Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Anicha
Anicha Logo
இரு மாத இதழ் - மார்ச் 2006

சாதி வெறியர்கள் துப்பாக்கி நிழலிலே மறைந்து கிடக்கிறார்கள் என்.கே. ரகுநாதன்
சந்திப்பு: தேவதாஸ் - ஷோபாசக்தி

N.K. Ragunathan ஈழத்தின் ‘முற்போக்கு இலக்கிய’ அணியில் உருவாகி வந்த என்.கே. ரகுநாதன் இலங்கையின் வடபகுதியிலுள்ள தலித் கிராமமான வராத்துப்பளையில் 1929ல் பிறந்தார். தொழிலில் ஆசிரியரான ரகுநாதன் இலங்கை கொம்யூனிஸ்ட் இயக்கத்திலும், தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்திலும் நெடுங்காலமாக இயங்கியவர். என்.கே. ரகுநாதனின் கதைகள் சொல்லும் முறையில் நேரடியானவை, எளிமையானவை. ஆனால் அவரின் கதைகள் எப்போதும் ஆழமான சமூகச்சிக்கல்களையே அவிழ்த்துப்போட்டன. அவரின் புகழ் பெற்ற சிறுகதையான ‘நிலவிலே பேசுவோம்’ குறித்து ‘சொற்களுக்குப் பின் இயங்கும் ஆழ் மனம்’ என்றெழுதுகிறார் பாவண்ணன். ரகுநாதனின் சிறுகதைகள் ‘நிலவிலே பேசுவோம்’ ‘தசமங்கலம்’ என இரு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.

அறுபதுகளின் பிற்பகுதியில் எழுதப்பட்ட ‘கந்தன் கருணை’ நாடகம் பெரும் அதிர்வுகளைக் கிளப்பியது. அந்நாடகம் சாதி ஒழிப்புப் போராளிகளின் முக்கியமான ஆயுதமாகத் திகழ்ந்தது. சாதியழிப்புப் போராளிகளால் அந்த நாடகம் கிராமம் கிராமமாக எடுத்துச்செல்லப்பட்டது. என்.கே. ரகுநாதன் எழுதிய தன் வரலாற்று நூலான ‘ஒரு பனஞ் சோலைக் கிராமத்தின் எழுச்சி’ 2004ல் வெளியானது. தற்போது எழுபத்தாறு வயதாகும் என்.கே. ரகுநாதன் கடந்த மூன்றாண்டுகளாக கனடாவில் வசித்து வருகிறார்.”

உங்களைப்பற்றி....?

பதில்: நான் பிறந்து வளர்ந்தது எனது சமூகத்தைச் சேர்ந்த பதினெட்டு இருபது குடிமனைகளையுடைய ஒரு சிறிய கிராமம். வராத்துப்பளை என்பது அதற்குப் பெயர். ஐந்து வயதில் அருகில் உள்ள ஒரு மிஸன் பாடசாலையில் படித்தேன். எமக்கு அயற்கிராமமான கற்கோவளம் என்ற மீன் பிடித்தொழிலாளர்கள் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்த - படித்து ஆசிரியர்களானவர்கள் அங்கு படிப்பித்தமையாலும், அந்தச் சமூகத்து மாணவர்களுடன் எனது சாதி மாணவரும், அடுத்த கிராமமான பறைய சாதி மாணவரும் அங்கு படித்தமையினால், அங்கு எது வித பிரச்சினையுமில்லை.

ஐந்தாம் வகுப்பு முடிந்ததும் சற்றுத்தொலைவிலுள்ள வேளாளரின் நிர்வாகத்திலுள்ள சிவப்பிரகாச வித்தியா சாலை எனப்படும் சைவப் பாட சாலையில் சேர்ந்து அங்கு கல்வி கற்றேன். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை என்ற படியால், அங்கு படிப்பித்த ஆசிரியர்கள் சாதிப் பாகுபாடு காட்டாவிட்டாலும் ஒரு சில மாணவர்களால் பெரும் கொடுமைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. அங்கு முதன் முதல் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மாணவன் நான்தான். அனைத்து - மாணவர்களுக்கும் கடைசியில் எனக்குத் தனிவாங்கு மேசை. கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடிக்க முடியாது. மற்றவர்கள் அள்ளி ஊற்ற கை ஏந்திக் குடிக்க வேண்டியதுதான். பல துன்பங்களைச் சுமந்து கொண்டு எஸ்.எஸ்.சி. வகுப்பு வரைக்கும் போய் அவ் வகுப்பில் படித்தபோது, ஒரு மாணவனால் நான் மிகவும் அக்கிரமங்களுக்குள்ளாகினேன். பாடசாலைத் தோட்டத்து வேலியை, ஒருநாள் கூலியாட்கள் அடைத்து முடிந்ததும் மாணவராகிய நாங்கள் அந்த வேலிக்கரையைச் சுத்தப்படுத்தப் போனோம்.

என்னை அடிக்கடி நக்கல் பண்ணிய அந்த மாணவன் “இந்தக் கூலியாட்களுடைய பிள்ளைகள் எல்லாம் படிக்கத் தொடங்கியிட்டாங்கள். இனிமேல் வேலியடைக்க ஆள் கிடையாது. அதனால் மதில் கட்ட வேண்டியதுதான்!” என்றான். அடி எனக்குத்தான் என்று கருதியநான் “பொத்தடா வாயை!” என்று குமுறலுடன் அவனை எச்சரித்தேன். அவ்வளவுதான்! அவன், கீழே கிடந்த பட்ட கதியால் ஒன்றை எடுத்து எனக்கு ஓங்கி அடித்துவிட்டான். நானும் இன்னொரு கதியாலை எடுத்து அவனுக்கு அடிக்க ஓங்கிய வேளை அங்கு வந்த தலைமையாசிரியர் என்னைத் தடுத்து விட்டார். பின்னர் பாடசாலை முடியும் தருணத்தில் அனைவரையும் தன் மேசையண்டை அழைத்து என்னை வீட்டுக்குப் போகும்படி கூறிவிட்டு, மற்ற மாணவர்களுக்குத் ஏதோ புத்திமதி கூறி, எனக்கு அடித்தமாணவனைக் கண்டித்து வீட்டுக்கு அனுப்பினார். இத்தனைக்கும் இந்த மாணவனின் பின்புலம் யாது? மகாத்மா காந்தி 1927ல் இலங்கைக்கு விஜயம் செய்த வேளை யாழ்ப்பாணத்தும் விஜயம் செய்து, தென்மராட்சியிலுள்ள வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு வந்து, பருத்தித் துறை மக்களுக்குத் தரிசனம் செய்தருளினார். வேளையிலே காந்திஜியின் அகிம்சைக் கருத்துகளில் தன்னை அர்ப்பணித்துக் கதர் அணிந்து வாழ்ந்த ஓர் அன்பரின் புத்திரச் செல்வம் தான் அந்த மாணவன். அவனுக்குத் தந்தையார் இட்டபெயர்: கரம் சந்திர மோகனதாஸ் காந்தி. பெயரில் என்ன இருக்கிறது? ரோஜாவை எந்தப் பெயரால் அழைத்தாலும் ரோஜா ரோஜாதான் என்று மேலைநாட்டறிஞன் என்ன சும்மாவா சொல்லிவைத்தான்?

