்க்க முன்வர வேண்டும்.

பதிவு: ராஜன்பாபு


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com