Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Bank Worker's Unity
BWU Logo
ஜூன் 2007

கலாச்சாரக் கங்காணியரை எதிர்த்து கலகக்குரல்
கே.ஜி.பி.

மீண்டும் “கலாச்சாரக் கங்காணியர்கள்” புறப்பட்டு விட்டனர் சூலத்துடன். இம்முறை இவர்கள் படையெடுப்பு பரோடாவிலுள்ள (வதோதரா) மஹாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் கவின் கலைத் துறைக்கு. சந்திரமோகன் என்ற ஓவியத்துறை மாணவர் தேர்வு ஆய்வுக்குக் காட்சிப்படுத்தியிருந்த படைப்புகளை “இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக - ஆபாசமாகச் சித்தரித்ததாக அவரைத் துவைத்து எடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 5 நாள் காவலில் இருந்துவிட்டு நாடுதழுவிய போராட்டம் காரணமாக வெளியே பெயிலில் இருக்கிறார் இவர். காவல்துறையினர் தலையீடு கூடாது என்று சந்திரமோகனுக்கு ஆதவராக இருந்ததால் கவின்கலைத்துறையின் பொறுப்பாளரான (Dean) சிவாஜி மு. பணிக்கர் மன்னிப்பு கோரவேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நீரஜ்ஜெயின் என்ற பாஜக பிரமுகர் தலைமையில் வன்முறையில் இறங்கினர். துணைவேந்தர் மனோஜ்சோனி மோடி அரசின் மகுடிக்கு ஆடியபடியே பணிக்கரைப் பணிநீக்கம் செய்தார். சங்பரிவார் வன்முறை காரணமாக தலைமறைவாகியிருக்கிறார் பணிக்கர். ஆய்வுக்கு வைத்திருந்த படைப்புகளை எவ்விதத்திலும் வெளியார் தலையிட்டு சென்சார் செய்ய முடியாது.இது பல்கலைக்கழகத்தின் சுதந்திரச் செயல்பாட்டை சுருக்குவதாகும். ஓவியர்களின் படைப்பு சுதந்திரத்தை முடக்கிவிடும் ஆபத்தான போக்காகும்.

ஓவியர் எம்.எப். ஹுசைன், திரைப்பட இயக்குநர் தீபா மேத்தா, நடிகை ஷபானா ஆஸ்மி, தீலீப் குமார் ஆகியோரைத் தொடர்ந்து இந்து மத அடிப்படைப் பழமைவாதிகளால் பந்தாடப்பட்டிருப்பவர் பணிக்கரும், சந்திரமோகனும்.

‘ஆபாசம்’ என்ற பெயரில் இதை எதிர்க்கும் இவர்கள் ரிக்வேதம் தொடங்கி ஊர்வசி, நளதமயந்தி கதை வரை என்ன பதில் சொல்ல இருக்கிறார்கள்? எல்லோரா, கைலாசநாதர் கோவில், கஜுராவோ, கொனாராக், பேரூர்-ஹளபேடு சிற்பங்கள், காமசூத்ரா, தாந்திரிகச் சடங்குகள், கீதகோவிந்தம், ஸெளந்தர்ய லஹரி போன்ற படைப்புகளையும் அழித்து விடத் துணிவார்களா? அருணகிரிநாதரையும், ஆண்டாளையும் கூடப் படிக்க விடாமல் தடுப்பார்களா?

வரலாற்றாசிரியர்கள் இர்பான் ஹபீப், ரோமிலா தாப்பர், கே.என். பணிக்கர், சர்வபள்ளி கோபால் ஆகியோரை இழிவுபடுத்தியவர்கள் இந்தக் “கலாச்சாரக் கங்காணிகள்” பண்பாட்டுத்தளத்தில் இச்சவால்களை அனைவரும் ஒன்றுபட்டு விழிப்புணர்வுடன் இருந்து எதிர்க்க வில்லையானால் நமது கலாச்சாரச் சின்னங்களும், படைப்புகளும் நிர்மூலமாகிவிடும்.


தீர யோசித்து அளிக்கப்பட்ட வாக்கு தானா?
சாரேகா


சக்தி வாய்ந்த மேற்கத்திய நாடான ஃபிரான்ஸில் அதிபர் தேர்தல் நடைபெற்றுள்ளது. ஐரோப்பாவில் மட்டுமின்றி உலக அரசியல் அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல முக்கிய நிகழ்வு இது.

ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற முதல் சுற்று நான்குமுனைத் தேர்தலில் வென்று, UMP (Union for Popular Movement) கட்சியின் நிக்கோலாஸ் சர்கோசியும் (Nicolos Sarkozy), சோசலிஸ்டுக் கட்சியின் செகோலின் ராயலும் மே மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற இறுதிச் சுற்றான நேருக்கு நேர் தேர்தலில் மோதிக் கொண்டார்கள்.

