Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Bank Worker's Unity
BWU Logo
ஆகஸ்டு 2007

புதிய பென்ஷன் திட்டம்
ஜீ.ஆர்.ரவி

கனரா வங்கியில் பணி நிரந்தரம் வழங்கப்படும் தினக்கூலி ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ்தான் வருவார்கள் என நிர்வாகம் அதிகாரபூர்வமாக நடைமுறைப்படுத்தி விட்டது. 1.11.93க்குப் பின் பணியில் சேருவோர் 26.10.93 தேதிய பென்ஷன் ஒப்பந்தத்தின்படி (அதாவது `பழைய' பென்ஷன் திட்டம்) பென்ஷன் திட்டத்தை ஏற்றவராகிறார் என்ற ஷரத்து மீறப்பட்டுவிட்டது. பாரத ஸ்டேட் வங்கியிலும் புதிய அதிகாரிகளாக நியமனம் பெறுபவர்கள் புதிய பென்ஷன் திட்டத்திற்குள் தான் கொண்டுவரப்படுவார்கள் என்பது எழுத்துருவாகவே சொல்லப்பட்டுவிட்டது. `பென்ஷன் இன்னொரு ஆப்ஷன்' கோரும் லட்சக் கணக்கானோர் நம்பிக்கைக்கு எதிர்நடவடிக்கை இது. அதென்ன புதிய பென்ஷன் திட்டம்? ஒரு சின்ன அலசல் இது.

வாசல் கதவைத் தட்டியாகி விட்டது...

வங்கி ஊழியர்கள் இப்பொழுதெல்லாம் சந்தித்துக் கொள்ளும் பொழுது நலமா என்று விசாரிப்பதற்கு பதில் பென்ஷன் இன்னொரு Option எப்பொழுது வரும் என்கிற விசாரிப்புகளே மேலோங்கி நிற்கிறது. முதல் முறையே பென்ஷனை தெரிவு செய்யாமல் பெரிய தவறு செய்துவிட்டோமோ என்கிற ஆதங்கத்தில் இவ்வாறு எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. அன்று இருந்த சூழ்நிலைமையும் இன்றுள்ள நிலைமையும் முழுவதுமாக வேறு வேறு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பென்ஷன் தேர்வுக்கு இன்னொரு வாய்ப்பு தருவதற்கு அரசும் காலந்தாழ்த்துதலுக்குக் காரணம் பொதுவாக, பென்ஷன் நிதியில் பற்றாக்குறை என்று அவர்கள் கூறினாலும், வங்கித்துறையில் 26.10.1993ல் இருதரப்பு ஒப்பந்தம் மூலம் தொழிற் தகராறு சட்டத்தின் அடிப்படையில் போடப்பட்ட ஓய்வூதிய ஒப்பந்தத்தைத் தொடரத் தயாராக இல்லாத நிலைதான் இதற்குப் பின்னால் ஒளிந்துள்ள உண்மையான காரணம். இதற்குப் பதிலாக புதிய பென்ஷன் திட்டத்தை நுழைக்க பல வழிகளிலும் அரசு முயலுகிறது. 'மாற்றுத் திட்டம் கொடு' என்று வங்கியாளர் கழகம் (IBA) சங்கங்களை வற்புறுத்துவதன் பின்னணியும் இதுதான்!

புதிய பென்ஷன் திட்டத்தின் வரலாறு :-

1991ல் நரசிம்மராவ் அரசின் காலத்தில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமுலாக்கப்பட்ட பின்னணியில் உலக வங்கி, IMF யின் கட்டளைக்கிணங்க பல்வேறு சமூக நலத்திட்டங்கள், வெட்டப்பட்டன அல்லது முழுவதுமாகக் கைவிடப்பட்டன. அதன் ஒரு அங்கமாகத்தான் பணி ஓய்விற்குப் பிறகு கிடைத்து வந்த சமூக பாதுகாப்பான ஓய்வூதியத்தை ஓய்வூதிய சீர்திருத்தம் என்ற பெயரில் `பங்கேற்பு பென்ஷன் திட்டமாக' (Contributory) மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த திசையில் ‘IMF Working Paper on Pension Scheme’ என்கிற ஆவணம் செப்டம்பர் 2001ல் தயாரிக்கப்பட்டது. இதற்கு அடித்தளமிட்டு ஆரம்பித்து வைத்தது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் என்றாலும் இதன்பின் வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமும் தொடர்ந்து அந்தப் பாதையிலேயே சென்று அமுல் நடத்தும் முயற்சியில் குறியாக உள்ளது. இந்தப் பென்ஷன் சீர்திருத்தம் ஏதோ இந்தியாவுடன் நிற்கவில்லை. மூன்றாம் உலக நாடுகளிலும் வளர்ந்த நாடுகளிலும் தனது மூக்கை நுழைத்துள்ளது.

