Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Bank Worker's Unity
BWU Logo
ஜூலை 2007

ஹெல்மட்டே சரணம்
கே.எஸ்.ஆர்

ராமசந்திரனை ஆஸ்பத்திரியில் பார்த்த பொழுது, அவனது வலது முழங்கையிலிருந்து மணிக்கட்டுவரை உள்ள இடம் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் காயம் ஏற்பட்டிருந்தது.

“என்ன ராமசந்திரா இந்த இடம் மாத்திரம் எப்படி தப்பியது” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“ஸ்கூட்டரில் பின்னால் உட்கார்ந்து போகும் போது ஹெல்மெட்டைக் கையில் மாட்டிக் கொண்டு போனேன்; அதனால் அந்த இடம் மாத்திரம் அடிபடாமல் தப்பியது” என்றான் வலியில் முனகிக் கொண்டே.

அப்பொழுதுதான் எனக்கு ஹெல்மெட்டின் அருமையே தெரிந்தது. ஆனால் ஹெல்மெட்டை அணியவேண்டுமென்றால் யார் கேட்கிறார்கள்? அணிவதனால் கூடுதல் பயன் என்னென்ன பெறலாம் என்பதையும் சேர்த்துச் சொன்னால் ஒருவேளை ஹெல்மெட் அணியாதவர்கள் மாறிட நேரிடலாம்.

உதாரணமாக, உங்கள் நண்பரிடம் ஒரு நூறு ரூபாய் கடன் வாங்கியுள்ளீர்கள். அதைத் திருப்பிக் கொடுக்க சௌகரியப்படவில்லை. அவர் எதிரில் வருவதை அவர் பார்க்கும் முன் நீங்கள் பார்த்து விட்டீர்கள். மறைந்து கொள்ளவோ, அவரிடம் வழியவோ தேவை இல்லை. டக் என்று கையில் உள்ள ஹெல்மெட்டை அணிந்து கொண்டு மாயாபஜார் படத்தில் வரும் `நீதானா என்னை அழைத்தது, நீதானா என்னை நினைத்தது’ என்ற பாடலை விசில் அடித்துக் கொண்டே வீறு நடை போடுங்கள். உங்களை அவர் அடையாளம் கண்டு கொள்ளவே முடியாது.

உங்கள் மைத்துனர் காலையில் ‘வயலின் ப்ராக்டீஸ்' செய்கிறார். நீங்கள் காதில் பஞ்சை அடைத்துக் கொண்டால் தப்பாக நினைப்பார். கவலையை விடுங்கள். அவருக்குத் தெரியாமல் காதில் பஞ்சை அடைத்துக் கொண்டே ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு, `வெளியே போகலாம் என்று நினைத்தேன்; மழை வருகிறாற் போல் இருக்கிறது’ என்று கூறி நீங்கள் `பாட்டு’ க்கு ஹிண்டு பேப்பரை நிம்மதியாகப் படித்து முடியுங்கள்.

நீங்கள் ஸ்கூட்டரில் தெருவில் நுழையும்போது பிஞ்சு வெண்டைக்காய் வண்டியில் விற்பது தென்படுகிறது. ஒரு கிலோ வாங்கியபின் அவன் தன்னிடம் பை இல்லை என்று கூறும்போது `என்னடா இது; எப்படி கொண்டு செல்வது’ என்று யோசிக்க வேண்டாம். இருக்கவே இருக்கிறது ஹெல்மெட். அதை திருப்பி அதில் வெண்டைக்காயைக் கொட்டி நிரப்பிக் கொண்டு வீட்டுக்குச் செல்லுங்கள்.

நீங்கள் நல்ல பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறீர்கள். ஆனால் சிறு வயதிலேயே தலைமயிர் உதிர்ந்து வழுக்கை தெரிவதால் தன்னை யாரும் காதலிக்கமாட்டார்கள் என்று மனம் நொந்து விடாதீர்கள். உங்களுக்கு ஹெல்மெட் தலை (கை) கொடுக்கும்.

ஹெல்மெட்டை அணிந்து கொண்டு உங்கள் மனதிற்குப் பிடித்தமான பெண்ணைக் காதல் செய்யுங்கள். அவள் ‘ஏன் எப்போதும் ஹெல்மெட்டைப் போட்டுக்கிட்டு இருக்கீங்க’ என்று கேட்டால் ‘ரொம்ப பனி அடிக்குது இல்லியா, மப்ளர் கட்டிக் கொள்வதற்கு பதில் ஹெல்மெட் போட்டுகிட்டு இருக்கேன்’ என்று ஒரு பொய்யை அவிழ்த்து விடுங்கள். பிறகு காதல் அரும்பி திருமணம் என்று தீர்மானம் ஆனவுடன் பக்குவமாக உங்கள் தலையைப்பற்றிக் கூறி ஹெல்மெட்டை எடுத்து விடுங்கள்.

இந்த தந்திரத்தை என் நண்பன் ரமணியிடம் கூறியபிறகு, ஒரு நாள் என்னிடம் வந்து `என் காதலியும் ஹெல்மெட் போட்டுக் கொண்டே இருக்கிறாள்; அவளும் கழட்டுவது இல்லை; என்ன செய்யலாம்’ என்று கையைப் பிசைந்தான்.

“ப்ராப்ளம் சால்வ்டு, ஒன், டூ, த்ரி சொல்லி இரண்டு பேரும் எடுத்து விட வேண்டியது தானே”, என்று அட்வைஸ் கூறி அனுப்பி வைத்தேன்.

ஒரு பத்து நாள் கழித்து, ரமணியும் அவனது காதலியும் மிகவும் சந்தோஷத்தோடு என்னைப் பார்க்க வந்தனர். அவள் தலைமயிர் முழுமொத்தமாக நரைத்துப் போய் இருந்தது. ரமணி திருமண தேதியைக் கூறினான். அவள் “அங்கிள், ஹெல்மெட் மாத்திரம் இல்லைன்னா ஒருத்தர் தலையை ஒருத்தர் பார்த்துகிட்டு முழிச்சுகிட்டே இருந்திருப்போம்” என்றாள். ரமணியும் ஆமோதிப்பதுபோல் சிறியதாய் சிரித்தான். ‘உங்களை சேர்த்து வைத்ததே இந்த ஹெல்மெட்தான்” என்றேன்.

"இது ஹெல்மெட் இல்லை ; ஹெவன்மெட்", என்றாள் சிரித்துக் கொண்டே இதை முடிப்பதற்கு முன் குழந்தைகள் ஹெல்மெட் போட வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. கட்டாயம் போட வேண்டும். அதுவும் கணக்குப் பாட வகுப்பில் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் கணக்கில் தப்பு கண்டுபிடித்து ஆசிரியர் தலையில் குட்டக் கையை ஓங்கும்போது ‘தாராளமாகக் குட்டுங்கள்’ என்று தலையைக் காட்ட வசதியாக இருக்கும்.

கட்டுரையாளர் தொடர்புக்கு
- கே.எஸ்.ஆர் ([email protected])
98841 80311


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com