Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
KeetruAnichaArticle
Anicha Logo
நவம்பர் 2005

பார்ப்பனர்கள் அரங்கேற்றும் ஆரியக்கூத்து

அ. மார்க்ஸ்

1. முன்னுரையாக

‘இது ஒரு ஆழமான ஆராய்ச்சிப் படைப்பு’ என்கிற அறிமுகத்தை அட்டையிலேயே தாங்கிய வண்ணம் ‘தமிழக அந்தணர் வரலாறு’ என்னும் ஒரு நூல் சென்ற ஜனவரி 2004இல் வெளிவந்தது. அக்டோபரில் இரண்டாம் பதிப்பும், ஜூன் 2005இல் மூன்றாம் பதிப்பும் வெளியாகியுள்ளது(1). நூலைத் திறந்தவுடன் இன்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணையிலுள்ள காஞ்சி சங்கராச்சாரிகள் இருவரின் படங்களும் காட்சியளிக்கின்றன. “பிராமணர்கள் இந்தியாவின் பழங்குடி மக்கள் என்பதைப் பல ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டி, சமுதாய மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று கூறும் ‘தமிழக அந்தணர் வரலாறு’ என்ற மாபெரும் நூல் ஸ்ரீமடத்தின் அத்யந்த ப்ரியர் ஸ்ரீ கே.சி. லஷ்மிநாராயணனை பிரதம ஆசிரியராகக் கொண்டு எழுதப்பட்டு வெளியிடப்பட்டு முதற்பதிப்பின் எல்லாப் பிரதிகளும் விற்றுவிட்டன’’ என்று பெருமிதம் கொள்ளும் மூத்த சங்கராச்சாரி இரண்டாம் பதிப்பின் வெளியீட்டாளரை தீர்க்காயுசுடன் வாழ ஆசீர்வதிக்கிறார்.

மூத்த பத்திரிகையாளர் என அறிமுகப்படுத்தப்படும் ஸ்ரீமட அத்யந்த சிஷ்யரான லட்சுமிநாராயணனின் (பிரதம ஆசிரியர்) முன்னுரை மற்றும் அறிமுக உரைகளிலிருந்து நமக்குச் சில தகவல்கள் கிடைக்கின்றன. இந்த வரலாற்றை எழுதுவதற்கென ‘அந்தணர் ஆராய்ச்சி மையம்’ என்று ஒரு அமைப்பு காஞ்சிபுரத்தில் 15-3-2003 அன்று இரு மஹனீயர்களின் முந்நிலையில் தொடங்கப்பட்டது. இம்மையம் உருவாக்கிய ‘ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட’ அந்தணர் வரலாற்று நூல் 23-2-2004 அன்று சென்னையில் நடைபெற்ற ஒரு ‘மாபெரும் விழாவில்’ மேற்படி மஹன்யர்களால் வெளியிடப்பட்டது. ஜெயேந்திரரின் பீடாரோஹணப் பொன்விழா ஆண்டு வெளியீடாக இந்நூலைக் கொண்டு வந்த மேற்படி மையம் 5-8-2004 அன்று கலைக்கப்பட்டது. மையத்தின் பெயரில் வங்கியிலிருந்த ரூ. 3,63,098ம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்நூலை வெளியிடும் பொறுப்பு தியாகராய நகரிலுள்ள எல்.கே.எம். நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நிறைவேற்றப்பட்ட இன்னொரு ‘புராஜெக்ட்’டும் இங்கே குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பிராமண சங்க முயற்சியிலும் ஜெயேந்திர சரஸ்வதியின் ஆசியுடனும் 2001இல் ‘தாம்ப்ராஸ் ஹெரிடேஜ் புராஜக்ட்’ என்று ஒன்று உருவாக்கப்பட்டது. அதிலும் இந்த லட்சுமி நாராயணனே பிரதம ஆசிரியராக இருந்து ‘அருந்தொண்டு ஆற்றிய தமிழக அந்தணர்கள்’ என்ற மாபெரும் நூல்’ உருவாக்கப்பட்டது. நூற்பணி முடிந்தவுடன் ‘புராஜெக்ட்’ கலைக்கப்பட்டு மொத்த நிகர லாபமான ரூ. 11,30,291.40 முதலீடு பிராமணர் சங்கத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

‘புராஜெக்ட்’ உறுப்பினர்கள், கட்டுரை ஆசிரியர்கள் முதலிய விவரங்களை நூலிற்காண்க. நரம்பியல் நிபுணர் (மறைந்த) பி. ராமமூர்த்தி, முன்னாள் காவல் துறை தலைவர் சா. கணபதி ஐ.பி.எஸ்., டாக்டர் பிரமீளா குருமூர்த்தி, தமிழறிஞர் தி.வே. கோபாலையர், சைவசித்தாந்த உரையாளர் சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன், ‘தமிழ் நாடக உலகின் சூப்பர் ஸ்டார்’ எஸ்.வி. சேகர், பாண்டிச்சேரி அரவிந்தாசிரமத்தின் முன்னாள் ஊழியரும் பிரெஞ்சுக்காரருமான மிஷெல் டானினோ எனப் பலர் இந்தப் புராஜக்டில் தொடர்புடையவர்கள்.

‘நான் ஒரு பிராமணன்’ என்கிற தலைப்பில் நடிகர் எஸ்.வி. சேகர் எழுதியுள்ள நூல் முன்னுரையில், “சாது மிரண்டால் காடு கொள்ளாது’’ என்ற பழமொழிக்கேற்ப வைசிய, வீர பிராமணர்களின் தொடர் எதிர்ப்பினால் தமிழகத்தின் பொதுச் சுவற்றிலிருந்து பொது இடங்கள் வரை இ(ரு)ந்த பிராமணத்துவேஷம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது. அது முற்றிலுமாக அழியும் வரை நம் போராட்டம் தொடர வேண்டும் என்பதே நம்முடைய நோக்கமாக இருக்கவேண்டும்.

தங்களுடைய தாழ்வு மனப்பான்மையையும், உழைப்பின்மையையும் சரி செய்து கொள்ள முடியாதவர்களின் அவலமான குற்றச்சாட்டுதான் பிராமணர்களின் ஆதிக்கம் என்ற புலம்பல்.

பிராமண எதிர்ப்பில் முக்கிய பங்கு வகிப்பவை கலைஞர் திரு. கருணாநிதி தலைமை ஏற்று நடத்தும் தி.மு.க.வும் திரு வீரமணி தலைமையில் நடக்கும் திராவிடர் கழகமும்தான்’’ என்கிறார் (பக்.17). வீரமணியையும், கலைஞரையும் இலக்காக நிறுத்துவது கவனிக்கத்தக்கது. “நாம் பிறந்த மதம், ஜாதி இறைவனால் மட்டுமே வழங்கப்பட்டது. அதை நாம் எதிர்ப்பது அல்லது விமர்சிப்பது என்பது நம்மீது நாமே எச்சில் துப்பிக் கொள்வதற்குச் சமம். நாம் ஜாதியைப் பற்றிய விமர்சனங்களை நம் வீட்டில் பூட்டிய அறைக்குள் செய்வோம். நாம் ஜாதிப் பெருமைகளை பகிரங்கமாய் மனப்பூர்வமாய் பொது இடங்களில் உரக்கச் சொல்வோம்’’ என (அதே பக்.) வெளிப்படையாகவே சாதியை இயற்கையானது எனச் சொல்லும் சேகர் பார்ப்பனர்கள் முன் நிற்கும் உடனடிக் கடமைகளாகக் கீழ்க் கண்டவற்றைப் பட்டியலிடுகிறார் (பக். 19, 20):

“இன்று இந்தியாவில் இந்நூல்களில் அதிக எண்ணிக்கை உடைய நாட்டில், இந்துக்களின் கடவுளான இராமரின் கோயில் கட்ட வரும் எதிர்ப்பை நாம் அறிவோம். அந்த எதிர்ப்புக்கு அண்டை நாடுகளிலிருந்து ஆதரவு கிடைக்கின்றது. ஆனால் நம்மில் சிலர் ‘அயோத்தியில் ஏன் வீணாகச் சண்டை? அங்கு ஒரு ஆஸ்பத்திரியோ, பள்ளிக்கூடமோ கட்டலாம்’ என அறியாமல் பேசுகின்றனர். அவர்களையும் நாம் திருத்த வேண்டிய காலகட்டம் இது. இந்தியாவில் பொதுவான சிவில் சட்டமும், பொருளாதார ரீதியாக நலிந்தவர்களைப் பின் தங்கியவர்களாக அறிவூட்டும் சட்டமும் வரும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். இந்தக் கொள்கை உடையவர்களை முழு மனதாக ஆதரிப்போம்.”

இவ்வாறு சேகர் வெளிப்படையாகவே பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்க வேண்டுவது குறித்துப்பேசி விடுவது கவனிக்கத் தக்கது. நூலின் நோக்கம் பலமுறை முன்னுரைகளிலும் கட்டுரைகளிலும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. பார்ப்பனர் குறித்த வெட்டிப் புகழாரங்கள், திரும்பத் திரும்ப ஒரே செய்திகளைப் பேசுதல் என்பதாக அமைந்துள்ள இந்தப் பெரிய எழுத்து நூலில்,

“டாக்டர் ஸ்மித் போன்ற மேனாட்டுச் சரித்திர ஆசிரியர்களும் இஸ்லாமிய பழமைவாதிகளும் கூட்டுச்சேர்ந்து கொண்டு இந்திய சரித்திரத்தை ஒரு தலைப்பட்சமாக எழுதியுள்ளனர். ஆரியர் பெரும்பாலோர் இந்தியா மீது படை எடுத்து வந்து இங்குள்ள திராவிடர்களை வீழ்த்தினார்கள் என்ற கட்டுக்கதையை வரலாறு என்ற பெயரில் ஐரோப்பியச் சரித்திர ஆசிரியர்கள் பரப்பினார்கள். சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிடர் நாகரிகம்; ஆரியரான பிராமணர்கள் அந்த நாகரிகத்தை அழித்துவிட்டார்கள் என்ற கற்பனையைச் சரித்திரம் என்ற பெயரியல் ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்கள் ஆதாரம் எதுவும் இல்லாமலேயே உலவ விட்டார்கள். ‘ஆரியர் நாகரிகம் வேறு, திராவிடர் நாகரிகம் வேறு’ என்று அடிப்படையே இல்லாத கோட்பாட்டையும் அவர்கள் வெளியிட்டார்கள். இந்தியாவை அடிமை நாடாக்கி, காலனி ஆதிக்க வெறியுடன் இங்கு ஆட்சி நடத்திய பிரிட்டிஷார் இந்தக் கட்டுக்கதைகளையும், கற்பனைகளையும், கோட்பாட்டையும் தங்கள் சுயநல நோக்கங்களுக்காகக் கிறிஸ்தவப் பாதிரியார்களின் உடந்தையுடன் திட்டமிட்டுப் பரப்பினார்கள்’’ (பக்.23) என்பன நூலறிமுகமாகக் கூறப்படுகின்றன.

