Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Anicha
Anicha Logo
இரு மாத இதழ் - மார்ச் 2006

ஜிகினா வாளை வீசி சத்தியத்தைக் கொன்ற கலைஞன்

ம. மதிவண்ணன்

சுந்தர ராமசாமியின் மறைவையட்டி ஊடகங்கள் சிறுபத்திரிகைகள் என்று எல்லா தரப்பிலும் கொண்டாடப்பட்ட துக்கம் தமிழ் இலக்கியவாதிகள் யாருக்கும் இதுவரை கிடைக்காத ஒன்று. அவருக்கு மட்டுமான இந்தப்பெருமைக்குக்காரணமாய் எதைச் சொல்ல முடியும்? அவரது படைப்புகள் அவரது தனிப்பட்ட ஆளுமை இவற்றோடு வேறு தனிப்பட்ட காரணங்களும் இருக்கக் கூடும்.

Sundara Ramasamy சுந்தர ராமசாமி என்ற படைப்பாளியை அவரது படைப்புக்களை முன்வைத்து மதிப்பிடுவதே சரியானதாக இருக்கும் என்று தோன்றுகிறது. நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம் என்று எல்லா தளங்களிலும் செயல்பட்டவர் சு.ரா. அவரது மொத்த படைப்புகளையும் முன்வைத்து ஒரு விவாதத்தை நிகழ்த்துவது கடினமான ஒன்றாகவும், அதிகபட்ச காலத்தைக் கோருகின்ற ஒன்றாகவும் இருக்குமென்பதால் இக்கட்டுரையில் அவருடைய நாவல்களை மட்டும் முன்வைத்து பேச முற்படுகிறேன்.

சுந்தர ராமசாமி என்ற இலக்கியவாதி தமிழ் இலக்கியச் சூழலில் இயங்கிய காலத்தை 1951 முதல் 2005 வரையிலான ஒன்றாகச் சொல்ல முடியும். இடையில் சிறிது காலம் எதுவும் எழுதாமலிருந்த இடைவெளியை தவிர்த்து விடலாம். ஏறத்தாழ 54 ஆண்டுகள். அவருடைய முதல் நாவலான ஒரு புளியமரத்தின் கதை 1966இல் வெளிவருகிறது. இரண்டாவது நாவலான ஜே.ஜே.சில குறிப்புகள் 1981இலும், மூன்றாவது நாவலான குழந்தைகள் பெண்கள் ஆண்கள் 1998இலும் வெளிவந்திருக்கின்றன. ஒரு படைப்பாளியை மதிப்பிடுவதற்குத் தேவையானதும் அவருடைய இயக்கத்தை பிரதிபலிக்கப்போதுமான ஒரு தொடர்ச்சியைக் கொண்டதுமான ஒரு படைப்பு வகையாக அவருடைய நாவல்களைக் குறிப்பிட முடியும். வேறு வார்த்தைகளால் சொன்னால் ஏதோ ஒரு பருவத்துக்கு மட்டுமே உரிய படைப்பு வகையாக அவருடைய நாவல்கள் இருக்கவில்லை என்று சொல்லமுடியும்.”

தமிழில் மிகவும் கொண்டாடப்பட்ட, கொண்டாடப்படுகிற அவரது நாவல்களை தலித்திய நோக்கில் அணுகும் ஒரு முயற்சியாகவே என்னுடைய கட்டுரையை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம்.

2

சுந்தர ராமசாமியின் முதல் நாவலான புளியமரத்தின் கதையைப் பொறுத்தமட்டில், நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு 4 - இல் ராஜன் குறை “பிரதியில் தங்கியிருப்பதெல்லாம், இந்து, மேல்சாதி, ஆண்மைய ஒற்றைத் தன்னிலைப் பார்வைதான்” என்று மதிப்பிட்டிருப்பது மிகவும் சரியான ஒன்று எனவே எனக்கும் தோன்றுகிறது.

இந்நாவலில் பேசப்படுகின்ற காலம் 1952 - ஐ ஒட்டிய பகுதி என்றுச் சொல்லலாம். “தாமு என்ற பெயர் பத்தாண்டுகளுக்கு பின் மீண்டும் எல்லாருடைய வாயிலும் அடிபட ஆரம்பித்து விட்டது. ஆகஸ்டுப்புரட்சியின் போது அவனுடைய பெயர் எப்படி அடிபட்டதோ அதே மாதிரி மீண்டும்” என்ற வரிகளின் மூலமும் இதர சில குறிப்புக்களைக் கொண்டும் இதை நாம் அனுமானிக்க முடியும்.

நாவல் குறிப்பிடும் இந்த காலமென்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டமாகும். விடுதலை அடைந்து, அரசியலமைப்புச்சட்டம் வரையப்பட்டு, குடியரசாகி ஒரு மிகப் பெரிய பரிணாம மாற்றம் நடைபெற்ற காலம் அது. அந்த காலத்தின் என்னென்ன மாதிரியான குரல்களை இந்நாவல் பதிவு செய்திருக்கிறது என்று பார்க்கலாம்.

“லேசா நெனச்சிகிட்டு இருக்கீங்க அவனுகளே ஒரு காலத்தில் அவனுவ பயித்தாரனாட்டு இருந்தானுவ. இப்பம் ஒங்க சீட்டுல உக்காந்து காலு ரெண்டையும் மேஜை மேலத் தூக்கிப் போட்டாக் கொள்ளாமேன்னு நெனக்கிற ஆளுக அந்த கூட்டத்துல இருக்கு. பின்னே அவனுகளே சொல்லுதுக்கும் குத்தமில்லை. இந்தா பிடிச்சுக்கோன்னு சரமாரியா ஓட்டத் தூக்கிக் குடுத்துட்டாமில்லா, துள்ளுதானுவ”

“பாவம் போல வேலை பார்த்துவிட்டு இருந்தவனுகளெ எந்த நிலையிலே கொண்டாந்துட்டாரு பாருங்க. பஞ்சப்படி இங்கான், அலவன்ஸி இங்கான், பலசரக்குக் கடை வெச்சுத் தாங்கான், பிரசவ லீவு குடுங்கான், வாரியலுக்கு குஞ்சலம் கட்டணுமாம் தோட்டிச்சி சொல்லுதா அப்பம்தான் ஸ்டையி லாட்டு இருக்குமாம். சீலையும் சம்பரும் தானா? பாபீசு கிடையாதா, நாடா போட்டு பின்னாலே கட்டுதாளே யாரு? தோட்டிச்சி கேக்கா இங்கேன்”

இவை தோட்டிகளையும், தோட்டிச்சிகளையும் குறித்து முனிசிப்பல் சிப்பந்தி வள்ளிநாயகம் பிள்ளையின் குரலாக வெளிப்படும் ஆதிக்கச் சாதிய குரல்.

“ஒரு ராஜ்யம்னு சொன்னா ஒருத்தன் சொல்லணும். அடுத்தவன் கேக்கணும். இது பயித்தாரக் கூத்தாட்டுல்லா இருக்கு. என் ஊட்ல நானும் சொல்வேன். அவளும் சொல்லுவா, புள்ளைகளும் சொல்லும். வண்டிக்காரனும் சொல்வான். பறைச்சியும் சொல்லுவா. சாம்பானும் சொல்வான்னு உண்டும்னா கேக்குதுக்கு யாரு” இது தாழக்குடி மூத்தப்பிள்ளையின் சுதந்திரத்துக்குப் பிறகான நாட்டின் நிலை பற்றிய சாதீயத்தின் விமர்சனக் குரல்.

“ஹிந்து என்பவர் யார்? ஹிந்துக்களாகப் பிறந்து விட்டவர்களா அல்லது ஹிந்து தர்மத்தைக் காப்பாற்றுகிறவர்களா? ஹிந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்பது தங்களுக்குத் தெரியுமா? கிறிஸ்துவ மதம் போல் அல்ல அது” இது கம்பராமாயணம் அனந்தன் பிள்ளையின் மதவாதக்குரல்.

“முஸ்லீம்களிடமிருந்தும் கிறிஸ்தவர்களிடமிருந்தும் ஹிந்து மதத்தையும் ஹிந்து கடவுள்களையும் காப்பாற்ற வீரம் மிகுந்த ஒரு இளைஞர் படையையே நான் உருவாக்குவேன். ஹிந்துக்களின் மத உணர்ச்சியைப் புண்படுத்தாமல் ஒதுங்கி விடுவதே முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் செய்ய வேண்டிய காரியம். அதற்கு மாறாக அவர்கள் நடந்து கொண்டால். மாதா கோயில்களும் மசூதிகளும் ஊருக்குள் எந்த எந்த இடத்தில் இருக்கின்றன என்பது ஹிந்துக்கள் அறியாத ஒன்றல்ல” இது தாமுவின் இந்துத்துவக் குரல்.

நாவல் முழுக்கவும் இத்தகைய சாதீய, இந்துத்துவக்குரல்களே அழுத்தமாய் பதிவு பெற்றுள்ளன. இவற்றுக்கு மற்றதான தலித்துகள், சிறுபான்மையோர், பெண்கள் இவர்களின் குரல் எவ்வாறு பதிவு பெற்றுள்ளன என்று காண்பது அவசியமான ஒன்று.

