Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Bank Worker's Unity
BWU Logo
ஜூலை 2007

படிச்சா குறிச்சியிலதான்னு உறுதியா நின்னேன் - ரகுவரன்
சந்திப்பு: எஸ்.வி.வி.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அமைதியாக அமைந்திருக்கிறது குறிச்சி கிராமம். அறந்தாங்கி அல்லது புதுக்கோட்டை மார்க்கத்தில் பறந்து கொண்டிருக்கும் பேருந்துகள் நின்றே தீர வேண்டிய நிறுத்தம் அல்ல அந்த இடம். மெல்ல விசாரித்துக் கொண்டு ஒரு பள்ளிக்கூட வாசலில் வந்து நிற்கிறீர்கள். இப்போது வேறு உலகமாக மாறி இருக்கிறது குறிச்சி. வண்ணப் பூக்களாய்க் குழந்தைகள் குதூகலித்துக் கொண்டிருக்கும் IBEA பள்ளி எளிமையாகத் தனது கடமைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

2002 ஜூன் 12 அன்று விடுதலை போராட்ட வீரர் என். சங்கரய்யா திறந்து வைக்க, முன்னாள் துணைவேந்தர் ச. முத்துக்குமரன் குத்து விளக்கேற்றி வைத்த பொழுதுகளில் கனவுகள் துவங்கியிருந்தன. இந்த 5 ஆண்டுகளில் IBEA பள்ளி சாதித்திருக்கும் விஷயங்கள் வியப்பூட்டுகின்றன.

பள்ளியின் 32 மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத, ஒரே ஒருவர் தவிர மற்றவர்கள் தேர்ச்சி பெற்றனர். முதல் மாணவனாக 463 (93%) மதிப்பெண்கள் பெற்ற ரகுவரன் 2005ல் தேசிய அளவில் இளம் விஞ்ஞானி விருது பெற்றவரும் கூட. ஜூன் 25 அன்று இரவு 9.45 மணிக்கு அவருடன் தொலைபேசியில் நடத்திய உரையாடலிலிருந்து சில பகுதிகள்... (இதற்காக அவர் குறிச்சி பள்ளிக்கு வந்திருந்து இரவு தங்கிச் சென்றார் என்பது கூடுதல் சுவாரசிய தகவல்)

பள்ளியின் முதலாவது மாணவனாக வருவோம்னு எதிர்பார்ப்பு இருந்ததா?

நிச்சயமா.. நம்பிக்கை இருந்தது. ஒவ்வொரு தேர்வு முடியவும் (தாளாளர்) தனபால் ‘சார்’ ட்ட ‘நல்லா எழுதி இருக்கேன்’னு சொல்லுவேன். உறுதியா 450க்கு மேல் வாங்குவேன்னு நெனச்சேன். 463 வந்திருக்கு.

உங்களைச் சுற்றி இருக்கிறவங்க என்ன சொன்னாங்க?

அம்மா, மாமா எல்லாம் ரொம்ப சந்தோசப் பட்டாங்க. IBEA பள்ளியைப் பத்தி பெருமையா பேசிக்கிட்டாங்க. எங்களை ஊக்குவிக்க டீச்சர்ஸ்.. எங்க தலைமை ஆசிரியர்.. அறிவியல் இயக்கத்திலிருந்து வந்து ஈடுபாட்டோடு பயிற்சி கொடுத்த பாண்டிச்சேரி ஜே.கே. சார், மாதவன் சார்.. இவங்களெல்லாம் எடுத்த முயற்சியில்தான் நல்ல ‘ரிசல்ட்’ பெற முடிஞ்சுது.

உங்க தயாரிப்பு பத்தி சொல்லுங்க.. எத்தனை மணி நேரம் படிப்பீங்க.. காலை எப்ப கண் முழிப்பீங்க...

‘வீட்டுல இருந்து படிச்ச வரைக்கும் வீட்டு வேலை சரியா இருக்கும். 5 மணிக்கு எழுந்திருப்பேன். ஒரு மணி படிப்பு, அப்புறம் வீட்டு வேலை.. அப்புறம் 7 மணிக்கு ‘ஸ்கூல் வேன்’ வந்திரும்..

வீட்டுல என்ன மாதிரி வேலை?