‘மேனாட்டுச் சரித்திர ஆசிரியர்கள், முஸ்லிம் பழமைவாதிகள், கிறிஸ்தவப் பாதிரிமார்கள்’ (ஏனோ தெரியவில்லை, இந்தப்பட்டியலில் வழக்கமாக இடம்பெறும் மார்க்ஸிஸ்ட் வரலாற்றாசிரியர்கள் விடப்பட்டுள்ளனர் - அ. மா.) ஆகியோரால் முன்வைக்கப்பட்ட இந்த ‘ஆரியப் படைஎடுப்பு’க் கோட்பாட்டின் தீய விளைவுகளாக 1. பிராமணத் துவேஷம் 2. சமஸ்கிருத வெறுப்பு 3. (திராவிட நாடு) பிரிவினை இயக்கம் ஆகியன இங்கு உருவாயின என்பது இந்நூல் முன்வைக்கும் கருத்து (பக்.24). அண்ணாவின் ‘ஆரியமாயை’ முரசொலி மாறனின் ‘ஏன்வேண்டும் இன்பத் திராவிடம்?’ என்னும் நூற்கள், தி.மு.கழகத்தின் விழுப்புரம் மாநாட்டில் (ஜூலை 2003) பேசப்பட்ட பார்ப்பன எதிர்ப்புக் கருத்துக்கள் முதலியவை ஆதாரங்களாகச் சுட்டிக் காட்டப்படுகின்றன.

நூலிலுள்ள பிற கட்டுரைகளின் ஊடாகச் சொல்லப்படுகிற “ஆராய்ச்சி முடிவுகளை’’க் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்.

1. ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து இங்கே குடி பெயர்ந்தவர்களல்ல. அவர்கள் இந்தியாவின் பூர்வ குடிமக்கள்.

2. ரிக்வேத காலத்திற்கு முந்திய தனித்துவமுடைய சிந்துவெளி நாகரிகம் என ஏதும் கிடையாது. சிந்து வெளி நாகரீகமே ரிக் வேத நாகரீகம். இதனைச் சிந்து சரஸ்வதி நாகரீகம் என அழைக்க வேண்டும்.

இக்கருத்துக்களுக்கு ஆதாரமாகச் சமீபத்திய பல கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளன என இந்நூல் முழுக்கவும் உரத்த குரலில் முழங்கப்படுகிறது. எஸ்.கல்யாணராமன், ஸ்ரீ காந்த் தலகரி, என்.எஸ். ராஜாராம், டேவிட் ப்ராலி, மிஷேல்டானிடோ முதலான பல ‘புதிய ஆராய்ச்சியாளர்கள்’ இந்தக் கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளதாக முன்நிறுத்தப்படுகின்றனர். இந்த வரிசையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களையும் கூசாமல் இணைத்துக் கொள்கின்றனர். வெறித்தனமாக இக்கருத்துக்களை ஆதரித்துக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ள சேக்கிழார் அடிப்பொடி முது முனைவர் டி.என்.ராமச்சந்திரன்(2), ‘புதிய கண்டு பிடிப்பாளர்கள்’ பற்றிக் கூறுவன:

“நவரத்ன ராஜாராம்: இவர் பென்னம் பெரிய ஆய்வாளர். இவர்கள் வரைந்த நூற்கள் நாம் பெற்றுள்ள பொக்கிஷங்கள்.

டேவிட் ஃப்ராலி: வேதங்களை உணர ஆறு அங்கங்களில் தேர்ச்சி பெற வேண்டும் என உணர்ந்த அமெரிக்கரான டேவிட் ஃப்ராலி இவற்றைப் பயின்று உண்மைகளை எடுத்துச் சொல்லி வருகிறார். இவரை வாமதேவ சாஸ்திரி என வேதம் அறிந்தோர் போற்றுகின்றனர்.

கோயன்ராட் எல்ஸ்ட்: பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒரு பெரிய மேதை. இந்திய சமுதாயத்திற்கும் நாகரிகத்திற்கும் கலாச்சாரத்திற்கும் ஊறு விளைப்போரின் தோலை உரித்து வருபவர் இவர்.

ஸ்ரீகாந்த் தலகரி: வேதங்களை எழுத்தெண்ணிப் பயின்றவர். ஆரிய படைஎடுப்பு என்ற கட்டுக்கதையைத் தூள் தூளாக்கியவர் (பக். 658, 659)

மேற்குறித்த ‘பென்னம் பெரிய’ அறிஞர்கள் குறித்தும் அவர்களின் ‘ஆய்வு’ முறைகள் குறித்தும் பின்னர் விரிவாய்ப் பார்ப்போம். ஒன்றை மட்டும் இங்கே சொல்லத் தோன்றுகிறது. இவர்களில் யாரும், அல்லது அவர்கள் பெரும்பான்மையோர் வரலாற்றுத் துறை சார்ந்த அறிஞர்கள் அல்லர். நிலவுகிற கருத்திற்கு மாற்றாக ஒரு புதிய கருத்தை வைக்க இயலாது என நான் கூற வரவில்லை. தர்மானந்த கொசாம்பி, வையாபுரிப்பிள்ளை போன்றோர் தமது சொந்தக் கல்வித்துறைகளைத் தாண்டித் தடம் பதித்தவர்களில் இருவர். இவர்களது கருத்துக்கள் இன்று ஆய்வுலகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

துறை சாராதவர்கள் ஒரு புதிய கருத்தைச் சொல்ல முனையும்போது அத்துறை குறித்த நுட்பங்களிலும், திறன்களிலும் தம்மைத் தேர்ந்தவர்களாக்கிக் கொள்ளவேண்டும். தமது வாதங்களை உரிய ஆதாரங்களுடன் முன் வைக்க வேண்டும். சக துறைகளில் நிறுவப்பட்ட முடிவுகளுடன் அவை ஒப்பிட்டுச் சோதித்துப் பார்க்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக வேத இலக்கியங்களிலிருந்து ஒரு புதிய முடிவைச் சொல்வதானால் அது ஏதேனும் அகழ்வாய்வுகள் சாத்தியமாயின் அவற்றுடன் ஒத்துப் போகவேண்டும். தவிரவும் வேத இலக்கியங்கள் என்பன ஏதோ வரலாற்றைப் பிற்காலத்தவர்களுக்குச் சொல்வதற்காக எழுதப்பட்டவை அன்று. ரொம்பவும் கவித்துவமாகவும், உருவகத் தன்மையுடனும், இயல் கடந்த நிலையிலும் புராதன மொழியிலும் எழுதப்பட்டது ரிக் வேதம். அதிலிருந்து எதையேனும் நாம் சொல்ல வேண்டுமெனில் மிகுந்த உணர்வு நுட்பத்துடன் அதை நாம் வாசிக்க வேண்டும். வரலாற்றறிஞர் நொபோரு கராஷிமா சொல்வதுபோல சரித்திர ஆதாரங்களின் “முணுமுணுப்பை’’க் கேட்கத்தக்கவையாக நமது புலன்கள் அமைய வேண்டும்.

புதிய மாற்றுக் கருத்துக்களை ஆய்வுலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றேன். ஏற்றுக்கொள்ளப்பட்ட துறைசார்ந்த வல்லுனர் குழுமத்தையே நான் இங்கு ‘ஆய்வுலகம்’ என்கிறேன். இந்த ஆய்வுலகம் தவறுகளுக்கு அப்பாற்பட்டது என்பதல்ல. புதிய கருத்துக்களை அது உடனடியாக ஏற்றுக் கொண்டு விடும் எனவும் நான் கூறவரவில்லை. ஆனால் ஆய்வுலகத்தின் முன் நமது கருத்துக்களை வைத்து அதன் விமர்சனத்திற்கும், செழுமைப்படுத்துதலுக்கும் ஆட்படுத்துதல் தவிர புதிய கருத்தைச் சோதித்து அறிய நமக்கு வேறு சிறந்த வழியும் ஏதுமில்லை. அடிப்படை ஆய்வு முறையிலே தவறு எனவும், குறிப்பான அரசியல் நோக்கங்களுக்காக நேர்மையற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் ஒட்டு மொத்த ஆய்வுலகமும் ஒன்றை நிராகரிக்கும்போது அந்தப் புதிய ‘முடிவை’ நாம் ஏற்க இயலாது.

கலிலியோவை மரண தண்டனைக்குள்ளாக்கிய காலமல்ல இது. கருத்துச் சுதந்திரமுண்டு. யார் வேண்டுமானாலும் எதையும் சொல்லாம். ஆரியப் பிரச்சியினை குறித்த நூலொன்றைத் தொகுத்துள்ள தாமஸ் டிராட்மன்(3) சொல்வதுபோல தாஜ்மகாலைக் கட்டியது வேத ரிஷிகள்தான் எனக் கூறிச் செல்லலாம். பூமி தட்டையானது என்றும், சந்திரன் என்பது ஒரு பச்சை வெண்ணை உருண்டைதான் எனவும் கூறமுடியும். ஆனால் அதைக் கூறுகிறவர்கள் தமது கூற்றுக்களை உரிய ஆதாரங்களுடன் ஆய்வுலகின் முன் நிறுத்தியாக வேண்டும்.

ஆரியப் பிரச்சினை மிகவும் சிக்கலானது. நான்கு துறைகளில் நுண் திறமைகள் வளர்த்துக் கொண்டுள்ளவர்கள் இதனை அணுக முடியும் என்கிறார் ரொமிலா தபார். அவை:

1. அகழ்வாய்வு: தோண்டி எடுத்த ஏதோ ஒரு பொருளைக் காப்பு, ஆகா இது ரிக் வேதத்திலும் சொல்லப்பட்டுள்ளது எனச் சொல்கிற வேலையல்ல இது. அக்கால மொத்தச் சமூகத்தின் செயல்பாடுகளுடன் இப்பொருள் எவ்வாறு பிரிக்க இயலாமல் பொருந்திப் போகிறது என நாம் சொல்லியாக வேண்டும்.