“இந்த மரத்திலே தான் எம்புட்டு காய்”

“புளிச்சு கெடக்கோவ்”

“அடேயப்பா என்னா புளிபுளிக்குது. மண்டையைப் போயி புடிக்குது. வயத்துக் குமட்டலுக்குச் சொகமா இருக்கு”

இவை தான் தோட்டிச்சிகளின் மொத்தகுரலும். தோட்டிகளின் குரல் இந்தளவு கூட வெளிப்படவில்லை. மரத்தில் புளி காய்த்ததையும் அது புளிப்பாக இருப்பதையும் சொல்வதற்கு இந்தப் பிரதியில் அனுமதி அளித்திருக்கிறார் சு.ரா.

பாபர் மசூதியை மட்டுமல்லாது மதுரா, காசி முதுலிய இடங்களிலுள்ள மசூதிகளையும் இந்துக்களுக்கு இஸ்லாமியர் விட்டுத் தர வேண்டும் என்று உபதேசிக்கும் ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணனின் கட்டுரையை பாபர் மசூதியை இடிக்குமுன்பே வெளியிட்ட காலச்சுவடின் நரித்தனம் விமர்சிக்கப்பட்ட போது, பாபர் மசூதி பிரச்சனை குறித்து விவாதிக்கும் முகமாகத்தான் அக்கட்டுரை வெளியிடப்பட்டது என்று சின்ன முதலாளி கண்ணன் திருவாய் மலர்ந்தருளியதை வாசகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

விவாதத்திற்கும் பிரசங்கத் திற்குமான வேறுபாடு என்பது, பேசுவது ஒன்றுக்கு மேற்பட்ட வராய் இருப்பதுதான் என்ற அடிப்படை அறிவு கூட தனது வாசகர்களுக்கு இருக்காதென்ற திமிரான நம்பிக்கை காலச் சுவடுக்குப் பிறந்தது இந்நாவலை சுரா எழுதியதற்கு பிற்பாடாகவே இருக்க வேண்டும்.

பார்ப்பனியத்தின் பிரச்சாரச் சுதந்திரத்திற்கு மேலே குறிப்பிட்ட ஜி.எஸ். ஆர். கிருஷ்ணனின் கட்டுரை. உதாரணமென்றால் படைப்புச் சுதந்திரத்திற்கு சு.ரா.வின் இந்நாவல் உதாரணம் என்று சொல்லாம்.

சுந்தர ராமசாமியே தனது முன்னுரையில் தெரிவிப்பது போல் 28 வயதில் தொடங்கி 35 வயதில் எழுதி முடிக்கப்பட்ட நாவல் என்பதை நிரூபிக்கும் வகையில் சுந்தர ராமசாமியின் இளவட்ட வயசு தோட்டிச்சிகளை வர்ணிக்கும் போது மட்டுமே நமக்கு நினைவுக்கு வருகிறது.

“குழாயடி ஈரத்தையும் பொருட்படுத்தாமல் ஒரு தோட்டிச்சி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவளுடைய வயசுக்கும் பூரிப்புக்கும் அவள் ரவிக்கை அணிந்து கொள்ளாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.”

“இளம் தோட்டிச்சி ஒருத்தி குழாயடிக்கு வந்தாள். அவளுடைய உடம்பு மதமதவென்று இருந்தது. கட்டம் போட்ட துணியில் தணிந்த கைகள் கொண்ட ஜம்பர் அணிந்திருந்தது மிகவும் அழகாக இருந்தது.”

தோட்டிச்சிகளை மட்டுமல்லாது செல்லத்தாயியையும் தாமோதர ஆசானின் குரலில் வர்ணிக்கிறார் சு.ரா. காடு கோத்தான் பிச்சுவாவின் பேரனும், கீழச்சேரி ஈனமுத்துவின் மகனுமான கொப்ளானின் முறைப்பெண். வயலில் நடுகைக்கு போகிறவள் என்றெல்லாம் அவளைக்குறித்த விபரங்களை அறிய முடிகிறது நாவலில். அவள் பிணமாய் கிடக்கும் காட்சி குறித்த வர்ணனை இது.

“ராசாத்தி அப்பமும் என்ன அளகாட்டு இருந்தா. மொகம் மட்டும் தான் தெரிஞ்சது. மொகமும், மொரட்டுக் கொய்யாப்பழம் ரெண்டைத் தூக்கி வச்சாலே முலையும்.”

“மொகத்திலே விழற மயிரெ ஒதுக்க பாவி கைக்கு சீவினில்லே மார்ப மறைச்சுகிட வெட்கம் அத்துப் போச்சு சண்டாளிக்கு”

அவ்வளவு பெரிய படைப்பாளிக்கு கீழ்ச்சாதி பெண்களைத் தான் இவ்வாறு வர்ணிக்க முடிகிறது. சாதி பார்த்துதான் சேலை உருவுமென்றாலும், கலைஞனின் சுதந்திரத்தில் யாரே குறுக்கிட வல்லார்?

“முல்லைக்கல் மாதவன்நாயர் தன் அனுபவங்கள் சார்ந்து எழுதும்போது, ஒருபகுதியைப் பற்றிச் சொல்வான். மற்றொரு பகுதியைப் பற்றிச் சொல்லமாட்டான். சொல்லாமல் விடப்படும் பகுதிகள் உண்மையைத் தொகுக்க முன்னும் கலை மனத்தின் ஆவேசத்தில் கழிந்து போனவை என்றால் குறை சொல்ல எதுவுமில்லை. கலை உண்மையை ஸ்பரிசிக்க கொள்ள வேண்டியவற்றைக் கொள்ளும். தள்ள வேண்டியவற்றைத்தள்ளும். ஆனால் அவன் சொல்லாமல் விடும் பகுதி தந்திரபூர்வமானது. வாசக திருப்திக்குப் போடும் தூண்டில் அது.”

மேற்கண்ட விமர்சனம் முல்லைக்கல் எனும் முற்போக்கு படைப்பாளி மீதான விமர்சனங்களாக ஜே.ஜே. குறிப்பிடுவது. இதைச் சொல்லி விட்டு அதற்கு உதாரணமாக திருவனந்தபுரம் பஸ் நிலையத்தில் டிரங்கு பெட்டியைத் தூக்கி வந்த கூலிச் சிறுவனை நோகடித்த விஷயத்தை கதையாக எழுதும் போது முல்லைக்கல் தன்னுடைய பாத்திரத்தை ஒரு முரட்டு பணக்காரனுடையதாக, மாற்றியிருப்பான் என்னும் நிஜத்தில் கீழ்த்தரமாக திட்டி விட்டு குறைந்த கூலியை வாங்காமல் போன நிகழ்வை கூலி குறைந்ததற்காக அழுது கொண்டே போனான் என்றும் மாற்றியிருப்பான் என்று ஜே.ஜே.யின் வார்த்தைகளில் சொல்லியிருப்பார் சு.ரா.

முல்லைக்கல் மாற்றியது இருக்கட்டும். சு.ரா. என்னும் சத்தியத்தின் வாளை வீசி மரணத்தைக் கொல்ல முயலும் கலைஞன் கல்லாவில் உட்கார்ந்து கொண்டு சாயங்கால வேளைகளில் பார்த்து ஜொள்ளுவிட்ட வாத்தியாரம்மாவை செல்லத்தாயியாக மாற்றிய கதையை தன்னுடைய முன்னுரையிலேயே சொல்லியிருக்கிறார். அவர் சொல்லாமல் விட்ட மாற்றம் தான் இங்கு முக்கியமானது. நாவலில் பேசப்படும் புளிய மரம் நிஜத்தில் ஒரு வேப்பமரமாக இருந்தது என்பதுவும், புளிய மரம் ஜங்சன் என்று அவர் குறிப்பிடுவது நாகர்கோவிலில் உள்ள வேப்ப மூடு ஜங்சன் என்னும் பகுதிதயைத்தான் என்பதையும் நாம் சற்று கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும்.

நாவல் கூறும் புளியமரத்தின் கதை என்ன? புளியமரம் பாட்டுக்கு அப்புராணியாய் நின்று கொண்டிருந்தது. தாமு என்கிற கழிசடை இந்துத்துவ சாதியவாதியின் கடையின் அமோக வியாபாரத்துக்கும் காரணமாய் இருந்து கொண்டிருந்தது. தோட்டிச்சிகள் புளியம்பழத்துக்கு ஆசைப்பட்டு தங்கள் கணவர்களான தோட்டிகளை ஏவிவிட்டு கல்லெறிந்து புளியம்பழங்களையும் களவாடிச் சென்றுவிட்டார்கள். அவர்கள் எறிந்த கற்கள் காதர் என்ற இஸ்லாமிய பதுக்கல் வியாபாரியின் கடை போர்டை உடைத்து விட்டன. உண்மை தெரியாத காதர் தாமுவின் மேல் புகார் தர இருவருக்கும் விரோதம் மூண்டது. மூண்ட விரோதத்தின் பலனாக புளியமரம் கொல்லப்பட்டது. காதர் ஜெயிலுக்குப் போகவும், தாமு ஊரைவிட்டு வெளியேறவும் நேரிட்டது.

