Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Bank Worker's Unity
BWU Logo
ஆகஸ்டு 2007

தாய்க்குத் தாயானவர்களின் போராட்டக்கதை
எஸ்.வி.வி.

காலை எட்டு, எட்டரைக்கு இடத்தை சுத்தமாகக் கூட்டணும். தரை மெழுகணும். ஒரு ஒன்பது-பத்து மணிக்கெல்லாம் குழந்தைகளுக்கு சத்து மாவு உருண்டை பிடிச்சிக் கொடுத்து சாப்பிட வைக்கணும். அப்புறம் 12 மணி வரை பாட்டு, கதை, பாடம், எழுத்து, பொம்மை வச்சு புதுப்புது விஷயம் சொல்லிக் கொடுக்கணும். அப்புறம் சாப்பாடு கொடுத்து மூணு மணி வரை தூங்க வைக்கணும். மாலையில் ஆட்டம், பாட்டம், விளையாட்டு. சுண்டலோ கொழுக்கட்டையோ மாலை உணவுக்கு...

பெற்ற தாய் போல இப்படி அட்டவணை போட்டது மாதிரி 2-6 வயது குழந்தைகளை பராமரிப்பவர் தாய்க்கு ஈடாக மட்டுமல்ல, அந்தத் தாய்க்கே தாய். ஆமாம் அங்கன்வாடி ஊழியர்கள் சமூகத்திற்கே தாய்போல நேரம், காலமற்று இயங்கிக் கொண்டிருப்பதற்கு அரசு தரும் சொற்ப ஊதியம் காரணமல்ல. மக்களோடு தாமும் இரண்டறக் கலந்து விட்டதே உண்மை என்று சொல்லும் தமிழரசி அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் - ஒரு தொடர் போராளி. 2002-03 அரசு ஊழியர் போராட்டங்களின்போது கடுமையான பழி வாங்கலை சந்தித்துப் போராடியவர்.

ஜூலை 10 என்ற தினத்தைப் பல்லாண்டுகளாகவே தமது கோரிக்கை தினமாக அனுசரித்து வந்த அங்கன்வாடி ஊழியர்கள் இவ்வாண்டு அந்த நாளை வேலைநிறுத்த தினமாக ஆவேசமுடன் மாற்றி எழுதினர்.

எட்டு மணி நேர வேலை என்பது கணக்குக்கு என்றாலும், அவர்களது பணியின் சுமை சொல்லி மாளாது. தமக்கு ஒதுக்கிய `திட்டப் பகுதி' யின் (ஞசடிதநஉவ) மொத்த ஜாதகமே எழுதிக் குறித்து வைக்கும் பணியில் தமிழகத்தில் மட்டும் சுமார் 46,000 மையங்களில் 92,000 பேர் இருக்கின்றனர் என்றால் நம்புவீர்களா? அதில் மூன்றிலொரு பங்குதான் சிஐடியு இணைப்புச் சங்கத்தில் திரண்டிருக்கிறார்கள். ஆனால் ஜூலை 10 அன்று நடந்த வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் இன்னொரு பங்கு கூட நின்று கலந்து கொண்டார்களென்றால் அவர்களது பணிச் சூழலின் நெருக்கடி புரிகிறதல்லவா?

"உங்களோட வேலை என்ன, குழந்தை பராமரிப்பு மட்டும் தானே" என்று துவங்கினோம்,.

`என்ன தோழர் இப்படி கேக்கறீங்க, ஒரு நபருக்கு 200-300 குடும்பங்கள் பொறுப்பு, அதுல பிறப்பு, இறப்பு, ஆண் எத்தனை, பெண் எத்தனை, திருமணமாகி வேறிடம் வாழப் போகும் பெண் யாரு, வெளியிலிருந்து திருமணமாகி உள்ளே வரும் பெண் யாரு, கர்ப்பிணி நலம், தாய்-சேய் உடல்நலம், நல்லது, கெட்டது... இப்படி எல்லா விவரமும் நடவடிக்கையும் பதிவு செய்யவே 48 ரெஜிஸ்டர் இருக்கு...தெரியுமா?' என்றாரே பார்க்கலாம் .