2. மொழியியல்: வேதப் பிரதிகளிலிருந்து வரலாற்றுண்மைகளை அறிய சமஸ்கிருதப் புலமை மட்டும் போதாது. கடந்த 30 ஆண்டுகளில் மொழியியல் பெரிதும் வளர்ந்துள்ளது. பல்வேறு மொழிகளின் அமைப்புகளிடையே ஒப்பியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு மொழியிலுள்ள ஒரு சொல்லை மட்டும் எடுத்துக்கொண்டு அது இன்னொரு மொழியிலும் உள்ளது என்கிற அடிப்படையில் ஒரு முடிவை நாம் அடைந்துவிட இயலாது. முழு மொழி அமைப்பு குறித்த அறிவும் நமக்குத் தேவை. அதன் இலக்கணம், ஒலிப்பியல், சொல்லமைப்பியல் முதலியவை குறித்த புலமைகளுடன் பிரதிகளை அணுகவேண்டும். அவ்வாறு அணுகும் போது கலாச்சாரப் பின்புலத்தில் அதற்கு விளக்க மளிப்பது அவசியம். ரொமிலா ஒரு எடுத்துக்காட்டு குறிப்பிடுவார்: ‘கிருஷ்ண த்வக்’ என்கிற ரிக் வேதச் சொல்லைக் ‘கருப்புத் தோல்’ என மொழியாக்குவது போதாது. முழு கலாச்சாரச் சூழலின் வெளிச்சத்திலே அதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

3. வரலாற்றுச் சூழல்: நாடோடி / மேய்ச்சல் இன / விவசாய / நகர்சார்ந்த நாகரிகங்களின் உள் கூறுகள், சுற்றுப்புறம், பொருளாதாரம், வணிகம், கலாச்சாரம், மதச் சடங்குகள் முதலான அம்சங்களுடன் இதனை நாம் கவனம் கொள்ள வேண்டும்.

4. சமூக மானுடவியல்: இது ஏதோ மூக்கு, நெற்றி, கபால அளவுகளை அளக்கிற வேலையல்ல. சமூகம் எவ்வாறு செயல்பட்டது, புவியியல் அம்சங்கள் முதலானவற்றுடன் அது எத்தகைய உறவு கொண்டிருந்தது என்கிற கவனம் ஆய்வாளர்களுக்கு தேவை. இன்னும் வாழும் பழஞ் சமூகங்கள் குறித்த அறிதலையும் இது உள்ளடக்குகிறது.

இவை அனைத்தும் ஏதோ படிப்பவர்களை மிரட்டுவதற்காகச் சொல்லப்பட்டவை அல்ல. பிரச்சினை நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல எளிதான தல்ல என்பதே இங்கு முக்கியம். உடனடி அரசியல் நோக்கங்களுக்காக இத்தகைய நுண் திறன்களின்றி, ஆர்ப்பாட்டமான கூச்சல்கள் மூலமாகவே தமக்கு வேண்டிய “உண்மைகளை’’ நிறுவும் முயற்சிகளை நாம் கண்டறியும் போது நாம் இவற்றைக் கருத்தில் கொண்டாக வேண்டியுள்ளது.

2. ஆரியப் பிரச்சினை (Aryan Debate):

‘History’ என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு இரண்டு பொருள்கள் உண்டு. வரலாற்றை மட்டுமின்றி வரலாறாக எழுதப்பட்டதையும் History என்றே கூறு கிறோம். குழப்பம் ஏற்பட்டு விடவேண்டாம் என்பதற்காகவே பின்னதைக் குறிக்க Histriography (வரலாறு எழுதியல்) என்கிற சொல்லும் பயன்படுத்தப் படுகிறது. ஒரு குறிப்பிட்ட வரலாறு மட்டுமின்றி அவ்வரலாறுக்கு ஆதாரமாகக் கிடைத்தவற்றை வெவ்வேறு குழுவினர் எவ்வாறு பயன்படுத்தினர், ஏற்கனவே இருந்த முடிவுகளில் இப்புதிய பார்வைகள் என்னென்ன மாதிரித் தாக்கங்களை ஏற்படுத்தின, ஒரு குறிப்பான பார்வையை முன் வைத்தவர்களே பின்னாளில் என்ன மாதிரி எல்லாம் தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொண்டார்கள் என்பன போன்ற விசயங்கள் சில சந்தர்ப்பங்களில் வரலாற்றைக் காட்டிலும் சுவையானதாகவும், முக்கியமானதாகவும் ஆகிவிடுகின்றன. இதற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக ஆரியப் பிரச்சினை அமைகிறது.

கிடைக்கிற புதிய ஆதாரங்களின் அடிப்படையில் வரலாற்றைக் கட்டமைப்பவர்களையும் அவர்களது பார்வைகளையும் பகுப்பாய்வு செய்வதற்கு அவர்களின் சமூக / வரலாற்று (Socio - Political Locations) அரசியல் பின்னணிகளை நுனித்தறிவது முக்கியம். ஆனால் ஒன்றை நாம் மறந்துவிடலாகாது. விளக்கமளிப்பவர்களின் சமூக வரலாற்று அமைவைச் சொல்வது என்பதே அவர்களின் கருத்துக்கள் சரியா? தவறா என்கிற தீர்ப்பை அளிப்பதாக அமைந்துவிடக்கூடாது. ஆரியப் பிரச்சினையைப் பொருத்தமட்டில் விளக்கமளிப்பவர்களை ‘இந்துத்துவாதிகள்’ அல்லது ‘மார்க்சிய வரலாற்றாசிரியர்கள்’ என இனம் காண்பது அவர்களின் நோக்கங்களைப் புரிந்து கொள்ளப் பயன்படுமேயொழிய அதுவே அவர்களின் கருத்தை மறுப்பதற்கான அளவுகோலாகி விடக்கூடாது. ஆரிய விவாதத்தில் இன்று உரக்கக் கூச்சலிட்டு விளக்கமளித்துக் கொண்டிருக்கும் இந்துத்துவப் பார்ப்பன சக்திகளைப் பொருத்த மட்டில் மார்க்சியர்கள் / போலி மதச்சார்பற்ற ஆரியர்கள் / இஸ்லாமியச் சார்பானவர்கள் / கிறிஸ்தவப் பாதிரிகள் என்கிற அடையாளச் சுட்டுகள் அனைத்தும் அவர்களின் கருத்துக்களின் மீதான தீர்ப்புகளாகவே முன் வைக்கப்படுகின்றன. ஆனால் இவர்களின் வாதங்களில் உள்ள வலுவின்மையையும், நேர்மையின்மையையும் சுட்டிக் காட்டுகிற கல்வி சார்ந்த வரலாற்றறிஞர்கள் (எ.டு: ரொமிலா தப்பார், தாமஸ் ஆர். ட்ராட்மான், ஸ்டீவ் பெர்மர், மிஷேல் விட்ஸல், அய்ராவதம் மகாதேவன் முதலியவர்கள்) அனைவரும் தத்தம் துறை சார்ந்த நுண் திறன்களைப் பயன்படுத்தி அவர்களில் விளக்கங்களை மதிப்பீடு செய்வதை இப்பிரச்சனைக்குள் நுழையும் யாரொருவரும் இனங்காண இயலும்.

இந்திய வரலாறு குறித்து 200 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய கருத்துக்கள் என்பன பெரும்பாலும் இராமயண, மகாபாரத இதிகாசங்களில் நினைவு கூறப்பட்ட வம்ச பாரம்பரியங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. இந்தப் பார்வையில் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை உலகெங்கிலுமுள்ள இந்தியவியலாளர்களுக்கு ஏற்படுத்தும் வண்ணமாய் மூன்று முக்கிய வரலாற்றுக் கண்டுபிடிப்புகள் அமைந்தன. இவை இந்திய வரலாற்றில் மட்டுமின்றி உலக அளவிலும் பல புதிய முடிவுகள் உருவாவதற்கும் காரணமாயின. மொழியியல் மற்றும் அகழ்வாய்வு அடிப்படையில் உருவான இக்கண்டுபிடிப்புகள் குறித்து முதல் முன்னோடிகள் முன்வைத்த கருத்துக்கள் அவற்றுக்குப் பிந்தைய கண்டுபிடிப்புகள், விமர்சனங்கள் ஆகியவற்றின் மூலம் மேலும் செழுமை அடைந்துள்ள போதிலும் அவற்றின் அடிப்படைக்கூறுகளில் பெரிய மாற்றங்கள் எதையும் துறைசார்ந்த வல்லுனர்கள் இன்றளவும் முன்மொழியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றுச் சமூகத்தின் விமர்சனங்களைத் தாங்கி நிலை பெற்றுவிட்ட இக்கண்டுபிடிப்புகளாவன:

1. இந்தோ - ஈரோப்பிய மொழிக் குடும்பம் குறித்த கண்டுபிடிப்பு (1786)
2. திராவிட மொழிக் குடும்பம் குறித்த கண்டுபிடிப்பு (1816)
3. சிந்து வெளி நாகரிகம் குறித்த கண்டுபிடிப்பு (1924)

ஆரிய விவாதம் குறித்த முக்கிய ஆவணங்களை மிகச் சமீபமாகத் (2005) தொகுத்துள்ள ட்ராட்மன், “இம்மூன்று கண்டுபிடிப்புகளும் வெளிச்சத்திற்கு வரக்கூடிய புதிய செய்திகளின் அடிப்படையிலான உட்பட்டவைதான் என்ற போதிலும் இவை தவறு என நிரூபிக்கப்படும் எனக் கருதுவதற்கான எந்தக் காரணமும் நமது பார்வைக்கு எட்டிய தொலைவில் தெரியவில்லை. இன்றைய நிலையில், ஆரிய விவாதத்தினூடாக இக்கண்டுபிடிப்புகளில் ஏதொன்றையும் மறுத்து வைக்கப்படும் எந்த ஒரு வாதமும் உலகெங்கிலுமுள்ள வரலாற்றுச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பில்லை. இத்தகைய வாதங்கள் உண்மையாக இருக்கக்கூடிய வாய்ப்புகளை நாம் இல்லை எனச் சொல்லி விட இயலாது என்றபோதிலும் அவை உண்மையாக இல்லாமற் போவதற்கான சாத்தியங்களே மிகமிக அதிகமாக உள்ளன.’’ என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.(5)

இனி இக்கண்டுபிடிப்புகள் குறித்துச் சில:

