Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Bank Worker's Unity
BWU Logo
ஆகஸ்டு 2007

சமூகப் போராளிகளுக்கு பணிவு, தன்னடக்கம் தேவை
சங்கரய்யா

ஜூலை 15, 2007ல் எண்பத்தாறு வயதை நிறைவு செய்த விடுதலை போராட்ட வீரர் என். சங்கரய்யா இளவயது உற்சாகத்தோடு இன்றும் ஆவேச உரை நிகழ்த்துபவர். சொந்த ஊர் கோவில்பட்டி. வரலாற்றுப் பாடத்தில் சிறுவயது முதலே ஆர்வமுற்று கல்லூரி வரை தொடர்ந்து அதையே தன் வாழ்க்கையாக்கிக் கொண்டார். மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் மன்ற செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டது மட்டுமல்ல, விளையாட்டிலும் ஈடுபாடு கொண்டு கல்லூரியின் கால் பந்து குழுவில் இடம் பெற்று பரிசுகள் பல வென்றார் என்பது கவனிக்கத் தக்கது.

அரசியல் வாழ்க்கையும் அந்த வயதிலேயே துவங்குகிறது. பி.ஏ. தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன் பாதுகாப்பு கைதியாக சிறையிலடைக்கப்பட்ட போது தமது லட்சியங்களில் அவருக்கு உறுதி ஏற்பட்டு விட்டிருந்தது. முக்கிய தலைவர்களோடு இந்தத் தலைவரின் சிறைவாசமும் அடிக்கடி நேர்வதாயிற்று. தேசவிடுதலை இயக்க வித்து, மனித குல விடுதலைக்கான தத்துவமாக சிறைக்குள் புரிபட்டு உள்ளே ஊன்றிப் போகிறது.

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஆற்றல் மிகு எழுத்தாளரும், பேச்சாளருமான ஒரு சிந்தனை புதல்வனை கம்யூனிசத் தாய் வரித்துக் கொண்டாள்.

விவசாயிகள் இயக்கத்திற்கான பணிகளுக்கு முன்னுரிமை தந்து அகில இந்திய தலைமைப் பொறுப்பு வகித்த இந்த எளிய மனிதர், முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாடுகளில் இடைவிடாது பங்கேற்றுக் கொண்டிருப்பவர் என்பது அவரது பன்முக பரிமாணதமிழக சட்டமன்றத்திலும் ஒலித்தது அந்த வெண்கலக்குரல். சோவியத் யூனியன் மற்றும் மக்கள் சீனத்திற்கும் சென்று வந்தவர். மாணவர் இயக்கத்தின் மீது அபார ஊக்கமும், நம்பிக்கையும் கொண்டிருப்பவர்.

17.07.07 அன்று க்ஷறுரு ஆசிரியர் குழுவில் விருந்தினராக அவர் பங்கேற்றது பரவசமான விஷயம். பத்திரிகையின் வரலாற்றில் அது முக்கிய பதிவானது. எத்தனை முறை, எப்படி கேட்டபோதும் தமது சொந்த தியாக பங்களிப்புகள் குறித்த விவரங்களுக்குள் செல்லத் தீர்மானமாக மறுத்து விட்டார் அந்த உன்னத தோழர். மேலே நீங்கள் காணும் குறிப்புகள் தமிழக கம்யூனிஸ்டுகள் என்ற பழம் நூலிலிருந்து எடுக்கப்பட்டவை.

கண்பார்வையற்றவர் ஒருவர் சங்கரய்யா அவர்கள் மீது மேற்கொண்ட எம்.ஃபில் ஆய்வுக் கட்டுரை பெருமுயற்சிகளுக்குப் பின்னும் கைகளுக்கு எட்டவில்லை. வாய்ப்பு கனியுமானால் நிச்சயம் வாசகர் பார்வைக்கு!.ம்.

அறுபதாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். சுதந்திரம் பெற்றது ஒரு மிகுந்த கடுமையான போராட்டம். அது விடுதலை யுத்தம். இலேசில் கிடைச்சது இல்ல சுதந்திரம். 1857ல் ஆரம்பிச்சு 1947 வரை 90 ஆண்டுகள் போராட்டம். சொல்லப்படாத வரலாறுகளை இப்ப `பீப்பிள்ஸ் டெமாக்ரசி' ஒரு தொடராக எழுதி உண்மைகளை வெளிப்படுத்தி வருது. தமிழகத்திற்கும் 1857 போராட்டத்தில் மிகப் பெரிய பங்கு இருந்தது.

