Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Bank Worker's Unity
BWU Logo
ஜூலை 2007

சித்தனின் வாழ்க்கையும் பித்தனின் பாடலும்: மரண கானா விஜி
தொகுப்பு: எஸ்.வி.வி.

மரணத்தின் வாசல்படியிலேயே குடியமர்த்தி வைக்கப்பட்டிருக்கிறது இவரது வாழ்க்கை. பிறவி ஊனம், இவரை கடற்கரை மணலில் பெற்றோர் பெயர் தெரியாத குழந்தையாய்த் தவழச் செய்துவிட்டிருந்தது. மீனவர் காப்பாற்றிய அந்தச் ‘சேய்’க்கு, விரிந்த கடற்கரையிலிருந்து பார்த்தபோது உலகம் சிறுத்துத் தான் காட்சி அளித்தது. வெளி உலகம் இவரை நகர முடியாதவனாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது, உள் உலகம் இவரை முன்னோக்கி நகர்த்திக் கொண்டிருந்தது. காகிதம் பொறுக்கும் சிறுவர்களோடு ‘ஜமா’ சேர்ந்த இளம்பருவம், ‘நாகரீக’ சமூகம் அருவருப்பதாக காட்டி அனுமதித்துக் கொண்டிருக்கும் அத்தனை அனுபவங்களையும் ஊட்டி வளர்த்தது. விஜய் டிவி மூலம் கண்ணில் பட்டுக் கிடைத்த ‘கூத்துப்பட்டறை’யின் பரிச்சயம் விஜியின் தமிழை மட்டுமல்ல, பேச்சையும், வாழ்க்கையையும் கூடத் தீட்டிக் கொடுத்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோழமை வட்டத்தை விரித்துக் கொடுத்தது. ஜூன் 19 அன்று BWU ஆசிரியர்குழு கூட்டத்தில் விஜி பேசியதும், பாடியதும் நெஞ்சை விட்டு அகலாது...

விஜி தொடர்பு எண் : 99411 63468

அயோத்தியா குப்பம், நொச்சிக்குப்பம், இந்தக் குப்பம், அந்தக் குப்பம்னு 42 குப்பம் இருக்கு சென்னையில். நான் பாடாத இடமில்லே. செய்யாத வேலை இல்லே.
பிச்சை எடுத்திருக்கேன். பிக்பாக்கெட், கஞ்சா .... எல்லாம் பார்த்திருக்கேன். வாழ்கையிலே செய்யறது எது சரி, எது தப்புன்னு எடுத்துச் சொல்ல எந்த ஆசிரமமும் எனக்கு கிடைக்கல. பெற்றோர் இல்ல. என்னைக் கிழிச்சிப் போட ஆட்கள் வந்தார்களே தவிர, மருந்திட யாரும் வரல.

கால் சூம்பிய குழந்தையாய்ப் பிறந்த என்னைக் கட்டு மரத்தில் வீசி எறிஞ்சிட்டுப் போய்ட்டாங்க பெத்தவங்க. குருவிக்காரங்களும், மீனவர்களும் ‘டிங்கானா’ அடிச்சிட்டிருந்த இடம் அது. அவங்க எடுத்து வளத்தாங்க என்னை. சைனா ‘டீ’யோ எதுவோ, என்ன கிடைக்குமோ, ஒருவேளை சாப்பாட்டுக்கே போராடி வளர்ந்தேன். நிறைய போராடினேன். உயிர் வாழவே போராட்டம். அதுல நல்லது எது, கெட்டது எது தெரியாது.

என் உணவில் கலந்தது எல்லாம் நரம்புகளிலும் கலந்துவிட்டது. கஞ்சா, தண்ணி, .......எல்லாமே உள்ளே ஊறிவிட்டது. 10 வயதிலேயே எல்லாத்துக்கும் தயாராயிடுச்சி உடல்.

காகிதம் பொறுக்கும் பையன்கள் எனக்கு நண்பர்கள்ஆனார்கள். பிளாட்பாரம், கண்ணகி சிலை இதுமாதிரி இடத்தில் வாழ்க்கை தொடர்ந்தது. விலைமாதர்களுக்குத் தேவைப்படுவோம் நாங்கள் - ஆள் பிடித்துத்தர. வயதிற்கு மீறிய எல்லா அனுபவங்களையும் பார்த்தோம்.