பின்னர் நான் வேறுகல்லூரிகளில் படித்தபோது நிறையப்பத்திரிகைகள் புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கினேன். எனது கிராமத்துக் கண்மையில் தான் புகழ்பூத்த தமிழறிஞர் கந்தமுருகேசனார் வாழ்ந்துவந்தார். ஈ.வே.ரா. பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையை இலங்கையில் முதன்முதலில் பரப்பிய பேராசான் கந்த முருகேசனார்தான். அவரிடமிருந்து பெரியாரின் குடியரசு, சி.என். அண்ணாத்துரையின் திராவிடநாடு ஆகிய பத்திரிகைகளையும், பகுத்தறிவுப் புத்தகங்களையும் படிக்கத் தொடங்கி காலப்போக்கில் மார்க்ஸிய நூல்களையும் படித்து, நாஸ்திக வாதம் இடதுசாரிக் கொள்கைக்கு இட்டுச் சென்றது. அந்நாட்களில்இலங்கையில், குறிப்பாகச் சிங்களவர் மத்தியில், வெள்ளையர் ஆட்சியை எதிர்த்தும், சுதந்திரத்தை முன்னெடுத்தும் ‘சூரியமல்’ என்ற இயக்கத்தை ஆரம்பித்து நமது தேசபக்தர்களில் சிலர் சற்றுக்காலம் தாழ்த்தி ஆரம்பித்த அரசியல் கட்சிதான் லங்கா சமசமாஜக்கட்சி. அக்கட்சியின் ‘ட்ரொஸ்கிய’ வாதக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாத மார்க்ஸியவாதிகளான டாக்டர் எஸ்.ஏ. விக்கிரம சிங்கா பீற்றர் கெனமன், எம்.ஜி. மென்டிஸ் போன்றவர்கள் சமசமாஜக் கட்சியிலிருந்து பிரிந்து 1943ல் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்துப் பணியாற்றத் தொடங்கினர்.

கொழும்பிலும் அதன் புறநகர்களில் வேர்விடத் தொடங்கிய கம்யூனிஸ் கட்சி, யாழ்ப்பாணத்திலும் இயங்கத் தொடங்கியது. தோழர்கள். அ. வைத்தியலிங்கம், மு. கார்த்திகேசன், எஸ். இராமசாமி அய்யர், ஐ.ஆர். அரியரத்தினம், எம்.சி. சுப்பிரமணியம் போன்றோரின் அர்ப்பணிப்பான சேவையுடன் கட்சி இயங்கிக் கொண்டிருந்தது. தோழர். எம்.சி. சுப்பிரமணியம் வாலிபப் பிராயத்திலே மகாத்மா காந்தியடிகள் வெள்ளையருக்கெதிரான சத்தியாக்கிரகப் போராட்டத்துடன் சாதியழிப்புப் போராட்டத்தையும் முன்னெடுத்துச் சென்றதால் கவரப்பெற்று காந்தி பக்தராயிருந்தார். சில காலத்தின் பின் வெள்ளையருக்கெதிராகத் தீவிரவாதப் போராட்டம் நடத்திய சுபாஸ் சந்திரபோஸின் கொள்கையினால் உந்தப்பட்டு அவ்வீரனுடைய பாதையில் வழி நடந்தார். இக்காலத்தில் எம்.சி. தனக்குப் பிறந்த பிள்ளைக்கு சுபாஸ் சந்திரபோஸ் என்று பெயர் சூட்டிப் பெருமையடைந்தார்.

இக்காலத்தில் எம்.சி. தாழ்த்தப்பட்ட மக்களின் சேவைக்குத் தன்னை இதயபூர்வமாக அர்ப்பணித்துச் சேவையாற்றிக் கொண்டிருந்தபோது ஒரு வரலாற்றுத் திருப்புமுனைச் சம்பவம் ஒன்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் பலாலி றோட்டிலுள்ள சூரிய குளத்தடியில் ஓர் அம்மையார் நோய் வாய்ப்பட்டு இறந்து போனார். யாழ் பட்டினத்திலுள்ள தாழ்த்தப்பட்ட சாதியினர் யாராவது இறந்து போனால் பட்டினத்தின் வடக்கு மூலையிலுள்ள கோம்பையன் மணல் சுடலை என்று அழைக்கப்படும் சுடுகாட்டுக்குக் கொண்டு போய்த்தான் சுட்டெரிக்க வேண்டும். எப்படியும் மூன்று மைல் தூரமிருக்கும். அதே வேளை பட்டினத்தின் தெற்கெல்லையில் முற்றவெளிக் கண்மையில் வில்லூன்றி என்ற பெயரின் ஒரு மயானம் இருக்கிறது. ஒரு மைலுக்குக் குறைவான தூரம். எம்.சி. தன் சேவையினை ஆரிய குளத்தில் உள்ளவர்களோடு இணைந்து நடத்தியமையால், அந்த அம்மையாரின் சடலத்தை வில்லூன்றியில் சுட்டெரிப்பதாக முடிவு செய்தார்கள். மாலை வேளையில் சவம் சுட்டெரிக்கப்பட்டது.

மறுநாள் தாடாத்துவதற்காகச் சாம்பல் அள்ளச் சென்ற வேளை சாதிவெறியர்கள் துப்பாக்கியால் சுட்டதில் முதலி சின்னத்தம்பி என்ற திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தந்தையான வாலிபர் ஸ்தலத்திலேயே மரணமானார். நாலைந்து பேருக்குக் காயம். அப்போது இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று செனட் சபையும் தெரிவு செய்யப்பட்டு இயங்கிக் கொண்டிருந்தது. அய்க்கிய தேசியக் கட்சிதான் ஆளும்கட்சி. டி.எஸ். சேனநாயக்கா பிரதமர். மல்லாகத்தைச் சேர்ந்த ஏ.பி. இராசேந்திரா என்பவர் கொழும்பிலுள்ள பெரிய நிறுவனமொன்றில் தொலுக்கு முதலியாராக - மொழி பெயர்ப்பாளர் - பணியாற்றிக்கொண்டிருந்தார். கொழும்புதான் வசிப்பிடம். பாராளுமன்றம் கூடிய கையோடு செனட்சபை நியமிக்கப்பட்டது. இராசேந்திராவும் செனட் சபையில் ஓர் அங்கத்தவராக இயங்கிக் கொண்டிருந்தார். இந்நிலைமையில் சூடு பட்டிறந்த முதலி சின்னத்தம்பியின் உடலை வில்லூன்றியிலேயே சுட்டெரிக்க வேண்டுமென்று இளைஞர்கள் பலரும் முனைப்புடன் செயற்பட்டு செனட்டர் இராசேந்திரா மூலம் அரசாங்கத்திலிருந்து அனுமதி பெறுவதற்கு எம்.சி.யும் நண்பர்களும் கொழும்பு சென்று இராசேந்திராவுக்கு அழுத்தம் கொடுத்தனர். கொழும்பிலிருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்காததனால் நான்கைந்து நாட்களின் பின் முதலி சின்னத்தம்பியின் பூதவுடலுக்கு கோம்பையன் மணல் மயானத்திலேயே கொள்ளி வைக்கப்பட்டது. நாலைந்து ஆண்டுகள் கழித்து எளிய சாதியினரின் உடல்கள் வில்லூன்றியிலேயே எரியூட்டத் தொடங்கினார்கள். பிற்போக்குவாதி ஒரு போதும் உடனடியாக அடிபணிய மாட்டான் காலப்போக்கில் பணிந்து விடுவான்’ என்று மா.ஓ.சே.துங் சொன்னது இங்கே நிருபணமாயிற்று.