1857-1947 குறித்த முழு ஆராய்ச்சி தேவைப்படுது. அது செய்யப்பட்டு வெளியிடப்படுமானால் மிகவும் சிறப்பாக இருக்கும். ஏன் கடுமையான போராட்டம்னு சொன்னேன்னா, பாரதி கூட `முப்பது கோடி ஜனங்களின் சங்கம்' என்று பாடினார். அந்த உணர்வு படிப்படியாக வளர்ந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பல மொழி பேசும் மக்கள் ஒற்றுமையாகத் திரண்டு அகில இந்திய ரீதியில் போராடியதுதான் வெற்றி பெற்றது. தனித்தனியே பிரிச்சு நடந்த போராட்டங்கள் தோல்வியுற்றன.

இன்றைக்கும் இடதுசாரி, தொழிற்சங்க போராட்டங்களை நடத்தும்போது ஆழமாக இதை மனதில் வச்சுககணும். அகில இந்தியத் தன்மை, பல்வேறு மொழி பேசும் மக்களை இணைப்பது என்று கலாச்சார ரீதியாக நடந்த இயக்கங்கள்தான் வெற்றி பெற்றன. 1908ல் வ.உ. சிதம்பரனார் - திலகரின் நண்பராக இருந்தவர் - துவங்கிய போராட்டங்கள்...1920 ல் தமிழக போராட்டம் பற்றி பரலி. சு. நெல்லையப்பர் எழுதியிருக்காரு. 1930, 1932....பல இயக்கங்கள் போதுமான அளவு வெளிக்கொண்டு வரப்படவில்லை. 1934-35 வாக்கில் இடதுசாரிகள் பங்களிப்பு. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்டிருக்கு. காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவும், அதிலேயே காங்கிரஸ் சோசலிஸ்டு கட்சி என்றும் சுதந்திரப் போரில் ஈடுபடுகிறார்கள்.

1939 முதல் பெரும் பாத்திரம் வகிக்கிறார்கள் இடதுசாரிகள். 1941ல் சிறை நிரப்பும் இயக்கம் நடக்கிறது. காங்கிரசார் கொஞ்சம் பேரு தான். கம்யூனிஸ்டுகள் அதிகமான பேர். சென்னையில் மட்டுமே 300/400 பாதுகாப்பு கைதிகள்.

ஏராளமான வழக்கு. சென்னை சதி வழக்கு, நெல்லை சதி வழக்கு. மதுரை சதி வழக்கு, இப்படி.... 1944ல் காங்கிரஸ் - லீக் ஒற்றுமை கோஷத்தை வைக்கிறோம். இந்திய தேசிய சைனியத்திற்கு (INA) எதிரான பிரிட்டிஷார் விசாரணையைக் கண்டித்து மக்கள் இயக்கத்தை தமிழகத்தில் நடத்துகிறோம்.

1946ல் பம்பாய் கப்பற்படை எழுச்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, முஸ்லீம் லீக் சிப்பாய்கள் இணைந்து போராடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சென்னையில் - மிகப்பெரிய ஸ்டிரைக் - ஏராளமான தொழிலாளரைத் திரட்டுகிறோம். மதுரை, கோயமுத்தூர் எல்லா இடங்களிலும் எழுச்சி. தமிழகத்தில் இடதுசாரிகள்தான் முன் நின்று நடத்துகிறோம்.

1944-46 கால கட்டத்தில் காங்கிரஸ் - கம்யூனிஸ்டு இடையே கடுமையான போராட்டம். செங்கொடி எதிர்ப்புதான் அவர்களது ஒரே இயக்க வேலை. அதை முறியடித்தோம். விடுதலை இயக்கம் இடதுசாரிகளை மக்கள் முன்னுக்குக கொண்டு வந்திருச்சு. கல்கத்தா பற்றி எரிகிறது. லாரிகளைக் கொளுத்துகின்றனர். பம்பாயில் ஒரே நாளில் பிரிட்டிஷார் 300 பேரைச் சுட்டுச் சென்றனர். இதற்கெல்லாம் எதிராக இமயம் முதல் குமரி வரை அகில இந்திய போராட்டங்கள் வெடிக்க, இனி தாங்க முடியாது என்கிற நிலைக்குச் சென்றது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்.

