Keetru Anicha
Anicha Logo
இரு மாத இதழ் - மார்ச் 2006

நடந்தவை நடப்பவை

‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’
அ. மார்க்ஸ்

தயாநாயக் என்கிற மகாராஷ்டிர மாநில காவல்துறை உதவி ஆய்வாளர் (SI) ஒருவர் பற்றிய செய்திகள் கடந்த இரு மாதங்களாகப் பத்திரிகைகளில் வந்து கொண்டிருப்பதை ஒரு சிலர் கவனித்திருப்பீர்கள். வருமானத்தை மீறி பெரிய அளவு சொத்துக்கள் வைத்திருந்தார் என்பது அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போட்டுள்ள வழக்கு. அவர் வீடு சோதனை இடப்பட்டது, அவர் தலைமறைவாக இருந்தது, முன்ஜாமீனுக்கு விண்ணப் பித்தது, பல நீதிமன்றங்களில் அது மறுக்கப்பட்டது, கடைசியாய்ச் சில தினங்களுக்கு முன் அவர் மும்பை நீதிமன்றத்தில் சரணடைந்தது எனத் தொடர்ந்து செய்திகள்.

9,000 ரூபாய் மாதச் சம்பளம் வாங்குகிற அந்த போலீஸ் சப்இன்ஸ்பெக்டரின் இன்றைய சொத்து 100கோடிகள். பெரிய மனிதர்களுடன் பழக்க வழக்கங்கள், குறிப்பாகச் சினிமாக்காரர்களுடன் என ஜெகஜோதியாக வாழ்ந்தவர் அவர். சொந்தக் கிராமத்தில் தனது அம்மாவின் பெயரில் 16கோடி ரூபாயில் பள்ளி ஒன்றைக் கட்டி முடித்து அமிதாப்பச்சனை வைத்துத் திறந்தவர். இன்று சிறையில்.

ஒரு போலீஸ்காரன் லஞ்சம் வாங்குவது அப்படி என்ன பெரிய செய்தி என்கிறீர்களா?

இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஜூனியர் விகடனில் (17-12-04) ஒரு கட்டுரை வந்திருந்தது. இவருடன் இன்று வழக்கொன்றில் சிக்கியுள்ள முதுநிலை ஆய்வாளர் பிரதீப் ஷர்மா என்பவரைப் பற்றி. ‘அய்தக் 100’ என்பது அவருக்கு அவரது துறை அளித்துள்ள செல்லப்பெயர். அதாவது 100 என்கவுண்டர்கள் பண்ணியவர். அவர் சட்டபூர்வமாகப் பண்ணிய 100வது கொலை கொண்டாடப்பட்ட செய்தி அது. ‘அய்தக் 56’ என்றொரு இந்தி சினிமா வந்தது. அது பிரதீப் ஷர்மாவின் கதை தான். அதில் 56 என்கவுன்டர்கள் செய்கிற கதாநாயகனாக நடித்த நானாபடேகருக்கு இந்த பிரதீப் ஷர்மா பதினைந்து நாட்கள் ‘என்கவுண்டர்’ பயிற்சி கொடுத்திருக்கிறார். தனக்குக் கிடைக்கும் பரிசுகளைக் காட்டிலும் அளிக்கப்படும் அங்கீகாரமே தன்னைப்பெருமைப்படுத்துகிறது என அவர் கூறி யிருந்தார். “சில மேலதிகாரிகள் என்கவுன்டருக்காக’ போக்கு வரத்தை மாற்றிக்கூட ஒத்துழைத்தார்கள்” என்று அவர் பெருமிதம் பொங்கியிருந்தார். ‘என்கவுண்டர்களை’க் கண்டிக்கும் மனித உரிமை ஆர்வலர்களை அவர் கண்டித்திருந்தார். “உயிரோடு பிடித்தால் இவர்கள் பாராட்டப்போகிறார்களா என்ன?” என்று கேட்டிருந்தார்.அந்தக் கட்டுரையின் கடைசியில் இதற்கு முன் 100 போட்ட போலீஸ் அதிகாரி என தயாநாயக் பற்றி எழுதப்பட்டிருந்தது. மும்பை தாதா தாவூத் இப்ராஹிமின் ஆட்களிடம் பணம் பெற்றுக்கொண்டு சோடாராஜன் ஆட்களை மட்டுமே ‘என் கவுண்டர்’ பண்ணியதாக அவர்மீது குற்றச்சாட்டு உள்ளதையும் ஜூ.வி. கட்டுரை குறிப்பிட்டிருந்தது.

