Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Bank Worker's Unity
BWU Logo
ஜூலை 2007

அவுட்சோர்சிங் - நிர்வாகங்களின் துருப்புச் சீட்டு
ஜீ.ஆர்.ரவி

Outsourcing பிரிட்டனில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக உள்ள விதவைக்கு வங்கிப் பணி முக்கியமா, மலேசியாவிலோ, இந்தோனேசியாவிலோ குடும்பத்தில் வருமானத்தை ஈட்ட சக்தி உள்ள ஒரே நபரான இளம் பெண்ணுக்கு அந்தப் பணி முக்கியமா? இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டது இத்தாலியில் நடந்த ‘ஒர்க்ஷாப்’ பில். ‘அவுட்சோர்சிங்’ கிற்குள் இத்தனை விஷயமிருக்கிறது. இந்தியர்கள் ஏன் வேறு நாட்டுத் தொழிலாளர்கள் பணிகளைத் தாம் செய்ய முன்வரவேண்டும் என்று மேற்கத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் கேட்டனர்.

-பி. இந்திரா, துணைத் தலைவர், சிஐடியு - தமிழ்நாடு

(இத்தாலி பயண அனுபவக் குறிப்புகளிலிருந்து)

வளர்ந்துவிட்ட தொழில் யுகத்தில் லாபத்தைப் பெருக்கக் கையாளப்படும் வழிமுறைகளில் Outsourcing என்பது தற்சமயம் உலகெங்கிலும் பிரதானமாக வியாபித்துள்ளது. ஒரு நிறுவனம் அதனுடைய சில பணிகளையும் தானே மேற்கொள்ளாமல் அதை வெளி அமைப்புகள், நிறுவனங்கள் மூலம் முடித்துக் கொள்வதுதான் Outsourching என்று அழைக்கப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இதில் வளர்ந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகளில் கிடைக்கும் மலிவான உழைப்பை உறிஞ்சி தங்களுடைய லாப வேட்டையை பெருக்குவதற்குப் பயன்படுத்துகிறது. உதாரணத்திற்கு அமெரிக்காவில் கால் சென்டர்களில் பணிபுரிவோருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 525/- கொடுக்க வேண்டி உள்ளது.

ஆனால் அதே பணிக்கு இந்தியாவில் ரூ. 45/- கொடுத்தால் போதுமானது. வேலை வாய்ப்பு என்ற எலும்புத்துண்டை வீசிவிட்டு எத்தகைய உழைப்பு சுரண்டல் அமோகமாக அரங்கேறுகிறது பாருங்கள். இதில் மூன்றாம் உலக நாடுகளுக்குள்ளேயே போட்டி வேறு, இந்திய வங்கித்துறையை சுபளீகரம் செய்யத் துடித்துக் கொண்டிருக்கும் அந்நிய நிதி நிறுவனங்களின் வசதிக்காக மத்தியிலுள்ள அரசு சீர்திருத்த நடவடிக்கை என்ற பெயரால் பல சீரழிவு வேலைகளில் இறங்கியது. ஆனால் ஏதோ நல்ல காலமாகத் தொடர்ந்து வந்த அரசுகளுக்கு தனிப் பெரும்பான்மை இல்லாததாலும் இடது சாரிகளின் பலத்த எதிர்ப்பினாலும் தான் நினைத்த வேகத்தில் காரியங்களை நேரடியாக நகர்த்த முடியாமல் தவிக்கிறது. அதனால் கொல்லைப் புற வழியாக இந்திய பொதுத்துறை வங்கிகளின், தனித்துவத்தைத் தகர்க்கும் முகமாக பல வேலைகளில் ஒன்றாகத்தான் Outsourcing ஐ நுழைக்க முற்படுகிறது.

