Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Bank Worker's Unity
BWU Logo
ஜூன் 2007

விஞ்ஞானம் தந்த அல்லல்
கே.ஆர்.எஸ்

செல்லையாவை நான் பீச்சில் சந்தித்தபோது அவன் என் காதை உற்றுப்பார்த்து விட்டு "வாப்பா" என்றான். "என்ன செல்லையா காதை ஏன் உற்றுப் பார்க்கிறாய், காதில் முகம் இல்லையே" என்றேன்.

"இல்லை, காதில் செல் போனுக்கான Hands freeஐ சொருகிக் கொண்டு இருக்கிறாயோ என்று பார்த்தேன், நேற்றைக்கு அது என்னை படாத பாடு படுத்தி விட்டது" என்றான் அழாத குறையாக.

"என்னாச்சு, காதுக்குள்ளே மாட்டிக் கொண்டு எடுக்க வரவில்லையா?"

"நான் எங்கே இதை எல்லாம் வச்சுக்கப் போறேன் மற்றவர்கள் வைத்துக் கொண்டிருப்பதால் நான் படாத பாடு பட்டேன்" என்றான் சலிப்போடு.

"என்னப்பா கொஞ்சம் புரியும்படியா சொல்லேன்." என்றதும் நேற்று நடந்த அந்த சம்பவங்களை விவரித்தான்.

நேற்று செல்லைய்யா மருந்து வாங்க கடை வாசலில் நின்று கொண்டிருந்தபோது பக்கத்தில் நிற்பவர் காலை தெரியாமல் மிதித்து விட்டான். உடனே `சாரி, சாரி’ என்றும் சொன்னான். உடனே மிதிபட்டவர் `சாரியாவது பூரியாவது தோலை உரித்து விடுவேன்’ என்று கத்திவிட்டார். இப்படி அநாகரீகமான பேச்சினால் கோபமடைந்த செல்லையா `நீ தோலை உரிப்பேன் என்றால் நான் எலும்பை எண்ணிவிடுவேன்,’ என்று கத்த அங்கு ஒரு சிறு கூட்டம் கூடிவிட்டது. இதற்குள் கால் மிதிபட்டவர், `சார் நான் உங்களைச் சொல்லவில்லை சார். என் பையன் என்னிடம் சொல்லாமல் சினிமா பார்த்துவிட்டு வந்து செல்லில் சாரி என்றான் அவனைத்தான் கண்டித்தேன்,’ என்று கூறிக் கொண்டே தன் காதில் சொருகி இருந்த அந்த இயந்திரத்தைக் கழற்றி செல்லையாவிடம் காண்பித்தார்.

இதிலிருந்து ஒரு மாதிரி சுதாரித்துக் கொண்டு கடைக்காரரைப் பார்த்தால் அவரும் காதில் ஒரு கருவியை மாட்டிக் கொண்டு, `என்ன வேண்டும் உங்களுக்கு, என்ன வேண்டும் உங்களுக்கு,’ என்று யாரிடமோ செல்லில் கேட்டுக் கொண்டிருப்பதை பார்த்ததும் ஆத்திரம் வந்துவிட்டது செல்லையாவிற்கு. `ஏன்யா குத்துக் கல்லாட்டம் உன் முன்னால அரைமணி நேரமா நிக்கறேன். எனக்கு என்ன வேணும்னு கேட்காம யாரிடமோ செல்லுல கேட்டு உபசரிச்சுக்கிட்டு இருக்கியே நியாயமா?’ என்று கத்திவிட்டான்.

`நான் யாரிடமும் கேட்கலை சார், உங்ககிட்ட தான் அரைமணி நேரமா கேட்டுக் கிட்டு இருக்கேன், உங்களுக்குத்தான் காது கேட்கலை. காதுல மாட்டிக் கிட்டு இருந்தா எப்பவும் யார் கிட்டேயாவது பேசிக்கிட்டேயே இருக்க முடியுமா என்ன?’ என்று கடைக்காரன் கூற ஆடிப் போய் விட்டான் செல்லையா.