நன்றாகத்தான் கதை சொல்கிறார் சுந்தர ராமசாமி. நமக்கு ஒரே சந்தேகம் தான். ஏற்கனவே குறிப்பிட்டது போல புளியமரம் நிஜத்தில் வேப்பமரம். கதையில் தோட்டிகள் புளியம் பழத்தை கல்லெறிந்து திருடுகிறார்கள். நிஜத்தில் நின்ற வேப்பமரத்தில் எதைத் திருட தோட்டிகள் கல்லெறிந்திருப்பார்கள்? இனி சுந்தர ராமசாமியிடமும் கேட்கமுடியாது. நாவலின் பக்கங்களில் இருந்து கொண்டு கல்லெறிந்து கொண்டே இருக்க வேண்டியது தான் தோட்டிகள். உண்மையில் அது சுந்தர ராமசாமி அவர்களுக்கு அளித்த சாபம். நிரபராதிகளானாலும், அப்பாவிகளானாலும், சினமுற்றால் சாபமளிக்கும் உரிமை முனிவர்களுக்கு என்றும் உரியது தானே! வேண்டுமானால், சு.ரா. என்னும் பார்ப்பன முனிபுங்கவரின் சினத்துக்குப் பாத்திரராகத் தாங்கள் செய்தது என்ன என்று தோட்டிகள் தங்களைத் தாங்களே ஆராய்ந்து பார்த்துக் கொள்ளலாம். மற்றபடி, புளியமரமாகி நின்ற வேப்பமரத்தின் அழிவுக்கும், அதையட்டிய மதக்கலவரத்துக்கும், தங்களின் திருட்டுக் குணத்தினாலும், சுயநலத்தினாலும் காரணமானவர்கள் என்ற பழியிலிருந்து மீளம் வழி இப்பிறவியில் அவர்களுக்குக் கிடையாது.

3

“ஜோசப் ஜேம்ஸ் என்ற பெயர்ச் சொல்லை எழுதிய நிமிடத்தில் என் மனம் சிறகு கட்டிப் பறக்கத் தொடங்கிற்று. மலையாள இலக்கியம் சார்ந்தும், மலையாள வாழ்க்கை சார்ந்தும் நான் பெற்றிருந்த அனுபவங்களின் சாரங்கள் என் மனதில் திரண்ட மிகுந்த உவகை தரும் ஆவேசத்திற்கு ஆட்பட்டேன். எழுதிக் கொண்டிருந்த பெரிய நாவலை அப்படியே விட்டுவிட்டு என் மனதை வெகுவாகக் கவர்ந்த, ஆவேசம் மிகுந்த சிந்தனைத் தெரிப்புகள் கொண்ட ஜோசப் ஜேம்ஸ் என்ற பாத்திரத்தைப் பின் தொடர்ந்து செல்லத் தொடங்கினன். நான் மிகவும் விரும்பும் ஒரு மன உலகம் கலைப் பாங்காக விரியத் தொடங்கிற்று. ஜோசப் ஜேம்ஸின் ஆவேசம் தான் என்னை இழுத்துக் கொண்டு போய் முழு நாவலையும் எழுதவைத்தது என்று நினைக்கிறேன்.”

மேலே தரப்பட்ட பகுதியிலுள்ள வார்த்தைகளில் வெளிப்படுவது ஜோசப் ஜேம்ஸ் என்ற தன்னடைய நாவலின் பாத்திரத்தை சு.ரா. கண்டடைந்த பரவசம்தான். அவருக்கு மட்டுமல்லாது அவருடைய ரசிகர்களுக்கும் அவ்வளவு ஆதர்சமாகவும், பிரியத்துக் குரியதாகவுமிருந்தது. ஜே.ஜே.யை மிகவும் கவனத்துடன் அவதானிக்கலாம் சற்று.

நாவலில் முன்வைக்கப்படும் ஜே.ஜே.யின் சித்திரம் என்ன?

1. பாரதி, புதுமைப்பித்தன், கு.ப.ரா., அழகிரிசாமி, மு. தளையசிங்கம் வரிசையில் வைத்துப் பார்க்கப்படவேண்டிய மேதாவியான எழுத்தாளன்

2. தன் உள்ளளியைக் காண எழுத்தை ஆண்டவன்

3. கொந்தளிப்புத் தத்துவத்தை (Theory of upheaval) உலகுக்கு அளித்தவன்.

4. ஒரு விதத்தில் அவன் தீர்க்கதரிசி. ஒரு விதத்தில் அவன் தர்க்க ஞானி.

5. சிந்திக்கும் மனிதனின் ஒரே பாஷையான உண்மையைத் தேடி அலைந்த கலைஞன்.

இவை ஜே.ஜேயைக் குறித்து கதை சொல்லியான பாலு முன்வைக்கும் கருத்துக்கள். கதை சொல்லி முன்வைக்கும் ஜே.ஜே.யை பார்ப்பதற்கு முன் ஜே.ஜே.யை முன்வைத்த கதை சொல்லியை மதிப்பிடும் அவசியம் நமக்கு இருக்கிறது.

“நான் ரொம்பப் படித்தவனில்லை. ரொம்பச் சிந்திக்கத் தெரிந்தவனுமில்லை. நான் மத்திய வர்க்கத்தைச் சார்ந்த ஒரு வீட்டின் செல்லப்பிள்ளை. எனக்கும் புற உலகத்துக்குமுள்ள உறவு வெட்கக்கேடானது. என் வீட்டு வேலைக்காரி கோலம்மை, வண்ணான் ஈனமுத்து, நாவிதன் ராமய்யா, தச்சன் குரு சந்தோணி, தோட்டத்தில் புல்பறிக்க வரும் பெருமாள் நாடார் இவர்களைத்தான் எனக்குத் தெரியும்.”

இவ்வளவுதான் தன் உலகம் என்று தன்னிலை விளக்கம் அளிக்கும் பாலு என்கிற கதை சொல்லியனது ஜே.ஜே. குறித்த அனுமானங்களும் அதனடிப்படையிலான முடிவுகளும் எந்தளவு உண்மையாயிருக்கும் என்ற கேள்வி வெகு இயல்பாகவே எழும். இந்த கேள்விக்கு விடைகாண வேண்டுமென்றால் கதை சொல்லி முன்வைக்கும் முடிவுகளை ஒதுக்கிவிட்டு பிரதியில் முன் வைக்கப்படும் குறிப்புக்களைக் கொண்டே ஜே.ஜே.யை தனியே மதிப்பீடு செய்து சரியானதாக இருக்கும்.

பிரதியிலிருந்து கிடைக்கும் குறிப்புகளிலிருந்து நாம் ஜே.ஜே. குறித்து ஒரு சித்திரத்தை நாமே வரைய முயலலாம்.

ஜே.ஜே. எனும் கலைஞன் எழுத்தாளர்களைக் கொண்டாடும் மலையாளச் சூழலில் இயங்கினாலும், சுந்தரராமசாமியின் விருப்பப்படியோ, என்னவோ தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் தலைவிதியான பிடுங்கித் தின்னும் வறுமையில் உழல்கிறான். அவன் வாழ நேர்ந்தச் சூழலில் எவை எவை தொந்தரவு செய்தன அவனின் எதிர்வினைகள் என்னவாக இருந்தது? யார் யாரிடம் அவை வெளிப்பட்டன? எவற்றை அவன் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என்பனவற்றை கொஞ்சம் கவனிக்கலாம்.

ஜே.ஜே. எனப்படும் ஜோசப் ஜேம்ஸ் தான் பிறந்த கிறிஸ்தவச் சூழலை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அறிய முடிகிறது. அதோடு கிறிஸ்தவர்கள் மீதான அதிருப்தி அவ்வப்போது அவனிடமிருந்து வெளிப்பட்டது.

1. மதத்தொண்டு செய்யும் பொருட்டு அவனை கிறிஸ்தவச் சபைக்குத் தத்தம் செய்ய அவனது பெற்றோர்கள் விரும்பிய போது “அப்பாவுடன் ஏசுவின் தொழிலை (மரவேலை) வேண்டுமென்றாலும் மேற்கொள்ளுகிறேன். பிதாவின் மகிமையைப் பரப்ப எனக்குத் தெம்பில்லை” என்று மறுக்கிறான். பத்தாவது வகுப்பு தேறிய பதின்வயதுகளில் நடந்தது இது என்பது நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

2. திருநக்கரை மகாதேவர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் நடக்கும் திருவிழாவில் ஒரு கிறிஸ்தவன் கூட ஆர்வத்தினாலோ, குறுகுறுப்பினாலோ, அறிந்து கொள்ளும் ஆவலினாலோ, அழகுணர்ச்சியினாலோ அல்லது வேடிக்கையுணர்வினாலோ அங்கு போய் எட்டிப்பார்த்தாகத் தெரியவில்லை என்று தனது டைரி குறிப்புகளில் வருத்தப்படுகிறான்.