இந்த ஒற்றுமை, 1936ல் கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய பாதை. 1940 களில் விடுதலை கோஷம், `வந்தே மாதரம்' `அல்லா ஹூ அக்பர்' என்றுதான் இருந்தது. அதேபோல் `இன்குலாப் ஜிந்தாபாத்' கோஷமும்! இந்தி தெரியாத தமிழ் மக்கள். ஆனால் இந்த கோஷம் தமிழ்நாடு பூரா போயிருக்கும். நாம் போகாத இடமில்ல.. மூலை முடுக்கெல்லாம் சென்றோம்.

1936ல் அகில இந்திய விவசாயிகள் சங்கம், மாணவர் சங்கம் துவங்குகிறோம். பண்பாட்டு இயக்கமாக ‘இப்டா' (INDIAN PEOPLES THEATER ASSOCIATION) உருவாகுது!. இப்படி எல்லாம் இணைந்து அகில இந்திய ரீதியிலான இயக்கம்

1947 ஆகஸ்டு 14 வரை நான், பி. ராமமூர்த்தி உள்பட நூத்தி சொச்சம் பேர் மதுரை சிறையில் இருக்கிறோம். `பெயில்' கூட மறுக்கப்பட்ட வழக்கு அது. இறுதியில் அது மோசடி வழக்கு என்று ஆகஸ்டு 14 இரவு 7 மணிக்கு விடுதலை செய்யப்பட்டு வருகிறோம். திலகர் சதுக்கத்திற்கு செல்கிறோம். அதே நேரம் சுதந்திர மணி ஒலிக்குது.

நாங்க மட்டுமில்ல, கேரளத்தில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு, ஏ.கே.கோபாலன் இவர்களோடு 300 பேர் அந்த நேரம்தான் விடுதலை செய்யப் பட்டார்கள்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு, மக்கள் ஒற்றுமை, தேசிய இனங்களிடையே இணக்கம் இதை உருவாக்குவதில் இன்றைக்கும் தேவை இருக்கு. அதில் தொழிற்சங்கங்களுக்குத் தலைமை பாத்திரம் இருக்கு. சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டியிருக்கு.

ஏகாதிபத்திய, ஏகபோக எதிர்ப்பு, வகுப்புவாத எதிர்ப்பு இதில் விசேஷ கவனம் செலுத்தணும். குறுகிய எண்ணங்கள் (Parochialism) கூடாது. நதி நீர், மொழி வெறி, இன வெறி எல்லாவற்றிலும் இதுதான் பிரச்சினை.

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை எங்கே ஆரம்பிச்சோம்? தொழிற்சங்க இடத்துலதான்! நான், ஏ. பாலசுப்பிரமணிம், கே. முத்தையா ஆகியோர் மதுரை மோட்டார் தொழிற்சங்கத்தில்தான் துவக்கினோம்.

பழைய இலக்கியங்களைப் படிக்கணும். (செவ்விலக்கியங்கள்) `கிளாசிகல் லிட்ரேச்சரில்' கரை காணணும். அதைச் செய்யாமல் நவீன இலக்கியம் படைக்கறேன்னா அது முடியாது. ஆனால் பழையதை `கிரிட்டிகலாக' படிக்கணும். அன்றைய காலச்சூழலைப் புரிஞ்சு விமர்சனம் செய்யணும். 2007ல் இருந்து திருக்குறளை பார்க்கக் கூடாது.

மார்க்ஸ், கிரேக்க, ரோமானிய இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றிருந்தார். அதே போல் லெனின்.

தமிழ் இலக்கியம் படிச்சு பேச்சாளரா மாறணும். கம்பனையும், (வில்லி) பாரதத்தையும் மேற்கோள் காட்டத் தெரியணும். நூறு பூக்கள் மலரட்டும் என்றது வெரைட்டிக்காக. கருத்து வித்தியாசமிருந்தாலும் லெனின், டால்ஸ்டாயை `மிர்ரர் ஆப் ரஷ்யன் லிட்ரேச்சர்' (ரஷ்ய இலக்கியத்தியத்தின் கண்ணாடி) என்று வருணித்தார்.

இன்றைய சூழ்நிலைகளை நாவல்களகக் கொண்டுவர வேண்டாமா? பாடல்கள்தேவை இல்லையா? நவகவி எழுதினாரே, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தைப் பற்றி `சும்மா கிடந்த சொல்லை எடுத்து' ன்னு அப்படி சிறப்பான பாடல்களை உருவாக்குங்கள்.