" 0-6 வயது வரையிலான குழந்தைங்க எங்க பொறுப்பு. ஒரு குடும்பத்திலிருந்து `பிள்ளை உண்டாகி இருக்கிறாள்' என்று தகவல் வந்த நிமிஷமே எங்க பொறுப்பு துவங்கிடுது. அவங்க உணவு, மற்ற கவனிப்பு என்னென்ன என்பதை வாரத்துக்கு 3 நாள் பணிமையத்தில் வகுப்பெடுத்துச் சொல்வோம். குழந்தை பிறந்தவுடனே அதோட எடை 6 வயது வரை குறித்து வச்சு கண்காணிக்கணும். தாய்மார்களுக்கு `மாதாந்திர தொடர்பு கூட்டங்கள்' நடத்தி தாய்ப்பால் அவசியம் உள்பட பல நுட்பமான விபரங்களைச் சொல்லித் தருவதும் எங்க பொறுப்பு.

"அரசு திட்டம் எது வந்தாலும் மக்களுக்குத் தெரிவிக்கிறது எங்க வேலைதான். ரெகுலராகவே குழந்தைகளுக்குத் தடுப்பூசி, வேக்ஸின் பாதுகாப்பு, வளரிளம்பெண்கள் நலன், முதியோர் நலன் இதெல்லாமும் எங்க பொறுப்பு தான்".

"அப்ப, ரொம்ப நெருக்கமான குடும்ப உறுப்பினராகவே மாறிடறாங்க இல்லையா அங்கன்வாடி ஊழியர்கள்?".

"ஆமாம் தோழர், ஒரு குழந்தைங்க, ஒரு பெரியவர் விடாம எல்லாரது பேரும் தெரிஞ்சிருக்கும் எங்களுக்கு. நல்லதுக்கும் கூப்பிடுவாங்க. துக்கம்னாலும் போய் நின்னுடுவோம். எங்காவது மரணம் நேர்ந்தால், கூட நின்று அரசு உதவித்தொகை சட்டரீதியாக என்ன கிடைக்கும்ங்கறது உள்பட வழிகாட்டுவோம். அவ்ளோ பாசமா இருப்பாங்க மக்கள்".

"பணியிடத்துல சிக்கலோ, பிரச்சினையோ வராதா?"

"வட மாநிலங்களில் நிறைய புகார் வருதுங்க. தலையிட்டு நடவடிக்கை எடுக்குது சங்கம். நம்ம பக்கத்துல நல்ல மரியாதை. இன்னும் சொல்லப் போனா, குடிப்பழக்கம் இருக்கிற ஆளுங்களைக் கூட அழைச்சு வச்சி, மாறி நடக்கணும்னு அறிவுரை சொல்றதுண்டு..... ".

"இவ்வளவு பம்பரமா சுத்தி, பல வித பொறுப்புகளில் இயங்குறவங்களுக்கு என்ன சம்பளம்?" என்று நாம் கேட்க.

"அதுதான் தோழர் கொடுமை;" என்ற தமிழரசி தொடர்கிறார்.

"1982-83லிருந்து வேலை பார்க்கிறோம்.ரூ. 1850/- தான் அடிப்படை சம்பளம். பஞ்சப்படி சேர்த்து ஒரு ஊழியருக்கு ரூ. 2623/-அளவுதான் கிடைக்கிறது. பயணப்படி அம்பது ரூபா. மத்த ஒரு சலுகை கிடையாது. 48 ரெஜிஸ்டர் சொன்னேனே, `சென்சஸ் புக்' தவிர மத்த எதுவுமே நம்ம செலவுல வாங்கித் தான் பதிவு செய்து வரணும். இது CWO என்கிற அமைப்பாளர் கதை. உதவியாளர் நிலை இன்னும் கொடுமை, இதுல மேற்பார்வையாளர் கேள்விகள், அரசு விழா செலவு, கெடுபிடிகள் எல்லாம் தாங்குறதே பெரும்பாடு. எப்படி சமாளிப்பாங்க சொல்லுங்க..