3. மாதா கோவில்களையும் இந்துக்கோவில்களின் புறத்தோற்றங்களுக்கேற்ப அமைக்கவேண்டும் என்ற கருத்துடன் பாதர் ஜான்சுந்தர் ராஜ் எழுதிய புத்தகத்தில் கோவில்களின் வரைபடங்கள் அற்புதமாய் இருந்தது. இந்திய மண்ணிலிருந்து எழும்பியவையாகவும், தனித்துவம் கொண்டவையாகவும் பரவசம் ஏற்படுத்தக்கூடியவையாகவும் இருந்தன அப்படங்கள் என்றும் டைரி குறிப்புகளில் எழுதி புல்லரித்துப்போகிறான்.

4. மழைக்கு ஒதுங்கிய பசுவின் மேல் மிகுந்த சிரமத்துடன் வெற்றிலை தாம்பலத்தை ஒருவன் துப்பியது. ஜே.ஜே.வை மனித மனத்தின் கரும்புள்ளிகளை காணும் ஆவேசத்தை ஏற்படுத்துகிறது.

5. எஸ்.ஆர். எஸ்ஸீம், பிஷாரடியும் சம்பத்தின் பங்களாவில் சந்தித்த ஜே.ஜே. காவி கதர் வேட்டியுடன் சந்நியாசியைப் போன்று தோற்றமளித்ததாக நாவலில் குறிப்பிடப்படுகிறது.

மதம் மற்றும் கவிதை ஆகிய விஷயங்களுக்குள் மாறி, மாறி இளம்பருவத்தில் விழுந்தவனான ஜே.ஜே. மேற்கண்ட இரண்டின் பீஜங்கள் ஊன்றப்பட்ட மனதுடையவனாகவே இருந்தான் என்கிறது நாவல். மதம் குறித்த அவனது முடிவுகள் மேலே கண்டவாறு இருந்தன என்றுச்சொல்லலாம்.

சமூகம் குறித்த ஜே.ஜே.யின் பார்வை அல்லது விமர்சனம் என்னவாக இருந்தன என்று பார்க்கலாம்.

1. மேலான சமுதாயம் தோன்ற மனிதன் உள்ளும் புறமும் பரிசுத்தம் அடைவதென்பது நிர்ப்பந்தமான நிபந்தனை அல்ல. உறவுகளில் சிறிது நேர்மை, உண்மை மீது கொஞ்சம் மதிப்பு. பொது நன்மை சார்ந்த சில நியதிகளைக் கூடிய மட்டிலும் கைபிடித்தல். மதிக்கத் தகுந்த சமுதாயங்கள் உருவாக இவை போதும் என்கிறான் ஜே.ஜே.

2. பத்திரிகை அலுவலகத்தில் புரூஃப் ரீடர் வேலைக்கு முயன்று கிடைக்கவில்லை ஜே.ஜே.க்கு கங்காதரன் என்ற நண்பன் சொல்கிறான். “பெயரை கோபாலசாமி அய்யங்கார் என்று மாற்றிக் கொண்டு நெற்றியில் நாமம் போட்டுக் கொள்” என்கிறான். இவை குறித்துச் சொல்லவோ, விமர்சிக்கவோ சொரணை ஏதுமில்லை ஜே.ஜே.க்கு.

3. ஒழுக்கம் சார்ந்த விமர்சனங்கள் தான் சமூகம் குறித்து ஜே.ஜே.க்கு இருந்திருக்கின்றன. முன்னால் நடந்து போன வனைக் காட்டி இவன் நிமிஷத்துக்கு சராசரி மூன்று முறை துப்புகிறான் ஏன்சார் எதற்கு? மிருங்களுக்கோ, பட்சிகளுக்கோ இந்தப் பழக்கம் இல்லையே என்கிறான். யாருக்கும் மையூற்றத் தெரியவில்லை என்பது ஒரு விமர்சனம். ஒருவன் கைமாற்றி வைத்தப்பொருளைத் தேடுவது ஆத்திரம் தருகிறது அவனுக்கு.

அரசியல் குறித்த விமர்சனங்களைப் பொறுத்தமட்டில் அது கம்யூனிஸ்டுகளுக்கு எதிராய்ச் செய்யப்படுவது என்ற அர்த்தத்தில் மட்டுமே ஜே.ஜே.புரிந்து கொண்டான் என்றே சொல்ல வேண்டும். ஜே.ஜே.செயல்பட்ட காலத்தை 1940 முதல் 1960 வரையிலான காலம் என்று நாவல் தெரிவிக்கிறது. இந்த காலத்தில் கம்யூனிஸ்டு கட்சியைத்தவிரவும் காங்கிரஸ் கட்சி இருந்திருக்கிறது. அதில் மென்மை இந்துத்துவம் பேசுகின்ற காந்தி தலைமை இருந்திருக்கிறது. காந்திக்கும் பிறகு மோடியின் குருநாதர் படேல் தலைமையிலான அணி இருந்திருக்கிறது. ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ். ஆகியவை இருந்திருக்கின்றன. குலக்கல்வி திட்டப்புகழ் ராஜகோபாலாச்சாரியின் சுதந்திரா கட்சி இருக்கிறது. அம்பேத்கரின் இயக்கம் இருந்திருக்கிறது. பெரியாரின் இயக்கம் இருந்திருக்கிறது. முஸ்லீம் லீக் இருந்திருக்கிறது. காந்தியாலும் காங்கிரசாலும் இவர்களெல்லாம் வஞ்சிக்கப்பட்ட வரலாறு நிகழ்ந்தேறியது அந்த காலகட்டத்தில் தான். இவை குறித்து எல்லாம் எந்த இடையீடும் விமர்சனமும் ஜே.ஜே. தெரி விக்கவோ, அல்லது சு.ரா. அதை முன்வைக்கவோ இல்லை. இந்த விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு கம்யூனிஸ்டுகள் மீது ஜே.ஜே. முன்வைக்கும் விமர்சனங்களைப் பார்க்கலாம்.

1. ஒரு நாள் ஒரு பிரபல கம்யூனிஸ்டுத் தலைவரிடம் “பெண்கள் தங்கள் தலையில் உள்ள பேன்களை நீங்கள் ஆட்சிக்கு வந்தபின் தான் அகற்ற வேண்டுமா அல்லது இப்போதே அந்தக் காரியத்தில் ஈடுபடலாமா என்று கேட்கிறான் ஜே.ஜே.

2. பவானி என்கிற கம்யூனிஸ்டு கட்சியின் தோழியை பதினேழு தோழர்கள் காதலித்துக் கொண்டிருந்தார்கள். புரட்சி வரும் வரையில் ஒர இடைக்கால ஏற்பாடாக அவளை வீடுவரை கொண்டு விட்டு விட்டு வரும் பொறுப்பை ஒரு தோழர் மேற்கொண்டிருந்தார் என்று கிண்டல் செய்கிறான். இக்கிண்டலில் புரட்சி குறித்த கிண்டல் ஒருபக்கமென்றால், கட்சி போன்ற பொது அமைப்புக்குள் வருகின்ற பெண்கள் சந்திக்கும் அன்றாடமான நடைமுறைச் சிக்கல்களை முன்வைத்துச் செய்யப்படும் வக்கிரமான கிண்டல் மறுபக்கம்.

3. கட்சியின் பெருந்தலைவர் தோழர் மாத்யூதரகனைச் சந்தித்த போது கட்சி மீது விமர்சனம் வைக்கிறாயாமே. என்ன செய்ய வேண்டும் சொல்லு என்று அவர் கேட்ட போது கட்சி செலவில் பவானி அம்மாளுக்கு கர்னாடக சங்கீதம் கற்றுத்தர உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவள் யதுகுலகாம் போதியில் பாடுவதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் கேட்கிறான்.

மேற்கண்ட விமர்சனங்களை என்னவென்று சொல்வது? இவ்விமர்சனங்களைச் சற்று கவனித்தால் கூட எவ்வளவு கேணத்தனமான விமர்சனங்கள் என்பது புலனாகாமல் போகாது. கேள்விகள் நிறைய தருணங்களில் கேட்ட வனையும் அவனுடைய லட்சணத்தையும் புரிய வைக்கப் போதுமானவையாய் இருக்கின்றன. இலக்கியம் குறித்த ஜே.ஜே.வின் விமர்சனங்களும் அரசியல் குறித்த விமர்சனங்களைப் போலத்தான் அவை கட்சிசார்ந்த முற்போக்கு எழுத்தாளர்களைக் குறிவைத்து வைக்கப்பட்டவையாகவே இருக்கின்றன.