இப்போது செல்லையா என்னைப் பார்த்து, "இப்படி யாரிடமோ பேசுவதை என்கிட்ட பேசினதா எடுத்துக் கிட்டதும், என்னிடம் பேசினதை யாரிடமோ பேசினதா எடுத்துக்க வச்சு என்னைப் பைத்தியக்காரன் ஆக்கி விட்டதே இந்த விஞ்ஞானம். இப்ப சொல்லு நான் உன் காதைப் பார்த்தது தப்பா?" என்று விரக்தியோடு கேட்டான் .

"நீ பார்த்ததில் எந்தத் தப்பும் இல்லை," என்று பின்னாலிருந்து குரல் கேட்கவே திரும்பிப் பார்ததால் ராஜாபாதர் நின்று கொண்டிருந்தான்.

"ஆனால் காதை மறைக்கிற ஹிப்பு கிராப்பு வச்சுக்கிட்டவங்க இந்த மாதிரி இயந்திரத்தை காதில் சொருகிக்கிட்டா எப்படி கண்டு பிடிப்பே சொல்லு?" என்று புதிர் போட்டான் ராஜாபாதர்.

"என்னப்பா வரும் போதே புதிர் போட்டு கிட்டு வர்றே, நீ ஏதாவது வம்புல மாட்டிக்கிட்டியா?"

"ஆமாம்பா, தமிழ் புத்தாண்டு அன்னிக்கு எங்க குடியிருப்பில் டாக்டர் சுப்பராயனைக் கூப்பிட்டு எண்ணெயற்ற உணவே ஆரோக்கியம் என்கிற தலைப்பில் பேசச் சொன்னோம்."

"யாரு ஜிப்பா தலையன் தானே" உற்சாகத்துடன் கேட்டான் செல்லையா.

"ஆமாம், ஆமாம். அவரேதான். மேடையில் உட்கார்ந்தவர் பேச ஆரம்பித்துவிட்டார்னு நினைத்து மைக்கை ஆன் பண்ணினா, `நீ செய்த ஆமவடை சூப்பர். ஏழு வடை சாப்பிட்டேன். சாயந்திரம் டிபனுக்கு பண்ணின பஜ்ஜியில் எண்ணெய் கொஞ்சம் அதிகம், இருந்தாலும் சூப்பர். பத்து பஜ்ஜி சாப்பிட்டேன்’னு பேசுகிறார். கூட்டத்தில் இருந்தவங்க சிரிக்கவும் அவர் புரிஞ்சிகிட்டு என்னை அருகில் கூப்பிட்டு "உன்னை யாரு மைக்கை ஆன் பண்ணச் சொன்னது? நான் என் மனைவிகிட்ட அவள் செய்த புது வருடச் சமையலை பாராட்டிப் பேசுவதை இவங்களெல்லாம் கேட்பது அவசியமா?" என்று கோபமாக கேட்டார்.

‘சார் நீங்க செல்போனிலா பேசினீங்க நான்....’ என்று முடிப்பதற்குள் :`இதோ பாரு’ என்று ஜில்பா முடியை தூக்கி காதைக் காட்டி விட்டு ‘என் மானத்தை வாங்கி விட்டாய். இனிமேல் நான் பேசினால் எவன் கேட்பான்,’ என்று கூறியவாறு காரில் ஏறி விருட்டென்று போய்விட்டார். இது என் மனதை ரொம்ப பாதிச்சிடுச்சு.

"உனக்காவது மனசைத்தான் பாதித்தது. எனக்கு உடம்பையே பாதித்ததே" என்று குரல் கேட்கவே திரும்பிப் பார்த்தால் ஷண்முகம் நின்று கொண்டிருந்தான்.

