Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Bank Worker's Unity
BWU Logo
ஆகஸ்டு 2007

ஒரு ‘ஹிபாகுஷா’வின் இதயத்திலிருந்து...:
ஆதி

அன்புள்ள பகத்,

ஒரு புரட்சிக்காரனின் பெயரைச் சூட்டியதற்காக உங்களுடைய பெற்றோரை வணங்குகிறேன். சொந்த தேசத்தின் வரலாற்றை மறவாதவர்கள் மதிப்புக்குரியவர்கள். எங்கள் வரலாற்றை நாங்கள் விரும்பினாலும் மறக்க முடியாது.

இந்தக் கடிதத்தில் அணு ஆயுதங்களின் நெடி அடித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. காலை 10 மணி முதல் மாலை 5 வரை என்று பழகிய உன் திட்டமிட்ட அலுவலக வாழ்க்கையில் இது திடீர்த்தாக்குதலாய் இருக்கலாம். என்ன செய்வது? ஒரு ஹிபாகுஷாவின் கண்களிலிருந்து வழியும் கண்ணீர்த் துளிகளை ஏந்திப்பிடிக்க உன் உள்ளங்கைகளுக்கு வலுவிருக்குமா? அந்தக் கண்ணீர்த்துளிகளில் யுரேனியம் அல்லது புளுடோனியத்தின் துகள்கள் மிதக்கக் கூடும்.

1945 ஆகஸ்டு 6..... அந்தநாள் வராமலேயே காலம் நகர்ந்திருக்குமேயானால் நானும் உன்னைப்போல நோயற்ற கண்களுடன் இந்த உலகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.

எதற்காக நடந்தது அந்த மாபெரும் விபத்து? அந்த மரணத்திலிருந்து தப்பித்தவர்களை ஹிபாகுஷாக்கள் என்று அழைக்கிறார்கள். மரணத்தின் சந்ததியர்களுக்கு மனிதர்கள் சூட்டிய மாபெரும் பெயர் ஹிபாகுஷாக்கள். மரணத்தைவிடவும் வாழ்வது கொடியதாய் இருக்கிறது என்பதை நீ புரிந்து கொள்வாயா நண்பனே?

இயற்கை எங்களுக்கு அளித்த மாபெரும் சீதனமான உடல் உறுப்புக்கள் எல்லாம் இன்று நோய்களின் மூட்டைகளாய்க் கனக்கின்றன! இன்னும் எத்தனைத் தலைமுறைகளுக்குச் சுமக்க வேண்டுமோ தெரியவில்லை தண்டனைகளின் தீர்ப்புகளை. என் நண்பன் டோரு மிடோயா. வயது 83. குண்டு போடப்பட்ட போது 20. இப்போது வயிற்றில் புற்றுநோய் 2 குழந்தைகளுக்கு மூளையில் புற்றுநோய்.

இன்னொரு நண்பன். 81 வயது . யூஜி எகூசா. கண்கள் குருடாகிப் போனவன். 20 வருடங்களாகப் பேச முடியவில்லை. உணவு உண்ண மட்டும்தான் வாய்.

நண்பனே, நாங்கள் வியாதிகளின் விஸ்வரூபங்கள்!

வாழ்க்கையே சூனியமாகிப் போன அந்த நாளை நினைத்தாலே நெஞ்சு நடுங்குகிறது. 1945 ஆகஸ்டு 6 அதிகாலை 2.45 மணிக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள `டினியன்' தீவுத்தளத்திலிருந்து B-29, சூப்பர் ஃபோர்ட்ஸ் போர் விமானம் புறப்பட்ட போது நாங்கள் அறியவில்லை அது எங்கள் விதியை மாற்றப் போகிற விமானம் என்று. அந்த விமானத்துக்குள் இருந்த ஆயுதங்களையெல்லாம் அகற்றிவிட்டு வால்பகுதியில் மட்டும் ஒரு வலிமையான துப்பாக்கி பொருத்தப்பட்டிருந்தது.

