Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Anicha
Anicha Logo
நவம்பர் 2005

நடந்தவை நடப்பவை

சுந்தரராமசாமி (1931 - 2005)
அ. மார்க்ஸ்

சுமார் 50 ஆண்டுகாலம் தமிழ் இலக்கியத்தோடும் சிற்றிதழ்களோடும் தொடர்பு கொண்டிருந்த எழுத்தாளர் சுந்ததராமசாமி இப்போது நம்மிடையே இல்லை. நாவல், சிறுகதை, கவிதை என மூன்று துறைகளிலும் தடம் பதித்தவர். ‘காகம்’ என்றொரு இலக்கிய அமைப்பைப் பலகாலம் நடத்தி தென் மாவட்டங்ளைச் சேர்ந்த இளம் எழுத்தாளர்கள் பலரை ஊக்குவித்தவர். சொற் சிக்கனம் கூடிய நேர்த்தியான மொழி நடை வாய்க்கப் பெற்றவர்.

மணிக்கொடி காலத்திலிருந்து பார்த்தால் இன்று எழுதிக் கொண்டிருப்பவர்களை நான்காம் தலைமுறை எனலாம். இதில் மூன்று தலைமுறையினருடன் வாழ்ந்தவர் ராமசாமி. முதலிரண்டு தலைமுறை எழுத்தாளர்களும் தமது எழுத்துக்களுக்கு உரிய ஏற்பும், வருமானமும் இன்றி மறைந்து போனவர்கள். அடுத்த இரு தலைமுறையினரை அப்படிச் சொல்ல வேண்டியதில்லை. அங்கீகாரம் மட்டுமின்றி போதிய வருமானமும் இப்போது கிடைக்கிறது. நூல் வெளியீடு என்பது லாபகரமான தொழில்களில் ஒன்றாகிவிட்டது. இந்தச் சூழலை நன்கு பயன்படுத்திக் கொண்டவர் சுந்தர ராமசாமி. ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற பரிசுகள் அவருக்கு வாய்க்காத போதும், அவருடைய தகுதிக்குரிய, சொல்லப்போனால் தகுதிக்கு மீறிய மதிப்பும் ஏற்பும் அவருக்குத் தமிழ்ச் சூழலில் இருந்தது. பத்திரிகை, நூல் வெளியீடு முதலிய துறைகள் பொருளியல் ரீதியிலும் லாபகரமாகவே இருந்தன.

மறைவை ஒட்டி எதிர்பார்த்தது போல அவருக்கு நிறையப் புகழாரங்கள் சூட்டப்படுகின்றன. ஒரு எழுத்தாளனுக்குத் தமிழ்ச் சூழல் அளிக்கும் மரியாதை மகிழ்ச்சியளிக்கிறது. இறப்பை ஒட்டி நல்ல வார்த்தைகள் சொல்வதே மரபென்ற போதிலும் விருப்பு வெறுப்பின்றி மதிப்பீடுகளை முன்வைப்பதை நாம் தவிர்க்க இயலாது.

சமீப காலத் தமிழ்ச் சூழலில் எல்லா விவாதங்களும் அவரை மய்யமாகக் கொண்டே நடந்தன என ஜெயமோகன் கூறியுள்ளார். அவரது எழுத்துக்களை ‘மாற்றுக்குரல்’ என மாலன் பதிவு செய்துள்ளார். இரண்டு கருத்துக்களுமே ஏற்க இயலாதவை. ராமசாமியின் குரல் எப்படி மாற்றுக்குரலாக அமைந்தது என்பதை மாலன் விளக்கி எழுதினால் நல்லது. பெரிதும் பேசப்பட்ட அவரது நாவல்களான ‘புளிய மரத்தின் கதை’, ‘ஜே.ஜே.சில குறிப்புகள்’ இரண்டுமே பழமைச் சிந்தனைகளை உயர்த்திப் பிடிப்பதாக உள்ளன என்கிற விமர்சனங்கள் தமிழில் உண்டு. முன்னது குறித்த குறையின் முறையில் கட்டுரையும் பின்னது குறித்தச் சாரு நிவேதிதாவின் கட்டுரையும் குறிப்பிடத்தக்கன. புதிய வடிவங்களிலும் கூடச் சனாதனமான கருத்துக்களைப் பொதிந்து விட முடியும் என்பதற்கு, ஒரு எடுத்துக்காட்டாகவே ஜே.ஜே. சில குறிப்புகளைச் சொல்ல முடியும்.

வாழ்ந்த காலத்தில் புதிய சிந்தனைகளுக்கும் மாற்றுக்குரல்களுக்கும் மிகப் பெரிய எதிரியாக இருந்தவர் ராமசாமி. தனது வயதின் மூப்பிற்குக்கூட பொருத்தமற்ற வார்த்தைகளால் அவர் புதிய சிந்தனைகளின் அறிமுகத்தைக் கொச்சைப்படுத்தி வந்ததை நாம் மறந்து விடமுடியாது. கண்டதைத் தின்றுவிட்டு அரை குறையாய்ச் செரித்தவற்றை வாலைத் தூக்கிக் கழித்துத் திரியும் நாய்களாகவும், சுற்றுச்சூழலைக் கெடுத்துத் திரிபவர்களாகவுமே அவர் ஸ்ட்ரச்சுரலிசம், போஸ்ட் ஸ்ட்ரச்சுரலிசம் அந்நியமாதல், போஸ்ட் மாடர்னிசம் முதலான சிந்தனைகளை பேசியவர்களை அவர் விமர்சித்து வந்தார்.

