Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Bank Worker's Unity
BWU Logo
ஆகஸ்டு 2007

கேளூர்வாசி கிளர்ச்சிக்காரனான கதை
மு.சிவராமன்

இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் (தமிழ்நாடு) தலைவர், மு. சிவராமன் ஜூன் 30 அன்று பணி ஓய்வு பெற்றார். வங்கிகள் தேசியமயத்திற்குப் பின்னால் விரிந்த வேலைவாய்ப்பு சூழலில் உள்ளே நுழைந்த பல்லாயிரம் இளைஞர்களில் ஒருவர். அவசர நிலை காலத்திலும், அதன் உடனடி பிந்தைய காலத்திலும் AIBEA சங்கம் எடுத்த முரண்பட்ட நிலைபாடுகளால் தாக்குண்டவர். போர்க்கொடியை உள்ளிருந்தே எழுப்பிய ஜனநாயக இயக்க முன்னணி போராளிகளின் வரிசையில் நின்றார். 1982ல் அகில இந்திய BEFI உதயம். 1983, மார்ச் 6ல் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன்(தமிழ்நாடு) உருவாக்கம். உதவிச் செயலாளராய்த் துவங்கிய தொழிற்சங்கப் பணி, 1988ல் IBEA-TN சங்கத்தின் தலைவராக வளர்தெடுத்தது.

பணி ஓய்வினை ஒட்டி அவர் வெளியிட்ட சுற்றறிக்கைக் கடிதம் அவரது வாழ்வுச் சூழல் குறித்த ஆர்வத்தை எழுப்பியது. ஆகஸ்ட் 4ல் சென்னையில் நிகழ்ந்த ஒரு சுருக்கமான உரையாடலின் பதிவு இது.

திருவண்ணாமலை அருகே கேளூர் என்பதுதான் என் கிராமம். சுற்றி மலைகளாக இருக்கும். மனு சாஸ்திரத்தின்படி ஈசான மூலையில் ஊருக்கு வெளியே சேரியில் வீடு. ரெண்டு குச்சி வச்சி கட்டி பனை ஓலைகளை மேல பரப்பிக் கட்டி வச்ச குடிசை. சமைக்கும்போது நாலா பக்கமும் புகை போய்க்கிட்டிருக்கும் வீடு.

அப்பா முனுசாமி ஒரு முன்னாள் படைவீரர். அப்பா, அம்மா ரெண்டுபேருமே கல்வியறிவு பெறாதவர்கள். முதலில் லேபர் ஸ்கூல் என்றும், பிறகு ஹரிஜன் ஸ்கூல் என்றும், அப்புறம் ஆதி திராவிடர் பள்ளி என்றும் அழைக்கப்பட்ட எங்களுர் பள்ளிக்கூடத்தில் அக்கறையோடு சொல்லித் தந்தார்கள் ஆசிரியர்கள்.

மலேசியாவின் ரப்பர் தோட்டத்திலிருந்து திரும்பிய தமிழ்க் குடும்பத்தில் பிறந்த இரட்டையர்கள் என்னுடைய நண்பர்களானார்கள். மேல் சாதி என்றாலும், அடுப்பங்கரை வரை செல்ல நான் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அவர்களது சகோதரன் மூலம் புகுமுக வகுப்பு (பி.யூ.சி) சேர்ந்தேன்.

கல்லூரி விடுமுறை நாளில் `தீண்டாமை'யை நேரடியாக எதிர்கொண்டேன். கல்லூரி நண்பன் ஒருத்தன் எனது ஊர்க்காரன். ரொம்பவும் வற்புறுத்தி வீட்டிற்கு அழைத்துப் போனான். உள்ளே கூட நுழையவில்லை. வாசல் திண்ணையில் உட்கார்ந்து சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தோம். நண்பனுடைய சகோதரி தண்ணீர்க் குடம் கொண்டு போனவர் என்னை கவனித்து விட்டார்.

`முனுசாமி பையனா' என்று கேட்டபடியே வந்தார்.

`சேரி பையன் தானடா, அடி செருப்பாலே, எங்க வூட்டுக்கு வந்திருக்க, எழுந்திர்ரா....'

நண்பன் திணறினான். `கோவிச்சுக்காதடா, இவ்வளவு மோசமா இருப்பாங்கன்னு நினைக்கலடா' என்று ஏதேதோ உளறினான். எனக்கோ பழகிய விஷயம் தானே... புதுசு ஒண்ணும் இல்ல. நான்தான் அப்பவே சொன்னேனே என்று வந்துவிட்டேன்.

இப்படி பல சம்பவம். ஒருமுறை ஊர் கிணற்றில் சோப்பு போட்டு பாதி குளிச்சிக்கிட்டிருக்கும் போது, `ரேபிட் ரவுண்டு'ன்றானே அந்த மாதிரி சரமாரியா கல் விட்டாங்க. அடிச்சு பிடிச்சு சோப்பு உடம்போட மேலேறி வந்து வேறு கிணற்றுக்கு ஓடினேன்.

தாழ்த்தப்பட்ட மக்கள் பானையில் நீர் கொண்டு போகும்போது சொட்டுத் தண்ணி அங்கே இங்கே சிந்தக் கூடாதுங்க. மீறி சிந்திச்சின்னா பானையை கல்லில் அடிச்சே உடச்சிடுவாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன்.

