Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Bank Worker's Unity
BWU Logo
ஜூலை 2007

ஜூலை 19 - மறக்கப்படும் தினமா?
எஸ்.ஏ. ராஜேந்திரன்

150 ஆண்டு கடுமையான போராட்டம், பல தியாகிகளின் உயிர்களை உட்கொண்டு இந்திய விடுதலை 1947 ஆகஸ்டு 15ல் பெறப்பட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தங்களின் முதலீட்டு தளமாக, வியாபார தளமாக, மனிதவளம் உட்பட அனைத்தையும் கொள்ளையிட்டு பெரும் லாபம் சம்பாதிக்கும் தளமாக இந்தியாவை சில நூறு ஆண்டுகாலம் தன்பிடியில் வைத்திருந்தது. அந்நிய ஏகாதிபத்தியம் இந்தியாவில் உருவாக்கிய அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இந்த நோக்கங்களை விரிவுப்படுத்தவும், விரைவுப்படுத்தவுமே என்பது வரலாறு.

விடுதலைக்குப்பின்

இந்திய விடுதலைக்குப்பின் விவசாயத்துறை, தொழில்துறை, சேவைத்துறை மற்றும் உள்நாட்டுக் கட்டமைப்பு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு திட்டமிட வேண்டி இருந்தது. ஆனால், நிதித்துறையின் மொத்தக் கட்டுப்பாடும் தனியார் வங்கிகள், அந்நிய வங்கிகள், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஆகியவற்றிடம் சிறைபட்டிருந்தது. இதில் பெரிய அளவுக்கான தலையீடும், மாற்றங்களும் நிகழவேண்டிய தேவை இருந்தது. இந்திய நிதிமூலதன சந்தையின் கட்டுப்பாடு அரசின் வசம் இருக்க வேண்டுமானால் அவை நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்ற சூழல் நிலவியது. வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் பணியாற்றிய ஊழியர்களும் அரசுடமை ஆக்க வேண்டும் என்ற போராட்டத்தின் வாயிலாக நிர்ப்பந்தத்தை உருவாக்கினர். 1955ல் இம்பீரியல் வங்கி பாரத ஸ்டேட் வங்கியாக மாறியது, 1956ல் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அரசுடமையாக்கப்பட்டு ஆயுள் காப்பீட்டுக் கழகமாக உருமாறியது.

இவை இந்திய நிதித்துறையில் ஏற்பட்ட முக்கியமான திருப்பு முனைகளாகும். பின்னர் 1969 ஜூலை 19ந்தேதி 14 தனியார் வங்கிகள் அரசுடைமை ஆக்கப்பட்டன. அதே சமயம் பல தனியார் வங்கிகளும், முற்றிலுமாக அந்நிய வங்கிகளும் இயங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டன. இந்திய நிதி மூலதனத்தின் பகுதியாக அவையும் தொடர்ந்து வளர்ந்தன. 1980ல் மீண்டும் 6 வங்கிகள் அரசுடமையாக்கப்பட்டன.

வளர்ச்சிக்கு அச்சாணியாய்

இந்திய உற்பத்தித் துறையின் முக்கிய பகுதிகளாக (i) விவசாயத்துறை (ii) சிறுதொழில்கள் (iii)தொழில் உற்பத்தி துறை இன்றும் நீடிக்கிறது. நிதித்துறையும், சேவைத்துறையும், உற்பத்தித் துறையின் வளர்ச்சி, விரிவாக்கம், செயல்பாடு ஆகியவற்றுக்கு உறுதுணையாக நின்று பயணம் செய்ய வேண்டும். உற்பத்தித் துறையின் நோக்கம், திட்டமிடல் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டு நிதித்துறை செயல்படவேண்டும் என்றுதான் அரசுடமையின் நோக்கம் இருந்தது. அதனால்தான் அந்நிய மூலதனத்தின் தாக்குதலுக்கு உள்ளாகாமல் இருக்க பல்வேறு விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும், கண்காணிப்புகளும் நிதித்துறையில் உருவாக்கப்பட்டன.