தன் தாயின் பெயர் சூட்டப்பட்ட அந்த `எனோலா கே'வை (Enola Gay) ஓட்டி வந்தவன் கமாண்டர் பைலட் பால் டிப்பெட்ஸ் (Col. Paul Tibbets).

இணை விமானி ஒருவனின் முகம் குப்பென்று வியர்த்துக் கொட்டியது. அவனை அறியாமலே அவன் வாய் முணுமுணுத்தது.

`ஓ.... கடவுளே! கீழே இருக்கும் மக்களைக் காப்பாற்றுங்கள்'

விமானத்திற்குள் உலோகக் கவசத்தில் இருந்த `குட்டிப்பையனைக்' கீழே தள்ளினார்கள்.

ஆகஸ்டு 6 காலை 8 மணி 15 நிமிடம் 17 நொடிகள் 1900 அடி உயரத்திலிந்து தள்ளிவிடப்பட்ட அமெரிக்காவின் `குட்டிப்பையன்' ஒரு சக்தி வாய்ந்த அணுகுண்டு! அணுகுண்டுவிற்கு வைக்கிற பெயரைப் பார்த்தாயா நண்பனே....

அதுவரை கண்டிராத வெளிச்சத்தில் கண்கள் குருடாயின. சடசடவென சரிந்தன கட்டிடங்கள். வீடுகளில் ஓடுகள், கற்கள், கண்ணாடிகள், எல்லாம் உருகிவிட்டன. கட்டிடம் கட்டிடமாய்த் தாவிக் கொண்டிருந்தது நெருப்பு. ஒவ்வொரு பச்சை மரமும் தீப்பந்தம் போல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

உடல் தோலோடு கரிந்து ஒட்டிக்கொண்டன. ஆற்றில் விழுந்தவர்கள் ஆற்றோடு போனார்கள். எங்கெங்கும் அழுகைக் குரல்களும் மக்கள் அலறும் சப்தமும் ஓங்கி ஒலித்தன. கடைசியில் அந்த மக்களைக் கடவுளால் கூடக் காப்பாற்ற முடியவில்லை. என்ன தவறு செய்தோம்? ஏன் இந்தத் தண்டனை?

இத்தனைக்கும் பிறகும் உயிர்த் தாகம் அடங்கவில்லை மனிதகுல எதிரிக்கு. அடுத்த மூன்றாம் நாள் நாகசாகியிலும் பெய்தது அணு மழை - இந்த முறை அவர்கள் வைத்த பெயர் `குண்டு மனிதன்'!

காலகாலத்திற்குமான காட்சியகங்களாய், உறைந்து போய்விட்ட ஓலங்களின் சாட்சியமாய் உருக்குலைந்து சாய்ந்த நகரங்களின் கதைகளைப் பேச இயற்கை எங்களை மிச்சம் வைத்திருக்கிறதோ...

2 லட்சத்து 66 ஆயிரம் ஹிபாகுஷாக்கள் வலியின் புத்திரர்கள். வேதனையின் உடன்பிறப்புக்கள். நோயின் இரத்தத்தின் ரத்தங்கள். கோர முகங்களுடனும், உறுப்பில்லாத குழந்தைகளுடனும், புற்றுநோயின் புகலிடமாகவும் போய்விட்ட அவர்கள் செய்த குற்றமென்ன?

ஏகபோக சர்வாதிகாரியுடன் கூட்டு சேர்ந்த எங்கள் மன்னன் ஹிராஹிட்டோ செய்த தான்தோன்றித்தன எதேச்சதிகார மூர்க்கத்தனத்துக்கு அப்பாவி மக்களையா பழி வாங்குவது அமெரிக்க ஏகாதிபத்தியம்?

ஹாரி ட்ரூமனுக்குப் பிறகு எத்தனையோ அதிபர்கள். ஆட்கள் மாறினாலும் நாட்கள் மாறவில்லை. இன்னும் ஆயுதங்களின் தலைவாசலாய் இருக்கிறது அமெரிக்கா!