ஏழை, எளியோர்கள், சாக்கடைகள், குடிசைகள், சொறி, சிரங்கு, விபச்சாரம், எண்ணிறந்த வேசிகள், முறை பிறழ்ந்த காதலின் சில வகைகள், அதன் நுட்பங்கள் இவற்றையெல்லாம் முதன்முதலில் தன்னுடைய எழுத்துக்களில் வெளிக்கொணர்ந்தவனும், யதார்த்த இலக்கியத்தின் படைப்புத் தலைவன் என்றும் சொல்லப்பட்டவனுமான முல்லைக்கல் மாதவன் நாயரும் பிற யதார்த்த வகை எழுத்தினரும் தான் ஜே.ஜே.யால் குறிவைத்து விமர்சிக்கப் படுகிறார்கள்.

முல்லைக்கல் குறித்து வைத்த விமர்சனங்கள் இவை,

முல்லைக்கல் ஒரு மடையன். நம்பூதிரிகள், சிற்றரசர்களை காக்காய் பிடித்து விருதுகள் வாங்கியது மாதிரி, கல்வி டைரக்டரைச் சரிக்கட்டி அரசாங்க விருதுகள் வாங்கிக் கொள்கிறான். வேசைகள் குறித்து அதிகமாக அவன் எழுதுவதே பொருளாதாரக் கொடுமைகளை எடுத்துக்காட்ட அல்ல. அவனுடைய மூளையில் தவிர்க்க முடியாத பிரஜைகள் அவர்கள் தான். முல்லைக்கல் வேசைத்தனத்தை உண்மையாகவே நேசிக்கிறான். நாம் என்ன தான் சொன்னாலும் நம் காலத்தில் வேசிகள் இல்லாமல் ஆகிவிடமாட்டார்கள் என்ற ஆசுவாசத்தில் தான் அவன் எழுதிக்கொண்டிருக்கிறான்.

முல்லைக்கல்லும் அவனுடைய சகபயணிகளும் சரி நிலபிரபுத்துவ எண்ணம் கொண்டவர்கள் தாம். சமூக அந்தஸ்தைப் பெறுவதற்கு இவர்கள் பின்பற்றும் உபாயங்கள் நிலப்பிரபுக்களை விடக்கேவலமானவை. இவர்களுடைய உண்மையான ஆசைகள் இரண்டுதான் புகழ், பணம், இந்த லட்சியங்களை அடைய இவர்கள் தந்திர வேஷம் போடுகிறார்கள்.

இவ்வளவு விமர்சனங்களை முன்வைக்கும் ஜே.ஜே.வுக்கு சாதீயம் சார்ந்த உருப்படியான எந்த கேள்வியும் எழவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. பக்கத்தில் உள்ள மாநிலமான தமிழ்நாட்டில் எழுத்தாளன் எல்லாம் சாதிசார்ந்து செயல்படுகிறானோ இல்லையோ சாதிப்பெயர்களை எவனும் வைத்துக்கொள்வதில்லை. இங்கு மட்டும் என்னடா? நீ என்ன முல்லைக்கல் மாதவன் நாயர், அவரென்ன அரவிந்தாட்சமேனன், இவனென்ன பாச்சுப்பிள்ளை, சேர்த்தலை கிருஷ்ண அய்யர் என்று எப்போதும் கேட்டதாகத் தகவல் எதுவும் இல்லை.

முற்போக்கு எழுத்தாளர்களைத் தவிர பழம் பஞ்சாங்கத்துக்கு முட்டுக் கொடுப்பவர்கள். கோபம் வந்தால் சமஸ்கிருதத்தில் திட்டும் சேர்த்தலை கிருஷ்ண அய்யர் போன்றவர்களை எப்போதும் விமர்சிப்பதில்லை. ஒருவேளை முற்போக்கு எழுத்தாளர்களையும், கம்யூனிஸ்டுகளையும் விமர்சிப்பதற்கென்றே ஜே.ஜே.வை நேர்ந்து விட்டு விட்டே இந்நாவலை எழுதினாரோ என்னவோ சு.ரா.

பெண்கள் குறித்து என்ன விதமான கருத்துக்களைக் கொண்டிருந்தான் ஜே.ஜே. என்று கவனிக்கலாம். கம்யூனிஸ்டுத் தோழர்பவானி குறித்து ஜே.ஜே. வெளியிட்ட விமர்சனங்களை ஏற்கனவே பார்த்தோம்.

ஓமனக்குட்டியை அவளது கவிதைகளை முன்னிட்டு ஏளனம் செய்கிறான். அவள் கவிதைகளைப் பாடியபோது அவள் உருகிய உருக்கத்தில் ஐஸ்கட்டியாக பெஞ்சில் வழிந்து போய் விடுவாளோ என்று சந்தேகப்பட்டேன் என்கிறான். அவளது கவிதைத்தொகுதியைப் பிடுங்கி இரயில்வே ஸ்டேசன் பிளாட்பாரத்தில் தூக்கி வீசுகிறான்.

பாச்சுப்பிள்ளையைப் பார்த்து நீ கருநாகப்பள்ளி லெனின் இல்லை என்ற போது மூண்ட விரோதத்தில் பாச்சுப்பிள்ளை ஆறுமாதங்களுக்குள் சரித்திரத்தில் உன் பெயர் இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று சவால் விடுகிறான். அது குறித்த ஜே.ஜே.யின் கமெண்ட் இது. “சரித்திரமும், அவன் பெண்டாட்டி கார்த்தியாயினி வைக்கும் மரவள்ளிக் கிழங்கு கறியும் அவனுக்கு ஒன்றுதான்.”

முல்லைக்கல்லின் மனைவி பார்க்கவி, தனது தாய் என்று எந்தப்பெண் குறித்தும் நல்லவிதமான கருத்துக்கள் ஒன்றுமில்லை.

இந்துமதம் கோலோச்சும் இந்திய சூழலில் பெண்களுக்கான இடம் என்பது வரையறைக்குட்பட்ட மிகக்குறுகிய வெளியாகும். இந்து மனம் பெண்களின் மீதான கண்காணிப்பை எவ்வளவு தூரம் இறுக்கமாய் வைத்திருக்கிறது என்பதையும், அவர்களை தற்குறிகளாய் வைத்திருக்க எவ்வளவு மெனக்கிடுகிறது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால்தான், இவற்றை மீறி வர யத்தனிக்கும் பெண்களின் மதிப்பு தெரியும்.

இதைப் பற்றியெல்லாம் துளியும் அலட்டிக்கொள்ளாமல் பொது வெளியில் நடமாடும் பெண்கள் மீது ஏளனத்தையும், வெறுப்பையும் விசிறியடிக்கும் ஒருவனை என்னவென்று சொல்வது?

மதம், சமூகம், அரசியல், இலக்கியம் என்ற ஒவ்வொரு துறைகளிலும் வெளிப்பட்ட அவன் விமர்சனங்களை தொகுத்துப் பார்க்கையில் மதம் சார்ந்த அவனுடைய கருத்துக்கள் சமகாலத்தில் நாம் சந்திக்கும் இந்துத்துவவாதிகளின் கருத்துக்களை போன்றதாகவே இருப்பதை நாம் கவனிக்க முடியும்.

இந்து மதத்தின் சாரத்தை உள்வாங்கவில்லை என்பது தான் பிறந்த கிறிஸ்தவ மதத்தின் மீதான குறை. இந்துத்து வாவின் மென்மை முகமுடி வாஜ்பேயி சிறுபான்மையினரை உள்வாங்கியது குறித்து எழுதிய கட்டுரையில் தொனித்த கருத்துக்கள் ஜே.ஜே.யின் குரலில் ஒலிப்பதை கவனிக்க முடிகிறது.

இந்திய சமூகத்தை எதிர்கொள்ளும் எவரும் எளிதில் கண்டு சொல்லிவிடக்கூடியது எல்லாச் சீர்கேடுகளுக்கும், வேராய்ச் சாதியும், சாதியமும் இருக்கிறது என்பதை அதைக்குறித்து அபாயகரமான மௌனமே நிலவுகிறது

ஜே.ஜே.யிடம். கம்யூனிச எதிர்ப்பு, பெண்கள் மீதான வெறுப்பு, இந்துமத ஆதரவு, சிறு பான்மை மதங்கள் மீது அதிருப்தி, ஒழுக்கத்தின் மீதான நாட்டம், சாதியம் குறித்து கள்ள மௌனம் என்கிற விதமான கண்ணோட்டத்துடன் செயல்படும் மனிதர் எனக்குத் தெரிந்து வீரத்துறவி ராமகோபாலன் தான். கிட்டத்தட்ட ராம கோபாலன் போன்ற ஒரு நபரை கலைஞன் என்றும் ஆளுமை என்றும் முன்வைப்பதற்கு சுந்தர ராமசாமிக்கு ரொம்பத்தான் தைரியம் வேண்டியிருந்திருக்கும். அந்த தைரியத்தைப்பாராட்டலாம். உன்னதமான கலை, உள்ளளி, அது இதுவென ஜே.ஜே. சில குறிப்புகளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியவர்களின் சொரணையின்மையைப்பார்த்து உச்சு கொட்டவும் செய்யலாம்.