47 சதம் பேர் ராயலுக்கு வாக்களிக்க, 53 சத வாக்காளர்கள் சர்கோசிக்குத் தங்கள் ஆதரவினை நல்கி, அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். 2002 ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்ற தீவிர வலது சாரி வேட்பாளரான லீ பென் இந்தத் தேர்தலில் முதல் சுற்றிலேயே தோற்றுப் போக, அவரது ஆதரவாளர்கள் தங்கள் வாக்குகளை சர்கோசிக்கு அளித்து அவரை வெற்றி பெற வைத்துள்ளனர்.

2005ஆம் ஆண்டு நவம்பரில் பாரிஸ் நகரைச் சுற்றியுள்ள சிறு நகரங்களில் வசிக்கும் ஆப்பிரிக்க மக்கள் மத்தியில் கலவரம் மூண்ட போது, உள்துறை அமைச்சராக இருந்த சர்கோசி காவல்துறையினரை ஏவி, கடுமையான அதிரடி அடக்குமுறை நடவடிக்கைகளால் பிரச்சினையை சிக்கலாக்கி ‘பெயர்’ பெற்றவர். முக்கிய பிரச்னைகளில் சர்கோசி தெரிவித்துள்ள கருத்துக்கள் - எடுத்துள்ள நிலைபாடு என்னவாக இருந்துள்ளது?

வல்லரசான அமெரிக்காவின் உலகளவிலான ஆதிக்கத்தை மட்டுப்படுத்துவதற்காக, ஃபிரான்சும், ஜெர்மனியும், ஒத்திசைவாக இணைந்து செயல்படுவது வழக்கம். ஐரோப்பிய யூனியனை வலுப்படுத்தும் இந்த அரசியல் தந்திரத்தை சர்கோசி ஏற்றுக் கொள்ள வில்லை.

சர்கோசி, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் மற்றும் தற்போதைய பிரதமர் டோனி ப்ளேர் ஆகியாரின் பரம ரசிகர். அது மட்டுமல்ல, அமெரிக்க முன் மாதிரியை, மதிப்பீடுகளை, குறிப்பாக ஜார்ஜ்புஷ்ஷின் செயல்பாடுகளை வெகுவாக சிலாகிப்பவர். தம்மை “அமெரிக்கர்” என்று கூறி ஃபிரான்ஸ் நாட்டுப் பத்திரிகைகள் கேலி செய்வது தமக்கு மகிழ்ச்சியையே தருவதாகக் கூறிக் கொள்பவர். அமெரிக்காவின் ஈராக் மீதான தாக்குதலைப் பொறுத்த வரை, ஃபிரான்ஸின் எதிர்ப்பைக் கடுமையாகக் குறை கூறியது மட்டுமல்லாமல் தேர்தலுக்கு முன்னதாக வாஷிங்டன் சென்று மன்னிப்பு வேறு கோரியிருக்கிறார் சர் கோசி.

ஆப்பிரிக்காவிலிருந்து வந்து குடியேறியுள்ள மக்கள் மீது இன ரீதியிலான வெறுப்பைக் கக்கி வரும் சர்கோசி, அவர்களின் குற்றங்களுக்கு விசாரணையின்றி குறைந்தபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றார்.

பல சிரமங்களுக்கிடையிலும், பொதுவாக “சேம நல அரசு” என்ற வகையில் தான் ஃபிரெஞ்சு அரசுகள் இயங்கி வந்துள்ளன. குறிப்பாக பொது சுகாதார நலன் பராமரிப்பில் உலக வங்கியின் பாராட்டுதலைப் பெற்றுள்ளது ஃபிரான்ஸ். சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு வெட்டப்பட வேண்டும் என்பதும், சேம நலத்திட்டங்கள் வெட்டிச் சுருக்கப்பட வேண்டும் என்பதும் சர்கோசியின் தீர்மானம்.

அதே வேளையில் செல்வந்தர்கள் செலுத்தும் வரிகள் குறைக்கப்பட வேண்டுமென்பதும் அவரது அவா.

இதுவரையிலான கொள்கைளிலிருந்து தாம் முற்றிலுமாக விலகிச் செல்லப் போவதாக பிரகடனம் செய்துள்ள சர்கோசியின் வெற்றிச் செய்தி அறிவிக்கப்பட்டவுடன் பாரிஸ் வீதிகளில் அவருடைய எதிர்ப்பாளர்கள் திரண்டு கண்டனப் பேரணிகளை நடத்தினர். அவர்கள் ஏந்திச் சென்ற பெரிய பேனர்களில் கீழ்க்கண்ட வாசகம் எழுதப்பட்டிருந்தது.

“கூடுதலான இனப் பாகுபாடு
கூடுதலான வெறுப்பு
கூடுதலான ஏழ்மை

அதிபர் தேர்தலின் முடிவுகள் பற்றிய சராசரி ஃபிரெஞ்சு மக்களின் உணர்வையும், அச்சத்தையும் இந்த வாசகம் மிகத் துல்லியமாகவே பிரதிபலித்தது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com