"என்ன ஷண்முகம் இப்படி துரும்பாய் இளைத்து விட்டிருக்கிறாயே"

"ஆமாம்பா, ஒரு செல்போன் என்னை முக்கால் டம்ளர் விளக்கெண்ணெயை குடிக்க வைத்து உடம்பையே கெடுத்துவிட்டது".

"என்ன? செல்போன் உன்னை விளக்கெண்ணெயை குடிக்க வைத்ததா, அதுவும் முக்கால் டம்ளர்!" என்று ஆச்சரியத்துடன் வினவினேன்.

நல்ல வேளை ஒரு ஐம்பது வருடத்திற்கு முன் செல்போன் இருந்திருந்தால் என்பாட்டி என்னை வாரத்திற்கு இரு முறை விளக்கெண்ணெய் குடிக்க வைத்திருப்பாள். என் பாட்டி இறந்தபின் செல்போனை கண்டுபிடித்த அந்த விஞ்ஞானி இருக்கும் திக்கை நோக்கி (எது என்று தெரியாமல்) ஒரு கும்பிடு போட்டேன்.

ஷண்முகம் தன் கதையை தொடங்கினான்:

"போன ஞாயிறு எங்க அண்ணன் வீட்டுக்குப் போனேன்."

"நீ உங்க அண்ணன் மேல் ரொம்ப மரியாதை வச்சவனாச்சே, அவர் கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டியே"

"ஆமா, ஆமா. அதனால் தான் வந்தது வம்பு. ஹாலில் பேப்பரை படிச்சிக்கிட்டிருந்தவரு என்னைப் பார்க்காமல் ‘சமையல் அறைக்குப் போ’ என்றார். போனேன். `வலது பக்கம் இருக்கிற அலமாரியைத் திற’ என்றார். திறந்தேன். `இரண்டாவது தட்டில் இருக்கிற பாட்டிலை திறந்து முக்கால் டம்ளர் விட்டு குடிச்சிடு’ன்னார். சரின்னு குடித்துவிட்டு அவருகிட்ட வந்து ‘நீங்க சொன்ன மாதிரி குடிச்சுட்டேன் அண்ணே’ என்றேன்.

உடனே வேகமா எழுந்து வந்து பார்த்து விட்டு ‘அடப்பாவி விளக்கெண்ணையை குடிச்சுட்டியேடா! நான் உங்க அண்ணிக்கு உடம்பு சுகம் இல்லாமல் அவுங்க அம்மா வீட்டில் இருக்கிறதால் அங்கு கஷாயம் வாங்கி வச்சிட்டு வந்தேன். அதை எங்க வச்சிருக்கேன், எப்படி சாப்பிடுவது என்பதை செல்போனில் அவங்களுக்கு சொல்லிக்கிட்டு இருக்கேன். நான் உன்னைச் சொன்னதாக எடுத்துக்கிட்டு கூல்டிரிங்ஸ் சாப்பிடுகிற மாதிரி முக்கால் டம்ளர் விளக்கெண்ணெயை குடித்து வைத்திருக்கிறாயே,’ என்று கூறிக் கொண்டே காதில் சொருகி இருந்த கருவியை கழட்டினார். இதற்குள் எனக்கு வயிற்றில் உபாதை உண்டாகிவிட்டது. வயிற்றுப்போக்கு கடுமையாகிவிடவே ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இப்பத்தான் வீட்டிற்கு வந்து இரண்டு நாளாகிறது," என்று முடித்தான் ஷண்முகம் மிகவும் பிரயாசையுடன்.

" டேய், இத பாருடா வளர்கிற விஞ்ஞானத்தை அல்லல் என்று சொல்ல ஒரு நூறு பேர் இருப்பான். இதையெல்லாம் நீ காதில் போட்டுக்காதே" என்ற பேச்சு கேட்கவே நாலுபேரும் திரும்பிப் பார்த்தோம்.

யாரோ ஒரு இளைஞன் காதில் அந்த இயந்திரங்களை சொருகிக் கொண்டு யாரிடமோ பேசிக் கொண்டே கடல் அலைகளை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com