4

படைப்பிலக்கியம் என்பது படைப்பாளியின் சுயம் சார்ந்தே வெளிப்பட வேண்டியிருக்கிறது எனலாம். அது படைப் பாளனின் நேரடியான சுய அனுபவமாக வெளிப்படலாம் அல்லது பிறருடைய அனுபவங்கள் படைப்பாளனின் சுயம் சார்ந்த புரிதலிலும், அப்புரிதலையட்டிய பார்வையிலும் வெளிப்படலாம். படைப்பில் வெளிப்படும் படைப்பாளனின் இந்த சுயம் தான் வாசகனின் வரவேற்பையும், புறக்கணிப் பையும் தீர்மானிப்பதாய் இருக்கிறது.

படைப்பில் வெளிப்படும் படைப்பாளனின் சுயம் வாசகனை அந்நியனாய் நிறுத்துகையில் தான் படைப்புக்கும் வாசகனுக் குமான முரண்பாடு பிறக்கிறது. ஆனால் எல்லா நேரங்களிலும் வாசகன் அந்நியமாய் உணர்வதனால் எற்படும் ஒவ்வாமையை உணர்வதில்லை. அப்படியானால் படைப்பாளனின் சுயம் சார்ந்த பார்வை எவ்வெப்போது வாசகனால் ஏற்கப்படுவதாக இருக்கிறது? எனக்குத் தெரிந்த வரையில் உண்மையாகவே பாதிக்கப்பட்ட ஒருவன் தனது இழப்புகளையும் அதன் வலியை யும் பகிர்ந்து கொள்ளும் போதும், தன்னிடமும், தங்களிடமும் உள்ள அதிகாரத்தை விமர்சனத்துக்குள்ளாக்கும் குற்ற உணர்வுடன் பகிர்ந்து கொள்ளும் போதும் ஒரு படைப்பு வாசகனிடம் தொலைவை ஏற்படுத்துவதில்லை.

சுந்தர ராமசாமியின் நாவல்களைப் பொறுத்தவரையில், அவரது முதல் இரு நாவல்களிலும் அவருடைய சொந்த அனுபவங்கள் முன்வைக்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தைய, ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்த சிலரைக் குறித்த சுந்தர ராமசாமியின் பார்வையில் முன்வைக்கப்பட்டவையாகவே அவரது முதல் இரு நாவல்கள் இருந்தன. அவற்றில் எந்த குற்றஉணர்வும் வெளிப்படவில்லை. அதிகாரம் சார்ந்த எந்த விமர்சனமும் முன்வைக்கப்படவில்லை (ஜே.ஜே. சில குறிப்புகளில் கம்யூனிஸ்டுகள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களின் மறுபக்கம் ஒளிந்திருந்த சனாதனம். அவ்விமர்சனத்தை அர்த்தமற்றதாக்கி விடுகிறது). இவற்றில் எந்த இழப்பும் அதன் வலியும் வெளிப்படவில்லை.

குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலைப் பொறுத்தளவில் குடும்பம் என்ற அதிகார அமைப்பின் மீதான விமர்சனங்களும், அதில் ஒடுக்கப்படுபவர்களாக விளங்குகின்ற குழந்தைகள் பெண்கள் இவர்களின் அவலமும் வெளிப்படுகிறது. நாவலின் பெரும்பாலான பாத்திரங்கள் ஏதோ ஒருவிதத்தில் பாதிக்கப்பட்டவர்களாகவும், பலவீனர்களாகவும் இருக்கின்றன. பாலு, தந்தையின் கண்டிப்பிலும், கண்காணிப்பிலும், வதங்கிப் போன குழந்தை, லட்சுமி நோயாலும் கணவனின் அரவணைப்பு கிடைக்காமலும் பாதிக்கப்பட்டவள். ஆனந்தம் சிறுவயதிலேயே விதவையானவள். செல்லப்பா வறுமையாலும், கையாலாகாத் தனத்தாலும், நடைபிணமாய் உழல்பவர், வள்ளி கறுப்பு நிறம் காரணமான அவமானத்திற்கும் தாழ்வுணர்ச்சிக்கும் ஆளானவள், எஸ்.ஆர்.எஸ்ஸீம் தன்னைக்குறித்த கழிவிரக்கம் கொண்டவர் தான்.

“தன் குழந்தைகளாவது தன்னைப் போல வளராமல் இருக்க வேண்டும். கரடுமுரடாக வளர்க்கவும் தனக்குத்தெரியவும் தெரியாது. கடைசியில் தன்னைப்போல் வளர்ந்து காலில் முள் குத்தியதற்கு அழுதுகொண்டிருப்பார்கள் அவர்களும்” என்ற பயமே தன் குழந்தைகள் மீதான அதீத கண்டிப்புக்கும், விலகலுக்கும் காரணமாய் இருக்கிறது.

சுந்தர ராமசாமியின் மற்ற இரு நாவல்களைப் போலன்றி பெண்கள் அதிக முக்கியத்துவத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே முக்கியமான விஷயம் தான்.

குழந்தைப் பருவத்திலேயே விதவையாய் ஆன ஆனந்தத்தின் உலகம் விரக்திக்குள் தன்னை ஒளித்துக் கொள்வதாய் இருக்கிறது. “உங்களுக்கு இல்லே அக்கா எனக்கு ஸ்பெஷல். பொண்ணா பொறந்தண்டே இருக்கணும் பொட்டும் அழிஞ்சிண்டே இருக்கணும்” என்று புலம்புவதும் அம்பி சின்ன வயதில் ஒரேயருமுறை கன்னத்தில் முத்தமிட்டதை நினைவு கூர்ந்து “இதுதான் அக்கா எங்கள் தாம்பத்யம். இப்ப இதுக்கு என்ன பாவ நிவர்த்தி பண்ணனும் அக்கா? என் வலது கன்னத்தை அறுத்தெடுத்து தலையைச் சுற்றி எறியணுமா? எதுக்காக நீங்க என்னை ஒரு தினுசா முழிச்சப் பாக்கணும்? என்று மனசுக்குள்ளே சீறுவது மாய்த்தான் அவளுடைய வெளிப்பாடுகள் இருக்க வேண்டியிருக்கிறது.

பிஷாரடியின் மகளும் ஸ்ரீதரனின் தமக்கையுமான சுகன்யாவின் குரலில் இன்னொரு பெண்குரல் வெளிப்படுகிறது.

“என் மனசு வகைப்படுத்தி வச்சிருக்கு வள்ளி இந்த ஆம்பிளைகளை சாதுவான முரடர்கள், தந்திரமான முரடர்கள், சுயநலம் கொண்ட முரடர்கள், முரடர்களான முரடர்கள், சிரித்துக் கொண்டேயிருக்கும் முரடர்கள்.”

குழந்தைகள் குறித்த அவதானிப்பு ஒன்று ஒரு நல்ல ஆசிரியரின் குரலில் வெளிப் படுகிறது அங்கலாய்ப்பாய் இவ்விதமாய்

“அம்மா நான் நாற்பது வருஷம் பள்ளிக்கூடத்துல பாடம் எடுத்தவன். சரஸ்வதி கடாட்சம் இல்லாத குழந்தையை நான் பார்த்ததே இல்லை. ஒரு குழந்தை படிக்கலைன்னா அதுக்கு மனுஷகடாட்சம் இல்லைன்னு அர்த்தம். ஏன் நீ படிக்கலைன்னு அந்தக் குழந்தையைக் கேட்டுப்பிரயோசனமில்லை. ஏன் அந்தக் குழந்தை படிக்கலைன்னு சுத்தியிருக்கிறவங்க தங்களைக் கேட்டுக்கணும்”

குழந்தைகள் மற்றும் பெண்களின் உலகை கரிசனையுடன் முன்வைப்பது போன்றே வாழ்வின் சிடுக்குகளையும் நம் பார்வைக்கு வைத்திருக்கிறது நாவல். ஒரு வகையில் ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் மனிதர்களே மற்றொரு தளத்தில் ஒடுக்குபவர்களாகச் செயல்படும் முரண்பாட்டை நுட்பமாக முன்வைக்கிறது நாவல். லட்சுமி கடும் நோயால் அவதிப்படுகின்ற ஒரு பார்ப்பன வீட்டு குடும்பத்தலைவி. கூட்டுக் குடும்பத்தில் அவளுக்கு மிகவும் கசப்பான அனுபவங்கள் இருக்கின்றன. அதில் பழக்கப் படுத்தப்பட்ட தூரமே இறுதிவரையில் தனக்கும் தன்கணவனுக்கும் இடையில் இருந்து சிரமப்படுத்துகிறது. நோயாலும், கணவனின் அரவணைப்பு கிடைக்காமலும் வதங்கும் நிலையிலுள்ள அவளே, தன் தங்கை வள்ளியின் சாதி மீறிய காதலுக்கு எதிராகச் செயல்பட்டு, அவளை வலுக்கட்டாயமாக ஊருக்கு அனுப்பி வைத்து விடுகிறாள்.

