Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Bank Worker's Unity
BWU Logo
ஆகஸ்டு 2007

டெலிபோனில் தோசை
கே.ஆர்.எஸ்

அந்த ஹோட்டலின் விளம்பரம் அற்புதமாக இருந்தது. அதாவது, அந்த ஹோட்டலில் உள்ள அனைத்து வேலைகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப் பட்டுள்ளது என்று! நமக்கு டிபன் எப்படி வேண்டுமோ அதற்கான குறிப்புகளை டெலிபோன் மூலம் கொடுக்க அதனை கம்ப்யூட்டர் பதிவு செய்து நாம் குறிப்பிட்ட மாதிரியே டிபன் தயாரிக்கப்பட்டு அரைமணி நேரத்திற்குள் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரு வாரம் முன்பு ராமநாதன் இந்த ஹோட்டலில் தோசை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு `இதுமாதிரி தோசை வாழ்நாளில் சாப்பிட்டதில்லை' என்று கூறிவிட்டுப் போனான்.

இன்று, சனிக்கிழமை மணி மூன்றரை இருக்கும். ஏதோ படித்தபடியே இருந்து விட்டதால் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. மனைவியும் சினேகிதி வீட்டிற்குப் போய்விட்டு லேட்டாக வருவேன் என்று கூறிவிட்டுப் போயிருந்தாள். இந்தப் பசிக்கு அந்த ஹோட்டல் தோசை நினைவுக்கு வந்து நாக்கில் நீர் பெருகிற்று. இப்போது ஆர்டர் கொடுத்தால் எப்படியும் நாலு மணிக்குள் தோசை வந்து விடும். ஒரு அரை மணி நேரம் அந்த அற்புத தோசைக்காக பசியை தாங்கிக் கொள்ள தீர்மானித்தேன்.
டெலிபோனை எடுத்து அந்த நம்பரை டயல் செய்தவுடன் ஒரு பெண்குரல் கேட்டது. நான் `ஒரு தோசை' என்று சொல்ல வாயெடுத்த போது,

To know in English Dial one, ஹிந்தி மே கோஷ்னா கேலியே தோ டயல் கரேன், தமிழில் அறிய மூன்றாம் எண்ணை டயல் செய்யவும், தெலுகுலோ தெலுசுகோனி நாலுகு டயல் செய்யண்டி, கன்னடதல்லி திளியலு ஐது டயல் மாடி, மலையாளத்தில் அறியான் ஆறாம் எண்ணை பிரஸ் செய்யுக......'

"ஓகோ: இப்படியோ; சரிசரி; அடக்கடவுளே, தமிழுக்கான எண்ணை விட்டு விட்டேனே" என்று என்னையே நொந்து கொண்டு டெலிபோனை டிஸ்கனெக்ட் செய்து மறுபடியும் டயல் செய்தேன்.

`To know in English' என்று போன் ஆரம்பித்தது. காதைத் தீட்டி வைத்துக் கொண்டு, மூன்று என்ற எண்ணை மனதில் பதிவு செய்து, மூன்றை பிரஸ் செய்தேன்.

உடனே அதே பெண்குரல் :

‘அரிசி சேர்ந்த உணவு என்றால் ஒன்றை அழுத்தவும். ஆவியில் வைப்பது என்றால் இரண்டை அழுத்தவும். வாணலியில் வறுப்பது என்றால் மூன்றை அழுத்தவும். எண்ணையில் போட்டு எடுப்பது என்றால் நான்கை அழுத்தவும். கல்லில் போட்டு எடுப்பதானால் ஐந்தை அழுத்தவும்.......'

உடனே என் மூளையில் கல்லில் போட்டு எடுப்பதுதான் தோசை என்று தோன்றி ஐந்தை அழுத்தி `அப்பாடா' என்று மூச்சு விடுவதற்குள்,

`கோதுமை மாவு என்றால் ஒன்றை அழுத்தவும். மைதா மாவு என்றால் இரண்டை அழுத்தவும், ரவை என்றால் மூன்றை அழுத்தவும், அரிசி மாவும் உளுந்தும் கலந்தது என்றால் நான்கை அழுத்தவும், அரிசி மாவு, ரவை, கோதுமை...'
பொறுமை இல்லை... நான்கை அழுத்தினேன் அப்பாடா ஒரு மாதிரி தோசைக்கு வந்து விட்டோம் என்று நினைக்கையில்
`ஊத்தப்பம் என்றால் ஒன்றை அழுத்தவும்; கல்தோசை என்றால் இரண்டை அழுத்தவும்; தோசை என்றால் மூன்றை அழுத்த..'
மூன்றை அழுத்தினேன்

`சாதா தோசை என்றால் ஒன்றை அழுத்தவும்; ஸ்பெஷல் சாதா என்றால் இரண்டை அழுத்தவும்; பேப்பர்...'