புதிய பென்ஷன் திட்டம்:

மத்திய அரசாங்கம் 22 டிசம்பர் 2003 அறிவிக்கைப்படி 1.1.2004 முதல் ஒரு புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது இரண்டு அடுக்குகள் (2 Tier) கொண்டது. முதல் அடுக்கில், ஊழியர்களிடமிருந்து அவர்களுடைய அடிப்படை ஊதியம் மற்றும் பஞ்சப்படியில் 10% பிடித்தம் செய்து அதற்கு ஈடாக அரசாங்கமும் பணம் செலுத்தி ஓய்வூதிய நிதி உருவாக்கப்படும்.

விருப்பத்தின் அடிப்படையிலான இரண்டாவது அடுக்குக்கு செலுத்தப்படும் தொகை தனியாக வைக்கப்பட்டு எப்பொழுது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதியுடையது. இந்த முறையில் உருவாக்கிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிலிருந்து ஊழியர்களுக்கு Annuity மூலம் ஓய்வூதியம் வழங்க வழி செய்கிறது. இது 1.1.2004க்குப் பிறகு பணியில் சேரும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஓய்வூதிய திட்டத்தை சட்டபூர்வமாக நிர்வகிப்பதற்கு அரசு Pension Fund Regulatory and Development Authority (PFRDA) Bill 2005 பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அது இடதுசாரிகளின் எதிர்ப்பின் காரணமாக பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஏன் இந்த அவசரம்

புதிய பென்ஷன் திட்டத்தை அவசர அவசரமாக நுழைப்பதற்குக் கூறப்படும் காரணங்கள்.

அ) வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய பயன் (Defined Pension Benefit) திட்டத்தை பொருளாதார ரீதியாகத் தொடர முடியாமை.

ஆ) இருக்கும் திட்டத்தில் நிதியை நிர்வகிப்பதற்கும், திட்டங்களுக்கும் போதிய வாய்ப்பு இல்லாமை.

இ) இருக்கின்ற ஓய்வூதிய திட்டத்தின் மூலம் முறைசாரா தொழிலாளர்களை முழுமையாகச் சென்றடையாமை.

ஆனால் இவற்றை ஆராயும் பொழுது அரசாங்கத்தின் புரட்டு நமக்கு புலப்படும்.

உண்மை என்ன

முதலாவதாக, இந்த புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் வரும் ஊழியர்கள் 33 வருட முழு பணியையும் செய்வார்கள் என்று வைத்துக் கொண்டால், அரசாங்கம் இதற்குண்டான தன்னுடைய வரையறுக்கப்பட்ட பங்குத் தொகையை செலுத்தும் அதே வேளையில், இருக்கும் ஓய்வூதிய திட்டத்திலுள்ள செலவினங்களையும் எதிர் கொள்ள வேண்டும். ஆக தொடர்ச்சியாக 33 வருடங்கள் தன்னுடைய பங்கை செலுத்த வேண்டிய அரசாங்கத்தின் நிதித் தேவை எவ்விதத்திலும் குறையாது, மாறாக மேலும் உயரும் என்பதுதான் உண்மை.

இரண்டாவதாக ஓய்வூதிய பயன் பற்றிய எந்தவித உத்தரவாதமும் இல்லாத நிலையில், இத்திட்டத்தை நிர்வகிக்கும் நிதி மேலாளர்கள் நிச்சயமாக ஒரு பெரிய தொகையை கட்டணமாக வசூல் செய்வார்கள். இதுதான் ஏற்கனவே அமுலில் உள்ள நாடுகளின் அனுபவம். ஆகவே நிதியிலிருந்து பென்ஷனுக்காக வரும் வருவாயின் அளவு கணிசமாகக் குறையும் என்பது உறுதி.

மூன்றாவதாக அரசாங்க ஊழியர்களுக்கு மட்டுமே அரசாங்கம் தன்னுடைய வரையறுக்கப்பட்ட பங்குத் தொகையை செலுத்தும். தனியார் மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள்தான் தங்களுடைய பங்குத் தொகையைச் செலுத்த வேண்டும்.அப்படியிருக்கும் பொழுது முறைசாரா தொழிலாளர்களுக்காக அரசாங்கம் வடிப்பது முதலைக்கண்ணீர் என்பது தெள்ளத் தெளிவு.

