Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Bank Worker's Unity
BWU Logo
ஜூலை 2007

ICICI அராஜகங்கள்
எஸ்.வி.வி.

யாதய்யா ஒரு சாதாரண அரசு ஊழியர். ஆந்திர பிரதேச அரசின் மருத்துவ மற்றும் சுகாதாரத்துறையின் (`டி’ பிரிவு) எலெக்ட்ரீஷியன். ரூபாய் 15,000 அற்பக் கடனுக்காக உயிரைப் பறிகொடுத்து விட்டார். இல்லையில்லை, அந்தக் கடனைத் திருப்பித் தரவில்லை என்பதற்காக ஐசிஐசிஐ வங்கியின் `வசூல் ராஜாக்கள்’ அவர் உயிரை பலி வாங்கி விட்டனர்.

இந்த மே மாதம் 22ம் தேதியன்று எலைட் ஃபைனான்சியல் சர்வீசஸ் ஆசாமிகள் யாதய்யாவைத் தேடி அவர் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். அவர் வேலைக்குப் போய்விட்டதை அறிந்து, அவரது புகைப்படத்தை வாங்கிக் கொண்டு நண்பகல் நேரத்தில் அலுவலகத்தில் அவரைக் கண்டுபிடித்துத் தமது அலுவலகத்திற்கு ‘தூக்கி’ வந்து விட்டனர்.

15,000 ரூபாய் கடனுக்காகத் தாம் மிரட்டப்படுவதாக மனைவி சுனந்தாவை தொலைபேசியில் அழைத்துச் சொல்லி, எப்படியாவது ‘பணத்தைத் திரட்டு’ என்று புலம்பி இருக்கிறார் யாதய்யா. அவர் அதற்காக அலைந்து கொண்டிருக்கும்போது 2 மணி போல மைத்ரி மருத்துவமனையில் இருந்து ‘யாதய்யா இறந்துவிட்ட’ செய்தி வருகிறது சுனந்தாவிற்கு. அந்த பேதைப் பெண் என்ன துடிதுடித்திருப்பாள் பாருங்கள்.

ஐசிஐசிஐ ஏஜெண்டுகள் தமது கணவனைக் கொன்று விட்டனர் என்று அவர் புகார் கொடுத்ததன் அடிப்படையில், பஞ்சகட்டா காவல் நிலைய ஆய்வாளர் ஜி. நரசய்யா, எலைட் நிறுவனத்தின் பங்குதாரர் ராஜாவையும் அவனுடன் சென்ற இன்னும் 3 பேரையும் கைது செய்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், குற்றத்தை ஐசிஐசிஐ வங்கி மூடி மறைக்கப் பார்க்கிறது. யாதய்யா பணத்தைச் செலுத்த எலைட் அலுவலகம் வந்ததாகவும், திடீரென்று ‘வலிப்பு’ வந்து கீழே விழுந்து நெற்றியில் காயம் ஏற்பட்டுவிட்டதாகவும், மருத்துவமனைக்கு விரைவாக அவரை அழைத்துச் சென்றும் காப்பாற்ற முடியவில்லை என்றும் ஜோடிக்கின்றனர் ஐசிஐசிஐ வங்கியும் ‘எலைட்’ வசூல் கும்பலும்.

ஐசிஐசிஐ நிர்வாகத்தின் ‘டார்ச்சர்’ கதை புதியதல்ல. இணையதளத்திற்குள் சென்றால் இவர்கள் செய்யும் ‘ராவடி வேலை’ வெட்ட வெளிச்சமாகும். இதில் கொடுமை என்னவென்றால் தமிழ் தினசரிகளில் பெயரே சொல்லாமல் ஒரு ‘தனியார் வங்கி’ என்றுதான் இத்தகைய செய்திகள்- இந்தச் செய்தி உள்பட-வருகின்றன. செல்வாக்கு உள்ளவர்களைக் காப்பாற்றும் பத்திரிகை தர்மம் போலும்!

புதிய தலைமுறை தனியார் வங்கிகள் ஆட்டோ, உருட்டுக்கட்டை சகிதம் வசூல் ஏஜெண்டுகளை நியமிப்பது பலமுறை வெளியாகி கடும் கண்டனத்திற்கு ஆளாகியும் அவர்கள் திருந்துவதாக இல்லை.

உச்சநீதிமன்றத்தில் 06.02.07 அன்று நீதியரசர்கள் ஏ. ஆர். லட்சுமணன், அல்த்மஸ் கபீர் இருவரடங்கிய ‘பெஞ்ச்’, இப்படியான குண்டர் முறை கடன் வசூல் முறைகளைக் கடுமையாக எச்சரித்து முடிவிற்குக் கொண்டுவர பணித்தது. உத்தர பிரதேசத்தில் நடந்துவரும் இந்த வழக்கில் ஐசிஐசிஐ வங்கி உயர் அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கும் பதிவாகியுள்ளது என்று BEFI-TN பொதுச் செயலாளர் அ. ரெங்கராஜன் குறிப்பிடுகிறார்.

28/6/07 அன்று அவர் விடுத்துள்ள பத்திரிகை குறிப்பில், யாதய்யா கொல்லப்பட்டிருக்கும் ஹைதரபாத் நகரில் மட்டுமே இந்த வங்கிக்கு எதிராக 160 புகார்கள் பதிவாகி உள்ளதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. ‘ஏஜெண்டுகள் செய்வதற்குத் தாம் பொறுப்பில்லை’ என்று இவர்கள் கை கழுவுவதை விட்டுவிடக்கூடாது என்று எச்சரிக்கும் ரெங்கராஜன், கோடி கோடியாய் வங்கிக் கடன் ஏய்க்கும் பெரும்புள்ளிகள் சட்டத்தின் பிடிக்குள் சிக்காமல் இருப்பதும், சொற்பத் தொகைக்காக கீழ்மட்ட மனிதர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்படுவதும் அராஜகமானது என கொதிக்கிறார்.

யாதய்யா கொலையுண்ட செய்தி அறிந்து அடுத்த நாளே பெங்களூரில் ஐசிஐசிஐ வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதாகத் தெரிவிக்கும் `கிரெடிட் கார்டு வைத்திருப்போர் சங்க’ பொதுச் செயலாளர் சி.வி. கிதப்பா இந்த வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து' செய்ய வேண்டுமென்று கோரியுள்ளார். சங்கத்தின் ஹைதராபாத் கிளையின் தலைவர் பிவிஎஸ்பி சவுத்ரியும் கண்டித்திருக்கிறார். ஆந்திரபிரதேச மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி பி. சுபாஷன் ரெட்டி பத்திரிகை செய்திகளை வைத்தே விஷயத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளார்.

வங்கித்துறை சீர்திருத்தம் பற்றி புளகாங்கிதம் அடைந்து புல்லரிப்போர்க்கு இதெல்லாம் பொருட்டாகத் தெரிவதில்லை. கடுமையான நடவடிக்கையை ஜனநாயக சக்திகளே போராடி உறுதி செய்யமுடியும். யாதய்யாவின் மரணம் இன்னொரு செய்தியாகிப் போய்விடக்கூடாது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com