பொறுமை இல்லை எனக்கு; எதையாவது வாங்கித் தின்ன வேண்டியதுதான். இரண்டை அழுத்தினேன்.

`நல்லெண்ணெய் என்றால் ஒன்றை அழுத்தவும்; தேங்காய் எண்ணை என்றால் இரண்டை அழுத்தவும்; கடலை எண்ணெய் என்றால் மூன்றை...'

எனக்கு இப்போது கடுமையான கோபம் வந்தது. ஒரு தோசைக்கு இத்தனை கேள்வியா? கம்ப்யூட்டரைசேஷன் டவுன் டவுன் என்று கத்தினேன்.

எனது கோபத்தில் எதோ ஒரு எண்ணை அழுத்தி இருக்கிறேன்.

`தேங்காய் சட்னி என்றால் ஒன்றை அழுத்தவும், கொத்தமல்லி சட்னி என்றால் இரண்டை அழுத்தவும்; புதினா சட்னி என்றால் மூன்றை அழுத்தவும்; வெங்காய....'

ஓகோ, தொட்டுக் கொள்ளும் அயிட்டத்திற்கும் இப்படியா; இப்போதுதான் சட்னிக்கு பத்து வகை வந்திருக்கு; இனி சாம்பாரில் பத்து வகை; மிளகாய்ப் பொடியில் பத்து வகை; மிளகாய்ப் பொடிக்கு ஊற்றும் எண்ணெயில் பத்து வகை, பிறகு ஆள்காட்டி விரலால் குழைக்க ஒன்றை பிரஸ் செய்யவும், ஒரு விரலுக்கு இரண்டை பிரஸ் செய்யவும், மோதிரவிரலுக்கு... இப்படி இரு கையிலுள்ள பத்து விரலுக்கு பத்து ஆப்ஷன், இதில் எது என்று ஒவ்வொன்றுக்கும் நான் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தோசையின் வடிவம், சதுரம், செவ்வகம், முக்கோணம், கோழிமுட்டை...

இது எப்போ முடிந்து எப்போ தோசை வந்து...

என் சிந்தனையில் சில நிமிடங்கள் மூழ்கிடவே

`நீங்கள் எந்த எண்ணையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பிரஸ் செய்யாத காரணத்தால் இது கேன்சல் ஆகிறது' என்ற அறிவிப்பைத் தொடர்ந்து

To know in English Press one...

`படார்' என்று ரிசீவரை வைத்தேன். பசியும் கோபமும்

பீறிட ராமநாதனை திட்டித் தீர்த்தேன்.

போன் அருகில் இருந்து எழுந்தபோது சுவரில் `நாயர் டீக்கடை' என்று பென்சிலால் கிறுக்கி அதன்கீழ் போன் நம்பரும் குறிப்பிட்டுள்ளதைப் பார்த்தேன்.

உடனே நாயர் டீக்கடைக்கு டயல் செய்தேன்.

"எந்தா சாரே" என்று இனிமையாக நாயர் குரல் ஒலித்தது.

`"நாயர், இரண்டு மசால் வடையும் ஒரு டீயும் அவசரம்" என்றேன்.

`இதோ ஐந்து நிமிஷத்தில் வரேன் சாரே'

ஐந்து நிமிடத்தில் நாயர் டீ கிளாஸ் உடனும், இரண்டு பொட்டலத்துடனும் நின்று கொண்டிருந்தார்.

"என்ன நாயர் இரண்டு பொட்டலம்"

"ஒன்று மசால் வடை; இன்னொன்று மசால் தோசை; சாருக்கு பிடிக்குமே என்றுதான்...."

என்னை அறியாமல் என் கண்களில் நீர் நிரம்பிற்று. நாயரின் வாஞ்சை முன் அந்த இயந்திர சுருதிகள் தூசுக்கு சமானம்.
நான் சாப்பிட்டுக் கொண்டே டெலிபோனில் தோசைக்குப் பட்ட பாட்டை விளக்கினேன்.

"சாரே எத எத எதுக்கு உபயோகப் படுத்தணுமோ அதுக்குத்தான் உபயோகப் படுத்தணும். நெய்ய சாதத்திற்கு விட்டுக்கலாம். நல்ல இருக்குன்னு உடம்பெல்லாம் தேய்ச்சிக்க முடியுமா?" என்று சொல்லிக் கொண்டே காலி கிளாஸ் டம்ளரை எடுத்துக் கொண்டு நடையைக் கட்டினார் நாயர்.

கட்டுரையாளர் தொடர்பு எண் : 98841 80311

மின்னஞ்சல் : ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com