அதுல ஒருத்திதான் விஜி. பாசமா பா(ர்)ப்பா. என்ன உறவு அதுன்னு அர்த்தமெல்லாம் தெரியாது. மனசு ஒரு வெறியிலும், வெறுப்பிலும் வாழ்ந்த வாழ்க்கை. தடமும் தெரியாது, இடமும் தெரியாது. எப்போ முடிவுக்கு வரும்னு இருந்த வாழ்வு. அன்னி அன்னிக்கு வாழற வாழ்க்கை. இதுல அந்த விஜி என்மேல இரக்கத்தோட, தான் சம்பாதிக்கிறதுலருந்து முட்டை, பாயா, பரோட்டான்னு வாங்கித் தருவா. டி.பி.யோ , எதுவோ சொன்னாங்க. ஒருநாள் இறந்தும் போய்ட்டா.

விஜி கூடவே இருப்பானே அந்தப் பையன்னு என்னை அடையாளப்படுத்தினதால என் பேரு விஜின்னு நிரந்திரமாயிடுச்சு....

இப்படி காகிதம் பொறுக்குற பசங்களோடு ‘ஜமா’ சேர்ந்தப்ப வயசு 10-12 இருக்கலாம். என் வயசு எனக்குத் தெரியாது. அந்த நாள்களில் ‘பீச்’சில் அலையற சில வெறி பிடிச்ச ஆண் ஜென்மங்கள், பெண்கள் கிடைக்கலன்னா எங்களை மாதிரி சிறுவர்களை தகாத உறவுக்குப் பயன்படுத்துவார்கள். பசங்க இந்த வேதனையைப் பத்திப் பேசவும், ஆயுதத்தைக் கையில் எடுத்தோம் - பிளேடுதான். நாங்க கிழிச்ச ஆளுங்க ஜி.எச்.ல் அட்மிட் ஆகிற அளவுக்கு போயிடுச்சி. அதற்கு அப்பறம் ‘பீச்’சில் படுக்க முடியாமல் ஆயிடுச்சி. தப்பிச்சிப் போய் இடம் தேடி அலையறோம். தொல்லை இல்லாத இடம் கண்டுபிடிச்சோம். இராயபுரம் சுடுகாடு. காம்பவுண்ட் சுவர் கீழே நாய் தோண்டி வச்சிருந்த பள்ளத்தைப் பெரிதாக்கி உள்ளே நுழைஞ்சிப் போயிட்டோம். வெளியே கதவு பூட்டிக்கிடக்கு. என்னை 3 பேர் சுமந்துதானே போகணும். அதுதான் அந்த வழியில் போனோம். உள்ளே அமைதி கெடச்சது.

மறுநாள் சுடுகாட்டு ஆளுங்க வந்து ‘யார் நீங்க’ ன்னு ஆரம்பிச்சாங்க. எங்க கதையை கேட்டு அங்கேயே அவங்களுக்கு ஏதாவது துணையாய் வேலை செய்யச் சொல்லி அனுமதிச்சிட்டாங்க. 3 வேளை சாப்பாடு கிடைக்கணும். எங்கே இருந்தா என்ன?
சமாதியில் படையல் வச்சிட்டுப் போற தேங்காய்களைக் கொண்டுபோய் இட்லி கடையில் கொடுத்தால் 15 இட்லி சூடு பறக்கக் கிடைக்கும். மதியம் படையல் சோறு. ‘கோடி’த் துணியை சேகரிச்சு வித்துருவோம் - ராத்திரி சாப்பாட்டிற்குக் காசு. பிணத்தோட சட்டை, பேண்ட் துணி நல்லாயிருந்தா கிழிக்க விடமாட்டோம். உருவி எடுத்து துவைச்சு அயர்ன் பண்ணி போட்டுக்குவோம். இதுலருந்து எப்படி மாறிப் போவதுன்னு போராட்டம்.

மத்த பசங்களுக்கு காலு, கை எல்லாம் இருக்கு. வெளியில் போவாங்க, வருவாங்க. நான்தான் தேய்ச்சி தேய்ச்சி நகரணும். ‘டேய், விஜிக்கு கட்டை கொடுத்தா நடப்பான்டா,’ அப்படின்னு ஒரு ஐடியா செஞ்சாங்க. ஒரு ஊனமுற்ற பெரியவர் பிணம் வந்தப்ப கட்டையோட புதைச்சிட்டுப் போயிட்டாங்க. என் நண்பன் சீனிவாசன் அதை வெளியே எடுத்துட்டான். ஆக்சா பிளேடு வெச்சி அறுத்து எனக்கு ஏத்த மாதிரி ரெடி பண்ணி நடக்க வெச்சாங்க. நான் கீழே விழுந்தேன். ‘நீ இப்ப விழுவே, ஆனால் ஒருநாள் நல்லா நடப்பே’ அப்படின்னு சொன்ன சீனிவாசன் இப்ப என்னைக் கண் குளிரப் பார்க்க உயிரோடு இல்ல.