கொஞ்சம் கறவை மாடு இருக்கு. பால் கறந்ததும், சைக்கிளை எடுத்துக்கிட்டு சுற்றி 2 கிலோ மீட்டர் தூரத்துல வீடுகளுக்குப் போய் பால் ஊததிட்டு வருவேன். இதுக்கு ஆறரை மணி ஆகிடும். அப்புறம் ‘ரெடி’ பண்ணிக்கிட்டு 8.15 மணிக்குப் பள்ளிக்குப் போய்ச் சேருவேன். அரை மணி நேரம் கிடைக்கும். மற்ற மாணவர்களோடு பாடங்களை விவாதிப்பது. மாலை 5 மணிக்கு வீடு. 8 வரைக்கும் படிக்கலாம். விளக்கு வச்சி படிப்பேன். இல்லேன்னா எங்க புனவாசல் கிராமத்திலேயே இருக்கிற பள்ளியில் இரவு நேரம் விளக்கெரிந்தால் அங்கு போய்ப் படிப்பேன். டிசம்பர் மாதத்திலிருந்து IBEA பள்ளியிலேயே தங்கிட்டேன். கடைசி 3 மாசமும் 32 மாணவர்களும் பள்ளியிலேயே ஒண்ணா தங்கி ஒண்ணா படிச்சோம்.

ஏன், உங்க வீட்ல ‘கரெண்ட்’ கிடையாதா?

இல்லைங்க. சின்ன குடிசை வீடு தான். அப்பா மூணு வருசம் முன்னாடி மழை நீர் சேகரிப்பு தொட்டி ஒண்ணை ஏற்படுத்திக்கிட்டிருக்கப்ப மாரடைப்பு வந்து இறந்துட்டாங்க. அம்மா, பாட்டி, மாமா ஆதரவுல தான் படிச்சிகிட்டிருக்கேன்.

புனவாசல் பள்ளி உயர்நிலைப் பள்ளியா?

மேல்நிலைப் பள்ளி அது. ப்ளஸ் 2 வரை இருக்கு. ஆனா, குறிச்சியப் பத்தி கேள்விப்பட்டு ஆறாம் வகுப்பிலேயே இங்க வந்து சேர்ந்துட்டேன். எங்க ஊர் பிரின்ஸ்பால் கூட சொன்னாங்க, ‘எட்டி போய் எங்கியோ படிக்கிறியே, இங்க இருந்தா நிறைய மார்க் வாங்கலாம்னாங்க. அந்தப் பள்ளி முதல் மாணவனைவிட ஒரு மதிப்பெண்ணாவது அதிகம் வாங்கிக் காட்டணும்னு தோணிச்சி. பத்து மார்க் கூடவே வாங்கிட்டேன். ஆனா அந்த சார் என்னை அன்போடு அழைச்சு, பாராட்டி, நூறு ரூபாய் பரிசும் கொடுத்தாங்க. எங்க அத்தைதான் ரொம்ப ஆச்சரியமா பாத்தாங்க.
ஏன் அப்படி? முதல்ல 2002ல் IBEA பள்ளியில் சேரும்போது எல்லோரும் விரும்பித்தான் சேர்த்தாங்க. ஆனா, தமிழ் மீடியம் தானா, ஆங்கி ல வழிக் கல்வி இல்லையே, ‘பாங்க்’ ஆளுங்க உருப்படியா பள்ளி நடத்துவாங்களா, அப்படி இப்படின்னு பேச்சு வீட்டில. ‘வீட்டுப்பாடம்’ கொடுக்கறதே இல்லைன்னு புகார் வேற. போனா குறிச்சிக்குதான் போவேன்னு ஒரு மாசம் பள்ளிக்கே போகாம நின்னுட்டேன். சரி, நிரூபிச்சுக் காட்டணும்னு ஒரு எண்ணம் அப்பவே உருவாயிருச்சு. இப்ப உறவுக்காரங்க எல்லாமே பெருமையா பாக்கறாங்க.

இந்தப் பள்ளியில் படிச்சதோட உங்க சொந்த உணர்வைச் சொல்லுங்களேன்?

இந்த அருமையை வேற இடங்களுக்குப் போகும்போதுதான் நிறைய உணர்ந்துக்க முடியும். எதுக்காகவாவது காத்திருக்கும்போது என்ன தம்பி பெஞ்சுல உக்கார்ந்துட்ட, அப்படி தள்ளி நில்லுனு மாணவரை சொல்லாத IBEA பள்ளி. இங்க ஆசிரியர் மாணவரோட அருகில் இன்னொரு மாணவனாகி உக்காந்துக்குவாரு. ‘கைடு’ வாங்கிக்க. ‘டியூஷன்’ வச்சிக்க. என்கிட்ட வரலைன்னா மார்க் கொறப்பேன் என்ற பேச்சே இருக்காது. மதிப்பெண்ணை விட, பாடம் விளங்குதான்னு தான் கவனிப்பாங்க. செய்முறையில் பாத்து, செஞ்சு கத்துக்கிறதுனால மறக்கறதும் இல்ல..

