Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Anicha
Anicha Logo
இரு மாத இதழ் - மார்ச் 2006

நூல் அறிமுகம்
ச. கண்மணி

அமைப்பு மையவாதம், பின் அமைப்பியல் மற்றும் கீழைக்காவிய இயல்
- கோபிசந்த் நாரங்
மொழியாக்கம்: என்.பாலசுப்பிரமணியம்
பக்கம்:584, விலை:ரூ275/
வெளியீடு: சாகித்ய அகாடமி
சென்னை-18


பேராசிரியர் கோபிசந்த் நாரங் உருது மொழியில் 1995இல் எழுதித்தர 2005-ல் என். பாலசுப்பிரமணியம் தமிழாக்கம் செய்து சாகித்திய அகாடெமியின் வெளியீடாக வந்துள்ளது இந்நூல். இதன் உருது மூலமான ‘ஸாக்தியாத், பஸ் - ஸாக்கியாத் ஒளர் மக்ரீகீஷேரியாத்” என்ற படைப்பு 1995இல் சாகித்திய அகாடெமி விருது பெற்றது.

பின்நவீனத்துவம் - அரசியல், இலக்கியம் என்ற அ. மார்க்சின் நூல் வெளியான அதே காலகட்டத்தில் உருது மொழியில் இந்நூல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

உருதுமொழியில் கவிஞர் ஹாலியின் ‘முகத்தமா ஷேரோ ஷாயரி’ என்ற இலக்கிய கொள்கை குறித்தான நூல் 1893இல் வெளியானதற்கு பிறகு ஒரு நூற்றாண்டுகழித்து இந்நூல் வெளிவந்துள்ளது. உருதுமொழி மூன்று பெரிய இலக்கிய இயக்கங்களின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் கண்டது. ஸர் சையது இயக்கம், முற்போக்குவாத இயக்கம் மற்றும் நவீனத்துவ இயக்கம், உருது முற்போக்கு வாத இயக்கம் குறித்து அ. மார்க்ஸ் ‘புதுஎழுத்து’ இதழில் “உருதுமொழி கவிதை மொழியிலிருந்து உரைநடை வடிவம் பெறுவதற்கும், நவீன சிந்தனைகளை பெற்று அதன் வளர்ச்சிக்கும் இந்திய அளவில் 1950லிருந்து முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பங்கு வகுத்தது” என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்சூழலில் ’90 களில் தொடங்கி இன்றுவரை விவாதத்திற்கும், கிண்டலுக்கும் ஆளாகி வரும் பின் நவீன நிலை சிந்தனைகளுக்கு ஆதரவாகவும், கல்விசார்ந்த ஓர் ஆதரவு குரலாகவும் ஆய்வு நூலாகவும் தமிழில் வெளியாகி உள்ளது சிறப்பானது.
இலக்கிய மற்றும் தத்துவ கொள்கைகளில் ’60களில் ஏற்பட்ட மாற்றங்கள் உலகளவில், குறிப்பாக ஐரோப்பாவில், அமெரிக்காவில் தத்துவங்களை கேள்விக்குள்ளாக்கின. மொழியியல் கொள்கையில் பெரும் உடைப்பை ஏற்படுத்தின. தத்துவத்திற்கும் மொழிக்கும் உள்ள உறவு குறித்து கோபிசந்த் நாரங்க இந்நூலில் அமைப்பியல், பின் அமைப்பியல், பின்நவீனத்துவம், பௌத்தம், காவியஇயல் ஆகிய தலைப்புகளின் தளங்களில் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.

அமைப்பியலில், மொழியியல் குறித்தான சுசூரின் கருத்துக்களாக, “மொழி என்பது ஓர் ஊடகம் அல்ல, ஓர் உருவமாக (form) உள்ளது; மொழி என்பது வேறுபாடுகளின் ஒழுங்கமைவாகும், இதில் எவ்விதமான ஒத்த தன்மைக்கும் இடமில்லை; மொழி என்பது விதிமுறைகள் கொண்ட ‘அமைப்பு’ ஆனால் மொழி வெவ்வேறு பொருள்களின் சேர்க்கையல்ல” என்று கூறப்படுகிறது. அமைப்பியல் மொழி அமைப்பு, சமூக அமைப்பு பற்றிய ஆழமான ஆய்வுகளை நூலாசிரியர் இங்கே குறிப்பிடும்போது, அமைப்பியல் ‘சமூகம்’ என்ற சொல்லாடலுக்கு மாற்றாக ‘அமைப்பு’ அல்லது ‘சமூக உருவாக்கம்’ என்ற கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

