Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Bank Worker's Unity
BWU Logo
ஜூலை 2007

நூல் வழி போராட்ட தரிசனம்
எஸ்.வி.வி.

சாவுக்குக் குழிவெட்டிச்
சாக்கடைக்கு வழி வெட்டித்
தலைமுறை தலைமுறையாய்த்
தலைச்சுமையாய்த்
தமிழரின் பீச்சுமந்த
சக்கிலியன் வருகிறேன்
வழிவிடுங்கள்

இப்படி துவங்குகிறது ச. தமிழ்செல்வன் எழுத்து. கடைசி வரிக்கு முன்வரியின் கடைசி சொல்லைக் கடக்கும்போது நீங்கள் முகம் சுளிப்பது தெரிகிறது. சொல்லே நாறுகிறது -அருவருக்கிறது. சுமக்கிறான் அவன் தலையில் காலகாலமாய்.. என்ற ஆவேசத்தில் மேலும் தொடர்ந்து போகும் சில கவிதை வரிகளோடு துவங்கும் அவரது ‘சொந்தச் சகோதரர்கள்' கட்டுரை முக்கியமான நிகழ்வை ஒட்டி எழுதப்பட்டது. ஆனால் நீண்ட காலமாய் சொல்ல விடுபட்டதை, இனி ஏதாவது செய்ய வேண்டுமென்பதை பதிவு செய்கிற ‘தணல்' தெறிக்கிறது அதில் .

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஃபிரண்ட்லைன் இதழ், கையால் மலம் அள்ளுவோர் (Night Soil Workers) பற்றிய முகப்புக் கட்டுரை ஒன்றை அதிரும்படி படைத்திருந்தது. அதிலிருந்து ஒரு பதைப்பான பக்கத்தை எடுத்து இப்படித் தருகிறார் தமிழ்:

20 ஆண்டுகளுக்கு மேலாக மலம் அள்ளிக் கொண்டிருக்கும் மீனா என்கிற பெண்மணி ஃபிரண்ட்லைன் பத்திரிகை நிருபரிடம் சொன்னது:

"அந்த முதல் நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள். ஒன்பது வயதில் முதன் முதலாக பீக்கூடையை என் தலையில் ஏற்றிய அந்த நாள். தலையில் பீக்கூடையுடன் நடந்து கொண்டிருந்தபோது சுமையின் அழுத்தத்தில் தள்ளாடி ரோட்டோரம் ஒரு சாக்கடையில் விழுந்துவிட்டேன். பாவாடை சட்டையெல்லாம் சாக்கடையில் நனைந்து கூடையிலிருந்து கொட்டிய மலம் என் தலையிலும் உடலிலும் வழிந்தோடக் கீழே கிடந்த எiன்னை கை தூக்கிவிட எந்த மனிதரும் முன்வரவில்லை. எல்லோரும் மூக்கைப் பிடித்தபடி என்னைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

என்னைப் போன்ற இன்னொரு மலம் அள்ளும் சிறுமி வந்துதான் என்னைக் கைதூக்கிக் குளிப்பாட்டிச் சுத்தம் செய்தாள். அவள் வரும்வரை மணிக்கணக்காக அப்படியே அழுது கதறி ஊளையிட்டபடி அத்தெருவோரத்தில் நான் கிடந்தேன். இந்தப் பூமியிலே மிகவும் சபிக்கப்பட்ட குழந்தை நான்தான் என்று அந்த நிமிடத்தில் உணர்ந்தேன்." (ஃப்ரண்ட்லைன் 2006, செப்டம்பர் 22)
சொல்லப்படாத கதைகள் கோடி கோடி. அரசு அமைத்த கமிட்டிகள், பரிந்துரைகள், சட்டங்கள் எதுவும் மலம் அள்ளும் கைகளை விடுவிக்கவும் இல்லை, சமூகம் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளவும் இல்லை.

இன்றும் 92 லட்சம் உலர் கழிப்பறைகள் இருப்பதையும் 6.76 லட்சம் பேர் கைகளால் அவற்றை சுத்தம் செய்து கொண்டிருப்பதையும் 2005ல் மத்திய அரசே வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. ஆனால், எல்லா மாநிலங்களும் (மே.வங்கம் தவிர) உச்சநீதி மன்றத்தின் முன் ஒற்றை எடுப்பு கக்கூஸ் கூட இல்லை என்று பொய் சத்தியம் செய்துள்ளன. யாருக்கும் தண்டனை இல்லை. 2002ல் சஃபாய் கரம்சாரி அந்தோலன் தொடுத்த வழக்கு பற்றியும், ஒட்டியும் பல விவரங்களை உருக்கமாக சொல்லிச் செல்கிறார் தமிழ்ச் செல்வன். நரகலையே நாளும் பார்த்து பார்த்து வெறுத்துப் போய் சமைக்கும் உணர்வே அற்று வெற்றிலை குதப்பியும், சாராயம் குடித்தும் சீரழிபவர்கள் பற்றிய அவரது வரிகள் தவிப்பானவை.