நான்கூட (மேலாண்மை) பொன்னுச்சாமியிடம் சொன்னேன். இன்று வருகிற கதைகள், நாவல்கள் போதாது, இன்றைய நிலை பிரதிபலிக்கும் படைப்புகளை ஊக்குவியுங்கள்.

(சமூகப் போராளிகள்) தன்னலமற்ற சேவையில் ஈடுபட வேண்டும். தன்னடக்கம், பணிவு தேவை. இயக்கம் உங்களை தலைமைப் பொறுப்புகளுக்குக் கொண்டு சேர்க்கும்.

தாழ்த்தப்பட்டவர்களுக்காக, தீண்டாமைக்கு எதிராக, பெண் உரிமைக்காக, சிறுபான்மையினர் நலனுக்காக அர்ப்பணிப்போடு இறங்குங்கள்.

கல்கியின் பாராட்டு

1942க்குப் பிறகு கிட்டத்தட்ட காங்கிரஸ் முடங்கி விட்டது. எந்தப் போராட்ட அறை கூவலும் விடப்படவில்லை. ஆனால் நாடெங்கும் எண்ணற்ற போராட்ட அலைகள் தொடர்ந்தன. விவசாயிகள், தொழிலாளர்கள் எழுச்சிக்கள் வீறு கொண்டெழுந்தன. புன்னப்புரா-வயலார், தேபாகா, மகாராஷ்டிரா, உ.பி. எங்கும் எழுச்சி கொந்தளித்தன. இவற்றில் கம்யூனிஸ்ட்டுகள் பங்கெடுப்பு அளவிடற்கரியதாக இருந்தது. ஆயினும் காங்கிரசாரின் கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரம் தொடர்ந்தது. அப்போது கம்யூனிஸ்ட்டுகள் மீது அனுதாபமும் நல்லவர்கள் மத்தியில் காணப்பட்டது. அதற்கு இதோ ஒரு சாட்சி.

25.4.45 அன்று ஜனசக்தியில் கல்கி எழுதிய கடிதம் ஒன்று வெளியிடப்பட்டது. ரூ.50 நிதியுடன் அவர் அனுப்பிருந்த கடிதம் வருமாறு:-

`ஜனசக்தி ஆசிரியர் அவர்களுக்கு, தங்களுடைய பத்திரிகையில் வெளியாகி வரும் `பொதுவுடைமைக் கட்சி நிதி' விண்ணப்பத்தைப் படித்தேன். மேற்படி நிதிக்காக என்னுடைய சிறு நன்கொடை (ரூபாய் ஐம்பது) இத்துடன் அனுப்பியிருக்கிறேன்.நான் பொது உடைமைக் கட்சி அங்கத்தினன் அல்ல. அங்கத்தினராகச் சேர உத்தேசமும் இல்லை.

பொது உடைமைக் கட்சியின் சமுதாய லட்சியங்களையும் பொருளாதார தத்துவங்களையும் நான் பரிபூரணமாக ஒப்புக் கொள்கிறவன். ஆனால் தற்கால வேலைத் திட்டம், முறைகள் இவற்றை முழுவதும் என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

என்னுடைய சிறு நன்கொடை நான் அனுப்பி இருப்பது முக்கியமாக தமிழ்நாட்டில் வேலை செய்யும் பொதுவுடைமைக் கட்சித் தொண்டர்களிடத்தில் நான் கொண்டுள்ள நன்மதிப்பைக் காட்டுவதற்கேயாகும். அவர்களுடைய தியாகம் ஒப்பற்றது. அவர்களுடைய நோக்கம் மாசு மறுவற்றது. ஏழை மக்களுக்கு அவர்கள் செய்து வரும் தொண்டு இணையற்றது. அவர்களுடைய ஊக்கமும் உழைப்பும் அபாரமானவை. இத்தகையவர்களைப் புதல்வர்களாய்ப் பெற்ற தேசம் பாக்கியம் செய்த தேசம். இத்தகையவர்களை அங்கத்தினர்களாய்க் கொண்ட ஸ்தாபனம் அதிர்ஷ்டம் செய்த ஸ்தாபனம். என்னுடைய சிறு நன்கொடையை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு
ரா. கிருஷ்ணமூர்த்தி


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com