சுடுகாட்டில் பண்டாரங்களின் பாட்டு, மரணவீட்டு ஒப்பாரி என்னை யோசிக்க வெச்சது. மரணத்திற்குப் பின் என்னவென்று தேடல் துவங்கிச்சு. 36,500 நாள் வாழ்க்கை மனுஷனுக்கு. குடுகுடுத்து ஈக்கள் மொய்க்கும் ஊர்வலத்தில் முடியுது. அப்புறம் அந்த உடல் 30 வது நாள் , 60 வது நாள்... எப்படி படிப்படியா உருமாறி சிதையுதுன்றதெல்லாம் கிட்டத்துல பார்த்துட்டோம்.

கற்பனையில் பாடல் தோன்றியது. ‘எத்தனை பேரு வந்திட்டாலும் திருத்த முடியலே, அந்த கஞ்சா போதை அபின் இல்லாம இருக்க முடியலே’ன்னு இட்டுக் கட்டிப் பாட ஆரம்பிச்சேன். ஆயிரம் விளக்கு செல்வா பத்தி கேள்விப்பட்டு அவரிடம் போய் ‘கானா’ பத்தி கேட்டுக்கிட்டேன். அவருதான் எனக்கு குரு.

தீப கானா என்றால் என்ன? ஒரிஜினல் சென்னைவாசிங்க மீனவர்களும், பாரிமுனை ரிக்ஷா ஓட்டிகளும் தான். அவங்களுக்கு கேளிக்கை என்ன, கிராமத்துல தெம்மாங்கு பாடற மாதிரி? பீச்சில ஈரக்கோணியை ‘பாரா’ கட்டி நடுவில் அலுமினிய அன்னக்கூடை கவிழ்த்து வெச்சி மேலே தீபம் வைப்பாங்க. ஓட்டை காலணாதான் வாத்தியக்கருவி. கஞ்சா, சாராயம். சந்திரபாபு பாட்டை வரிகள் மாற்றிப் பாடியிருக்காங்க. பம்பாயிலிருந்து ‘சோன்பப்படி’ விக்கிறவங்க கஞ்சா எடுத்து வருவாங்க. கானம் என்பதை அவங்கதான் கானான்னு மாத்தி இருக்கணும். இந்தி ‘கஜல்’ ஸ்டைலில் பாட்டுங்க வர ஆரம்பிச்சிடுச்சி. இந்த ஜமாவில் யாராவது ஒருவர் இறந்தபோது அவரது வீட்டுக்குப் போய் பாடவும் தீப கானா மரண வீட்டிற்கு இடம் மாறிடுச்சி. இப்ப நானும் தீப கானா பாடறேன்.

வாழ்வு என்ன மாயமான வாழ்வுதானடா- நம்
ஆட்டம் எல்லாம் முடிந்தபின்னே ஓட்டம்தானடா......

முதியவர் மரணத்திற்குப் பாடறது வேற. குழந்தைகள் மரணத்திற்குப் பாடுவது வேற.

தங்கமணி தொட்டிலிலே
தனி வழியே பந்தலிட்டு
மன்னவனே நீ தூங்க
உன் நிலையில் இதுதானோ.....

என் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா, ஓரு இளம் மகனோட சாவுல எதிர்பாராம போய்ப் பாடினேன். அன்னிக்கு காலையில் இருந்தே சாப்பிடல. எதுவும் கிடைக்கல. ராத்திரி பூரா பாடுறேன். அந்தத் தாய் என்னை அழைத்து, பழைய சோறு இருக்கு, சாப்பிடுறியான்னு கேட்டாங்க. சந்தோஷமா சாப்பிட்டேன். காசு எதுவும் வாங்கல.
இப்ப சென்னை சங்கமத்தில் பாடினப்ப பெரிய தொகை கொடுத்தாங்க. இரண்டையும் நினைச்சிப் பார்க்கிறேன்.