பேரழிவு ஆயுதங்களின் பிதாமகனாய் இருக்கும் அமெரிக்கா இப்போதுதான் ஈரக்குலை பதறப்பதற ஈராக்கைத் தின்றிருக்கிறது; ஈரானை எட்டிப்பார்க்கிறது. சிரியாவையும் லெபனானையும் சீண்டிப் பார்க்கிறது.

நண்பனே, படையெடுப்பால் ஒரு நாட்டை அழிப்பது பழைய யுக்தி, பழகியே அழிப்பது புதிய யுக்தி.

இராணுவ பங்காளியாய்த்தான் வருவான் அந்த மரணத்தின் உளவாளி.

ஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுதத்தின் புயல் என்றால், `நிமிட்ஸ்' அணு ஆயுதத்தின் பெருமூச்சு! அதிலிருந்த ஏகாதிபத்தியத்தின் ஏவலாள்களான புத்திரர்களும் புத்திரிகளும் சமூகசேவை செய்ததாய் ஊடகங்கள் எல்லாம் ஒரே பேச்சு! ஹிட்லரின் `சின்ன மீசைக்குள் இருந்த சர்வாதிகாரம் போலத்தான் `நிமிட்ஸ்'-க்குள் ஆயுதத்தள வாடங்கள்.

உங்கள் தேசத்தில் 1998 மே 11, 13 தேதிகளில் அகிம்சாமூர்த்தியான புத்தர் `பொக்கரானில்' எப்படிச் சிரித்தார் - அணுகுண்டு சோதனை மூலமாகவா....பொக்காரானில் புத்தர் சிரித்த பதினைந்து நாள்களில் பாகிஸ்தானில் நபிகள் நாயகத்தின் நமட்டுச் சிரிப்பு! ஆளுவோரின் பரஸ்பர வெறியூட்டலின் பதட்டங்கள் இரண்டு நாடுகளின் அப்பாவி மக்களுக்குத் தானே...

உங்கள் நாட்டு விஞ்ஞானி அப்துல்கலாமின் ஆயுதக் கனவு அதிர்ச்சியாய் இருக்கிறது நண்பனே. சர்வதேச விண்வெளிப்படை அமைக்க வேண்டும் என்கிற அவரது விஞ்ஞானக் கனவு எவ்வளவு பெரிய விபரீதம் தெரியுமா?

ஆக்கபூர்வமான விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் விஞ்ஞானக் கனவோ வித்தியாசமானது. அவர் பெர்ட்ரண்டு ரஸ்ஸலுடன் சேர்ந்து அணு ஆயுதத்தினை ஒழித்துக் கட்டி உலகின் மனித நிலத்தை காப்பாற்ற புக்வாஷ் இயக்கம் (Pugwash Movement) அமைத்தார். இதுபோன்ற அமைதி இயக்கங்களின் அருமையை ஒரு ஹிபாகுஷாவினால்தான் அதிகம் உணர முடியும்.

"மூன்றாவது உலகப் போர் நடக்குமானால், அதில் என்னென்ன ஆயுதங்கள் பிரயோகிக்கப்படும் என்று சொல்ல முடியாது; ஆனால் நான்காவது உலகப் போரில் மனிதனுக்குக் கல்லும், எலும்பும் தான் ஆயுதமாக மிஞ்சியிருக்கும்," என்றாராம் மேதை ஐன்ஸ்டீன்.

ஆயுதத்திற்கு எதிராகக் குரல்கொடு என் நண்பா, பூவுலகினைக் காப்பாற்றப் புறப்படு. உங்கள் சுதந்திரத்தின் அறுபதாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள். சுதந்திர தின சூளுரையாக போர் வெறி எதிர்ப்பு முழக்கத்தை எழுப்பு!

உன் பிரியமுள்ள
அகிடோ சடாகி


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com