ரஷ்ய உருவவாதம் என்ற சிந்தனை போக்கை விவாதிக்கும் போது, “இலக்கிய அமைப்பின் விதிமுறைகளை இலக்கியத் தன்மையிலிருந்து எடுத்துகொள்ள வேண்டும், இலக்கியவாதியிடமிருந்து அல்ல; கவிதை சொற்களால் உருவாகிறது, உள்ளடக்கத்தினால் அல்ல; காவிய மொழி சுயமாக நிலைநாட்டினாலும் அதை பொருளிலிருந்து பிரிப்பதில்லை; மாறாக அதன் பன்முக அர்த்தங்களின் சாத்தியக் கூறுகளை மேலெழும்பச் செய்கிறது; கலை யதார்த்ததை உருமாற்றி முன் வைக்கிறது” போன்ற கருத்துக்களை ரோமன் யாகப்சன், பிரக்ட், ஷ்லோவங்கி ஆகியோர் முன்வைத்துள்ளனர். உருவவாதம் அமைப்பியலுக்கு இணைப்பு கண்ணிகளாக உள்ளதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

அமைப்பியல் சிந்தனைகளில் லெவிஸ்டிரஸ், ரோலன் பார்த் ஆகியோரின் கருத்துக்கள் பரவலாக விவாதிக்கப்படுகின்றன. ரோலன் பார்த் பிரதி - வாசகன் உறவு பற்றி கூறுகையில், “பிரதியிலிருந்து அர்த்தத்தை உற்பத்தி செய்யும் செயல்பாட்டில் சில குறிப்பான்’களின் குறுக்கீட்டைச் சற்றும் உணராமல், வாசகன் சமபங்காளியாவதற்கு சுதந்திரம் உடையவன், மொழிப்பேரரசு கோலோச்சும் இடங்களை வெளிப்படுத்துபவன் வாசகனே, அர்த்தத்தின் எந்த ஒழுங்கமைவிலும் பிரதியை இணைக்கவும், படைப்பாளியின் கருத்தை தள்ளவும் அவனுக்கு முழு உரிமை உண்டு” என்பதன் மூலம் படைப்பாளி வாசகன் உறவிற்கு புதுவிளக்கம் அளிக்கிறார். பல்பிரதிதன்மை பற்றி கூறுகையில் “பிரதி மற்ற பல்வேறு பிரதிகளுடன் கலந்திருக்கிறது. அர்த்தத்தை உற்பத்தி செய்யும் செயற்பாங்கில் படைப்பாளி அல்லது அவருடைய கருத்து எவ்விதத்திலும் குறுக்கிட முடியாது” என்கிறார்.

பின்அமைப்பியலுக்கு தொடக்கமாக ரோலன் பர்த்தின் சிந்தனைகள் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ழாக்லக்கானின் ‘மனித தன்னிலை’ பற்றிய சிந்தனை உளவியல் ரீதியாக மொழியை ஆய்வு செய்ய உதவுகிறது. லக்கான் மொழி அமைப்பில் நனவிலி இயங்குவதை காண்கிறார். மொழி அமைப்பு நிச்சயமாக திடமில்லாத ஒன்று, ஆகவே அவர் ‘குறிப்பானின்’ செயலையும் நனைவிலியின் நகலாகவே கருதுகிறார். லக்கானின் புது ப்ராய்டிச கொள்கை அனைத்து சிந்தனையும் ‘மற்றதைப்’ (other) பற்றியதே என்ற உத்தர வாதத்தை அளிக்கிறது. தன்னைத்தானே பெயர்த்துக் கொள்ளக்கூடிய, தன்னைத்தானே அழிக்கக்கூடிய எழுத்துதான் ஆதர்சமானது என்கிறார். கொள்கையை நிறுபவர்களுக்கு அல்லது கட்டமைப்பவர்களுக்கு லக்கான் கூறும் அறிவுரை: ‘கொள்கை மாளிகையைக் கட்டி எழுப்புபவர்களே, ஜாக்கிரதை!’