அப்புறம் தொடர்ந்து கானா பாடல்களைப் பாடிக்கிட்டுருக்கேன். வாழ்க்கைக்கான போராட்டம். காசுக்காக நானே ‘கஞ்சா கேசு’ வாங்கிக்கிட்டு சிறைக்குக்கூட போயிடுவேன். அங்கேயும் கானா. உள்ளே நமக்கு ஏராளமான ரசிகர்கள். பெரிய பெரிய ரவுடிங்க கூட ஆசையா பாடு, பாடுன்னு கேப்பாங்க. ‘சிறை வாழ்வுடா, மண்ணில் எல்லோர்க்கும் சிறை வாழ்வுடா’ன்னு பானைகளை வெச்சு தாளம் போட்டு பாடுவேன். ஆயிரம் ரூபா வரைக்கும் கூட வசூல் கிடைக்கும்.

வீட்டுச்சோறு கிடைக்கிறதே அபூர்வமான இப்படியான வாழ்க்கையில் ஒரு வசீகரமான பெண்ணை சந்திச்சேன். வடநாட்டுக்காரர் ஒருத்தரோட ஆசை நாயகி அவர். வீட்டுல அழைச்சு சோறு போடுவாங்க. அந்த அன்பான உள்ளத்தைத் தவறாகப் புரிஞ்சிக்கிட்டு, அப்புறம் வெட்கத்தால அவங்களைப் போய் பார்க்கறதை நிறுத்திட்டேன்.

பல நாள் பொறுத்து, அவங்க ஆஸ்பத்திரியில் இருக்கறத தெரிஞ்சிக்கிட்டு போய் பார்க்கிறேன். அனாதையா மரணப்படுக்கையில் இருந்தாங்க. உயிர் பிரிஞ்சப்ப அருகில் ஒரு இளம் பெண். அந்த அம்மாவின் பெண் அவர். நானும் அந்தப் பெண்ணும் தான் ஒரு ஜட்கா வண்டி வெச்சி கண்ணம்மாபேட்டையில் அடக்கம் செஞ்சோம். அந்தப் பெண்ணுக்கு யாருமில்லை. நான் இருக்குற சூழ்நிலையில் அவளை வெச்சி காப்பாத்த பாதுகாப்பில்லை. அவ என்னோடேயே தங்கிட்டா. வேற இடத்துக்கு மாறி வந்துட்டோம். என் வாழ்க்கைத் துணைவியா ஆயிட்டா. எங்களுக்கு சூர்யா, ரிஷி, வினோதினி என்று மூன்று குழந்தைகள் இருக்காங்க.

விஜய் டி.வி நிகழ்ச்சியில் கூத்துப்பட்டறை ந.முத்துசாமி அவங்களைப் பத்தி கேள்விப்பட்டு நேரே பார்க்கப் போனேன். என்னையும் என் தமிழையும் ஒழுங்கு பண்ணவர் அவர்தான். ழ, ழி...... எல்லாம் திருத்தமாச்சு. அழுக்காக இருந்த என்னைக் கட்டிப் பிடிச்ச அவர் மாதிரி சில பேரை என் வாழ்வில் மறக்க முடியாது. இப்ப சுத்தபத்தமா, பிரபலமா ஆனதும் தொட்டுப் பேசறது வேற. அன்னிக்கு இருந்த விஜி வேற.

அதே மாதிரி தான் பாபுன்னு பீச்சில் சிவப்பு சட்டையோட வந்த தோழர். பகத்சிங் படத்தைக் காட்டி யாருன்னு அறிமுகப்படுத்தினார். எங்களை மதிச்சி ராமாயணமோ, மகாபாரதமோ சொல்றவங்க யாருமில்ல. ஆனா அந்த கம்யூனிஸ்ட் தோழர் அணுகி பேசுவார். இன்னிக்கும் அதான் எனக்கு சிவப்புக் கொடி மேல் மரியாதை.

நான் எழுதப் படிக்கத் தெரியாதவன். ஆனா இப்ப உள்ளே நுழைஞ்சு பாடாத கல்லூரி இல்ல, பள்ளிக்கூடம் இல்ல. வகுப்பு மாதிரி பயிற்சி கொடுக்கக் கூட அழைக்கிறாங்க. ஆனா உங்க வங்கிகளுக்குள்ளே தான் வந்ததில்ல.