இதெல்லாம் பார்த்து, கேட்டோ என்னவோ, இயல்பாகவே இறையுணர்வு, பக்தி எதுவும் எனக்குள்ளே படியவே இல்ல.

மேல் சாதி நண்பர்களுடன் பழகும்போது அவங்க நிலைமை சிக்கலாச்சு. லோகநாதன் என் நெருங்கிய தோழர். நாங்க டீக்கடைக்குப் போனா, அவருக்கும் `தனி கிளாஸ்' கொடுத்தாங்க. இதெல்லாம் பார்த்து எல்லாத்தையும் மீறணும்னு தோணும். என்னை உட்கார வச்சி, நண்பர்கள் கண்ணாயிரம், லோகநாதன் எல்லாம் சைகிள் மிதிச்சிக்கிட்டு ஊருக்குள் குறுக்கும் நெடுக்கும் போவாங்க - என்ன ஆகுது பார்க்கலாம்னு.

கல்லூரி படிப்பு. அப்புறம் ஆசிரியர் ஆக பட்டப்படிப்பு. பி.எட். படிக்கும்போது, இப்போது மாநிலங்களவை உறுப்பினராகி இருக்கும் டி.ராஜாவும், நானும் உற்ற தோழர்கள். பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு தலைமை ஏற்று நடத்தினோம். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்திலும் செயல்பட்டேன். என்.சி.பி ஹெச். புத்தகங்களை வாங்கி, புரியாவிட்டாலும் திரும்பத் திரும்ப ஊன்றிப் படித்து வந்தேன்.

ஒருவேளை பள்ளிக்கூடத்தோட நின்னுட்டிருந்தா இப்படியா வந்திருப்பேன் என்று தெரியாது. கேளூர் சேரியிலிருந்து கல்லூரி வாசலை மிதிச்ச முதல் மாணவன் சிவராமன் தான். படிக்க வழி இல்லா இருட்டுச் சூழல் என்று சொல்லத் தக்க பின்னணி இது,

இதில் சமூக, அரசியல் போராட்ட உணர்வுக்கு என்னை சிந்திக்க வச்ச நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

என்னுடைய நண்பன் ஒருத்தன் படிப்பில் கெட்டிக்காரன். கணக்கில் புலி அப்படின்றானே, நிஜமாகவே அந்தப் பையன் கணக்குல புலி தாங்க. எஸ்.எஸ்.எல்.சி. படிப்பிலேயே தங்கிட்டான் (Drop-out). கடுமையா உழைக்கவும் செய்வான். உணவுப் பொருள்களை இலேசா திருடவும் செய்வான். கொடிய வறுமைதான் காரணம்.

நெல்மூட்டை திருடிட்டான்னு கட்டிப் போட்டு அவனை அடிச்ச அடி, அப்படி அடிச்சானுங்க. வந்தவன், போனவன் எல்லாம் அடிச்சான்.

`என்னய்யா அப்படி என்ன தான் பண்ணினே'ன்னு கேட்டேன். புலம்பினாங்க, அப்படி பெரிய புலம்பல். பெரிய, பெரிய திருட்டெல்லாம் நடக்குது. இவனை எதுக்கு அடிச்சாங்க. ராத்திரி பூரா அடிச்சதுல ஒருத்தன் எங்க பக்கம் தனியா வந்து சிக்கினான். நான் பாத்துக்கறேன். அடிச்சு சாத்துடான்னேன். வந்தவன் வாங்கின அடியில் அலறி அடிச்சிட்டுப் போனான். கும்பலா படை திரட்டிக்கிட்டு வந்துட்டாங்க. நண்பனை பஸ் சார்ஜ் கொடுத்து ஓடிடுடான்னு அனுப்பிச்சிட்டேன். `மோட்ல' (மேட்டில்) இருந்து பார்த்தான் துரத்துறவங்களை.

படிப்புக்கு பிறகு ஆசிரியர் வாழ்க்கை. ஏராளமான அனுபவம். அடுத்து வங்கி வேலையில் வந்து சேருகிறேன். உழவு மாட்டுக்கு அப்பா வாங்கிய 500 ரூபாய்க் கடனை அதுக்கு அப்புறம் தான் அடச்சேன்.

வேலையில் சேர்ந்த ஆறு மாசத்துல ஆற்காடு கிளை பிரதிநிதி. வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம். வங்கியில் இல்லாத ஆள்கள் சிலர் கூட வந்து நிப்பாங்க. ஆதரவா இருப்பாங்க. அதுல ஒருத்தர் என்னை பிடிச்சாரு. அவர் கொடுத்த புத்தகங்கள், அவரது விஷய ஞானம், அறிவு என்னை மார்க்சியம் பக்கம் திருப்பிச்சு.

சாதாரண கட்சி ஊழியர் அவர். உட்கார்ந்து பேப்பர் படிக்கிறதும், பேசுறதும் பார்க்கத் தெரியாது. உட்கார்ந்த இடத்தில் இருந்து நகரும்போது தான், அவர் `போலியோ'வால் பாதிக்கப்பட்ட கால்களைக் கொண்டிருப்பதும், தேய்ச்சிக் கிட்டே போவதும் தெரியும்.

அந்த அற்புத மனிதர் கிட்டப்பா தான் என் அரசியல் ஆசிரியர்.

பதிவுகள் : எஸ்.வி.வி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com