ஏற்கனவே பல வங்கிகள் தங்களது பல்வேறு துறை வேலைகளை-உதாரணத்திற்கு காசோலை பட்டுவாடா, தானியங்கி பராமரிப்பு- பணம் வைப்பது உட்பட, Credit Card வசதியை தனியாக ஒரு நிறுவனம் மூலம் செய்வது போன்ற பல பணிகளை-தனியாரிடம் ஒப்படைத்துள்ளது. சில வங்கிகளில், பணி நியமனம் இல்லாத நிலையில், கிராமப்புற கிளைகளில் சொற்ப தொகுப்பூதியத்தில் வேலையில்லா இளைஞர்களை வங்கிப் பணியில் ஈடுபடுத்துவது நடக்கிறது. இவர்களுக்கு எந்த வித பணிப் பயன்களோ, பணிப் பாதுகாப்போ கிடையாது. மேலும் தற்சமயம் கிராமப்புற கிளைகள் வரை கணினி மயமாக்கப்பட்ட பிறகு இவர்கள் பல சமயங்களில் நிரந்தர ஊழியர்களின் கணினி ரகசிய குறியீட்டில் (Password) வேலை செய்வது என்பது சாதாரண நிகழ்வு. இதனால் ஏற்படும் அபாயத்தை ஊழியர்கள் உணராமல் இது நடந்து கொண்டிருக்கிறது.

இன்னும் கொடுமை, சில கிராமிய வங்கிகளில் வேலை பளு தாங்காமல் ஊழியர்களே தங்களுடைய சம்பளத்திலிருந்து ஒரு தொகையை வெளியாட்களுக்குக் கொடுத்து சில பணிகளை முடித்துக் கொள்ளும் அவல நிலையும் உள்ளது.

வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிற சூழலில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் செல்லும் போது அந்த இடத்தை நிரப்ப சொற்ப தொகுப்பூதியத்திற்கு அவர்களை தொழிலாளர்களுக்கெதிராக திருப்பவும் வசதியாக உள்ளது.

1980 களில் கரூர் வைஸ்யா வங்கி ஊழியர் வேலைநிறுத்தத்தின் போது கரூரில் உள்ளூர் இளைஞர்களைத் திரட்டிக் ‘கொடுக்கிற சம்பளத்திற்கு வேலை செய்யத் தயார்' என்று கோஷமிட வைத்து ஊழியர்களை மிரட்டும் சதிமுயற்சி நடந்தது. 2003 ஜூலை 2 அரசு ஊழியர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தின் போது ரூ. 4000 சம்பளத்திற்குப் புதிய ஆட்களை பணியில் நியமித்தது மாநில அரசு. சமுதாயத்தில் வேலையில்லாதவர்களை வேலையில் உள்ளவர்களுக்கெதிராக அணி திரட்டுவதற்கு Outsourcing என்கிற ஆயுதம் நிர்வாகங்களுக்கு உள்ள துருப்புச்சீட்டு.

வங்கிகளின் தொழில் நுட்ப மேம்பாட்டின் ஒரு அங்கமாக CBS என அழைக்கப்படும் Core Banking Soultions தற்போதைய வடிவம். இதற்குண்டான மென்பொருளை பல வங்கிகள் ரூ.500 கோடி, 600 கோடி கொடுத்து பல மென்பொருள் நிறுவனங்களிடமிருந்து பெறுகிறது. (வங்கித்துறையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மட்டும் ஊழியர்களை வைத்தே மென்பொருளை உருவாக்கி வெகு சிறப்பாக இயங்குகிற நிலையில், மற்ற வங்கிகளில் சாத்தியமில்லையா என்கிற கேள்வி எழுவது இயற்கையே.

ஆக இந்த கோடிகள் எந்த விழலுக்கு இறைக்கின்ற நீராகப் போகின்றது என்பது புரியாத புதிர்) இருப்பினும் ஊழியர்களின் அனுபவமோ கசப்பாகவும் சோகமாகவும் உள்ளது. இதை பயன்படுத்தும் வங்கித்துறையில் Out Sourcing ஐ துரிதப்படுத்தும் அரசின் கொள்கையை நிறைவேற்றுமுகமாக வங்கிகளின் வங்கியாக உள்ள ரிசர்வ் வங்கி பல துறைகளை தன்னுடைய கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துவிட்டது. பல கேந்திரமான துறைகள் மூடப்பட்டுவிட்டன.