பின்அமைப்பியல் சிந்தனையாளர்களில் மிகமுக்கி யமானவரான மிஷல்ஃபூக்கோ, ‘பிரதி தன்மை’க்கு பதிலாக சொல்லாடலுக்கு (Discourse) முக்கியத்துவம் தருகிறார். ஏனைய பின் அமைப்பியல் வாதிகளைப் போல ஃபூக்கோவும் ‘தான்’ என்ற அகங்காரத்துக்கு எதிரியே. அதிகாரத்தை பற்றிய ஃபூக்கோவின் கருது கோளாக “மனிதர்கள் பேசப்படாத ஆவணக்கிடங்குகளின் சட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு கீழ்படிந்து நடக்கவேண்டிய கட்பியத்தில் உள்ளார்கள்; அரசுபீடம் ‘சொல்லாடல்’ மூலமாகத்தான் அரசியல், கலை மற்றும் அறிவியலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறது; உலகின் எந்த சொல்லாடலும் நூற்றுக்குநூறு முழுமையானதல்ல, அவற்றில் ஆதிக்க சக்தி மிகுதியாக இருக்கும் அல்லது குறைவாக இருக்கும்” என்று குறிப்பிடப்படுவது பாசிச மற்றும் சர்வாதிகார அரசியல் இயக்கங்களின் போக்குகளை விமர்சனம் மற்றும் ஆய்வு செய்ய முயன்றது என்கிறார் நூலாசிரியர்.

தெரிதாவின் கட்டுடைப்பு (அ) தகர்ப்பமைப்பு பற்றி நூலாசிரியர் கூறும்போது, தகர்ப்பமைப்பு (deconstruction) என்பது இலக்கியத்தோடு தொடர்புடையது என்றும் பிரதியை படிக்கும் முறையாகவும் உள்ளது என்கிறார். ‘பேச்சும்’, ‘எழுத்தும்’ ஓரினமே, எழுத்து அர்த்தத்தை மாசுபடுத்த மட்டுமே செய்வதில்லை. பேச்சின் இடத்துக்கு பதிலாக வருகிறது. ஏனெனில் பேச்சு எப்பொழுதும் முன்னரே எழுதப்பட்டதாகும் என்கிறார் தெரிதா. மேலும் அவர் கூறும்போது ‘ஒரு பிரதி தனக்கென சில விதிமுறைகளை நிர்ணயித்துக் கொள்கிறது. இந்த விதிகளை அது மீறும் கணத்தினை நாம் நிச்சயப்படுத்தும் போதுதான் தகர்ப்பமைப்பு விமர்சனம் உருவாகிறது. இந்த இடத்தில் பிரதி உடைப்பட்டு தகர்ந்து போகிறது” என்கிறார்.

பிரதியை வாசிக்கும் முறை பற்றி தெரிதா கூறுவது, “பிரதியை ‘மூடியபிரதி’யாக வாசிப்பதை நான் விரும்பமாட்டேன். பிரதியைப் படிக்கும்போது அர்த்தத்தின் எல்லாப் பக்கங்களும் திறந்திருக்க வேண்டியது அவசியம்” தெரிதாவின் சிந்தனைகள் இன்று தத்துவ - இலக்கிய தளங்களில், தட்டிக் கேட்கும் துணிவு, கருத்து வேறுபடும் உரிமை, ஆதிக்க எதிர்ப்பு, நிர்வாக ஒருங்கிணைப்பின் மீது பன்முக சக்திகளின் எதிர்செயல்பாடு ஆகிய போக்குகளுக்கு துணையாக உள்ளதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். மேலும் தெரிதாவின் சிந்தனை இந்நூலில் பல அத்தியாயங்களிலும் பரவலாகவும் விரிவாகவும் விவாதிக்கப்படுவது நூலாசிரியரின் பின்நவீனத்துவ தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.