நளச்சாதியினரான்கள் இறக்கும் தொழிலாளர்கள் மிகவும் பாடுபட்டு உழைத்தும் பயன்பெறாது வருந்திக்கொண்டிருப்பதை நேரடியாகக் கண்டு கொண்ட எம்.சி. சுப்பிரமணியம் அவர்களின் முன்னேற்றத்துக்கு உழைப்பதற்காக கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கத்தை ஸ்தாபித்தார். பின், தன்சாதியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மட்டும் உழைக்காமல் வடபுலத்திலுள்ள தாழ்த்தப்பட்டவர்களான நளவர், பள்ளர், பறையர், வண்ணார், அம்பட்டர் ஆகிய சகலரது முன்னேற்றத்துக்காகவும் அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்ற இயக்கத்தை ஆரம்பித்து அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்தினார். அக்காலத்தில் அவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகச் செயற்பட்டதால் சிறுபான்மைத் தமிழர் வசிக்கும் கிராமங்கள் எல்லாவற்றுக்கும் சென்று கட்சிப்பணியை முன்னெடுத்துச் சென்றார். இந்த வகையில் அவர் பருத்தித்துறைக்கு வந்து என்னுடன் தொடர்பு கொண்டார். வேளையிலே நாஸ்திக வாதக் கொள்கையினால் கவரப்பட்ட நான், கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். இதன் காரணமாக எனது எழுத்துக்கள் முற்போக்கு இலக்கியப் பாதையில் நடை போடத் தொடங்கின.

கேள்வி: சாதி ஒடுக்கு முறையை அப்போதிருந்த தமிழ்த் தேசியவாதிகளான தமிழரசுக் கட்சியினர் எப்படி அணுகினர்?

பதில்: தமிழரசுக் கட்சியினர் சாதியடுக்குமுறைக் கெதிராக கடுகளவு பணியாற்றியதுமில்லை. பாரம்பரியமான பிற்போக்கு வாதக் கருத்துக்களின் அடிப்படையிலேயே தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பாராளுமன்றத் தேர்தல்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து, வேளையிலேயே சாதி முறைக்கெதிராகப் பாடுபட்டு வந்த, சகலராலும் அன்பாக ஜெயம் என்று அழைக்கப்பட்ட சி. தர்மகுல சிங்கம் முதலாவது பாராளுமன்றத் தேர்தலிலும் (சமசமாஜக் கட்சியின் ஆதரவுடன்) தொடர்ந்து பொன் கந்தையா கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் போட்டியிட்டதால் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் இந்த அபேட்சகர்களுக்கே தமது வாக்குகளைச் செலுத்தினார்கள். அதேவேளை, வதிரியைச் சேர்ந்த பள்ளர் சமூகத்தவர்கள் மிதவாதப் போக்கில் தமது வாக்குகளை தமிழரசுக் கட்சியினருக்கு அளித்தார்கள். அதற்கொரு அடிப்படைக் காரணம் இருந்தது. அவர்கள் மற்றைய எளிய சாதியினரைப் போல வேளாண் சமூகத்தவர்களுக்கு அடிமை வேலை செய்யாமல் சொந்த ஊரிலும் இலங்கை முழுவதுமுள்ள பட்டினங்களிலும் சாப்பாத்துத் தொழில் செய்து வியாபாரம் செய்வதால் மேல் சாதியினரின் நேரடி ஒடுக்கு முறைகளுக்காளாவதில்லை. அதனால் அவர்கள் தமிழரசுக் கட்சிக்கே தமது வாக்குகளை அளித்தனர். இரண்டாவது பாராளுமன்றத்தேர்தலில் வதிரியைச் சேர்ந்த இராசலிங்கம் என்பவர் போட்டியிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை.

கேள்வி: சாதி ஒடுக்கு முறையை இடதுசாரிகள் எவ்விதம் அணுகினார்கள்?

பதில்: சாதிய ஒடுக்குமுறை _ இடது சாரிகளின் அணுகு முறை. இடதுசாரிக்கட்சிகள் உழைக்கும் மக்களின் வியர்வையிலிருந்து தொடங்கப்பட்டவை. நிற, இன, மொழி, வர்க்க வேறுபாடுகளை அழிப்பதற்கே அவை ஆரம்பிக்கப்பட்டவை யாதலால், மக்கள் நலனே அவற்றின் இலட்சியமாகும்.

கேள்வி: சிறுபான்மைத்தமிழர், மகாசபைக்கு தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் என்ன பங்கிருந்தது?

பதில்: எம்.சி. சுப்பிரமணியம் வாலிபப் பிராயத்திலிருந்தே சிறுபான்மைத் தமிழர்களின் விடுதலைக்காகப்பாடுபட்டவர். அவர், கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகப்பாடுபட்டு வந்ததனால் சிறுபான்மைத் தமிழர்களுக்கு உயர்சாதி வேளாளரினால் இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு எதிராகப் போராடிவந்தார். இதனிமித்தம் ஆலயப்பிரவேசம் தேனீர்க் கடைப்பிரவேசம் சைவபாடசாலைகளில் எளியஞ் சாதி மாணவர்க்கான அனுமதி இப்படியான தொடர்ப்பாடுகளில் ஈடுப்பட்டார். அவருடைய முயற்சியால் பல ஆலயங்கள் திறந்து விடப்பட்டன. தேனீர்க் கடைகளில் பாகுபாடு நிறுத்தப்பட்டது. பாடசாலைகளிலும் எமது மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலைமையில் தான் மாவிட்டபுர போராட்டம் நடைபெற்றது. அக்காலத்தில் இலங்கையை ஸ்ரீமாவோ அம்மையார் ஆட்சிபுரிந்தார். அம்மையாருக்கு கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக்கட்சி போன்ற இடதுசாரிக் கட்சிகள் பக்க பலமாயிருந்தன. கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுதலின் பேரில், எம்.சி. சுப்பிரமணியம் பாராளுமன்றத்தில் நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டு பணியாற்றிக் கொண்டிருந்தார்.

கொட்டா றோட்டிலிருந்து இயங்கி வந்த கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கொள்கை வேறுபாட்டினால் பிளவு ஏற்பட்டு தோழர். நா. சண்முகதாசன் தலைமையில் ஒரு பகுதியினர் பிரிந்து தீவிர வாதப் போக்கைக் கடைப்பிடித்து இயங்கினர். ரஷ்யாவை ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் குருச்சேவ் திரிபு வாதப்போக்கில் இயங்கிவர, சீனாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி சீனத்தலைவர் மாஓசே - துங்கினால் புரட்சிகரப்பாதையில் இயங்கத் தொடங்கியது. இந்த நிலைப்பாடு உலகம் முழுவதுமுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் தலைத்தூக்கத் தொடங்கியது. இலங்கையிலும் இந்தப் பிளவு நிலை ஏற்பட்டது. யாழ்ப் பாணத்தில் சாதிக்கொடுமைகளினால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அனைவரும் அணிதிரண்டு கோயில் போராட்டங்களில் ஈடுபட்டனர். மாவிட்டபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தை அமைதிப்பாதையில் மேற்கொண்டனர். அதனால் ஆலய வாசலில் அமர்ந்து சாத்வீகப் போராட்டத்தை நடத்தினர்.

ஆலய வாசலைத் தடுத்து ஒரு சூரன் வழிமறித்து நின்று கொண்டிருந்தான். ஆலய மூலஸ்தானத்தில் கற்களும் குண்டாந்தடிகளும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. சூரனைச்சுற்றிச் சண்டியர்கள். இத்தனைக்கும் அந்தச் சூரன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். பாராளுமன்றத்தில் அடிக்கடி அதை இதைக் கேட்டு அல்லது மற்றவர்கள் - பேசும் போது குறுக்கீறு செய்து புரளி பண்ணுவதால் அடங்காத்தமிழன் என்று பெயர் சூடப்பட்டவர். எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த கணிதமேதை. இரண்டாவது எலிஸபேத் மகாராணி அவர்களுக்குக் கணிதபாடம் கற்பித்த பேராசான். அவர்தான் சி. சுந்தரலிங்கம்.