இந்தோ - அய்ரோப்பிய மொழிக் குடும்பம்: புகழ்பெற்ற ஆசியக் கழகத்தை தோற்றுவித்து அதன் தலைவராகவும் இருந்த சர் வில்லியம் ஜோன்ஸ் 1786இல் கல்கத்தா நகரில் வழங்கிய ஒரு உரையிலேயே இக்கருத்து முதன் முதலாக வெளிப்பாடு கண்டது. சமஸ்கிருதம், லத்தீன், கிரேக்கம், கோதிக் (ஜெர்மனிய மொழிகளின் மூதாதை), செல்டிக் (ஐரிஷ் மற்றும் வெல்ஷ் மொழிகளின் மூதாதை), பழம்பெர்சியன் என்னும் ஆறு பழைய மொழிகளும் ஒரே பொதுவான மூல மொழியிலிருந்து கிளர்ந்தவையே என்று கூறுவதற்கு ஏற்ப ஒன்றையன்று ஒத்துள்ளன என்று கூறிய ஜோன்ஸ், ‘இம் மூலமொழி ஒருவேளை இப்போது இன்று இல்லாது அழிந்து பட்டிருக்கலாம்’ என்றும் கூறினார். இன்று இல்லாமற்போன இம் மூலமொழி “இந்தோ - அய்ரோப்பிய மொழி’’ எனக் கூறப்படுகிறது. இதன் ஆறு வம்சாவளிக் கிளைகளை அவர் கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டார்:

1. வட இந்தியாவிலும் சிரீலங்காவிலும் பயிலப்படுகிற இந்தோ - ஆரிய மொழிகள் (சமஸ்கிருதத்திலிருந்து உருவானவை).
2. பார்சி முதலான இரானிய மொழிகள் (பழம் பெர்சியனிவிலிருந்து உருவானவை).
3. ப்ரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலி போன்ற ரொமான்ஸ் மொழிகள் (லத்தீனிலிருந்து உருவானவை).
4. கிரேக்க அல்லது ஹெல்லனிக் மொழிகள் (பழம் கிரேக்கத்திலிருந்து உருவானவை).
5. ஆங்கிலம், டட்ச், ஜெர்மன் முதலான ஜெர்மானிய மொழிகள் (கோதிக் மொழியிலிருந்து உருவானவை).
6. ஐரிஷ், வெல்ஷ் முதலிய செல்டிக் மொழிகள் (புராதன செல்டிக்கிலிருந்து உருவானவை).

முதல் கண்டுபிடிப்புகளுக்கே உரித்தான குறைபாடுகள் ஜோன்ஸின் கூற்றிலும் இருக்கவே செய்தன. ருசியன் மற்றும் அல்பேனியன், ஆர்மினியன் முதலான பால்டிக் மற்றும் ஸ்லாவோனிக் மொழிகள் ஜோன்ஸின் பட்டியலில் இடம் பெறாதுபோன போதிலும் அவரது பட்டியல் அந்தளவிற்குச் சரியானதாகவே இருந்தது. இந்த ஆறு கிளைகளுக்கும் பொதுவான புராதன மொழியை இன்று இந்தோ - அய்ரோப்பிய மொழி என மொழியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இம்மொழியில் எழுதப்பட்ட பிரதிகளாக இன்று நமக்கு எதுவும் எஞ்சவில்லை. இந்த வம்சக் கிளைகளின் இன்னும் உயிர்வாழும் மொழிகளின் பொதுக்கூறுகளிலிருந்து கற்பிதம் செய்யப்பட்டதே இது.

ஒரு பொதுவான வம்சாவளியினடியாக இந்த ஆறு பழமொழிகளின் சொற்களஞ்சியங்களையும், இலக்கியங்களையும் ஒப்பிட்டு (ஜோன்ஸ் அளித்த விளக்கம் ஒரு வகையில் இந்தியச் சூழலில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒன்றாக இருந்தது. இறைவனால் படைக்கப்பட்ட, ஆதி அந்தம் இல்லாத தேவபாஷையாகக் கருதப்பட்ட சமஸ்கிருதத்தைப் பிற மொழிகளைப் போலவே ஒரு குறிப்பான வரலாற்றுச் சூழலில் நிறுத்தியது ஜோன்ஸின் கோட்பாடு. தவிரவும் சமஸ்கிருதத்தை அவர் பிற நான்கு புராதன மொழிகளின் சகோதர மொழியாகத்தான் நிறுத்தினாரேயழிய மற்றவற்றின் தாய்மொழியாகக் கூறவில்லை. புரட்சிகரமான இச்சிந்தனை இந்திய வரலாற்றை எதிர்பாராத வகையில் இந்தியாவிற்கு மேற்கே உள்ள நாடுகளின் வரலாற்றுடன் இணைத்துக் காட்டியது. பின்னாளில் உருவான மதங்களாலும், மொழிகளாலும், எல்லைக்கோடுகளாலும் பிரிக்கப்பட்ட இந்தியா, ஈரான், அய்ரோப்பா ஆகியவற்றுக்கிடையேயான இந்த ஆதித்தொடர்பு இந்தியர்களும், ஈரானியர்களும், அய்ரோப்பியர்களும் தத்தம் வரலாறு பற்றிக்கொண்டிருந்த நம்பிக்கைகளில் பெரும் சிதைவுகளை ஏற்படுத்தியது.

‘வரலாற்று மொழியியல்’ (Historical Linguistics) என இன்று பெரிய அளவில் வளர்ந்துள்ள ஆய்வுத்துறையின் மூல ஊற்றாக ஜோன்ஸ் முன்வைத்த பிரதி அடிப்படையிலான ஒப்பீட்டு மொழியியல் அமைந்தது. இதன் பின்பே 1816இல் ப்ரான்ஸ் பாப் இந்தோ அய்ரோப்பிய மொழிகளுக்கான ஒப்பீட்டு இலக்கணம் பற்றிய சிந்தனைகளை வெளியிட்டார். இந்தோ-அய்ரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் ஒன்றிலிருந்து ஒன்று தனியே சேர்ந்தபோது ஏற்பட்ட ஒலியியல் மாற்றங்களில் உள்ள பொதுமைகளை ஜேகப் கிரீம் முன் வைத்தார். இன்று வரை வந்துள்ள மொழியியலார்களின் பாரம்பரியம் அடுத்தடுத்து ஜோன்ஸின் கருத்திற்கு வலுசேர்ந்தனவே அன்றி அதைப் பலவீனப்படுத்தவில்லை.

திராவிட மொழிக் குடும்பம்: இக்கண்டுபிடிப்பிற்காக இன்று இந்துத்துவவாதிகளால் திட்டித் தீர்க்கப்படும் பிஷப் ராபர்ட் கால்டுவெல் 1856ம் ஆண்டு தனது ‘திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்றும் நூலை வெளியிடுவதற்கும் சுமார் 40 ஆண்டுகள் முன்னதாகவே இக்கருத்தை மிகச் சிறந்த முறையில் ஆய்வு பூர்வமாக முன் வைத்தவர் அன்றைய சென்னை ஆட்சியாளராக இருந்த ப்ரான்ஸிஸ் ஒயிட் எல்லிஸ் ஆவார். இளம் ஆங்கில அதிகாரிகளுக்குத் தென்னிந்திய மொழிகளைப் பயிற்றுவிப்பதற்கென அன்று உருவாகியிருந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியில் தெலுங்கு மொழி கற்பிப்பதற்கென ஏ.டி.காம்ப்பெல் எழுதியிருந்த ஒரு நூலின் முன்னுரைக் குறிப்பாக எல்லிஸின் கருத்துக்கள் முதல் முதலில் (1816) பதிவாயின. தெலுங்கு மொழியின் வேர்ப்பட்டியலை (தட்டுமாலா) பிற மொழிகளின் வேர்ப்பட்டியல்களுடன் ஒப்பிட்டு சமஸ்கிருதத்திற்கும் அதற்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதை எல்லிஸ் திருப்திகரமாக நிறுவினார். பின் அவர் தெலுங்கு மொழி வேர்களை கன்னட, தமிழ் மொழி வேர்களுடன் ஒப்பிட்டு அவற்றுக்கிடையேயான ஒப்புமையைக் சுட்டிக்காட்டினார்.

மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்த மமாஷ வெங்கையா என்பவர் அப்போது தொகுத்திருந்த தெலுங்கு இலக்கண நூல் எல்லிசுக்குப் பெரிதும் உதவியது. வியாகரணப் பகுப்பாய்வின் அடிப்படையில் சமஸ்கிருத வேர்களுடன் பொருந்திப் போகும் சொற்களை வெங்கையா அடையாளம் காட்டியிருந்தார். சமஸ்கிருதத்தை ஒத்தவை (தட்சமா), சமஸ்கிருதத்தைப் போலிருப்பவை (தத்பவா), சமஸ்கிருதத்துடன் தொடர்பற்ற ஒற்றுச் சொற்கள் (தேஷ்யா), கிராம்யா என்றெல்லாம் அவர் சொற்களைப் பகுத்துப் பட்டியிலிட்டிருப்பதார் ‘தூய தெலுங்கு’ (தேஷ்ய) சொற்கள் மூலத் தோற்றத்தில் ஒத்தமொழிகளான கன்னடம் மற்றும் தமிழுடன் பொருந்திப் போவதைச் சுட்டிக் காட்டியதோடு அவர் நில்லாமல் திராவிட மொழிக் குடும்பத்தின் பரப்பை மலையாளம், துளு (மங்களூர்), குடகு (கூர்க் பகுதி) மற்றும் வடக்கே கங்கை வெளியில் பேசப்படும் ராஜ்மஹல் / மால்டோ வரை சரியாகவே விரிவாக்கினார். இந்தோ - ஆரியக் குடும்பத்தைச் சேர்ந்ததாயினும் சிங்களம், மலையாளம், ஒரியா முதலிய மொழிகள் தென்னிந்திய மொழிக் குடும்பத்திலிருந்து பல சொற்களைப் பெற்றுக் கொண்டுள்ளதையும் எல்லிஸ் சுட்டிகாட்டினார்.

எல்லிஸின் கண்டுபிடிப்பு இன்னொரு வகையிலும் புரட்சிகரமானதாக அமைந்தது. தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியதே என்று அன்று ஒரு சாரர் மத்தியில் நிலவிய கருத்திற்கு அது சாவுமணி அடித்தது. எல்லிஸின் கட்டுரையே இப்படித்தான் ஆரம்பித்தது: தனது சமஸ்கிருத இலக்கண நூலுக்கு டாக்டர் செரீ எழுதிய முன்னுரையை மேற்கோள்காட்டிய எல்லீஸ் ஹிந்துஸ்தானி, தமிழ், மலையாளம், வங்கமொழி, ஒரியா, கன்னடம், தெலுங்கு இவையாவும் சமஸ்கிருதத்திலிருந்தே தோன்றின என்கிற அவரது கருத்தைச் சுட்டிக்காட்டி பின் அக்கருத்தை ஆதார பூர்வமாக மறுப்பார்.(6)

தென்னிந்திய மொழிகளுக்கிடையேயான இந்த ஒப்புமையையும் அவை சமஸ்கிருத அமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்த தன்மையையும் நிறுவிய இந்த முக்கிய கண்டுபிடிப்பில் எல்லிசுடன் இரு இந்தியப் பண்டிதர்களும் பங்கு பெறுகின்றனர். ஒருவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியில் பணியாற்றிய பட்டாபிராம சாஸ்திரி. மற்றவர் சென்னை ஆட்சியகத்தில் எல்லிசின் கீழ் பணிபுரிந்த சங்கரையா (எ) சங்கர சாஸ்திரி.