இதன் விளைவாக விவசாயத்துறையின் உற்பத்தி பெருகியது. அடிப்படை தொழில்கள் பெருகின. சிறுதொழில்கள் பரவலாக உருவாகின. நமது வளர்ச்சிக்கு இந்திய நிதி மூலதனம் பயன்பட்டது. பெரும் தொழில் அதிபர்கள் உட்பட இதைப் பயன்படுத்தித் தங்களது நிலையை பலப்படுத்திக் கொண்டனர். 8000 கிளைகளாக இருந்த வங்கித்துறை 69000 கிளைகளாக விரிவடைந்தது. இன்று ஏறத்தாழ 25 லட்சம் கோடி ரூபாயை வைப்புத் தொகையாக திரட்டி வைத்துள்ளது.

வாழ்க்கை ஆதாரமாக

பொதுத்துறை வங்கிகளாக மாறிய பின்னர்தான் கிளைகள் கிராமங்களில் விரிவடைந்தது. விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து கடன் வழங்குவது நடந்தது. மக்கள் சேமிப்பை ஏமாற்றிய தனியார் மற்றும் அந்நிய நிறுவனங்களுக்கு மாறாக, போட்ட பணத்திற்கு மிகுந்த பாதுகாப்பையும், நம்பிக்கையையும் அரசுடமை வங்கிகள் உருவாக்கின. இந்தியாவில் அணைகளும், சாலைகளும், மருத்துவமனைகளும், கல்விக்கூடங்களும், தொழிற்சாலைகளும், போக்குவரத்து வசதிகளும் உருவாக அரசுடமை வங்கிகள்தான் ஆதாரமாக நிற்கிறது.
முக்கியமாக வலுவான பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக பெரும் பங்காற்றியது.

இந்த வளர்ச்சியும், விரிவாக்கமும் வாழ்வதற்கான நம்பிக்கையையும், உந்துதலையும் வழங்கி கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியது. வாழ்க்கைக்கான நிரந்தர வருமானத்தைத தொழிலாளிகளுக்கு வழங்கியது. வருமானம் உருவாக்கிய வாழ்க்கைத்தரம் ஊழியர்களின் மொழி, பண்பாடு, உணவு, பழக்கம், நாகரிகம், வாழ்விடம், கல்விமுறை ஆகியவற்றில் பெருமளவிலான மாற்றங்களை உருவாக்கியது.

வங்கித்துறையும் கூடவே வளர்ச்சி பெற்றது. லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தளமாகவும் விளங்கியது. பொதுத்துறை வந்த பின்னர்தான் சமூக நீதிக்கு வழியேற்பட்டது. அதுவரை வாழ்க்கை மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு வாசல் திறக்கப்பட்டது.

50 ஆண்டுகளில் இந்திய முதலாளிகளின் வளர்ச்சி, பன்னாட்டு முதலாளிகளின் தொடர் படையெடுப்பு ஒரே தலைமுறையுடன் பொதுத்துறையை அஸ்தமனம் செய்ய நிர்ப்பந்தம் செய்கிறது. இன்றைய பொதுத்துறை ஊழியர்களின் குழந்தைகள் இந்தியப் பெரும் முதலாளிகள் அல்லது பன்னாட்டு முதலாளிகளின் பணியாட்களாக மாறுவது இதை வெளிப்படுத்துகிறது.

அந்நிய நிதி மூலதன தாகத்திற்கு...

ஒரு வேளை, வலுவான பொதுத்துறை உருவாகாமல் இருந்திருந்தால் இந்திய நாட்டின் வளர்ச்சி பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் நிலைமையில்தான் இருந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது. அதே சமயம், நமது நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் இன்னும் பெரும் பகுதி மக்களுக்கு ஏக்கப் பெருமூச்சாகவே உள்ளது. 80ரூ மக்கள் இன்னும் வாழ்வதற்கான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டியுள்ளது. உருவாகியுள்ள முன்னேற்றங்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், அனைத்து மக்களின் உழைப்பை சுரண்டித்தான் வளர்ச்சியே எட்டப்பட்டுள்ளது.