எம்.சி. சுப்பிரமணியம் பாராளுமன்றத்தில் நியமன அங்கத்தவராயிருந்தபடியால் அடிக்கடி பிரதமர் ஸ்ரீமாவோ அம்மையாரைச் சந்தித்து இதற்கு ஒரு விடிவு ஏற்படுத்தித்தர வேண்டுமென்று வேண்டிக் கொண்டிருந்தார். அவரால் என்ன செய்ய முடியும்? அடங்காத்தமிழனின் அட்டகாசங்களை நேரடியாக அனுபவித்தவராயிற்றே! கொழும்பிலுள்ள பிரதம பொலிஸ் அதிகாரியுடன் தொடர்பு கொண்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு பணித்தார். கோவிலுள்ள பக்தர்களுக்கு அங்கு கடமையிலீடுபட்டுள்ள பொலிஸார் உதவுவார்கள் என்று உறுதி அளித்தார்.

சுந்தரலிங்கம் அய்யா கோயில் வாசலைத் தடுத்துக் கொண்டிருக்கும் போது பொலீஸ்காரன் எம்மாத்திரம்? யாராவது கோவிலில் நுழைய முற்படும் போது அய்யாவுக்கு முதல் பொலிஸ்காரரே அவனைத் தடுத்து விடுவார்களே! இப்படியே இரண்டு நாட்கள் கழிய பொலிஸ்காரருக்கும் இந்நிகழ்வு பெரும் உபத்திரவுமாயிருக்க, கோயில் தேர்த்திருவிழாவை நிறைவேற்ற வேண்டியத் தேவையும் ஏற்பட்டது. அதனால் பொலிஸ் இன்ஸ்பெக்டர் அமைதிப் போராட்ட வீரர் அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று சற்று அதிகாரத்துடன் அவர்களை கலைத்து விட்டார். பொலிஸ் தலையீட்டினால் அவர்கள் கலைந்து செல்ல வேண்டியேற்பட்டது. மறுநாள் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்ல உயர்சாதி மக்களுமின்றி, கோயில் குருக்கள்மார் மற்றும் எடுபிடி வேலைகள் செய்பவர்களுடனேயே தீர்த்தோர்ச்சவம் நடைபெற்றது. ஆனால் மறு வருடம் தீர்த்தோச்சவம் எவ்வித எதிர்ப்புகளுமின்றி, தாழ்த்தப்பட்ட மக்களுடன் உயர்சாதி மக்களும் பெரும் திரளாக இணைந்து நடைபெற்றது. பிற்போக்குவாதி ஒரு போதும் உடனடியாக பணிந்து போக மாட்டான் காலப்போக்கில் பணிந்து விடுவான் என்று மா.ஓ.சே. துங் சொன்னது மீண்டும் ஒரு தடவை நிருபணமாகியது.

சிறுபான்மைத் தமிழர் மகாசபையைச் சேர்ந்த சிறுகூட்டத்தினர் சிறு அளவு பங்களிப்புச் செய்தாலும் பிற்போக்கு வாதிகளை ஓரங்கட்டிய பெருமை தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கத்துக்கே சேரும் என்பது வரலாற்றுப் பதிவாகும்.

கேள்வி: கம்யூனிஸ்ட்கள் சீனக்கம்யூனிஸ்ட்கள் என்றும் ரஷ்யக்கம்யூனிஸ்ட்கள் என்றும் பிரிந்தது சிறுபான்மைத் தமிழர் மகாசபையை எவ்விதம் பாதித்தது?

பதில்: இதற்கு முதற்கேள்வியில் பதிலளித்திருக்கிறேன். உயர்சாதியினரால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற காரணத்தால், தீவிரப்போராட்டமே தமது விடுதலைக்கு வழி என்ற திடமான நம்பிக்கையில், திரிபுவாதக் கம்யூனிஸ்ட் கட்சியை விடுத்து புரட்சிக்கட்சியாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து போராடியதனால்தான், யாழ் மண்ணில் நடைபெற்ற போராட்டங்களில் வெற்றி கிடைத்தது.

கேள்வி: அப்போது ஒரு முற்போக்கு எழுத்தாளர்களிடமே பெரும் செல்வாக்கு வகித்து வந்த பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தில் வகித்த பாத்திரமென்ன?

பதில்: தாங்கள் குறிப்பிட்டிருந்த பேராசிரியர்கள் இருவரும், இத்தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் போராட்டங்களில் தங்கள் படிப்பு, பதவி நிலைக்கேற்ப பங்களிப்பினை நல்கியுள்ளனர். அக்காலையில் இவ்விரு பேராசிரியர்களும் யாழ் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார்கள். மாணவர் மத்தியில் இக்கருத்துக்களை வலியுறுத்தி, இந்தச் சாதி ஒழிப்புப் போராட்டங்களில் அவர்களையும் ஈடுபடச் செய்தார்கள். கைலாசபதி ஓர் வேளாள குடும்பத்தில் பிறந்தவர். சிவத்தம்பி ஓர் இடைச் சாதியைச் சேர்ந்தவர். இந்நிலையில் கைலாசபதி வேளையில் தினகரன் பத்திரிகை ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் சாதி ஒழிப்பு உட்பட பலவிதத் தொழிலாளர் போராட்டங்களை அடிப்படையாக வைத்து ஆக்கப்பட்ட முற்போக்கு இலக்கியத்தைக் கட்டி வளர்த்தவராதலால் அவரது பங்களிப்பு மேலானது என்பது என் கருத்தாகும்.

கேள்வி: சாதிய வன்முறைக்குத் தக்க பதில் எதிர் வன்முறைதான் என்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: இதற்கு அதிக விளக்கம் தேவையில்லை. சாதீய வன்முறைக்கெதிராகவல்ல சகல விதமான வன்முறைகளுக்கும் எதிர்வன்முறைகளே காலம்காலமாக நடைபெற்று வருகின்றது. தற்போது நமது பிறந்த மண்ணில் போராளிகளுக்கும் அரசுக்கு மிடையில் புரிந்துணர்வு என்ற பெயரில் சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடைபெற முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் தொடக்கத்தில் இரு பகுதியினராலும் தாக்குதல்களும் கொலைகளுமே நடைபெற்றுக் கொண்டிருந்தன. எனினும் தொடர்ந்து அழிவுகளை எப்பகுதியினராலும் தாங்கிக் கொள்ள முடியாது. விட்டுக் கொடுப்புகள் மூலம் ஒற்றுமையாக வாழ முடியும். உலக மகாயுத்தத்தில் ஈடுபட்டுப் பேரழிவுகளைச் சந்தித்த நாடுகள் தற்போது நட்புறவு நாடுகளாக வாழ்வதை நாம் காண்கிறோம். அதே வேளை பெருங்கொடுமைகளுக்கு மத்தியிலும் சாந்தி மார்க்கத்திலிருந்து இம்மியும் வழுவாது வாழ்ந்து காட்டிய மகாபுருஷர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள். இயேசுக் கிறிஸ்து என்ற தெய்வமாக மகாத்மா காந்தி என்ற புதல்வனை நாங்கள் வணங்கி வருகின்றோம்.

கேள்வி: ஒரு பாட்டாளி வர்க்கத் தலித்துக்கும் அதே பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த வெள்ளாளருக்கு மிடையில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வையும் பகைமையையும் எவ்விதம் முடிவுக்குக் கொண்டுவரலாம் எனக் கருதுகிறீர்கள்?