மொழியியல் அடிப்படையிலான இக் கண்டுபிடிப்பும் இன்றளவும் உலக அளவிலான மொழியியல் வல்லுனர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவும் கால ஒட்டத்தையும், விமர்சனக் கருத்துக்களையும் வென்று நிற்பதாகவுமே உள்ளது. இதன் மூலம் இந்திய வரலாறு குறித்த புரிதல் பெரிய அளவில் புதிய விமர்சனங்களுக்குக் காரணமாகியது. சமஸ்கிருதத்துடன் அடையாளம் காணப்பட்ட பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் உருவாகவும் இது வழி வகுத்தது. இரண்டாவதாக இந்தியக் கலாச்சாரத்தின் ஒற்றைத்தன்மை மறுக்கப்பட்டு பல்வேறு மொழிக் குழுமங்களின் கலாச்சாரங்கள் உருகி இணைந்து உருவான அதன் தன்மை உலகிற்கு வெளிச்சமானது.

இன்னொன்றையும் இங்கு சொல்வது முக்கியம். திராவிட மற்றும் இந்தோ-அய்ரோப்பிய மொழிக் குடும்பங்களின் கண்டுபிடிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட ஆய்வு முறை உலகில் பிற பகுதிகளுக்கும் வெற்றிகரமாக விரிவாக்கம் செய்யப்பட்டது.(8) ஆப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலுமுள்ள எழுத்தறியாத மக்களின் வரலாறுகளைப் புரிந்துகொள்ள இது உதவியது. ட்ராட்மன் சொல்வது போல் இந்தோ-அய்ரோப்பிய மொழிக் குடும்பம் அல்லது திராவிட மொழிக் குடும்பத்தின் கண்டுபிடிப்பை மறுப்பதென்பது ‘வரலாற்று மொழியியல்’ என்கிற பெயரில் வளர்ந்துள்ள ஒரு ஆய்வுத் துறையையே மறுப்பதாகிறது. மாற்றுக் கருத்துக்களை முன்வைப்போர் இந்த வெற்றிகள் அனைத்தையும் தகுந்த ஆதாரங்களுடன் மறுக்க வேண்டிய சுமையைச் சுமக்க வேண்டியவர்களாகின்றனர்.

இந்த ஆய்வுகள் இந்தியாவிலேயே தோன்றியதெனினும் இதனைச் செய்தவர்கள் அய்ரோப்பியர்கள் மட்டுமே அல்லர். அய்ரோப்பியர்களும் இந்தியர்களும் இணைந்து, அய்ரோப்பிய ஆய்வு முறையும் இந்திய ஆய்வு முறையும் கலந்து உருவானதே இந்த மொழியியற் கண்டுபிடிப்புகள். சர் வில்லியம் ஜோன்சும் இன்னொரு கிழக்கிந்தியக் கம்பெனி ஊழியருமான வில்லியம் மாஸ்டெனும் இணைந்து மேற்படி ஆய்வுமுறைகளைப் பயன்படுத்தி அய்ரோப்பிய ஜிப்ஸிகளின் ரொமானி மொழியும் கூட இந்தோ-அய்ரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததே என நிறுவினர் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. இந்த ஜிப்ஸிகள் இந்தியாவிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம் பெயர்ந்தவர்களாக இருக்கக் கூடும். ஆப்ரிக்கக் கரையைத் தாண்டியுள்ள மடகாஸ்கரையும், இந்தோனேசியாவையும் தூர பசிபிக்கிலுள்ள ஹவாயையும் இணைக்கிற மலேயோ பாலினேசிய மொழிக் குடும்பத்தை முதன் முதலில் அடையாளம் காட்டியவரும் கூட மாரிஸ்டன்தான்.

தங்களின் புராதனத் தொடர்புகள் பற்றிய வரலாற்று நினைவுகளை மறந்துபோன மக்கள் குழுமங்களுக்கிடையே இருந்த வரலாற்றுத் தொடர்புகளை இத்தகைய மொழியியல் ஆய்வுகள் வெளிப்படுத்தின. ஆரியர்களின் பிரதிகளில் (வேதங்களில்) இந்தோ ஈரோப்பியத் தொடர்புகள் குறித்த நினைவுகளின் பதிவுகள் இல்லை என்பது ஆரியக் குடியேற்றத்தை மறுப்பவர்கள் முன் வைக்கும் வாதங்களில் ஒன்று. ரொமானி மொழியினர், மலேயோ பாலினேசிய மொழியினர் ஆகியோர் நினைவிலிருந்து அழிந்த வரலாற்று உறவுகளை இத்தகைய மொழியியல் ஆய்வுகளே வெளிக்கொணர்ந்தன என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். இந்த வகையில் நினைவால் இயலாததை மொழியியல் சாதித்துள்ளது.

இந்த இரு மொழிக்குடும்பங்களின் கண்டுபிடிப்பு என்பது ஏதோ மொழிகளுக்கிடையே உள்ள சில ஒற்றுமைகளைக் கண்டறிந்து சொல்கிற வேலையன்று. இந்திய மொழிகள் அனைத்தும் தமக்கிடையே சொற்களை மட்டுமின்றி, இலக்கணக் கூறுகளையும் கூட பரஸ்பரம் பரிமாறி வந்துள்ளன. சமஸ்கிருதத்தின் ஆதி நூலாகிய ரிக்வேதத்திலேயே திராவிட அல்லது அஸ்ட்ரோ ஆசியாடிக் குடும்பத்தைச் சேர்ந்த உள்ளூர் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. தமிழில் கலந்துள்ள பிராகிருத மற்றும் வடமொழிச் சொற்கள் ஏராளம். இந்த வகையில் இந்திய மொழிகள் அனைத்தும் பல்வேறு அம்சங்களில் ஒன்றையன்று ஒத்துள்ளன. இந்த ஒப்புமைகளுக்கெல்லாம் அப்பால் திராவிட மற்றும் இந்தோ அய்ரோப்பிய மொழிக் குடும்பங்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகியதாகவும் தனித்துவமுடையதாகவும் உள்ளன என்பதே இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.

சிந்து வெளி நாகரீகம்

இந்தியத் தொல்லியல் நிறுவனத்தின் முதல் தலைவரான அலெக்சாண்டர் கன்னிங்ஹாமின் காலத்திலிருந்தே (1853) சிந்து வெளிப் பகுதிகளான ஹரப்பா முதலியவற்றில் அகழ்வாய்வுகள் நடைபெற்று வந்தன. எனினும் அதன் முக்கியத்துவமும் பழமையும் அன்று அறியப்படவில்லை. சீன பவுத்த யாத்திரிகர்களின் குறிப்புகளில் காணப்பட்ட பவுத்தத் தலங்களை ஆய்வதே கன்னிங்ஹாமின் நோக்கமாக இருந்தது. கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த யுவான் சுவாங் வந்து சென்ற இடங்களில் ஒன்றெனவே ஹரப்பா குறித்து அவர் கருதியிருந்தார்.

இன்றைய பாகிஸ்தானின் சிந்துப் பகுதியிலுள்ள மொஹஞ்சதாரோவிலிருந்த பவுத்த நினைவிடங்களின் கீழ் அகழ்ந்தபோது புரியாத எழுத்துக்கள் பதிந்த (சிந்துவெளி) முத்திரைகள் சிலவற்றை ஆர்.டி. பானர்ஜி 1922-23 ஆண்டுகளில் காண நேர்ந்தது. அதே நேரத்தில் தயாராம் சாஹ்னி ஹரப்பா பகுதிகளை அகழ்ந்தார். பானர்ஜி மற்றும் சாஹ்னியின் முடிவுகளை ஒட்டி அன்றைய தொல்லியல் நிறுவனத் தலைவர் சர் ஜான் மார்ஷல் தனது புகழ்பெற்ற முடிவுகளை ‘Illustrated London News’ இதழில் வெளியிட்டார் (1924). அதன் காலத்தை நிர்ணயிக்க வல்லுனர்களின் உதவிகளையும் அக்கட்டுரையினூடாக அவர் கோரியிருந்தார். சில வாரங்களில் மெசபடோமியத் தொல்லியல் துறை வல்லுநர்கள் இதே போன்ற முத்திரைகள் மெசபடோமியாவில் கி.மு. மூன்றாம் ஆயிரம் ஆண்டுகளைச் சேர்ந்த சுசா, உர் முதலான நகரங்களில் கிடைத்திருப்பதை ஒப்பிட்டு உறுதி செய்தனர். இவ்வாறாக இந்தியாவிற்கு ஒரு வெண்கலக் கால நாகரிகம் இருந்தது உலக வரலாற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்திய வரலாற்றுத் தொடக்கம் குறித்த பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு இது இட்டுச் சென்றது. இரு விதமான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. முதலாவது மார்ஷல் தொடங்கி வைத்தது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்நாகரிகம் இந்திய வரலாற்றில் முதல் அத்தியாயமாக உள்ளது என்பது அவர் கருத்து. ஆரியர் வருகைக்கும் வேதங்களுக்கும் முற்பட்டது அது. முதிர்ச்சியடைந்த சிந்துவெளி நாகரிகம் (Mature Indus Civilization) கி.மு. மூன்றாம் ஆயிரங்களைச் சேர்ந்ததெனில் அது வேதங்களுக்கும் ஆரிய வருகைக்கும் முற்பட்டதாகத்தானிருக்க வேண்டும். ரேடியோ கார்பன் சோதனைகள் முதிர்ச்சியடைந்த சிந்துவெளி நகர நாகரிகத்தின் காலம் கி.மு. 2600- 1900 என்கிற எல்லைகளுக்குட்பட்டது என்பதை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிக்வேத மொழி (பூர்வ இந்தோ ஆரியம்) என்பது பின்னாளைய செவ்வியல் சமஸ்கிருத்திலும் தொன்மையானது. ஈரானியர்களின் ஸரோஷ்ட்ரிய மதம் பிரதியான அவஸ்டாவின் மொழியுடன் (பழைய இரானி) இது ஒத்திருப்பதை மொழியியலாளர்கள் உறுதி செய்கின்றனர். இரண்டும் ஒத்த மூலங்களிலிருந்து உருவானவை என்பது அவர்களின் கருத்து. ஒத்த சொற்களும் ஒத்த இலக்கண அமைப்புகளும் (சொற்றொடரியல் முதலியன) இரண்டிலும் உண்டு. ஒலி வேறுபாடுகள் இரண்டையும் பிரிக்கின்றன. இம் மொழிகளைப் பேசுபவர்கள் “அய்ரிய(ர்)’’ (ஆரியர்) என இந்நூலில் விளக்கப்படுகின்றனர். ‘ஆரிய’ என்கிற கருத்தாக்கமும் சொல்லும் இதிலிருந்தே உருப் பெருகின்றது. ‘ஹ’ என்கிற ஒலியும் ‘ஸ’ என்கிற ஒலியும் பழைய இரானியிலும் பூர்வ இந்தோ ஆரியத்திலும் மாறி இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. அவெஸ்தாவில் ஹோமா, தாஹ, ஹெப்தஹிந்து, அஹூரா, ஹரஸ்வதி, ஹரயு என்றெல்லாம் குறிப்பிடப்படுவன ரிக்வேத மொழியில் சோம(பானம்), தாஸ, சப்தசிந்து, அஸ¨ர, ஸரஸ்வதி, ஸரயூ என்பதாக ஒலி மாற்றம் பெறுகின்றன. இதுகுறித்து விரிவாகச் சற்றுப்பின் காண்போம். அய்ரியர்கள் கிழக்கு நோக்கி இடம் பெயர்ந்ததைக் குறிப்பிடும் அவெஸ்டா அவ்வாறு இடம் பெயர்ந்த 16 பகுதிகளைப் பட்டியலிடுகிறது. அந்தப் பட்டியலில் இறுதியில் வருவதே சப்த சிந்து.