இன்னும் விரிவாக்கப்பட வேண்டிய, வலுவாக்கப்பட வேண்டிய பொதுத்துறையை மெல்ல, மெல்ல இந்திய முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிதி மூலதனத்திற்கும் ஒப்படைக்கும் பணியில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வருகிற மத்திய அரசுகள் ஈடுபட்டுள்ளன. அதாவது, பன்னாட்டு நிதி மூலதனத்தின் வசதி, வாய்ப்புக்கு ஏற்ப இந்தியாவின் உற்பத்தித் துறையை வடிவமைக்க ஆட்சியாளர்கள் தயாராகி செயல்படுகின்றனர்.

சூழும் அபாயங்கள்

இந்தத் தலைகீழ் செயல்பாடு, ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை சிதைத்து, மக்கள் தொகையின் மிகப்பெரும் பகுதியை வாழத் தகுதியற்றவர்களாக சிதைத்து சீரழித்துவிடும். வேலை, கல்வி, வருமானம் மறுக்கப்பட்டு நிராதரவாக மக்கள் கைவிடப்படும் அபாயம் அதிகரித்து வருகிறது.

வங்கித்துறை அரசின் முழுக் கட்டுப்பாட்டிலிருந்து பங்கு விற்பனை வாயிலாக பலம் இழந்து நிற்கிறது. புதிய தனியார் வங்கிகளும், அந்நிய வங்கிகளும் அடிக்கும் லாபக்குவியலுக்கு இணையாக வளர வேண்டும் என அரசுடமை வங்கிகள் விரட்டப்படுகின்றன. என்ன செய்தாலும் சரி, விதிமுறைகள், சட்டம் அனைத்தையும் மீறி லாபம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொள்ள வேண்டும் என நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றன. சமூக நோக்கம் உள்ள அரசுடமை வங்கிகள், சமூக நோக்கம் சிறிதும் இன்றி செயல்படும் தனியார் மற்றும் அந்நிய வங்கிகளை முன்னுதாரணமாகக் கொண்டு செயல்படுவது மிகுந்த கவலைக்குரிய ஒன்றாகும்.

இன்றைக்கும் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் சக்தி படைத்த வங்கித்துறையில், நிரந்தரமற்ற அத்தக் கூலிகளை உருவாக்க இன்று பணிபுரியும் ஊழியர்களையே வெளியேற்றத் துடிக்கின்றனர். சமூக நீதிக்கு அடிக்கும் சாவுமணி இது. கிராமப்புறக் கடன்களுக்குக் கொடுத்து வந்த முன்னுரிமையை பின்னுக்குத் தள்ளியதன் விளைவு விவசாயத்துறையின் வளர்ச்சி 2ரூ தான்! அதன் தொடர்ச்சி அதேபோல 150,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை தொடரும் அவலநிலைமையாகும்.

நினைவூட்டுதல் தினமாய்...

நிதித்துறையின் அச்சாணியான வங்கிநிதித்துறையை அரசுத்துறையில் காப்பதுதான் நாட்டின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு அடிப்படை. நிதித்துறையை இழந்தால் இந்திய இறையாண்மையும், சுதந்திரமும் பறிபோகும் நிலைமை ஏற்படும்.

நாட்டுப்பற்றுள்ள அனைவரும், குறிப்பாக இளைஞர்கள் பொதுத்துறை வங்கிகளை பாதுகாப்பதற்கான இயக்கத்தில் வங்கி ஊழியர்களோடு இணைந்து நிற்கவேண்டும். ஜூலை 19 மறக்கப்படும் தினம் அல்ல, நினைவுபடுத்தி நிமிர்ந்து நடைபோடவேண்டிய தினமாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com