பதில்: பாட்டாளி வர்க்கத் தலித்துக்கும், அதே பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த வேளாளருக்குமிடையில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வு தீர்க்கப்பட முடியாதது. உழைக்கும் பாட்டாளி மக்கள் நிலவுடமையாளரால் சுரண்டப்படும்போது அவர்கள் எந்தச் சாதியினராயிருந்தாலும் ஒன்றுபட்டுச் சுரண்டலுக் கெதிராகப் போராடுவார்கள். அதனால் சாதி ஒழிந்து விட்டது என்று அர்த்தமில்லை. அந்தப் போராட்டத்தின் போது சாதித் தடிப்பு நிறம் மங்கினாலும் அதன் அடிப்படையான பாகுபாடு இருந்து கொண்டேயிருக்கும்.

கேள்வி: அறுபதுகளில் வீச்சுடன் எழுந்த சாதி ஒழிப்புப் போராட்டம் எழுபதுகளின் பிற்பகுதியில் செயலிழந்ததற்கான காரணங்கள் எவை?

பதில்: ஆரம்ப காலந்தொட்டே யாழ்ப்பாணச் சமுதாயத்தில் நிலவிவந்த சாதிக் கொடுமைகள் கோவில்களில் உள் நுழைந்து வணங்கத்தடை, தேனீர்க்கடைகளில் உள்நுழைந்து உணவருந்தத்தடை, பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட சிறுவருக்குக் கல்வி கற்கத்தடை போன்ற கொடுமைகள் முதலில் சிறுபான்மைத் தமிழர் மகா சபையாலும், பின்னர் தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கத்தாலும் இல்லாதொழிக்கப்பட்டன. எழுபதுகளில் தமிழீழவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடிருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன உயர்சாதி வேளாளரின் மனதில் சாதித் தடிப்பு மறைந்து கொண்டேயிருக்கின்றது.

N.K. Raguanathan கேள்வி: தற்போது நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் கனடாவில் ஈழத்தமிழர்களிடையே சாதியச் சிக்கல்கள் உள்ளனவா?

பதில்: கனடா ஓர் இயந்திரமயமான நாடு. ஒருவர் காலை மாலை என்று இரண்டு நேரம் வேலை செய்து உழைத்துத்தான் சீவியம். பெண்களும் வேலைக்குப் போகிறார்கள். குடும்ப உறவினர்கூட அக்கம் பக்கத்தில் வசித்தாலும் ஒரு நன்மை தீமை நிகழ்வுகளில் பங்குபற்றுவார்களே தவிர, சாதாரணமாக ஒருவர் வீட்டுக்கு இன்னொருவர் வந்து கதைத்துப் பேசிக் காலம் கழிப்பது கிடையாது. அதனால் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும் தானுண்டு தன்பாடுண்டு என்ற போக்குத்தான் வாழ்க்கை முறை. குடும்ப நிகழ்வுகளில் பங்குப் பற்றுவதனால் தானே சாதிச்சிக்கல்கள் வரவாய்ப்புண்டு. ஒரு பிரச்சினையுமில்லாத வாழ்வியல்.

கேள்வி: கந்தன் கருணை நாடகம் எழுதிய சூழலையும் அந்நாடகம் ஏற்படுத்திய அதிர்வுகளையும் சொல்லுங்கள்!

பதில்: கந்தன் கருணை நாடகம் எழுதிய சூழலை முன்பு இலாசாகச் சுட்டி காட்டியுள்ளேன். மாவிட்டபுரம் கோயில் வாசலில் அமர்ந்து அமைதிப் போராட்டம் நடத்திய மக்களில் நானும் ஒருவன். அக்காலத்தில் நான் வீச்சுடன் முற்போக்கு இலக்கியம் படைத்துக் கொண்டிருந்ததாலும், முற்போக்கு இயக்கச் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்ததாலும் கோயில் முகப்பிலிருந்தபோதே, கந்தன் கருணை என்ற இந்த நாடகத்தை எழுதக் ‘கந்தன் கருணை’ புரிந்தான். இந்தப் போராட்டம் 1968ல் நடைபெற்றது. 1969ல் நான் இந்த நாடகத்தை எழுதினேன்.

கேள்வி: சாதி வெறி கோலோச்சிய சூழலில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களான நீங்கள் டானியல், டொமினிக் ஜீவா, எஸ்.பொ. போன்றவர்கள் எப்படித்தடைகளை உடைத்துக் கொண்டு உருவானீர்கள்?

பதில்: நானும் டானியலும் மாவிட்டபுரம் போராட்டத்தில் மிக ஈடுபாட்டுடன் பங்கு பற்றினோம். என்னைவிட டானியல் மும்முரமாகப் பாடுபட்டார். திரிபுவாதக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிநடத்தலில் இயங்கி வந்த அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையிலிருந்து விலகி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் வழி நடத்தப்பட்ட தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் முன்னெடுப்பினால் தீவிரவாத இளைஞர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். டானியல் சரியான வேகத்துடன் செயற்பட்டார். தங்க வடிவேல்தான் இப்போராட்டச் செயற்பாடுகளின் இயக்குநர். சுன்னாகத்தைச் சேர்ந்த எஸ்.ரி.என். நாகரத்தினத்தின் தலைமையில் தான் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. டொமினிக் ஜீவா சிறுபான்மைத் தமிழர் மகா சபையிலிருந்ததால் கோவிற்பக்கம் தலை காட்டவே இல்லை. எம்.சி.சில தோழர்களுடன் கோவிற்பக்கம் வந்து உடனேயே திரும்பிவிட்டதாக முன்னர் தெரிவித்திருக்கிறேன். எம்.சி.யின் மைத்துனர் (எஸ்.பொ) வேளையிலேயே பேனாவை வேறு திசைக்கு மாற்றி லீலைகள் புரியத் தொடங்கிவிட்டார். அத்துடன் அவர் மட்டு நகரில் திருமணம் செய்து அங்கேயே படிப்பித்துக் கொண்டிருந்தார். மாவிட்டபுர நிகழ்வு மட்டுமல்ல, மற்றும் சாதிவெறிப் போராட்டம் எதுவும் அவர் மனதைத் தொடவுமில்லை; பேனாவை நகர்த்தவுமில்லை.

கேள்வி: ஈழத்தமிழ் இலக்கியத்திலும் சாதி ஒழிப்புப் போராட்டத்திலும் மு. தளையசிங்கம், ஏ.ஜே. கனக ரத்தினா போன்றவர்களின் பங்களிப்பு எத்தகையது?

பதில்: எனக்கு மு. தளையசிங்கத்தைப் பற்றி எதுவும் தெரியாது. அவரது இலக்கிய நிலைப்பாடு முற்போக்கு இலக்கிய வாதிகளின் கவனத்திற் கொள்ளப்படவில்லை. ஏ.ஜே. கனகரத்தினா எங்களைப் போல் களத்தில் நின்றுப் போராடிய வரல்லர் என்றாலும் முற்போக்கு எழுத்தாளர்களின் கதைகளை பெருமளவில் மொழி பெயர்த்திருக்கிறார். என்னுடைய ‘நிலவிலே பேசுவோம்’ என்ற கதையை வேளையிலும் ‘குடை’ என்ற கதையை அண்மையிலும் மொழிபெயர்த்திருக்கிறார். ஏ.ஜே. கதைகளும் எழுதியிருக்கிறார். பல அரிய தத்துவக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தத்துவக்கோட்பாட்டுக் கட்டுரைகள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கொண்டு வந்துள்ளார்.