அவெஸ்தாவின் காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்படுகிறது.(9) இது ரிக் வேதம் தொகுக்கப்பட்ட காலத்துடன் (கி.பி. 8ஆம் நூ.) பொருத்தி வருகிறது. சுமார் 500 ஆண்டுகட்கு முன்னாலிருந்து ரிக் இயற்றப்படுதல் தொடங்கியதெனில் ரிக் வேதத்தினுடைய எல்லையை சுமார் கி.மு. 1300க்கு முன் கொண்டு செல்ல இயலாது. அவெஸ்தாவுக்கும் ரிக்வேதத்திற்குமான மூல மொழியின் காலத்தைச் சுமார் கி.மு. 1000 எனக் கணிக்க இடமுண்டு (அலெஸ்தாவின் காலத்திற்குச் சுமார் 300 ஆண்டுகள் முன்பு). இதற்குச் சில நூற்றாண்டுகள் முன்னதாக ரிக்வேத மொழியினர் இந்தியாவிற்குள் நுழையத் தொடங்கினர் என ஊகித்துக் கொண்டால் கி.மு. 1300 வாக்கில் அவர்கள் இங்கே வரத் தொடங்கியிருக்கலாம்.(10) இதுவும் ரிக் வேதத்தின் எல்லையுடன் பொருந்துவது குறிப்பிடத்தக்கது. எவ்வளவு தள்ளிப் போட்டாலும் ஆரிய மொழியியினரின் வருகையை கி.மு. 1500க்கு முன் கொண்டு செல்ல இயலாது. சிந்துவெளி நகர நாகரிகம் உச்சமடைந்து, வீழ்ச்சியடைந்த பின்பே ஆரிய வருகை நிகழ்கிறது என்கிற மார்ஷலின் கருத்தையே இந்த முடிவுகளும் உறுதி செய்கின்றன.

எனவே சிந்து வெளி நாகரித்திற்கும் வேதக் கலாச்சாரத்திற்கும் இடையே ஒரு தொடர்ச்சியின்மை உள்ளது என்கிற முடிவிற்கு இது இட்டுச் செல்கிறது. எனினும் மார்ஷல் இரண்டிற்கும் ஒரு தொடர்ச்சி இருந்தது என்றே கருதினார். சிந்து வெளியினரின் சிலை வழிபாடு வேதக் கலாச்சாரத்தால் உள் வாங்கப்பட்டது என்பது அவர் கருத்து.

சிந்துவெளி நாகரிக வீழ்ச்சிக்குப்பிறகே சமஸ்கிருதம் வெளியிலிருந்து இங்கே வந்ததெனில் சிந்துவெளி மக்களின் மொழி என்ன என்கிற கேள்வி எழுகிறது. இது குறித்த உறுதியான முடிவுகளுக்கு இட்டுச் செல்லத்தக்க பிரதி ஆதாரங்கள் சிந்து வெளியில் கிடையாது. சிந்துவெளி முத்திரையில் உள்ள குறியீடுகளை தொல்லெழுத்து வல்லுனர்களால் இன்று வரை வாசிக்க இயலவில்லை (வாசித்துள்ளதாக இந்துத்துவவாதிகள் விடுகிற ‘புருடா’ குறித்து விரிவாய்ப் பின்னர் பார்ப்போம்). சிந்து வெளியினரின் மொழி திராவிட மொழிகளில் ஒன்றாக இருக்கலாம் என்பது ஒரு சாரார் கருத்து. திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ‘ப்ராஹூய்’ இன்றளவும் பலூசிஸ்தானத்திலும் (சிந்துவெளி), மால்ட்டோ மொழி கங்கைச் சமவெளியிலும் பயிலப்படுவது. இதற்கு ஓர் ஆதாரமாகச் சொல்லப்படுகிறது. ‘தண்டம்’, ‘பிண்டம்’, ‘மயூரம்’ போன்ற திராவிட மொழிச் சொற்கள் ரிக்வேத மொழியிலேயே ஊடுருவி இருப்பது மேலும் ஒரு சான்றாகிறது. ஆரிய மொழியினரின் வருகைக்கு முன்னதாகவே இந்தியா முழுமையும் திராவிட மொழி பரவி இருந்ததற்கான ஒரு ஆதாரமாக இவற்றை இக் கருத்தினர் முன் வைப்பர்.(11) சமீபத்தில் மறைந்த மொழியறிஞர் எமனோவ் மற்றும் பர்ரோ முதலியவர்கள் இக்கருத்தை முன்வைப்பவர்களில் சிலர். பின் வனைவியல் மெய்யெழுத்தொலிகள் (Retroflex Consonants) இந்தோ-அய்ரோப்பிய, இந்தோ-ஆரிய, திராவிட மொழிகள் எல்லாவற்றிற்கும் பொதுமையாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இக்கருத்து அனைத்துத் தரப்பு வரலாற்று வல்லுனர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று எனக்கூற இயலாது. பெரும்பாலானவர்கள் இதை ஏற்பதில்லை.

இந்தியத் துணைக் கண்டத்தின் மூன்றாவது முக்கிய மொழிக் குடும்பமாகிய அஸ்ட்ரோ - ஆசியாடிக் குடும்பத்து மொழிகளில் ஒன்றான ‘முண்டாரி’ மொழியையும் கூட சிந்து வெளியினர் பேசியிருக்கக் கூடும் என்ற கருத்தும் உண்டு. எந்தப் பெரிய மொழிக் குடும்பத்தையும் சாராத ‘புருஷாஸ்கி’ போன்ற மொழியையும் கூடப் பேசுகிற மக்கள் இன்றளவும் சிந்து வெளிப் பகுதியில் உள்ளனர். அத்தகைய மொழி ஏதேனும் ஒன்றைக்கூட சிந்து வெளியில் பேசியிருக்க வாய்ப்புண்டு. மார்ஷல் நிர்ணயித்த கால எல்லையும் ரிக்வேதத்திற்கு முற்பட்டதே சிந்து வெளி நாகரிகம் என்கிற கருத்தும் இன்று வரலாற்றுச் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுக்கருத்தாக நிலவுகிறது.

எனினும் ஆரிய / திராவிட வேறுபாடுகளை மொழியியல் அடிப்படையில் மறுக்கிறவர்களும் சென்ற நூற்றாண்டு தொடங்கி இங்கே செயல்பட்டு வந்துள்ளனர். ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களல்ல. அவர்களின் தாயகம் இந்தியாவே. இங்கிருந்தே அவர்கள் பிற மேலை நாடுகளுக்குச் சென்றிருக்க வேண்டும் என்பது இவர்களின் கருத்து. இக்கருத்தை முன் வைப்போரில் தொண்ணூற்றொன்பது சதத்தினர் இந்துத்துவவாதிகள். ஓரிருவரே வரலாற்றாசிரியர்கள். இந்துக்கள் இந்நாட்டின் பூர்வகுடியினர், முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் வெளியிலிருந்து வந்த வந்தேறிகள் என்கிற அரசியலை முன் வைப்பதற்கு இக்கருத்தை அவர்கள் உயர்த்திப் பிடிக்க நேர்கிறது. இது குறித்து விரிவாய்ப் பார்ப்போம்.

3. வரலாற்றை இன அடிப்படையிலாக்குதல் (Racialisation of History)

இந்துத்துவ வெறியுடன் எழுதுகிற டி.என். ராமச்சந்திரன் போன்ற பார்ப்பனர்கள் மாக்ஸ் முல்லரைத் திட்டித் தீர்ப்பது வழக்கம். இந்தியாவிற்குள் ஆரியர் நுழைவு பற்றி பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் விரிவாக எழுதியவர் அவர். உலக வரலாற்றை இன அடிப்படையில் விளக்கமளிக்கும் போக்கு உச்சத்திலிருந்த காலகட்டம் அது. இதையும் கூட இரு காலகட்டங்களாகப் பிரித்து அணுகுவது வழக்கம்.(12) சற்று விரிவாய்ப் பார்ப்போம். இந்தோ-அய்ரோப்பிய மற்றும் திராவிட மொழிக் குடும்பங்கள் பற்றிய கண்டுபிடிப்புகளுக்குப்பின் மொழிக்கும் இனத்திற்கும் (அல்லது நாட்டிற்கும்) இடையில் ஒரு நேரடியான நிரந்தர உறவைக் கற்பித்து அணுகும் பார்வை ஒன்று உருவாகியது. மொழியையும் இனத்தையும் (அல்லது நாட்டையும்) ஒன்றிற்குப் பதிலாக மற்றொன்றைப் பிரதியிடுகிற ஒரு போக்கும் இருந்தது. இந்தப் பின்னணியில் தான் மாக்ஸ் முல்லர், “ராபர்ட் கிளைவின் வீரர்களது நரம்பில் ஓடுகிற ரத்தம்தான் கருப்புநிற வங்காளிகளின் நரம்புகளிலும் ஓடுகிறது’’ என எழுதினார். ஆரிய மொழி பேசுவோர் அனைவரையும் ஆரிய இனத்தவர் என்றார். தோலின் நிறம் முதலான உடற்கூறுகள் கூட மொழி அடிப்படையிலான வகைப்படுத்தல்களுக்கு உட்பட்டதே என்கிற கருத்தும் அக்காலத்தில் இருந்தது. யி.சி. பிரிச்சார்ட் போன்ற மருத்துவத்துறையிலிருந்து வந்த இனவியலாளர்களின் பங்கு இதில் குறிப்பிடத்தக்கது. இவர்களை ‘சமஸ்கிருதவாதிகள்’ (Sanscritists) என அழைப்பது வழக்கம்.

