Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Bank Worker's Unity
BWU Logo
ஆகஸ்டு 2007

நாடக மேடையில் விடுதலை கானம்
சு.பொ.அகத்தியலிங்கம்

வள்ளித் திருமணம்', `அரிச்சந்திர மயான காண்டம்' புராண நாடகங்கள் தாம். ஆனால், அதில் விடுதலைப் போராட்ட விதை இருக்கும். வள்ளி திருமணத்தில் முருகன் கையில் சேவல் கொடிக்குப் பதில் கதர் கொடி இருக்கும். வள்ளி தினைப்புனத்தில் வெள்ளைக் கொக்குகளை விரட்டுவார். விடுதலை வேட்கை கொப்பளிக்கும் பாடல்கள் அரங்கில் கம்பீரமாய் ஒலிக்கும். ரசிகர்களின் கையொலி வெள்ளையர்கள் இதயத்தை நடுங்க வைக்கும்.

மயான காண்டத்தில் அரிச்சந்திரன் பேசும் போதும் தேச பக்தியும் சமூக விழிப்புணர்வும் புயலாய் வீசும்; `நல்லதங்காள்', `பவளக்கொடி', போன்ற சமூக நாடகங்களாயினும் சரி அதிலும் தேசபக்த பாடல்கள் தான். காட்சிகள்தாம். ஆக, விடுதலைப் போரில் நாடக மேடையும் போராட்டகளமானது. நாடகக் கலைஞர் விஸ்வநாத தாஸ் விடுதலைப் போராட்ட தளபதியாக மிளிர்ந்தார். நாடகம் அவர் கை ஆயுதம்.

ஒரு முறை மகாத்மா காந்தி மதுரை வந்த போது மேடையில் விஸ்வநாத தாஸ் பாடிய பாடல்களைக் கேட்டு காந்தி கூறினார்: `விஸ்வநாததாஸ் இனிமையான பாடகர். தேசப் பற்றுள்ள நாடக நடிகர், மக்கள் அவரைக் கொண்டாட வேண்டும். அவரை என் இயக்கத்திற்கு அழைக்கிறேன்."

காந்தியின் அழைப்பைக் கேட்டு விஸ்வநாததாஸ் உடல் புல்லரித்தது. கதராடைக்கு மாறினார். விடுதலைப் போராட்டங்களில் பங்கு பெற்றார்.

ஒருமுறை சேடப்பட்டியில் வள்ளி திருமணம் நாடகம் நடந்தது. நாடகத்துக்குப் போலீசார் தடை விதித்தனர். மீறி நாடகம் துவங்கியது. தினைப்புனத்தில் வள்ளி கொக்குகளை விரட்டுகிற காட்சி.

"வெட்கங் கெட்ட வெள்ளை கொக்குகளா? விரட்ட விரட்ட ஏன் வாரிங்களோ?" எனப் பாட அரங்கமே உணர்ச்சிப் பீறிட கரகோஷம் செய்கிறது.

போலீஸ் வெறியோடு மேடை ஏறுகிறது. முருகன் வேடத்தில் தாஸ்! கைது செய்ய போலீஸ், வாரண்டுடன் நெருங்குகிறது. "முருகனுக்கு முன் பூட்ஸ் காலோடு நிற்காதே" என ரசிகர்கள் கூச்சலிட போலீஸ் இறங்கி நின்று விஸ்வநாததாஸுக்கு வாரண்ட் என்று கத்துகிறது.

தாஸ் கூறுகிறார். "உமது வாரண்டுக்குரிய தாஸ் இங்கு இல்லை. இருப்பது முருகன். அவர் மீது வாரண்ட் இருந்தால் தாரும். இல்லையென்றால் நாடகம் முடிந்த பின் விஸ்வநாத தாஸைப் பாரும்!' என்கிறார். போலீஸ் நகர்ந்தது. பிறகு கைது செய்தது. ஒரு முறை விஸ்வநாததாஸ் வேலூர் சிறையில். மகன் சுப்பிரமணியம் கடலூர் சிறையில். தங்கை மகன் சின்னச்சாமியும் சிறையில். ஆக, குடும்பமே சிறையில். மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் சுப்பிரமணியத்தை மட்டும் விடுவதாகக் கூறிய போது தன் மகனுக்கு எழுதினார். "முன்வைத்த காலை பின் வைப்பது நமது தேசியத்துக்கு இழுக்கு! மன்னிப்புக் கேட்பதை விட நீ மரணத்தை தழுவுவதே மேல்" என்றார். என்னே மன உறுதி.

தடையை மீறி தேசபக்த பாடல்களை, பகத்சிங் பாடல்களைப் பாடும் விஸ்வநாததாஸ் குடும்பம் வறுமையில் வாடியது. வீடு ஏலத்துக்கு வந்தது. மீட்க முடியாமல் திணறினார். தேச பக்தப் பாடல்களைப் பாடுவதை விட்டால் உதவுவதாக எட்டயபுரம் ஜமீன்தார் கூறினார். காங்கிரஸ் கட்சியை விட்டுவிட்டு நீதிக் கட்சியில் சேர்ந்தால் நல்ல வாழ்வு கிடைக்குமென சென்னை மேயர் - ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர் கூறினார். விஸ்வநாததாஸ் இவைகளை ஏற்க மறுத்தார். அவர் பட்ட தொல்லைகள் கொஞ்சமல்ல. அவர் நாவிதர் சாதியைச் சார்ந்தவர் எனக்கூறி அவருடன் ஜோடியாக நடிக்க இதர பெண் நடிகர்களே மறுத்தனர். கே.பி. ஜானகியம்மாள்தான் (பின்னர் ஜனநாயக மாதர் இயக்கத்தை வழிநடத்திய கம்யூனிஸ்ட போராளி) இதனை மீறி இவருடன் மேடையேறி ஜோடியாக நடித்தார். அவரும் சிறந்த பாடகர்.

ஒருமுறை அரிச்சந்திர நாடகம் நடந்தது. சுடலையைக் காக்கும் வீரபாகு பாடுவதாக தாஸ் பாடினார். பாடல் மதுரகவி பாஸ்கரதாஸ்.

"ஆதியிலும் பறையனல்ல
சாதியிலும் பறையனல்ல
பாதியிலே பறையனானேனே என் தங்கமே
பாரிலிது உண்மைதானே தங்கமே"

படைப்பால் யாரும் தாழ்த்தப்படுவதில்லை. இடையில் தோன்றிய அநீதி என்பதை இப்பாடலில் இடியென முழக்கினார். 1.1.41 அன்று சென்னை ராயல் தியேட்டரில் வள்ளி திருமணம் நாடகம். முருகனாக தாஸ் வேடமிட்டார். மேடையில் பாடியபடியே அவர் உயிர் பிரிந்தது. சென்னை நகரே அவர் இறுதி ஊர்வலத்தில் சங்கமித்தது. நாடக மேடையை விடுதலைப் போர்க்களமாக்கிய வீரன் விஸ்வநாததாஸ் போர்க்களத்திலேயே வீரமரணம் அடைந்தார். துப்பாக்கியும் தோட்டாக்களும் மட்டுமல்ல சொற்களும் அரிதாரமும் கூட போர் தளவாடங்களே.


விடுதலைத் தழும்புகள்
சு.பொ.அகத்தியலிங்கம்
தமிழ்ப் புத்தகாலய வெளியீடு
பக்கங்கள் 652
விலை ரூ.165


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com