"24 வருஷமா, என்னிக்காவது நிரந்தர அரசு ஊழியர்னு அறிவிப்பாங்கங்கற ஒரே நம்பிக்கையில் தான் எங்க வண்டி ஓடுது. அங்கன்வாடி ஊழியரில் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர் - வேறு ஆதரவு அற்றவர்கள். இந்தக் குமுறல்தான் வேலை நிறுத்தத்தின் ஆவேசம்".

நாம் கேட்கிறோம் : "ஜனங்களோட மிக நெருக்கமா பழகறீங்க. குழந்தைகளும் ஒட்டிக்கிட்டு இருப்பாங்க. வேலைநிறுத்தம் செய்வது எப்படி சாத்தியமாயிற்று, சிக்கல் இல்லையா...."

முடிக்கும் முன்பே பட்டனைத் தட்டினாற்போல் சொல்லத் தொடங்குகிறார் தமிழரசி.

"மூணு வாரத்திற்கு முன்னமேயே அவங்ககிட்டே சொல்ல ஆரம்பிச்சிட்டோம். எங்க கோரிக்கை இதுதான். நாங்க அன்னிக்கு ஒரு நாள் வரமாட்டோம். குழந்தையை அனுப்புவீங்களா, என்று கேட்டோம், ஏம்மா, வருஷம் 365 நாளும் எங்க கூட நிக்கிறீங்க. உங்க பிரச்சினைக்குப் போராடுறதுல தப்பே இல்ல. நாங்க ஒரு நாள் சமாளிச்சிப்போம். யாரு வந்து கூப்பிட்டாலும் பிள்ளைகளை அனுப்ப மாட்டோம்னு சொன்னாங்க. இதுதான் எங்க இயக்க வெற்றி".

"ஆனா, அரசு தரப்பில் உருட்டல், மிரட்டல்,...."

"அதுக்கென்ன குறைச்சல். பணி மையத்தின் சாவி கொடுத்துடணும்னு `டார்ச்சர்' பண்ணினாங்க. கணவர்களைத் திரட்டி காவல்துறையில் புகார் கொடுப்போம். ஊழியரைத் தேடுற வேலை எல்லாம் வச்சுக்காதீங்கன்னு சொல்லிட்டோம். வேலை நிறுத்தத்தில் 40,000 பெண்கள் மாநிலம் முழுவதும் திரண்டு முழக்கமிட்டாங்க. `அரசே, பாரத பிரதமர் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்று. வேலை நிரந்தரம், ஊதிய நிர்ணயம், பென்ஷன் அறிமுகப்படுத்து', என்று நாங்கள் எழுப்பிய கோரிக்கைகள் இப்ப சூடு பிடிச்சிருக்கு" என்றார் தமிழரசி.

"ஜம்மு காஷ்மீர்ல எத்தனையோ பிரச்சினைகள் நடுவில், அங்கன்வாடி பெண்கள் காவல்துறையின் `லத்தி சார்ஜையும் சந்திச்சு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்காங்க என்று சிஐடியு செயலாளர் ஹேமலதா எழுதியதைப் படித்தோம். காஷ்மீர் முதல் குமரி வரை ஆவேசமாக நடந்த உங்க போராட்டம் நிச்சயம் வெல்லும்" என்று வாழ்த்தி விடைபெற்றோம்.

ஜூலை 27, 2007 தொலைபேசி உரையாடலிலிருந்து.

தமிழரசி அவர்களின் அலைபேசி எண்: 93827 37041


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com