கேள்வி: இன்றைய சூழலில் ஈழத்தில் தாழ்த்தப் பட்டவர்களுக்காக கல்வி, வேலை வாய்ப்பு, தேர்தல் தொகுதிகள் ஆகியவற்றில் இடஒதுக்கீடுகள் கோருவது குறித்து உங்கள் கருத்தென்ன?

பதில்: எழுபது ஆண்டுகளுக்குமுன் பருத்தித்துறையில் எனது சமூகத்தவர்கள் வாழும் நான்கு கிராமங்களிலுமுள்ள சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட வீடுகளிலும் வாழ்ந்த மக்களின் பிள்ளைகளில் இரண்டே இரண்டு மாணவர்கள் மாத்திரம் படித்த ஆசிரியர்களாகப் பணியாற்றினார்கள். ஒருவர் பசுபதி மற்றவர் _ நான். பசுபதி என்னிலும் மூத்தவர். பசுபதி கவிஞராகவும், நான் எழுத்தாளராகவும் துளிர்த்தோம். அடக்கி ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து படித்து ஆசிரியரானது மட்டுமல்ல, சமூக முன்னேற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுழைத்தமையால் அவர் கவிஞனாகவும் நான் எழுத்தாளனாகவும் ஒளிபாய்ச்ச முடிந்தது. தற்போது எல்லாப்பிள்ளைகளுமே கல்வி கற்கிறார்கள். பல்கலைக்கழகங்களிலும் படித்து, டாக்டர், எஞ்சினியர், பல்கலைக் கழக விரிவுரையாளர், வங்கி முகாமையாளர், கணக்காளர் என உயர்பதவி வகிக்கின்றார்கள். தேர்தல் தொகுதிகளில் இடஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை. மக்கள் பணிக்காகத் தேர்தல் தொகுதிகளில் போட்டியிடுவதென்பது வெளிப்பகட்டு. மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவை என்று சொல்லப்பட்டாலும் பதவிஆசை, பணச் சேகரிப்பு, போன்றவையே மறை நிலைக் காரணிகளாகின்றன.

கேள்வி: ஈழத்தில் முப்பது வருடகால யுத்தத்துக்குப் பின்பும் சாதியம் உயிருடன் இருப்பது குறித்து?

பதில்: இதற்கு முக்கியக் காரணம் ‘இந்துத்துவ’க் கோட்பாடேயாகும். ‘யாதுமூரே யாவரும் கேளிர்’ என்ற பூங்குன்றனார் என்ற பெரும்புலவர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூறினார். நேற்று வந்த பாரதி கேளடா மானுடா! இங்கு கீழ் என்றும் மேல் என்றும் இல்லை! என்று வயது வந்தவர்களுக்கு மண்டையில் அடிக்காத முறையில் கூறிவிட்டு எங்கே இந்த மரமண்டையர்கள் இந்தச் சாதிவெறியைக் குழந்தைகளுக்கும் புகுத்திவிடுவார்களோ என அச்செல்வங்களை அரவணைத்துச் ‘சாதிகள் இல்லையடி பாப்பா!’ என்று செல்லம் கொஞ்சுகிறார். பூங்குன்றனாரிலிருந்து பாரதிவரை என்னத்தைச் சொல்லி என்ன? இந்தியாவில், தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட பலசாதிகளையும் ஒன்றிணைத்து அங்குள்ள பெருங்குடி மக்கள் தலித்துகள் என்று அழைக்கிறார்கள். நாம் பிறந்த பூமியில் விசேடமாக யாழ் மாவட்டத்தில் நளவர், பள்ளர், பறையர், வண்ணார், அம்பட்டர் ஆகிய அய்ந்து சாதியினரையும் ஒன்று சேர்த்து பஞ்சமர்’ என்று அழைக்கின்றார்கள். இவற்றுக்கெல்லாம் முடிவு எப்போது?

கேள்வி: தீண்டாமை ஒழிப்புப் போரின் போது ஈழத்தமிழ் இலக்கியவாதிகள் எவ்வாறு அப்போரில் பங்கெடுத் தார்கள்? அல்லது அப்போராட்டத்தால் யார் யார் உந்தப் பட்டு புத்திலக்கியங்களை எழுத முற்பட்டார்கள்?

பதில்: தீண்டாமை ஒழிப்புப் போரின் போது முற்போக்கு எழுத்தாளர்கள் அனைவருமே நேரடியாகவும் எழுத்து முயற்சி மூலமாகவும் பங்கெடுத்தார்கள். டானியல், ஜீவா இவர்களுள் முக்கியமானவர்கள். அந்நாட்களில் கதவுகள் என்றத் தலைப்பில் நான் ஒரு கதை எழுதினேன். தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்தினால் கோயில்கள் திறந்துவிடப்பட்டன. தேனீர் கடைகளில் பாகுபாடு நிறுத்தப்பட்டது. பாடசாலைகளில் அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்தப் போராட்டங்களில் பங்குபற்றி ஒரு தந்தை, நல்லூர் கந்தசாமி கோயில் கொடியேற்றம் தொடங்கி விட்ட படியால், தன்னுடைய சின்னக் குழந்தையையும் கூட்டிக் கொண்டு ‘இருபது மைல் தூரத்துக்கப்பாலுள்ள தன் வீட்டிலிருந்துப் போகிறார். கோயிலில் ஏகப்பட்ட சனக்கூட்டம். பிள்ளையைக் கையில் பிடித்துக் கொண்டு கோயிலுக்குள்ளே நுழைந்து கைகளைத் தூக்கி “முருகா குறமகள் வள்ளியை வாரியணைத்தவனே! சாதி பாராமல் உன் அடியார்கள் உன்னைத் தொழ திருவருள் பாலித் தவனே” மனதுக்குள் தியானத்துக் கொண்டு வணங்கினான். சனநெரிசல். பிள்ளை நெரிசலில் அகப்பட்டுத் திணறிக் கொண்டிருந்தது. அழாக் குறையாகத் தந்தையின் இடையைத் தொட்டு “வெளியாலை போவம் அப்பா! எனக்குப் பசிக்குது!” என்று முணுமுணுக்கத் தொடங்கியது.

தந்தை பிள்ளை நடக்கத் தடுமாறியதால் அவனைத்தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு வெளியே வந்தார். முன்னாள் உள்ள கடைக்குள் நுழைஞ்ச அங்கும் நெரிசலாயிருந்தக் காரணத்தால் ஒரு இருக்கையைத் தேடிப்பிடித்து அதில் உட்கார்ந்து, குழந்தையை மடியில் இருத்திவிட்டு “உனக்கு என்ன வேணும்?” என்று கேட்க, குழந்தை அக்கம் பக்கமெல்லாம் பார்த்துவிட்டு “இட்டலி!” என்றான். அவர் சொன்னதும் இட்லியும் சாம்பாரும் மேசைக்கு வந்தது. ஒரு இட்லியை எடுத்து சாம்பாருடன் பிசைந்து குழந்தைக்குத் தீர்த்தினார் சாப்பிடாமல் அதிகாலை வேளை வீட்டிலிருந்து புறப்பட்டமையால் குழந்தைக்கு நல்லபசி. ருசித்துச் சாப்பிட்டான். அவன் சாப்பிட்ட பிற்பாடுதான் அவர் வாய் நனைக்க வேண்டும். இந்த நிலையில் “யாராது செல்லனா?” என்று ஒரு மிறாய்ப்புக் குரல் கேட்டு அந்தப்பக்கம் திரும்பினான் செல்லதுரை. எதிரே நின்றது ஊர்க்காரர், உயர்சாதிக்காரர் ‘எப்போதிருந்து இது” என்று மீண்டும் மீண்டும் கேட்பதற்கிடையில் அவனைச் சுற்றி ஒரு கும்பல் கூடி விட்டது. இட்லியைக் _ குதப்பிக் கொண்டிருந்த குழந்தைக்கு இட்லி விக்கி, மூச்சடைத்துக் கண்ணீர் வழிந்தது. காசுப் பெட்டியில் ‘இருந்த முதலாளி’ நிதானமாக எழுந்து வந்தார். பட்டென்று அவன் கன்னத்தில் அறைந்து “போடா வெளியே, ராஸ்கல்!” என்று கத்தினார். செல்லன், கன்னத்தைக் கைகளால் அழுத்திக் கொண்டு “முருகா!” என்று அலறினான். குழந்தை வீறிட்டு அழுதது. “கோயில் திறந்து விட்ட திமிர் தான் இவங்களுக்கு. இது கோயிலல்ல; கடை!” குழந்தையின் அழுகைச் சத்தம் முருகன் சந்நிதானத்தில் எதிரொளித்ததாக கதை முடிகிறது.