சரி, வெறும் படிப்பு, படிப்பு தானா? விளையாட்டு எல்லாம் உண்டா?

இடையில் உற்சாகப்படுத்திக்கறதுக்கு ஆட்டமெல்லாம் வேணும்தான். நான் மாலையில் ஒரு மணி நேரம் போல ஓட்ட பந்தயம், கால் பந்து, வாலி பால் இப்படி பயிற்சி செய்வேன், பொதுத்தேர்வு வரைக்கும் கூட விளையாட்டில் ஈடுபட்டேன். அது படிப்பை பாதிக்காது. உதவி செய்யும். டி.வி. பாக்கறது எல்லாம் கூட அவங்கவங்க சுய கட்டுப்பாடு இருந்தா பிரச்சினை இல்ல. ‘ரிலாக்ஸ்’ பண்ணிக்கிறது அவசியம்.

பெற்றோர்கள் இப்ப பலவகையான ரெசிடன்ஷியல் பள்ளிகளுக்கு ஓடுறாங்க,
பிள்ளைங்க நிறைய மார்க்கு வாங்கலாம்னு. உங்களுக்குத் தெரியுமா?

இதைப் பத்தி எல்லாம் நல்லா தெரியும். என் நண்பன் ஒருத்தன் போய் ‘டார்ச்சர்’ பட்டு வந்திருக்கான். கட்டணம் வேற ஆயிரக்கணக்கில், லட்சம் வரைக்கும் கூட போகுது. அதைக் கேட்டதுமே எனக்கு ‘ஷாக்’! இப்படி செலவு பண்ணி ‘மார்க்’ தேவையா? நாமளே கடுமையா உழைச்சு வாங்கலாமே. அதுவும், அந்தப் பையன் பத்தாவதுல 443 மார்க் வாங்கியிருந்தான். ரெசிடன்ஷியல் பள்ளியில் போய் சேர்ந்தான். காலையில் 3 மணிக்கோ, எப்பவோ, எப்ப எழுப்பினாலும் வகுப்பறைக்குப் போய்ப் படிக்க ஆரம்பிச்சிறணுமாம். 10 மணிக்கு சாப்பாடு கிடைச்சா பாத்துக்கணும். பொழுதுக்கும் படிப்புதான். இந்தக் கொடுமை தாங்காம இப்ப பிளஸ் டூ தேர்வில் 600 (50%) மார்க் வாங்கி வந்து நிக்கிறான். படிக்கிற இன்பமே இல்லாத படிப்பு என்னத்துக்கு?

‘பிளஸ் டூ’ வில் வேறு பள்ளி, வேறு சூழலாயிற்றே...

ஆமாம். ஆனா எதையும் பழகிக்கற தன்மையை வளர்த்துகிட்டா பிரச்சனை இல்ல. இப்போ வேறு பள்ளி, வேறு பாட முறை. ஆனாலும் நிறைய சாதிக்கணும்னு உணர்வு இருக்கு. ஐ.ஏ.எஸ். ஆகணும்னு ஒரு ஆசை இருக்கு.

ஏன் ஐ.ஏ.எஸ். ஆசை?

ரொம்ப பிற்படுத்தப்பட்ட குடும்பத்துலருந்து வந்திருக்கேன். எங்களைச் சுற்றி கல்வியறிவு, முன்னேற்றம் காணாத எத்தனையோ பிள்ளைகளைப் பார்க்கிறேன். சமூகத்திற்கு ஏதாவது செய்யும் ஒரு வாய்ப்பு கிடைக்கிற இடத்தில் போய் சேவை செய்யலாம்னு தோணுது. அதுக்கு தான் ஐ.ஏ.எஸ். ஆகலாம்னு.. ஏன்னா, முன்ன ஒரு முறை தஞ்சாவூர் கலெக்டராயிருந்த ராதாகிருஷ்ணன் சார் அவங்களை சந்திக்க தனபால் சார் கூப்பிட்டுப் போனப்ப, அவரு கேட்டாரு. உங்க சங்கம் ஏன் ரூரல் ஏரியாவுல போய் பள்ளி துவங்குது நகரத்தைத் தேடலாம் நிறைய பேரெடுக்கலாமேன்னாரு. அப்ப தனபால் சார் ‘கிராமத்துலதான் ‘ட்ராப்-அவுட்’ அதிகமாயிருக்கு. அந்தக் குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்கறதுதான், முக்கியம்னு நாங்க நினைக்கிறோம்’ னு சொன்னது இன்னைக்கும் என் மனசுல இருக்கு.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com