மணிக்கொடி தோற்றுவித்த இலக்கியப் போக்கின் தொடர்ச்சியாகவே அவரது சிறு பத்திரிகை முயற்சிகள் இருந்தன. வெறுமனே தூய இலக்கியப் பெருமை, வெகுஜன இலக்கியச் சீரழிவு பற்றிப் பேசிக் கொண்டிராமல் சமூகக் களத்தையும் வரலாற்று விமர்சனத்தையும் சிறு பத்திரிகைகள் கவனம் கொள்ள வேண்டும் என்கிற கருத்து நெருக்கடி நிலை (1975 - 78) காலத்தை ஒட்டி இங்கு ஏற்பட்டது. பிரக்ஞை, படிகள், பரிமாணம், இலக்கிய வெளிவட்டம், மீட்சி, நிறப்பிரிகை என்றொரு போக்குச் சிறு பத்திரிகை உலகில் வந்த போது அவரது முயற்சியும் ஆதரவும் வரலாற்றையும் சமூகச் சூழலையும் இலக்கியத்திலிருந்து ஒதுக்கிவைக்கும் போக்கை நிலை நாட்டுகிற செயற்பாடுகளுக்கு ஆதரவாகவே அமைந்தன. அவரது ‘காலச்சுவடு’ அவரை ஆராதித்த ‘கொல்லிப்பாவை’ முதலான இதழ்கள் ‘பிரக்ஞை.. நிறப்பிரிகை’ போக்கிற்கு எதிரான பழைய நிலைப்பாட்டையே தூக்கிப்பிடித்தன.

அவரது கடைசி கால எழுத்துக்கள் ஒரு தேக்கத்தை எட்டின. ‘குழந்தைகள், ஆண்கள், பெண்கள்’ என்கிற அவரது கடைசி நாவல் தமிழ்ச் சூழலில் யாராலும் பேசப்படவில்லை. ‘தோட்டியின் மகன்’ மொழி பெயர்ப்பும் அவரது கடைசிச் சிறுகதைகளில் ஒன்றான ‘பிள்ளை கொடுத்தான் விளை’யும் தலித் எழுத்தாளர்களின் கடுமையான விமர்சனத்திற்குள்ளாயின. கண்டனக் கூட்டங்கள் கூட நடத்தப்பட்டன.

ஜீவா மீதும், புதுமைப்பித்தன் மீதும் அவருக்கு நிறைய மரியாதை இருந்தது. ஆரம்ப காலத்தில் இடதுசாரி அரசியலுடன் தொடர்பு கொண்டிருந்தார் என அவரைப் பற்றிச் சொல்வதுண்டு. எனினும் அவரது எழுத்துக்களில் அதற்கான சாட்சியங்களை நாம் பார்த்துவிட இயலாது. அன்றாட சமூக, அரசியற் பிரச்சினைகளில் அவர் கவனம் செலுத்தியவரல்லர். எனினும் மரண தண்டனை ஒழிப்பு இயக்கத்தில் அவர் தன்னை விரும்பி இணைத்துக் கொண்டது. குறிப்பிடத்தக்கது. கல்வி குறித்து அவர் வசந்திதேவியுடன் நடத்திய உரையாடல் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமையவில்லை. எல்லாத் துறையினரையும் போலவே பேராசிரியர்களிடமும் பல சீரழிவுகள் இருந்தன என்றாலும் கல்வித் துறை சார்ந்த பேராசிரியர்கள் மீது அவருக்கு அளவுக்கு மீறிய காழ்ப்பு இருந்தது. இதை மீறி கல்வி சார்ந்த எந்த மாற்றுக் கருத்தையும் அவரால் முன் வைக்க முடியவில்லை.

கடைசியாக அவரைச் சென்ற ஆண்டு ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் (நாகர்கோவில்) நடைபெற்ற பாரதி தொடர்பான தேசியக் கருத்தரங்கொன்றில் சந்தித்தேன். தொடக்க விழாவில் நானும் அவரும் பங்கு பெற்றோம். மேடையில் நடுநாயகமாக அவரும் ஓரமாக நானும் அமர்ந்திருந்தோம். அவர் பேசத் தொடங்குகையில் இடையில் இரு நாற்காலிகள் காலியாக இருந்தன. புகைப்படம் எடுப்பவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரருகில் சென்று அமர்ந்தேன். பெண் கவிஞர்களின் எழுத்துக்களைப் புகழ்ந்து பேசினார். நன்றாக எழுதும் பெண் கவிஞர்களில் பட்டியலொன்றைச் சொல்லி மாணவிகளை எழுதிக் கொள்ளச் சொன்னார். மாலதி மைத்ரியின் பெயர் அவருக்கு மறந்துவிட்டது. “மை.... மை....’’ எனத் திணறினார். அருகிலிருந்த நான் பெயரைக் கொண்டேன். “ஓ! ஆமாம்..... மாலதி மைத்ரி’’ என்று சொன்னவர் அப்படியே என்னனைத் தழுவிக் கொண்டார். “இவர் ரொம்ப அபாரமான ஞாபக சக்தி உடையவர் எதையும் மறக்க மாட்டார். ஏகப்பட்ட பெயர்களை நினைவில் வைத்திருப்பார். அவ்வப்போது பயன்படுத்துவார்’’ என்றார். தழுவிய கைகளை அவர் நீக்கவில்லை அவருடைய பேச்சில் மறைந்திருந்த அவரது வழக்கமான குசும்பை நான் உணர்ந்த போதிலும் அவரது தழுவல் எனக்குப் பிடித்திருந்தது. எத்தன்மையாய் இருந்த போதிலும் தழுவல்கள் சுகத்திற்கும் மகிழ்ச்சிக்கும் உரியவைதானே. அவருடன் அதிகம் மோதியவர்களில் நானும் ஒருவன். அவரது பிரிவு என்னை வருத்துகிறது. மனம் கசிகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com