வெள்ளைப் பாதிரிகள் மட்டும் தந்திர நோக்குடன் இப்படிச் சொன்னார்கள் என்பது இந்துத்துவவாதிகளின் வாதம். ஆனால் இந்திய உயர்சாதிச் சீர்திருத்தவாதிகளும் தொடக்ககால இந்திய வரலாற்றாசிரியர்களும் கூட இந்தக் கருத்தை மொழிந்ததை அவர்கள் வசதியாக மறந்துவிடுவர். தந்திரமாக மறைத்துவிடுவர். முதற்கட்ட இந்துச் சீர்திருத்தவாதிகளில் ஒருவரான கேசவ சந்திர சென்னின் கூற்று ஒன்றை ரொமிலா அடிக்கடி சுட்டிக் காட்டுவார்.(14) பிரிட்ஷ்காரர்கள் இந்தியாவிற்கு வந்து காலனியப்படுத்துவதை “பிரிந்த பங்காளிகள்’’ மீண்டும் ஒன்று சேர்ந்ததற்கு ஒப்பிடுவார் சென். அன்றைய இந்திய தேசியவாதிகளைப் பொருத்தமட்டில் ‘இந்தியர்கள்’ எனில் உயர்சாதி இந்தியர்கள்தான். இந்தியக் கலாச்சாரம் என்பது ஆரியக் கலாச்சாரம். (நமது பாரதி போன்றவர்களிடமும் இதைக்காண முடியும்). எனவே இந்தியர்களை அய்ரோப்பியர்களுடன் இணைத்துக் கொள்வதில் அவர்களுக்குப் பெருமை. திராவிட இனம் என ஒன்று இருந்ததையும் ஆரியர்களால் அது ‘வென்று’ தெற்கு நோக்கித் ‘துரத்தப்பட்டதையும்’ கூட அவர்கள் ஏற்றுக் கொள்ளவே செய்தனர்.

எனினும் மிக விரைவில் இப்படி மொழியையும் இனத்தையும் தொடர்புபடுத்துவதில் உள்ள சிக்கல்களை மேலை ஆய்வாளர்கள் உணரத் தொடங்கினர். எனினும் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் மொழிக்கும் இனத்திற்குமிடையே ஒரு அவசிய உறவு இருக்க வேண்டியதில்லை என்பது தெளிவாகியது. அது ஒரு தற்செயல் உறவாக மட்டுமே இருக்க முடியும் என்கிற கருத்து உருவாகியது. எந்த ‘இனத்தில்’ பிறந்த ஒரு குழந்தையையும் வேறொரு மொழிக் குழுவில் எந்த வித்தியாசமுமின்றி வளர்த்துவிட முடியும் தானே. மாக்ஸ் முல்லரே இதைப் பின்னர் உணர்ந்து கொள்ள நேரிட்டது. ஆரிய மொழி பேசுவோர் அனைவரையும் ஆரிய இனத்தவராகத் தம் எழுத்துக்களில் பதிவு செய்ய நேர்ந்தது குறித்து அவர் வருத்தப்பட்டார். “நீளத் தலைகளுடன் கூடிய மொழிகள் சாத்தியமில்லை’’ என்பது புகழ்பெற்ற வாசகம். உடற்கூறு அடிப்படையிலான இனங்களுக்கும் மொழிக்கும் தொடர்பில்லை என்கிற பொருளில் இதை அவர் சொன்னார். புதிதாக உருவான ‘இன அறிவியல்’(15) “சமஸ்கிருதவாதிகளில் கொடுங்கோன்மையைத் தண்டித்தன. எனினும் இவர்கள் மொழியை இனத்துடன் அடையாளப்படுத்தியதை மட்டும் எழுத்தாளருடனே ஒழிய உடற்கூறு அடிப்படையில் இனங்களை வரையறுத்தல், அதன் மூலம் சமூகங்களை அடையாளப்படுத்தல் என்பனவற்றைத் தீவிரமாக மேற்கொண்டனர். ஆர்தர் டி கோபினோ என்கிற பிரெஞ்சு பிரபு எழுதிய மாறி இனங்களுக்கிடையே சமத்துவமின்மை பற்றி கட்டுரை (1853-5) குறிப்பிடத்தக்கது. வெள்ளை இனமே புராதன நாகரிகங்கள் அனைத்திற்கும் காரணம் எனக்கூறிய கோபமோ இனக் கலப்பின் விளைவாகவே நாகரிகங்கள் வீழ்ச்சியுற்றன என வாதிட்டார். இந்தோ-அய்ரோப்பிய மொழி பேசுபவர்களிடையே கூட ஜெர்மனிய இளமை தூய்மையானது என்பது அவர் வாதம். அயர்லாந்து மக்கள் பின்தங்கிருப்பதற்கும் அய்ரோப்பா புராட்டஸ்டண்ட் மதத்தால் ஈர்க்கப்பட்டதற்கும் கூட இனம்தான் காரணம் என இக்காலத்தில் கருதப்பட்டது.

பின்னாளில் ஜெர்மனியில் நாஸி கட்சி உருவாவதற்கும் யூதர்கள் மீது மட்டுமின்றி ஜிப்ஸிகள், ஸ்லாவியர்கள் ஆகியோர் மீதும் இன வெறுப்பு அரசியல் என்று கட்டமைக்கப்படுவதற்கும் இந்தச் சிந்தனைகளே பின்புலமாயின. ஜெர்மனிய நாஸிகளுடனும் இத்தாலிய பாஸிஸ்கெனுடனும் டாக்டர் மூஞ்சே, சாலர்க்கால், ஹர்தயால் போன்ற முதற்கட்ட இந்து தேசியவாதிகள் தொடர்பு கொண்டிருந்தனர்(16) என்பதும் ஒரு வேறுபாடு சிந்திக்கப்பட்டது. பாசிசம் சில இனங்களை விலக்குவதற்கு அழுத்தம் அளித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டு இனவாதமோ இந்திய-பிரிட்டிஷ் உறவு முறைக்க முக்கியமாயிருந்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலுள்ள இந்தியாவிலே நிறுவனத்தில் நுழைவாயிலில் மோனியர் வில்லியம்ஸ் எழுதிய சமஸ்கிருத சுலோகம் ஒன்று. பொறிக்கப்பட்டுள்ளது. கிழக்கத்திய கலைகளுக்கான இக்கட்டிடம் ஆரியர்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது என்கிற அவ்வாசகம் ஆரியர் என்று இந்தியரையும், பிரிட்டிஷ்காரர்களையும் ஒரு சேரக் குறிப்பிடும்.

இன்று (1950க்குப்பின்) உடலடிப்படையிலான மானுடவியல் ‘இனம்’ என்கிற கருத்தாக்கத்தையே மறுப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மக்கள் தொகுப்பின் உயிரியல் ரீதியான பண்புகள் அனைத்தும் ஒன்றாக இருப்பதில்லை. அவை வேறுபடுகின்றன. ஒரு மக்கள் குலத்தின் இத்தகைய பல பண்புகள் மற்ற குழுமத்தின் பண்புகளுடன் பொருத்திப் போவதை மானுடவியல் நிரூபித்துள்ளது. எனவே ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துப் பார்க்கும் தனித்துவமான இனங்கள் கிடையாது என்பதே இன்றைய கருத்து. “இனங்கள் என்று ஒன்றும் இல்லை. தொடர்ந்து வேறுபாடுகள் உடற்பண்புகள் மட்டுமே உண்டு’’ தோலின் நிறம் போன்றவை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இனங்களுக்கிடையே துல்லியமான எல்லைக் கோடுகளை இந்த அடிப்படைகளில் வகுத்துவிட இயலாது.

மாக்ஸ் முல்லருக்குத் திரும்புவோம். இந்தோ ஆரிய மொழிக்குழுவினருக்கும் திராவிட மொழியினருக்குமிடையேயான மொழியியல் வேறுபாட்டை இனவியல் ரீதியான வேறுபாடாகக் கருதி விளக்கமாக்கும் முயற்சியை முல்லருக்கு முன்பே பலர் முயற்சித்திருந்த போதும் தனது வலிமையான வாதங்களில் மூலம் அதை அழுத்தமாக வைத்தது அவர்தான். சமஸ்கிருதக் கலாச்சாரத்தை இந்தியாவிற்குள் கொணர்ந்த வெள்ளைத் தோலர்களுக்கு ஒப்பிட்டளவில் நாகரீகக் குறைவான திராவிடக் கருப்புத் தோலர்களுக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தையும் அதன் விளைபொருளே சாதி, வருஷம் உள்ளிட்ட இந்தியக் கலாச்சாரம் என்பதான ஒரு பெருங்கதையாடல் இங்கே நீண்ட காலம் ஆட்சி செய்தது. இந்தோ-ஆரியருக்கு முந்திய ஒரு வளர்ச்சியடைந்த வெண்கல / நகர நாகரிகமாற்று சிந்து வெளியில் இருந்தது என்பது 1920களில் நிறுவப்படுவதற்கு முன்பு வரை பெரிய எதிர்ப்புகளின்றி இக்கருத்து ஆட்சி செலுத்தியது.

ஆரிய இனம் மத்திய ஆசியாவில் தோன்றியது என முல்லர் கருதினால் இதில் ஒரு பிரிவு ஈரான் வழியாக இந்தியாவிற்கு வந்தது; இன்னொரு பிரவு அய்ரோப்பாவிற்குச் சென்றது. ஈரானுக்கு வந்த ஆரியர்களின் ஒரு பிரிவினர் (இந்தோ-ஆரியர்) ஆப்கானிஸ்தான் வழியாக வட இந்தியா வந்தடைந்தனர். எனவே சூரியக் கோட்பாடு என்பது மத்திய ஆசியாவின் பெரும் பகுதி, மேற்கு ஆசியா, அய்ரோப்பா ஆகியவற்றை உள்ளடக்குகிறது. இந்தியாவிற்கு வந்த ஆரியர் (இந்தோ ஆரியர்) உள்நாட்டு மக்களை வென்றனர் சமஸ்கிருத மொழியையும் ஆரியக் கலாச்சாரத்தையும் அவர்கள் மீது திணித்தனர் என்பதே மாக்ஸ் முல்லர் முன் வைத்த வரலாறு. ‘ஆரியப் படைஎடுப்பு’ என இக் கோட்பாடு அழைக்கப்படுகிறது. இந்தோ ஆரியர்களின் ரிக்வேதம் இயற்றப்பட்ட காலம் கி.மு. 1200 என்பது அவர் கணக்கு. மொழியியலாளர்கள் இன்று ரிக்வேதத்தின் காலமாக நிர்ணயித்துள்ளதுடன் இது பொருந்திப்போவது கவனிக்கத்தக்கது. இந்தோ ஆரியர்களின் ஈரானியத் தொடர்பும் இன்று ஸரோஷ்ட்ர வேதமான அலெஸ்டாவின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய பிரதியியல் ஒன்று தவிர அகழ்வுச் சான்று என்றும் இதற்கு ஆதரவாகக் கிடைத்துள்ளது.