தொழிலாளர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் மாத ஊதியத்தில் ஏற்படும் அரிப்பு மட்டுமின்றி அவர்களுக்கு, பின்னால் வரவிருக்கின்ற ஓய்வூதியமும் நிர்ணயிக்கப்பட்டதல்ல. அது பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டே இருக்கும். மேலும் தினமும் பல லட்சம் டிரில்லியன் டாலர்கள் சர்வதேச நிதி மூலதனம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து கொண்டிருக்கின்ற வேளையில் பங்குச்சந்தையின் பிடி அவர்கள் கையில் இருக்கும். தற்போதுள்ளதுபோல் ஓய்வூதியத்திற்கு விலைவாசி ஏறும் பொழுது பஞ்சப்படியும் ஏறுவதற்கான வாய்ப்பு இல்லை. ஆக பணி ஓய்விற்குப்பின் தொழிலாளர்களுக்கு அதிகம் தேவைப்படும் சமூக பாதுகாப்பில் பெரும் இறக்கம் ஏற்படும் என்பது திண்ணம்.

சமூகத்தின் போக்கு

இத்தருணத்தில் இந்தியாவைப் பற்றி ஐக்கிய நாடுகள் சபை தயாரித்துள்ள "U.N. World Population Ageing - 2007" என்ற அறிக்கை சில திடுக்கிடும் தகவல்களைத் தந்துள்ளது. அதன்படி வயது அடிப்படையில் மக்கள் தொகை என்பது

வயது 2007ல் 2025ல் 2050ல்
0-14 31.2% 24.5% 18.3%
60 வயதுக்கு மேல் 8.6% 12.0% 22.2%

14 வயதிற்குக் கீழும், 60 வயதிற்கு மேலும் உள்ளவர்களின் எண்ணிக்கை சராசரியாக 40% உள்ளது. மேலே அட்டவணையைப் பார்க்கும் பொழுது 40,50 வருடங்களில் இளவயதுடையவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் குறைந்து கொண்டும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டும் போவதைப் பார்க்கலாம். அதேபோல் இளைஞர், முதியவர் விகிதாச்சாரத்தைப் பொறுத்தவரை கொடுக்கப்பட்டுள்ள விபரம் 2007ல் 26.1%, 2025ல் 49.2%, 2050ல் 113% இதன்படி பார்த்தாலும முதியவர் எண்ணிக்கை இளையவர்களின் எண்ணிக்கையைத் தாண்டும். அதேபோல் Old Age Dependency Ratio பார்க்கும் பொழுது 2007ல், 8.6% மாகவும், 2025ல் 12% மாகவும் 2050ல் 22.2% ஆகவும் இருக்கும் என்றும் கணக்கிட்டுள்ளது. இதன் பின்னணியில் முதுமைக்கால உதவிக்கும் (Old age Support), சாத்தியமாகிற ஆதரவிற்குமுள்ள (Potential Support) விகிதாச்சாரம் 2007ல் 11.7% ஆக இருக்கின்றது 2025ல் 8.4% ஆகவும், 2050ல் 4.5%மாகவும் குறையும் என்று கூறுகிறது.

அபாயத்திற்கு எதிராக

இவை யாவும் இந்தியாவில் தற்சமயம் நிலவுகின்ற முறைசார்ந்த தொழிலாளர்கள் பெற்றுக் கொண்டிருக்கின்ற ஓய்வூதிய பயன்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. அப்படியானால் இந்த நிலைமை புதிய பென்ஷன் திட்டத்தின் அமுலாக்கத்தினால் மேலும் மோசமடைந்து இந்தியாவில் வயது முதிர்ந்தவர்கள் வெறும் பிச்சைக்காரர்களாக மாறுவதற்கான அபாயம் உள்ளது.

இப்படி தொழிலாளர்களுக்கு முற்றிலும் சாதகமற்ற அதே நேரத்தில் அரசுக்கும் எந்த வகையிலும் உதவாத ஒரு திட்டத்தை வேக வேகமாகத் திணிப்பதற்குக் காரணம் என்ன? IMF ,உலகவங்கி கட்டளைக்கிணங்க பங்குச் சந்தை மூலம் சர்வதேச நிதி மூலதனத்திற்கு சேவை செய்யவே இந்திய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது என்பது நமக்குப் புரிகிறது. இந்திய தொழிலாளிகளின் கணிசமான வாக்குகள் மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து அவர்கள் வியர்வை சிந்தி உழைத்து சேமித்ததையும் அவர்களது ஓய்வுக்கால சமூக பாதுகாப்பையும் காவு கொடுக்கத் துணிந்துள்ளது அரசு. இது ஆட்சியாளர்களின் மன்னிக்கமுடியாத துரோகமாகும். இதற்கு இந்திய தொழிலாளி வர்க்கம் தக்க பதிலடி கொடுத்தே தீர வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com