எத்தனையோ சாவுகளில் பாடுகிறேன். ஒரு திருமணத்துக்கும் இதுவரைக்கும் போனதில்ல. போனாப் போவுதுன்னு பத்திரிகை வெச்சிட்டுப் போறவங்க திருமணத்துக்கு நான் எப்படி போகமுடியும்?

என் பிள்ளைகளுக்கும் என் தொழில் தெரியும். பறையை எடுத்துக் கொடுத்து அனுப்பி வைப்பாங்க. மனைவி, வீடுகளில் வேலை செஞ்சி கொஞ்சம் வருமானம் கிடைக்குது.
மனிதன் பிறப்பிலிருந்து இறப்புவரைக்குமான சங்கதிகளை விடாது 9 மணி நேரம் பாடுவேன். 3000 சாவுகளில் பாடியிருக்கிறேன். சபாக்கள் கானா பாடலை ஏத்துக்கறது இல்லை. கொச்சை, ஆபாசம்னு ஒதுக்குறாங்க. வாழ்க்கையோட உண்மைகளைத்தான் நாங்க பாடுறோம்.

ந. முத்துசாமி அய்யாவோட ஏற்பாட்டுல சென்னை சங்கமத்தில் பாடினேன். வாலிபர் சங்க மாநாட்டு ஊர்வலத்திலும், நாட்டுப்புறக் கலைஞர்கள் கோரிக்கை சங்கமத்திலும் பாடியதைப் பெருமையாக நினைக்கிறேன். சமூகத்தைப் பற்றிய சிந்தனை விடாமல் இருக்கிறேன்.

சின்ன வயசுல கடற்கரையில் 2 இட்லிக்காக 3 மணி நேரம் மணல் முழுக்க தேய்ச்சிக்கிட்டே ரோடுக்கு போவேன். இட்லி வாங்கிக்கிட்டு திரும்பவும் கடலுக்குத் திரும்பும்போது எல்லாம் மண்ணாக ஆகியிருக்கும். கடல் நீரில் கழுவிக் கழுவி சாப்பிடுவேன். இட்லின்னாலே உப்புக் கரிக்கும்னு புரிஞ்சி வைச்சிருந்தேன். ஒரு கான்வென்ட் சிறுமி இதை பார்த்துருக்கா. அவளோட பையிலிருந்து பிஸ்கெட்டோ, ரொட்டியோ எடுத்து எனக்காக ஒரு கல் மேல வெச்சிட்டு போயிடுவா. நான் சாப்பிடணும்னு அழுக்கு படாம நியூஸ் பேப்பர் வெச்சி அது மேல வைப்பா. சனி, ஞாயிறு ஸ்கூல் லீவு. அதனால எனக்கு எதுவும் கிடைக்காது.

ஒரு சமயம் குளிர் நேரம். ஜன்னி மாதிரி வந்து சோறு தண்ணி இல்லாம 3 நாள் முடங்கி கிடந்தேன். யாரோ என்னை ஒரு போர்வையால போர்த்தி வீராணம் குழாய்க்குள்ளே போட்டுட்டு போயிட்டாங்க. அங்கேயே கிடக்கிறேன். இந்தச் சிறுமி எங்கே எங்கேயோ தேடி என்னைக் கண்டுபிடித்து சந்தேகத்தோடு போர்வையை விலக்கி மூக்கில் விரலை வெச்சி உயிர் இருக்கிறதா என்று பார்க்கிறாள். உடனே ஓடிப்போய் கொஞ்சம் பால் எடுத்து வந்து வாயில் ஊற்றுகிறாள். இப்ப அவ எங்கேன்னு தெரியாது. தேவதை, தேவதைன்னு பாடுறாங்களே. என் தேவதை அவதான். இன்னிக்கும் யாருக்காவது உதவி செய்யணும்னு சேவை மனப்பான்மையை அவதான் எனக்குள் ஏற்படுத்தினா.

பேன்யன், வித்யாசாகர் போன்ற அமைப்புகளுக்குப் போய் நிகழ்ச்சிகள் நடத்தும்போது எனக்கு நிம்மதி கிடைக்குது. ஆதரவற்ற குழந்தைகளுக்காகப் பாடும்போது சந்தோஷமாக இருக்கிறது.

கண்ணதாசன் போல நானும் எழுதல - அந்த
இளையராஜா போல நானும் பாடல
ஊரு ஊரா சாவுக்காகப் பாடுறேனய்யா - நான்
மாண்டுவிட்டால் எனக்கு யாரு பாடுவாங்கய்யா.நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com