எனக்குப் பேரும் புகழும் தேடித்தந்த ‘நிலவிலே பேசுவோம்’ என்ற சிறுகதை எனது பத்தொன்பதாவது வயதில் எழுதப்பட்டது. மகாத்மா காந்தி வெள்ளையருக்கெதிராக நடத்திய உண்ணாவிரதப் போராட்டக் காலத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்றும் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்றும் தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அந்நாட்களில் ஊரில் நடைபெற்ற ஒரு மதுவொழிப்புப் பிரச்சாரக்கூட்டத்தில் ஆண் சிங்கம் போலத்தோன்றி மதுவினால் ஏற்படும் தீமைகளையும் அது ஒழிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் அதற்கான வழிவகைகளையும் அள்ளி விளாசி, இடையிடையே காந்தியத்தைப் பூசி அழகு தமிழில் அனல் பறக்கப் பேசிவிட்டுச் சற்று முன்னர்தான் ஸ்ரீமான் சிவப்பிரகாசம் அவர்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அவருக்குப் பசி. அத்துடன் கூட்டத்தில் பேசியக் களைப்பு. சாப்பிட்டு முடித்ததும் ஓர்குலம் பத்திரிகையைக் கையில் எடுத்துப் படிக்க ஆரம்பிக்கையில், வெளியே கேற்பக்கமாக பத்துப் பண்ணிரெண்டுபேர் நிற்பது தெரிந்தது. அவர்களில் இருவர் உள்ளே நுழைந்து இவரண்டை வருகிறார்கள். “அடே, கந்தா நீயா? வா என்ற விஷயம்?” என்று கேட்க “உங்களைக் காண வேணும் என்று வந்தோம். இன்னும் சிலர் வந்திருக்கிறார்கள். நீங்கள் கூட்டத்தில் பேசியதைக் கேட்டோம்... அது சம்பந்தமாக....” என்று தயக்கத்துடன் இழுக்க, அவர் “ஆகா அதற்கென்ன நல்லாய் பேசலாமே” என்கிறார். வந்தவன் தடுமாற்றத்துடன் “இன்னும் சிலர்வந்திருக்கிறார்கள்...” என்று இழுக்க அவர் கேற் ஓரம் பார்க்கிறார் இன்னும் எட்டுப் பத்துப்பேர். சிவப்பிரகாசத்தார் கணப்பொழுதில் திக்குமுக்காடிப் போனார். பெரும் தடுமாற்றமும் பரபரப்பும், இவர்களை யெல்லாம் எப்படி வீட்டுக்குள் அழைத்து உரையாடுவது என்ற தகிப்பு. உடனேயே தன்னைச் சமாளித்துக் கொண்டு “அதோ பார்! வெளியே நல்ல நிலவு. அத்துடன் பால் போன்ற மணல். அங்கே போய் இருந்து பேசுவோம்” என்று சப்பைக் கட்டுக் கட்டுகிறார். தானே வெளிவிலிறங்கி, வந்தவர்களையும் அழைத்துக் கொண்டு மணற்பரப்பில் உட்கார்ந்து உரையாடுகிறார்கள்.

மதுவினால் படும் தீமைகளை அலசுகிறார். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த அந்தக் கள்ளிறக்கும் தொழிலாளர்கள் கள்ளினால் தீமைகள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுகிறோம். அத்துடன் அது பயங்கரமான தொழில். பனையிலிருந்து சறுக்கி விழுந்தால் என்ன கதி? அதே வேளை அதை நிறுத்தினால் எமக்கு வேறு தொழில் வேண்டும். உங்கடையாட்கள், ஒரு இரும்புக் கடையிலை கூட எமக்கு வேலை தர மாட்டார்களே! இரும்பில் தீட்டுப்பட்டுவிடுமென்று. சரி நாங்கள் எப்படியாவது பிழைத்துக் கொள்ளுகிறோம். காந்தியின் மது ஒழிப்புக்கொள்கை பற்றிப் பேசினீர்கள். மகாத்மா காந்தி தீண்டாமை ஒழிப்புக்காகவும் பாடுபட்டாரே அதைப்பற்றி நீங்கள் ஒரு வார்த்தைதானும் பேசவில்லையே, அதன் மர்மம் என்ன?” வந்தவர்களில் இளைஞர்கள் ஆக்ரோஷத்துடன் கேட்டுவிட்டு, எழுந்து நடக்கின்றார்கள்.

“வெளியே நல்ல நிலவு. அங்கே போய் பேசிக் கொள்ளலாம்!” என்று சிவப்பிரகாசம் சொன்னதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள அவர்களுக்கு அதிகநேரம் எடுக்கவில்லை, கதை முடிகிறது.

இனி கந்தன் கருணை நாடகத்துக்கு வருவோம். அது சிருஷ்டிக்கப்படுவதற்கான உந்துசக்தி தோன்றிய சந்தர்ப்பத்தையும் எழுதப்பட்ட காலத்தையும் முன்னர் குறிப்பிட்டுள்ளேன். எழுத்துப்படிவத்திலிருந்த கந்தன் கருணை நாடகப்பிரதியை நெல்லியடியிலுள்ள ‘அம்பலத்தாடிகள்’ என்ற நாடகக்குழுவினர் காத்தான் கூத்துப்பாணி நாடகமாக்கி நான்கைந்து இடங்களில் மேடையேற்றினர். பின்னர் என் - நாடகப் பிரதியை மோடியுருவில் வடிவமைத்து பிரபல நாடகக் கலைஞர்களான சி. மௌனகுரு, சி. தார்சீசியஸ், குழந்தை ம.சண்முகலிங்கம், பிரான்சிஸ் ஜனம் ஆகியோர் பாத்திரமேற்று, யாழ்மண்ணில் 50க்குக் குறையாத இடங்களில் மேடையேற்றினர். அவர்கள், இந்நாடகத்தைப் பார்த்த பேராசிரியர் கைலாசபதி முற்போக்குக் கலைஞர்களின் சிறந்த நாடகங்களில் பொதுப்படையாகவும், கருத்து ரீதியாகவும் அலசப்படும் பிரச்சினைகள் கந்தன் கருணை என்ற இந்த நாடகத்தில், குறியீடுகளுக்குள் புகலிடம் தேடாமல் மிகத்துல்லியமாகவும் கூர்மையாகவும் அழுத்த மாகவும் சித்தரிக்கப்பட்டு நேரடியாகவே எங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது!” என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

இங்கு இன்னொரு நாடகத்தைப் பற்றியும் குறிப்பிட வேண்டியுள்ளது. 1974ல் போர்வை என்ற பெயரில் நான் ஒரு - கதை எழுதினேன். ஏகலைவன் என்ற வேடுவர் தலைவனைப் பற்றிய கதை அது. என் கந்தன் கருணையை மோடி உருவகப்படுத்தி மேடையேற்றிய குழுவினரே, இக்கதையை நாடகமாக்கி யாழ்ப்பாணத்தில் நான்கைந்து தடவையும், பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், கொழும்பு சரஸ்வதி மண்டபத்திலும் மேடையேற்றப்பட்டது. இந்தக்கதை சென்னையிலிருந்து வெளியான தாமரை என்ற சஞ்சிகையில் மறுபிரசுரம் செய்யப்பட்டது. தாமரையின் ஆசிரியரும் பிரபல கம்யூனிஸ்ட் தொழிற் பாட்டாளருமான தோழர் ப. ஜீவானந்தம் அவர்களின் முற் முயற்சியால் இந்நாடகம் சென்னையிலும் அரங்கேற்றம் செய்யப்பட்டது. நாடகத்தின் பெயர் ஏகலைவன் என்பதாகும்.