“நான் அவளை ஊருக்கு அனுப்பி வெச்சது சரின்னு தான் நினைக்கிறேன். எனக்கு வேற வழி தெரியலை. எல்லாத்தையும் கணப் பொழுதுல விட்டுடுன்னா என்னால முடியாது.... நான் தனியல்ல பொறந்து பழையாத்துத் தண்ணியைக் குடிச்சு வளர்ந்தவள்” என்று அது குறித்து கொஞ்சமும் சஞ்சலமும் கொள்ள மறுக்கிறாள்.

“உனக்கு சாஸ்திரத்தைப் பற்றித்தான் கவலையே தவிர மனுஷ மனத்தைப் பற்றிக் கவலை இல்லை” என்று எஸ்.ஆர்.எஸ்ஸே ஒரு முறை சொல்வதைப்போல அடிப்படையில் பழமைவாதப் போக்கின் பிரதிநிதியாகவோ குடும்பம் என்னும் அமைப்பில் அவளுடைய பங்கு இருக்கிறது.

குடும்பம் என்கிற அமைப்பு வழங்குகிற அதிகாரம் முழுவதையும் பிரயோகிப்பவனாக விளங்குகிற எஸ்.ஆர்.எஸ்ஸிடமிருந்து முற்போக்கான சிந்தனைகள் வெளிப்படுகின்றன சில சமயங்களில். வள்ளியின் சாதி மீறிய காதலுக்காக லட்சுமியும் அவளுடைய தந்தையும் சேர்ந்து அவளை வலுக்கட்டாயமாக ஊரை விட்டு அனுப்பும் செயலை கண்டிக்கிறார். விதவையான ஆனந்தத்தின் செல்லப்பாவுடனான மறுமணத்தை வரவேற்கிறார். அதற்காக பரிந்து பேசுகிறார்.

“அசடு, வாழ்கையைக் கண்திறந்து பாரு. ஆனந்தத்தை சந்தோஷமா வழியனுப்பிவை. சகல பேதங்களும் தூள்தூளாகப் போகிற காலத்தைப் பார்த்துப் போயிண்டிரக்கோம் நாம. அந்த காலத்துக்கு ஆரத்தி எடுத்து உன் புத்திசாலித் தனத்தைக் காட்டு இல்லைன்னா இருட்டு மூலையிலப் படுத்துண்டு அழு” என்கிறார்.

சு.ரா.வின் நாவல்களுள் இந்நாவல்தான் ஒரு பார்ப்பன குடும்பம். அக்குடும்பம் சார்ந்த பாத்திரங்கள் இவற்றை களமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பார்ப்பனீய சமூகத்தின் கலாச்சார பண்பாட்டு மேலாதிக்கத்தின் மீதான அடிப் படையான விமர்சனங்கள் எவற்றையும் முன் வைக்கவில்லை என்றாலும், போகிற போக்கில் பார்ப்பனர்கள் லேசான விமர்சனத்துக்குள்ளாகிறார்கள். கோமதியின் கடிதத்தில் தன் சிநேகிதிகளை ஜாதியைச் சொல்லியும் மதத்தைச் சொல்லியும் குடும்பத்திலுள்ளவர்கள் மட்டம் தட்டுவதையும், அதே நேரத்தில் சிறுபான்மையோர் நடத்தும் மருத்துவமனைகளில் ஓடியோடிப் போய் இலவச வைத்தியம் பெற கூசுவதேயில்லை என்று இடித்துரைக்கிறாள்.

பிடில் ராமைய்யர் என்ற பாத்திரம் கிட்டத்தட்ட சாப்பாட்டு ராமன் போன்றே வர்ணிக்கப் பட்டிருக்கிறார். உப்பேரி என்னும், பலாப் பழத்தில் செய்யப்படும் பதார்த்தத்தை தின்பது குறித்து அவர் சொல்வதாக எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.

“தொடர்ந்து சக்கை உப்பேரி, சக்கை வரட்டி, சக்கைச்சுளை வேணும்னா கொஞ்சம் தேன் சேத்துக்கலாம். சாப்பிட்டிண்டே இருக்கலாம். சுளையைக் கீற்று போல நறுக்கி தேங்காய் எண்ணெயில் வறுத்தா ஒவ்வொண்ணும் தங்கக் காப்பு மாதிரி பொன் நிறத்துக்கு வரும். சாதம், தோசை, இட்லி எல்லாம் வெறும் குப்பை நாக்கு இல்லாதவன் சாப்பிடுகிற வைக்கோல், சக்கை உப்பேரியை மடியில் கட்டிண்டு ரெண்டு ரெண்டா கடவாப் பல்லால அரைச்சுச் சாப்பிடணும். ஒரு படி சாப்பிட்டா மூச்சு முட்டும். உடனே சித்த வெளியில நடந்துட்டு வந்தா மேற்கொண்டு காப்படி சாப்பிடலாம். ஒரு தூக்கம் போட்டு எழுந்திருந்தா காப்படி சாப்பிடலாம். இதே மேனிக்கு ஒரு பத்து நா போனா பீச்சத் தொடங்கும். ஒரு நாளைக்கு ரெண்டு தரம், மூண தரம்னு ஆரம்பிச்சு ஒரு நாளைக்கு இருபது இருபத்திரெண்டு தவா வரையிலும் பீச்சும், அப்போது மட்டும் ஒருவாரம் பத்துநாள் காயை சந்தையில் கொண்டு போய் தள்ள வேண்டியிருக்கும். குடஜாரிஷ்டம் மூன்று துடம் மூணு நா குடிச்சா மலம் வெண்ணெய் மாதிரி இறுகிடும் திரும்பவும் உப்பேரி திங்கத் தொடங்கலாம்.”

இது தவிரவும், எஸ்.ஆர்.எஸ்ஸின் வீட்டின் முன் வேனல் பந்தலில் சனிக்கிழமை தோறும் கூடும் நண்பர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் நாவலின் இன்னொரு சிறப்பம்சம். மிகவும் காத்திரமான விஷயங்கள் பல்வேறு கோணங்களில் அலசப்படுகின்றன. அப்பகுதிகளில் மிகவும் நிதானமான நடையில் வாழ்க்கையை அலசும். இப்படைப்பில் சுந்தர ராமசாமியின் சுயம் சார்ந்த விருப்பு வெறுப்புகள் துருத்திக் கொண்டு நிற்காமலிருப்பதால் வாசகனுக்கான இடைவெளிகளுடன், உரையாடல்களுடன் தொடர்கிறது இந்நாவல்.

சரியான வாசகக் கவனிப்பை இந்நாவல் பொறதது ஆச்சரியம்தான். ஜே.ஜே. சில குறிப்புகள், ஒரு புளியமரத்தின் கதை நாவல்களை தலை மேல் வைத்துக் கொண்டாடிய தமிழ் இலக்கிய உலகம் அந்நாவல்களில் இருந்தது போன்ற உள்நோக்கங்கள் எதுவுமின்றி வந்த இப்படைப்பை உதாசீனம் செய்த நிகழ்வானது, ஜென்டில்மேன், அந்நியன் போன்ற பார்ப்பன கருத்தியலுடன் வரும் படங்களை அங்கீகரித்து, இரண்யன், கோவில்பட்டி வீரலட்சுமி போன்றவற்றைப் புறக்கணிக்கும் தமிழ் சினிமா ரசிகர்களை விட எவ்விதத்திலும் மேம்பட்டவர்கள் இல்லை தமிழ் விமர்சகர்களும் வாசகர்களும் என்பதை உறைக்கும் படி சொல்கிறது என்றே புரிந்து கொள்கிறேன்.

சுந்தர ராமசாமி குறித்த இக்கட்டுரையை முடிப்பதற்கு முன்பாக சுந்தர ராமசாமி குறித்துச் சமீபத்தில் வெளிவந்த ஒரு புத்தகத்தில் அவரது முன்னாள் சிஷ்யபிள்ளைகளில் ஒருவர் உதிர்த்திருக்கும் கருத்துக்கள் குறித்து கவனம் செலுத்துவது தேவைதான் என்று நம்புகிறேன். அந்த நூல் நவீனத்துவத்தின் முகங்கள். எழுதியவர் ஜெயமோகன். வளவளவென்று எழுதும் வழக்கமுடையவர் ஜெயமோகன். இந்த புத்தகமும் வளவளதான். இந்த வளவளவுக்குள் தெரிவிக்கும் அபிப்பிராயங்களுள் சிலவற்றை கவனிக்கலாம்.

சுந்தர ராமசாமி மரபை முழுதுமாக நிராகரிக்கிறார். சுமை, பொதி, பின்பாரம் வறட்டுக் கௌரவம் என்ற சொற்களால் மட்டுமே மரபைச் சுட்டுகிறார். மரபில் பிடிப்போ, படிப்போ இல்லை என்பதே அவருடைய படைப்புலகின் முக்கியமான பலவீனம்.