அவர்களது இழிநிலைக்கு எதிரான கோபத்தோடு, அவர்களது மாற்று வாழ்வுக்கு, வாழ்வு ஆதாரத்திற்கு அவர்களது போராட்டத்தில் இதர பகுதி மக்கள் உடன் நின்று ஆவி சோரக் கட்டித் தழுவ வேண்டுமென்ற விழைவோடு முடிகிறது அவரது கட்டுரை.
ஜூன் 12, 2007 அன்று மார்க்சிஸ்டு கட்சி நடத்திய இயக்கம் தனித்தன்மையோடு தென்பட்டது. அன்றைய பேரணிக்கு சென்னைக்கு வந்து சேர்ந்தவர்கள் அவர்களால் திரட்டப்பட்டிருந்தாலும் அக்கட்சிக்கு அப்பாற்பட்டிருந்தவர்கள் அதிகம்.

பிணத்தை அறுப்பது, செத்த விலங்ககுளை அகற்றுவது, செருப்பு தைப்பது, மலம் அள்ளுவது என்று சாதீய ரீதியாக ஆண்டாண்டுகளாய் நியமிக்கப்பட்டிருந்தவர்களின் துயரம், வருவாய் இல்லாத வாழ்க்கை கந்துவட்டி இறுக்கும் குரல்வளை நெறிப்பு, சக்கிலியர்- பகடை- தோட்டி - ஆதி ஆந்திரர் - ஆதி கர்நாடகர்- அருந்ததியர் என்ற வேறுவேறு பெயர்களில் ஒடுக்கப்படும் இம்மக்களின் கண்ணீர் வரலாற்றை மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி. சம்பத் அவர்கள் ஆழமாக அலசுகிறார்.

கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற அருந்ததியர்களுக்கு தலித் ஒதுக்கீட்டில் 1% உள் ஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கையை சம்பத் விவரிக்கிறார்.

நத்தம் தாலுகா குப்புசாமி 1989ல் பி.ஏ. ,1994ல் பி.எட், 1998ல் எம்.ஏ. படித்து, முன்னதாகவே வேலை வாய்ப்புக்குப் பதிவு செய்து 13 ஆண்டுகளாகியும் இன்னும் செருப்பு தைத்துக் கொண்டிருக்கும் அவலத்தை அவர் அடையாளப்படுத்துகிறார்.
துப்புரவுத் தொழிலாளர் பிள்ளைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதையும் அவர் அம்பலப்படுத்துகிறார்.

அருந்ததியர் கோரிக்கைகளுக்காக ஜூன் 12 நடந்த பேரணியில் 18,000 பேர் போல பங்கேற்றிருப்பார்கள் என்பது கணிப்பு. அவர்களில் பலர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.

‘நாங்கள் வருகிறோம்' நூல் இந்த இருவரது கட்டுரைகளின் தொகுப்பாய் போராட்ட நாளன்று வெளிவந்தபோது, ஆவலாக அந்த மக்கள் கேட்டுக் கேட்டு வாங்கி தமக்கான எழுத்துக்களைத் தடவிப் பார்த்து அடைந்த குதூகலம் அவர்கள் கண்களில் தெரிந்தது.

நாம் பேசிக் கொண்டிருக்கும் நூல் அவர்களைப் பற்றியது என்றாலும் அவர்களைப் பற்றிய வாசிப்பு தேவைப்படுவது மற்றவர்களுக்கே. போராட்டத்தையொட்டி செம்மலரிலும், தீக்கதிரிலும் வெளியான கட்டுரைகளை பாரதி புத்தகாலயம் மின்னல் வேகத்தில் கொண்டு வந்திருக்கும் சிறப்பு நூல் இது.


நாங்கள் வருகிறோம்
அருந்ததியர் வாழ்வும், விடுதலையும்
பி.சம்பத்,
ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு: பாரதி புத்தகலாயம்
சென்னை - 18



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com