100 கோடி சொத்து எப்படிச் சேர்ந்தது என்பது இப்போது விளங்கியிருக்கும். ஷர்மாவின் மீதும் நாயக்கின் மீதும், “பணம் கொடு. இல்லாவிட்டால் ‘என்கவுண்டர்’ என்று சொல்லிக் கொன்றுவிடுவேன்” என மிரட்டியதாக பழைய இரும்பு வணிகர் ஒருவர் வழக்குத்தொடர்ந்துள்ளார். சோட்டா ஷகிலிடம் ஒரு ‘காரியத்திற்காக’ 5 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டதாக இன்னொரு வழக்கு.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட கொலைகள் சட்டபூர்வ மானவையாக மட்டுமின்றி வீரதீரச் செயல்களாக அரசாலும்மீடியாக்களாலும் பாராட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. தவிர்க்க இயலாமல் மோதலில் ஒரு ‘குற்றவாளி’ கொல்லப்படக்கூடிய நிலை ஏற்படுமானால் என்கவுண்டர் செய்த அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் குற்றவாளி இல்லை என நிறுவப்படுவது வரை வேலையிலிருந்து நீக்கி வைக்கப்பட வேண்டும் என்பது மனித உரிமை ஆணையம் வழங்கியுள்ள நெறிமுறை. இவை நடைமுறையில் கடைபிடிக்கப்படுவதில்லை. பஸ்போக்குவரத்தை எல்லாம் மாற்றிவிட்டு ‘என்கவுண்டர்கள்’ நடக்கின்றன எனில் இவை தற்செயலாகவோ, தவிர்க்க இயலாமலோ நடந்தவை அல்ல, திட்டமிட்டுச் செய்யப்பட்டவை என்பது தெளிவு.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் ராஜாராமன் என்கிற ‘தமிழ்த் தீவிரவாதி’ ஒருவரையும் அவருடன் இருந்த சக கைதி ஒருவரையும் சென்னையில் என்கவுண்டர் செய்தார்கள். தலைமறைவாகத் திரிந்தவர்களைப் பிடிக்க நேர்ந்த போது அது நடந்ததாக நினைத்து விடாதீர்கள். சிறையிலிருந்த அவர்களைக் காவல் நீடிப்பு செய்வதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்துவிட்டுத் திரும்ப அழைத்துச் சென்றபோது அவர்கள் தப்ப முயற்சித்தனர் எனவும் நடந்த மோதலில் அவர்கள் கொல்லப்பட்டனர் எனவும் போலீஸ் கூறியது. வழக்கமாகக் காவல் நீடிப்பதற்காகக் காலையில் கொண்டு வருவதற்குப் பதிலாக மாலையில் அவர்களைக் கொண்டு வந்தது என்பதையும், வழக்கமாக அண்ணாசாலை வழியாகத் திரும்ப மத்திய சிறைக்கு அழைத்துச் செல்வது என்பது தவிர்க்கப்பட்டு கோட்டூர்புரம் வழியாகச் சென்றதையும் மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியபோது சரியான பதில் அளிக்கப்படவில்லை.

மனித உரிமை அமைப்புகளும் அத்தோடு விட்டுவிட்டன. பெரும் நிதிப்பின்புலங்களுடன் செயல்படும் N.G.9 மனித உரிமை நிறுவனங்களும் கண்டு கொள்ளவில்லை. வீரப்பன் என்கவுன்டர் தொடர்பாக இங்கே மேற்கொள்ளப்பட்ட ஆரவாரங்களை நாம் அறிவோம். இது குறித்தும் சில அய்யங்களை முன்வைத்து அவரது மனைவி இன்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.

என்கவுன்டர் கொலையாளிகளை ஹீரோக்களாகப் போற்று வது குறித்து ஒரு விரிவான விவாதமும் வலுவான கண்டனமும் தேவை.