ஜே.ஜே. கலகம் செய்து வெளியேறிய அந்நியன். அவனைப் பற்றி அவனைப்போன்ற பிறரைப்பற்றிப் பேசும் நாவல் ஏன் நமது பண்டாரங்களை, துறவிகளை, சித்தர்களை இம்மிகூடப் பொருட்படுத்தவில்லை?.... அசலான பார்வையுடன் அந்நாவல் தொடங்கியிருக்குமெனில் சுந்தரராமசாமியின் கவனம் இந்தப் பெரிய தேசத்தில் எங்கும் உறுதியாக நிலைக்காமல் நுரைபோல மிதந்தலையும் நமது பண்டாரங்களின், துறவிகளின் மீதல்லவா முதலில் விழுந்திருக்கும்...? ஒருபேச்சுக்குச் சொல்கிறேன் அல்பேர் காம்யூ இந்தியாவில் பிறந்திருந்தால், பத்து வருடம் இந்தியாவில் வாழ்ந்திருந்தால், இந்தப்பண்டாரங்களின் உலகினை அல்லவா எழுதியிருப்பார்?

இவை தவிரவும், சொற்களின் மீதான அவரது கட்டுப்பாடு, செய்நேர்த்தி, குறித்து அதீத கவனம் ஒழுங்கு (படைப்பினது தான்) குறித்த ஆழமான பிடிப்பு இவையெல்லாம் சுந்தர ராமசாமியின் எழுத்தைப் பாதித்துவிட்ட, அவரின் வீச்சைக் குறைத்து விட்ட காரணிகள் என்றும் முன்வைக்கிறார்.

சுந்தர ராமசாமியின் நாவல்கள் எந்தளவில் போதாமை கொண்டவை, பின்தங்கியவை என்பதை இந்தக் கட்டுரையின் முந்தைய பக்கங்களில் பார்த்தோம். அவருடைய பலம் என்று ஏதாவது இருக்குமென்றால் அவருடைய அங்கதம் மிக்க நடையைச் சொல்லலாம். அத்துடன் படைப்புகளின் மரபை அல்லது பழமையை நிராகரிக்கும் போக்கும் அவருடைய படைப்புகளின் துலக்கத்திற்கு முக்கிய காரணமாய் இருந்தது. ஆரம்பகால சுந்தர ராமசாமி மரபைத் தூக்கிப்பிடிக்கிற ஒருவராகவே இருந்தார் என்று சொல்லமுடியும். புளியமரத்தின் கதை நாவலில் இப்போக்கு வெளிப்படையாகத் தெரியும். எண்பதுகளுக்குப் பிறகான சுந்தர ராமசாமியின் படைப்புகளில் மட்டுமல்லாமல் சமூகச்செயல்பாடுகளிலும் மரபை முற்றாக நிராகரிக்கும் போக்கை நாம் காண முடியும். ஜெயமோகன் மறுப்பது இந்த சுந்தர ராமசாமியைத் தான் என்பதை கவனிக்க வேண்டும்.

சுந்தர ராமசாமியின் சாதகமான அம்சங்களைச் பாதகமான அம்சங்களை முன்நிறுத்தும் ஜெயமோகனின் உள்நோக்கத்தை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் “நீங்க இன்னும் மாடர்ன் லிட்டரேச்சருக்குள்ள வரவே இல்லை” என்று எப்போதோ சு.ரா. ஜெயமோகனை நோக்கிச் சொன்னதற்குப் பழிதீர்க்கும் விதமாய் அப்படி எழுதியிருக்கும் சாத்தியமும் இருக்கிறது.

எது எப்படியோ, ஜெயமோகனின் எழுத்துக்களில் வெளிப்பட்ட சு.ரா. குறித்த இரு தகவல்களில் இருந்து சு.ரா.வை நாம் பாராட்ட வேண்டியிருக்கிறது. ஒன்று ஜெயமோகன் மாடர்ன் லிட்டரேச்சருக்குள் வரவில்லை என்று வெளிப்படையாய் உண்மையைப் போட்டுடைத்தற்காக, மற்றொன்று ஜெயமோகனின் படுகை அதை குறித்த விவாதத்தில் ஞானியின் (கோவைதான்) ரசனையை அவரால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஞானிக்கு இலக்கியம் தெரியாது என்று சாட்சி பகர்ந்ததற்காக.

ஆனாலும் சு.ரா. குறித்து எனக்கு இன்னொரு வருத்தம் உண்டு ஜே.ஜே.வை அரவிந்தாட்சமேனன் ஓவியத் துறையிலிருந்து இலக்கியத்துறைக்கு வழிமாற்றம் செய்தாட் கொண்டது போல் ஜெயமோகனை ஆன்மீக உபந்நியாசத் துறைக்கு ஆற்றுப்படுத்தி இருந்தால், அது ஜெயமோகனுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் ஒருசேர நன்மை பயக்கும் காரியமாய் இருந்திருக்கும்.

அவர்தான் ஆற்றுப்படுத்தவில்லை என்றாலும் ஜெயமோகன் தாமாகவே தம்மைக் குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். தாம் செயல்பட வேண்டியது எத்துறையில் என்பதையும் எந்த துறை தமக்குப் பொருத்தமானது என்பதையும் குறித்து யோசிக்க வேண்டும். அதற்கு முன் பேரிலக்கியம், உள்ளளி, செவ்வியல், தரிசனம், உணர்வெழுச்சி, உச்சகட்ட சாதனை, ஆழம் போன்ற வார்த்தைகளை முதலில் மூட்டையாய்க்கட்டி ஆழமான பாழுங்கிணற்றில் போட்டுவிட்டு, திரும்பிப் பார்க்காது வந்து தனியறையில் உட்கார்ந்து உணர்ச்சி வயப்படாது யோசிக்கலாம். யோசிக்கையில் கேட்டுக் கொள்வதற்கு வசதியாய் சில கேள்விகளைக் கீழே தருகிறேன்.

1. இந்துத்துவ ஆதரவு, பழம் பஞ்சாங்கத்திற்கு மூட்டுக் கொடுப்பது போன்ற கைங்கரியங்களுக்காகவே பார்ப்பன ஊடகங்களும், விவரந்தெரியாது சிலரும் விவரந்தெரிந்து உள் நோக்கத்துடன் சிலரும் என இலக்கியவாதிகள் சிலரும் நம்மைத் தூக்கிப்பிடிப்பதாலேயே நாம் இலக்கியவாதி என்று ஆகி விடுவோமா?

2. இலக்கியமென்பது மானுட வாழ்வு மற்றும் சிந்தனைத் தளங்கள் சிறிதாவது மேம்பட வேண்டும் என்ற உள்ளுணர் வோடும் படைக்கப்படுவது என்பதுவும், அதனாலேயே அதிகாரங்கள், மேலாதிக்கங்கள் இவற்றை எதிர்த்துச் செயல் படுகின்ற படைப்புகளைத் தந்து அதற்கான தண்டனைகள் முதலானவற்றை எதிர்கொள்பவர்கள் இங்கும், இந்நாட்டுக்கு வெளியிலும் கணிசமானவர்கள் இருக்கிறார்களே. இவர்களுக்கு முன்னால் வந்து நானும் இலக்கியவாதி என்று கையுயர்த்த ஏன் நமக்குக் கூசமாட்டேன் என்கிறது?

3. Pleasure of the text என்கிறார்களே. நாம் எழுதுபவற்றைப் படித்துவிட்டு அதை அடைந்தேன் என்று யாராகிலும் சொல்லியிருக்கிறார்களா?

4. அங்கதம், அங்கதம் என்றுச் சொல்கிறார்களே நிறைய இலக்கியவாதிகளிடம் அது இயல்பாக வெளிப்படுகிறதே! இலக்கியப்படைப்புகளுக்கே உரிய அது நம்மிடம் ஏன் மருந்துக்குக்கூட இல்லை? நம்மிடம் ஆழம், ஆவேசம் என்ற பெயர்களில் நாம் வெளியிடும் சரக்கு ஒலிப்பெருக்கிகளின் முன்னே உபந்நியாசகர்கள் வெளியிடுவது தானே!

5. ஒரு இலக்கியப்படைப்பிற்கு அவசியமான செறிவு என்பது இல்லாமல், தன்னிடத்தில் வெளிப்படும் வளவளவென்று வார்த்தை குவியல் உபந்நியாசர்களுக்கே உரியது அல்லவா?

6. நரகம், பாவம், கழுவாய் போன்ற வார்த்தைகளை வைத்து மிரட்டிக்கொண்டே தமது பேச்சுக்கடையை அபிவிருத்தி செய்யும் உபந்நியாசகர்களின் வேலை அல்லவா சிறந்த படைப்பு, சிறந்த படைப்பாளன், மோசமான படைப்பு என்ற வார்த்தைகளைக் கொண்டு மற்ற படைப்பாளர்களை மிரட்டிக் கொண்டே மிரண்டவர்கள் முன் நம் கடையை விரிக்கும் காரியம்.

இன்னும் இது போல நிறைய கேட்டுக் கொண்டே போகலாம். குறைந்த பட்சம் இவற்றையாவது கேட்டு ஒரு தெளிவுக்கு வந்தபின் மேற்கொண்டு என்ன செய்வது என்பதைத் தீர்மானிக்கலாம்.நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com