இது இந்திய நாட்டிற்கும் இந்திய பொருளாதாரத்திற்கும் ஊறு விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை. இதன் மூலம் இந்திய வங்கித்துறையை மட்டுமின்றி இந்திய பொருளாதாரத்தையே மறைமுகமாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கும் சக்திகளின் ஏற்பாடேயாகும்.

இதன் தொடர்ச்சியில்தான் ரிசர்வ் வங்கி 2006 ஜனவரியில் அனைத்து வங்கிகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பியது. அதனடிப்படையில் வங்கிகள் Business Facilitator மற்றும் Business Corresspondentsகளை நியமித்து கொள்ளலாம் என்றும், யார் யாரை எப்படி நியமித்துக் கொள்ளலாம். அவர்களின் பங்கு பாத்திரம் என்ன என்றெல்லாம் பற்றி தெளிவாக க் கூறியுள்ளது.

அதற்குஈடாக அந்த வங்கிகள் ஒரு நியாயமான கமிஷன் மற்றும் கட்டணம் கொடுக்கவும் கூறியுள்ளது.

அத்தகைய நிறுவனங்கள் ஏறக்குறைய அனைத்து வங்கிப் பணிகளையும் கையாளுவதற்கு வழி வகை செய்கிறது. அதவாது ஒரு இணையான வங்கி நிர்வாகமே எந்தவித பொறுப்புமின்றி நடத்தப்படுவதற்கு உதவி செய்கிறது. ஆனால் இந்த ஏற்பாட்டின் மூலம் வாடிக்கையாளரின் முகத்தையே பார்த்திராத வங்கி ஊழியர்கள், அதிகாரிகளை இந்த நிறுவனங்களின் செயல்களுக்கு பொறுப்பாக்குகிறது.

இதன் நோக்கம் மிகவும் தெளிவு. இந்த நிர்ப்பந்தங்களின் மூலம் நிரந்தர ஊழியர்களைப் பணியை விட்டு விரட்டுவதற்கான ஏற்பாடுதான். வங்கி ஊழியர்கள் முறையாக அணி சேர்ந்துள்ளதும் அதன் பால் அவர்களின் கூட்டு பேர உரிமையும் ஆட்சியாளர்களுக்குக் பெரும் தடைகளாக உள்ளன. அதை சிதைப்பதற்கான ஒரு வழியாகவும் இது இருக்குமென்பதில் சந்தேகமில்லை.

ரிசர்வ் வங்கியின் இந்தத் தாக்கத்தின் தொடர்ச்சியாக பாரத ஸ்டேட் வங்கி இத்தகைய ஏஜென்சிகளை நியமிப்பதற்கு ஒரு வழிமுறையைத் தொகுத்து சுற்றுக்கு விட்டுள்ளது. ஆகவே இந்த நோய் விரைவில் மற்ற வங்கிகளையும் பிடித்து வங்கித்துறையை ஒரு குழப்பத்தில் தள்ளி ஒட்டுமொத்த வங்கித்துறையையே சீர்குலைக்கும் என்பதற்கான ஆதாரங்கள் பலமாக உள்ளன.

இதைத்தான் அந்நிய நிதி நிறுவனங்களும், பன்னாட்டு பகாசுர நிறுவனங்களும், எதிர்நோக்கி காத்திருக்கின்றன. இத்தகைய நடவடிக்கைகள் தொடருமானால் வங்கி ஊழியர்களின் நிலைமையும் ஒட்டுமொத்த வங்கித்துறையின் எதிர் காலமும் பெரும் கேள்விக்குறியாக மாறும் என்பது திண்ணம். ஆகவே வங்கி ஊழியர்களின் மற்ற கோரிக்கைகளைக் காட்டிலும் அவுட்சோர்சிங் எதிர்ப்பு எந்த வடிவிலும் வங்கித்துறையில் நுழைய அனுமதி மறுப்பது, அதற்கான இயக்கங்களை கட்டுவது என்பது வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் முன்னால் உள்ள ஆகபெரும் கடமையும் சவாலுமாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com