மார்க்சியம் பற்றிய பின் அமைப்பியலின் விமர்சன பார்வை பற்றி கூறும்போது, மார்க்சிய சிந்தனை இலக்கியத்தில் எதார்த்தவாதம் என்ற பூர்ஷ்வா சிந்தனையைத் தாண்டி வரவில்லை, இலக்கிய, கலை படைப்புகளுக்கும், மொழிக்கும் போதிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்பதாக அமைகிறது. இங்கே லூயிஅல்தூஸே, டெரி ஈகில்டன், ஃப்ரெடரிக் ஜேம்சன் போன்ற நவமார்க்சியர்களின் கருத்துக்கள் விரிவாக அலசப்படுகின்றன. தற்போது மார்க்சியம் அமைப்பியலிருந்து தாக்கம் பெற்றுள்ளது என்பதையும் இந்த செயல்பாடு ஏறத்தாழ இருபதாண்டுகளாக நிகழ்ந்து வருகிறது மேலும் பின் நவீன கட்டத்தில் வெளிப்படையாக தெரிவதாக நூலாசிரியர் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

கீழைக்காவியஇயல் பகுதியில், பௌத்த தத்துவவாதிகளாக நாகர்ஜுனரின் சூனியவாதமும், திங்நகரின் அபோஹ சித்தாந்தத்திற்கும், சுசூர் மற்றும் தெரிதாவின் சிந்தனைகளுக்கும் ஒற்றுமை இருப்பதாக விரிவான விவாதம் உள்ளது. சுசூரின் மொழியின் வித்தியாசமாதல் கருத்து ஒருவேளை பௌத்தர்களிடமிருந்து கொள்ளப்பட்டதாக இருக்கலாம் என்கிறார் நூலாசிரியர். அதாவது ‘அபோஹ’ என்ற சொல்லுக்கு மறுத்தல், தள்ளிவிடுதல் என்பது பொருள். இந்தக் கருத்தாக்கம் சுசூரின் சிந்தனையோடு ஒத்திருக்கிறது. தெரிதாவின் தகர்ப்பமைப்பு சிந்தனைக்கும், நாகர்ஜுனரின் ‘சூனியத்’துக்கும் ஆழ்ந்த உறவு பற்றி கூறுகையில், அர்த்தத்தை ‘இதுவல்ல, இதுவல்ல’ என்று மறுத்துக்கொண்டே போகும் சூனியவாதத்திற்கும், தெரிதாவின் ‘ஒத்தி வைப்பு’ மற்றும் வித்தியாசப்படல்’ கொள்கையில் ஒத்த தன்மைகள் உள்ளன என்கிறார்.

பின்நவீன சிந்தனைகளை தற்போதைய சூழலில் முற்போக்கு அறிவுஜீவிகள் என்போர் எதிர்கொள்ளும் விதம் குறைத்து கோபிசந்த் நாரங் கூறுவது, “நவீனத்துவத்தின் ஆரம்பகாலத்தில் முற்போக்குவாதிகள் இயன்ற வரையிலும் அதை எதிர்த்துப் பார்த்தனர். இப்போது பின்நவீனத்துவ சிந்தனைகளை நவீனத்துவ மற்றும் அதன் கருதுகோள் நிறுவனங்கள் சார்ந்தவர்கள் எதிர்மறை தர்க்கவாதங்களை எழுப்பி குழப்பம் விளைவிக்கிறார்கள். மாற்றம் என்பது காலத்தின் தேவை என்பதை உணர வேண்டும். உருது மொழியிலும் மாற்றம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம். மாற்றத்தை உள்வாங்கிகொள்ள இன்று விமர்சன உற்சவத்தை விட படைப்பாக்க உற்சவம்தான் பயனுள்ளது. மேலும் நாம் புதிய சொல்லாடல்களை கண்டு கொள்ளாமல் இருப்போமானால், வரப்போகும் மாற்றங்களை புரிந்து கொள்வதை விடுங்கள், குறைந்தபட்சம் தற்போதைய கணங்களின் பொறுப்புகளிலிருந்து விடுதலை பெற முடியாது” என்கிறார்.

கோபிசந்த் நாரங்கின் இந்த படைப்பு புதிய சிந்தனைகளை திறந்த மனத்துடன் எதிர்கொண்டு நேர்மையாக உள்வாங்கும் மனப்பாங்கை உருவாக்கும் முயற்சியே ஆகும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com