ஏகலைவைன் கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதனால் விபரமாக எழுதாமல் சுருக்கமாக இங்கு தருகின்றேன். அர்ச்சுனன் தன் சகோதரர்களுடன் வனத்துக்குப் போன விடத்தில் தன் நாயையும் கூட்டிச் சென்றான். அவ்வனத்தில் ஏகலைவன் என்னும் வேடன் வணங்கிவரும் குருநாதர் துரோணாச்சாரியாரின் களிமண் சிலைக்கு அந்த நாய் மூத்திரம் பெய்துவிட்டது. இதைக் கண்ட ஏகலைவன், தன் கணையை அதன் மீது பாய்ச்ச, நாயின் முகத்தில் ஆயிரம் துளைகள் ஏற்பட்டு விட்டது. கோபமடைந்த அர்ச்சுனன், ஏகலைவனிடம் போய் “இந்த வில்வித்தையை உனக்குக் கற்றுத் தந்தது யார்?” என்று கேட்க, உங்கள் குருநாதர் துரோணாச்சாரியார்தான் இக்கலை வல்லுனர். நான் அவரிடம் போய் “அந்த வித்தையை எனக்குக் கற்றுத்தரவேண்டும்” என்று கேட்க அவர் க்ஷத்திரியர் களான அரச பரம்பரைக்குரிய வித்தை இது.
சூத்திரர்களான வேடர்களுக்குரியதல்ல. அதனால் நான் உனக்கு இந்த வித்தையைக் கற்றுத்தரமாட்டேன்” என்று மறுத்துவிட்டார்.

ஏகலைவன் பெரும் துயருடன் வனத்துக்குத் திரும்பி களி மண்ணினால் துரோணரின் சிலையைச் செய்து, அதைத் தினமும் வணங்கி, ஒரு கணையில் ஆயிரம்துளைகளிடும் வித்தையைக் கற்றிருந்தான். இதனால் சூத்திரர்களால் க்ஷத்திரியர்களுக்குப் பெரும் ஆபத்து என்பதை அறிந்த துரோணர் அந்த வித்தையை அவனிடமிருந்து பறிக்க முடிவு செய்தார். அதன் காரணமாக அவர், “குருநாதருக்கு என்ன தரப் போகிறாய்?” என்று கபடத்தனமாகக் கேட்க அவன் “என் உயிரைக் கேட்டாலும் தருகிறேன்!” என்று அவன் பதிலளிக்கிறான். துரோணர் “உன் உயிர் வேண்டாம். உன் வலது கைக் கட்டை விரலைத்தா!” என்று கேட்கிறார். அவன் ஒரு கணம் தயங்கினான். உடனேயே தன் உடைவாளை உருவி இடது கையால் எடுத்துப் பக்கத்திலிருந்த மரக்கிளையில் வலது கையை வைத்துப் பட்டென்று பெருவிரலை வெட்டினான். விரல் கீழே விழுந்தது. இரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த விரலை எடுத்து துரோணரின் பாதத்தில் வைத்து வணங்கினான். துரோணர் அவனை ஆசிர்வதித்து விட்டுத் திரும்பி நடக்கிறார். அர்ச்சுனனும் பெருமிதத்துடன் தேரை நோக்கிச் செல்கிறான். ஆளப்படும் வர்க்கத்திடம் ஆயுதங்கள் இருந்தால் ஆளும் வர்க்கத்துக்கு ஆபத்து என்பதை வியாச முனிவர் வேளையிலே சொல்லிவிட்டார். நேற்று வந்த மாஓ - சே - துங் இதனையே ஆயுத பலத்திலிருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்று சொல்லியிருக்கிறார். இக்கதையில் இராஜதந்திரி பீஷ்மர் இதைச் சொல்வதாகத் தெரிவித்திருக்கிறேன்.

கேள்வி: நீங்கள், டொமினிக் ஜீவா, தங்கவடிவேல் மாஸ்ரர், சி.கா. செந்தில்வேல் போன்ற அன்றைய கால கட்டத்தின் முன்னணித் தலைவர்களாக இருந்த அனைவரும் இன்னும் அதே போர்க்குணத்துடன் இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாதியத்துக்கெதிராக இயங்குவதற்கு அல்லது அதன் தேவையை முன்மொழி வதற்கு இடையூறாக இருக்கும் சிக்கல்கள் யாவை?

பதில்: சிறுபான்மைத் தமிழர்களின் விடிவுக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த தோழர் எம்.சி.சுப்பிரமணியம் மறைந்தபின் அவரின் நினைவாக ஒரு மலர் வெளிவந்தது. அம்மலரில், ‘துப்பாக்கி நிழலில் சாதிகள் மறைந்து கிடக்கின்றன. மரித்துவிடவில்லை!” என்று ஓர் அன்பர் ஒரு கருத்தை முன் வைத்துள்ளார். இதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள நாம் கஷ்டப்பட்டுள்ளோம். சாதியமைப்பை ஒழித்துக்கட்ட ஒன்று திரண்டவர்கள் எந்த நெருக்கடிகள் மத்தியிலும் தங்கள் பணியைத் தொடர்ந்து கொண்டேயிருப்பார்கள். ஆனால் சாதி வெறியர்கள் துப்பாக்கி நிழலில் மறைந்து கிடக்கின்றார்கள். இதுதான் சிக்கல்!

கேள்வி: முடிவாக ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

பதில்: உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் அனை வரும் இனம், நிறம், மொழி, மதம் போன்ற வேறுபாடுகளின் அடிப்படையில் கூட்டம் கூட்டமாகவோ, ஒருவர் மத்தியில் இன்னொருவர் என்று கலந்தோ வாழ்ந்து வருகின்றார்கள். ஏதாவது தகராறுகள், பிரச்சினைகள் வந்தால் சண்டை பிடிக்கிறார்கள். சண்டை முடிந்தபின் அவரவர் தம்பாட்டிலே வாழ்கின்றார்கள். ஆனால் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் வாழும் தமிழனோ சாதிப்பாகுபாடு காட்டிக்கொண்டுதான் வாழ்கின்றான். கல்வி வளர்ச்சியினால், பின்தள்ளப்பட்டவன் உயர் பதவியிலிருந்தாலும் அவனை முகர்ந்து பார்த்தறிவதில் உயர் வேளாளனுக்கு நிகர் அவனே! எல்லாவற்றுக்கும் தமிழன் மத்தியில் புகுந்த இந்துத்துவக்கோட்பாடே அடிப்படைக் காரணமாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com