துருக்கியில் போகாஸ் கியு என்னுமிடத்தில் குனிஃபார்ம் வரி வடிவில் வட சிரியப் பகுதியைச் சேர்ந்த மித்தானியர்களின் அரசனுக்கும் ஹிட்டிகளில் அரசனுக்கும் இடையே ஏற்பட்ட போர் ஒப்பந்தம் அது. ஒப்பந்தத்திற்கும் சான்றாக ஹிட்டிகளின் கடவுளர்கள் இவர் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் மிர்ஷிஸ், உருவன ஷில், இந்துராஹ், நஷாத்யன. ரிக் வேதத்தில் சொல்லப்படுகிற மித்ரன், வருணன், இந்திரன், நஸத்யன் என்கிற கடவுளர்களே இவர்கள். மெசபடோமியா, சிரியா திசைகளிலும் ஆர்யப் பரவல் இருந்ததை இது நிறுவுகிறது. குதிரைகள் பதுக்கப்பட்டது குறித்த ஒரு குறிப்பும் கிடைக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் காலம் கி.மு.1380 என அப்பகுதியில் அரச வம்சப் பட்டியலுடன் ஒப்பிட்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரியப் பரவல் அதன் காலம் ஆகியன குறித்த மாக்ஸ் முல்லரின் கருத்துக்களில் பெரிதும் மாறுபடுவதற்குரிய புதிய சான்றுகள் ஏதும் இல்லை.

மாக்ஸ்முல்லரிடம் உள்ள ஒரே பிரச்சினை ஆரிய மொழிக் குழுவினரை ஆரிய இனத்தவர் என்பதாகவே அவர் முன்னிறுத்துவதுதான். அதுவும் கூடத் தவறு என்பதை அவர் வாழ்நாளிலேயே ஏற்றுக் கொண்டார். எனினும் அதற்குள் ஆரிய இனப்படை எடுப்பு என்கிற கருத்தாக்கம் நிலை பெற்று விட்டது. ஆரிய இனத்தினர் இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்கிற கருத்தை பாலகங்காதர திலகரும் கூட ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. “ஆரியன் பல நாட்கள் கழித்து உதித்தான்’’ என்கிற ரிக் வேத (1-76) சுலோகத்தை ஆதாரமாக்கி ஆரியர்களின் பூர்வ தாயகம் துருவப் பிரதேசமாக (ஆர்க்ட்ரிக்) இருக்க வேண்டும் என்று திலகர் கருதினார். வெள்ளையர்களும் கிறிஸ்துவப் பாதிரிகளும் மட்டுமே இதை உருவாக்கிப் பரப்புவதாக இந்து சேக்கிழார் அடிப்பொடிகள் சொல்வது உள் நோக்கம் கொண்டதேயொழிய முறையான ஆய்வு அல்ல.

ஆரிய இனப் படையெடுப்புக் கோட்பாட்டை தொடக்ககால இந்திய உயர்சாதி அறிவு ஜீவிகள் மட்டுமின்றி ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களும் கூட தங்களது சாதி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு அரசியலுக்குப் பயன்படுத்தினர். 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், மராட்டிய பூமியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இயக்கம் கண்டவருமான மகாத்மா ஜோதிபா பூலே அவர்களில் ஒருவர். தெற்கே உருவான திராவிட இயக்கத்தினரும் தனது பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு அரசியலுக்குத் தோதாக கைபர்-போலன் கணவாய் வழியே ஊடுருவிய ஆரியர் குறித்த சொல்லாடல்களை முன்வைத்தனர். இராமாயணக் கதையையே ஆரிய திராவிட “இனப் போராட்டமாக’’வும் திராவிடர்களை ஆரியர்கள் வென்று ஒடுக்கிய வரலாற்றைச் சொல்வதாகவும் அவர்கள் விளக்கமளித்தனர். இந்தோ-ஆரிய மொழி பேசிய அனைத்து மக்களையும் ஒற்றைத் தனி இனமாகவும் அதேபோல திராவிட மொழியில் பேசிய அனைவரையும் ஒரே தனி இனத்திலிருந்து உருவானவர்களாகவும் பார்க்கிற தவறான போக்கு இதன் மூலம் உருவானது. சூத்திரர், தீண்டப்படாதவர் ஆகிய இரு சாரரையும் தவிர்த்த பிறரை ‘ஆரியர்’ என வரையறுத்த இப்போக்கு சமூக அநீதியை வருண-சாதியக் களத்தில் நின்று எதிர்க்கும் ஒரு நிலையை முன்னிறுத்தியது.

ஆரியப் படைஎடுப்புக் கோட்பாட்டை தொடக்கத்தில் அரை மனதுடன் ஏற்றுக் கொண்ட உயர்சாதி மேற்தட்டினர் படிப்படியாக அதைக் கைவிடத் தொடங்கினர். 1930களின் இறுதியில் அதைத் தீவிரமாக மறுக்கும் நிலையை மேற்கொண்டனர். இந்துத்துவத்தின் மூல முன்னோடியான சாவர்க்கர் ‘இந்து’ என்றால் யார் என்பது குறித்து அளித்த விளக்கம் குறிப்பிடத்தக்கது. இந்தியா என்பது யார் ஒருவருக்குப் பித்ரு பூமி (தந்தையர்நாடு)யாக மட்டுமின்றிப் புனித நூற்களும் இறை அவதாரங்களும் தோன்றிய ‘பிணர்பூமி’ யாகவும் உள்ளதோ அவரே ‘இந்து’.(18) வேதம் மற்றும் ஆரியர்களின் தோற்றத்தை இந்திய மண்ணிற்கு அப்பால் கொண்டு செல்வது இதற்கு மாறானது என்பதால் ஆரியப் படையெடுப்புக் கோட்பாடு கடுமையாக மறுக்கப்பட்டது. ஆரியர்கள் பூர்வ குடியினர். இந்தியாவில் தோன்றிப் பின் அய்ரோப்பாவிற்கும் மற்ற இடங்களுக்கும் வியாபித்தவர்கள்.

மொழிகளிலெல்லாம் பழமையான சமஸ்கிரும் இந்தியாவில் தோன்றி பின் மேற்கு ஆசியா வழியாக அய்ரோப்பா சென்றது. உலக நாகரீகத்தின் தொட்டிலே இந்துக் கலாச்சாரம்தான். இந்துக்கள் அனைவரும் இந்தியர்கள் என்கிற போது யார்தான் அந்நியர்? முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களுமே இம்மண்ணில் வந்தேறிகள். அவர்களில் தாயகம் (பித்ரு பூமி) இந்தியாவாக இருந்த போதிலும் அவர்களின் புண்ய பூமிகளும் (மெக்கா, பாலஸ்தீனம்), புனித நூற்கள் அருளப்பட்ட இடங்களும் இந்தியாவிற்கு வெளியே உள்ளன. அவர்களே இந்தியக் கலாச்சாரத்தின் எதிரிகள்; எதிர்க்கப்பட வேண்டியவர்கள் என்பதாக ஆரியர்களின் பூர்வ இந்தியக் கொள்கை முன் வைக்கப்பட்டது. இதன் மூலம் போராட்டக் களம் சாதி என்பதிலிருந்து மதமாக மாற்றப்படுவது இவர்களின் நுணுக்கமான தந்திரம். அடித்தளமக்கள் சாதியக் களத்தில் நடத்தி வந்த போராட்டங்களை மதக் களத்தில் நடத்துவதற்கு இவர்களின் பூர்வ இந்தியக் கோட்பாடு பெரிதும் உதவியது உதவுகிறது.

19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஆர்யர்கள் பூர்வ இந்தியர்கள் என்கிற கோட் பாட்டை ‘தியாசபிகல்’ கழகத்தினர், குறிப்பாக கர்னல் ஆல்காட் ‘ஆர்யவர்த்தமே நாகரீகங்களின் தொட்டில்’ என்கிற கருத்தை மொழிந்தாலும்(19) (இன்றைய இந்துநலச் சிந்தனைகளின் மூலாதாரமாக விளங்கும் தியாசபிகள் கழகத்தின் செயல்பாடுகள் விரிவாக ஆராயத்தக்கவை.) முதற்கட்ட இந்துச் சீர்திருத்த இயக்கமாகிய ஆர்ய சமாஜமும் இத்தகைய கருத்துக்களுடன் செயல்பட்ட அமைப்புதான்.

இந்திய நாகரிகத்தின் வேர்களே ஆரியர்கள்தான் எனச் சொல்லும்போது எல்லாவற்றையும், சிந்துவெளி நாகரித்தையும்கூட ஆரியர்களின் விளைபொருளாகச் சொல்லியாக வேண்டும். கொஞ்சமும் கூச்சமின்றி எல்லாவிதமான, ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாற்று முடிவுகளுக்கும் எதிராக சிந்து வெளி நாகரிகம் ஆரியர்களால் உருவாக்கப்பட்டது, ரிக்வேத கலாச்சாரமும் சிந்து வெளி நாகரிகமும் ஒன்று என அவர்கள் வலியுறுத்த தொடங்கினர். இதிலும் அவர்கள் 1977க்குப் பின் ஒரு புதிய புரட்சியைச் சந்திக்க நேரிட்டது. சிந்து வெளிப்பகுதிகள் பலவும் (பஞ்சாப், முல்தான், காஷ்மீர், இமயம் முதலியன) இந்து முஸ்லிம்களின் தாயகமாக உள்ளன. பிரிவினைக்குப் பின் பெரும்பாலான பகுதிகள் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்டதாகிவிட்டது. அவற்றை மீட்டு இந்தியாவிற்குள் கொண்டு வருவது (‘அகண்ட பாரதம்’) அவர்களின் தொலைநோக்கான திட்டமாயினும் இப்போதைக்கு எளிதில் தீர்க்கமுடியாத பிரச்சினை இது. ஆரியர்களின் தாயகம் பாகிஸ்தானாக இருப்பது அவர்களை