Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo

தனிமை கவிந்த அறை - நான்கு பார்வைகள்

1. மதிய வெயிலில் மௌனமாய் தலை கவிழ்ந்து கிடக்கிற ரோஜா நிற செம்பருத்திப் பூக்களைப் பார்க்கிறேன். காலையில் இதேப் பூக்கள் ஆரவாரமாய் மலர்ந்து சூரியனை வரவேற்றிருந்தது. இப்போது இதைப் பார்க்கும் போது மனதில் தோன்றும் பிரிவு தனிமை கவிந்த அறை தொகுப்பில் நம்முடன் பயணம் செய்கிறது.

தலைப்புக்கு வஞ்சகம் செய்யாத கவிதைகள் புத்தகம் முழுவதும். காதலோ, நட்போ, பிரிவோ, பாசமோ, ஊடலோ, கூடலோ எந்த உணர்வையும் மலினப்படுத்தாத கவிதை மொழி தொகுப்பு முழுவது உள்ளது. மும்பை மழையின் தாண்டவநேரங்களை பல ஊடகங்கள் வழியாக ஒரு நிமிஷம் அடடா சொல்லி அடுத்த சேனல் பார்க்கப் போன கூட்டம் நம்முடையது. கவிஞர் இத்தொகுப்பில் தவிக்க தவிக்க பதிவு பண்ணியதை ஒரு கதம்பமலர் கொத்துகளாக மழைக் கொத்து தந்திருக்கிறார். மனசைப் பதைக்கச் செய்யும் மழை நேர மாலைப்பொழுதுகள் மாநகர மரணங்கள் தற்காலிக உறவுகளின் முகமூடி தரித்த புன்னகைகள் என நமக்கு ஆவணப்படம் பார்க்கிற உணர்வில் கவிதைகள்.

‘சீதை ஜெயத்தில்' தெளிவது கவிஞரின் ஜெயமா? இல்லை காதலா என்று கேட்க தோன்றுகிறது. சொல்ல இயலாத பெரும் மௌனத்துக்குள் சிக்கித்தவிக்கிறது மனசு. கம்பி வழி கசிகிறது காதல். பண்படுத்தப்பட்ட சுகமான எழுத்து வார்த்தை தூண்டில்கள் மாட்டிக் கொள்ளாத மரபு மீன்கள் கவிதையாய் வெளியே சுற்றுகிறது. கவிஞரின் எழுதுகோல் நம்முடன் கை கோர்த்து தொகுப்பு முழுவதும் தனிமையை உணரும் இன்னொரு தனிமையாக.

இதுவரை வாழ்ந்திருந்த சொந்த ஊரின் பிடிமண் அற்றுப் போகிற ஏக்கம் கண்ணாடித் தொட்டிக்குள் மூழ்கிய ஆகாயத் தாமரை வேராய் வெறுத்துப் போன அலைச்சல் வாழ்வின் நிமித்தங்கள் மாநகரப் பிரவாகத்தின் வேகச் சுழலில் சிக்கிய நிமிடங்கள் கவிஞரின் ஆழ்மனசு தியானிப்பது மரபு கூறும் அக ஒழுங்குகளை உண்மை உணரும் மனசுக்கு நெருக்கமான பழகிய மொழிநடை. இது நடுமய்யச் சுழலின் வீரியத்தில் சிக்கித் தவித்து பீரிடும் கவிதை தானா இல்லை இரவு முழுதும் விழித்திருக்கும் திசைவிளக்காய் தூரத்தில் சுற்றியலைகிற ஒளிக்கீற்றோ எப்படி இருப்பினும் இதமான அந்தி சூரியனின் மிச்சங்கள் மாலையை இனிதாக்குகின்றன குழப்பங்கள் ஏதுமற்று.

கீதாஞ்சலி பிரியதர்சினி 

2. ‘தனிமை கவிந்த அறை' நேற்று பயணத்திலேயே வாசித்து விட்டேன். நூல் தயாரிப்பும் சில கவிதைகளும் அபாரம். கவிதைகள் முழுக்க தனிமையும், தனிமையில் ததும்பும் காமமும் ஊடாடுகின்றன மும்பை வாழ்வின் தனிமைத் தாக்கம் என்பதை என்னால் உணர முடிகிறது.

கவிதை நூல் என எடுத்து படிப்பவருக்கு இது மட்டும் போதுமா என்கிற கேள்வியும் உடன் எழுகிறதே கவிதை மொழி பல இடங்களில் ரகிக்கும்படி உள்ளது. முந்தைய தொகுப்பை விட (நெருப்பில் காய்ச்சியப் பறை) இத் தொகுப்பை பாராட்டத்தக்க அம்சம் இதுவெனில், சமூகத் தாக்கமும், நிகழ்வுகளும் விடுபட்டுப் போயுள்ளது சரியெனப் படவில்லை. யாரின் விருப்பத்திற்காகவும் நாம் தொகுப்பு வெளியிடுவதில்லை என்ற போதிலும், நமது விருப்பம் சார்ந்து சமூக அக்கறை சார்ந்ததுமான படைப்புகளை முன்னிலைப் படுத்துவதில் நாம் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறோம் தானே... சமீபத்தில் வாசித்த சில கவிதை நூல்களும் உணர்வு தளத்திலேயே இயங்குகின்றன. வாசித்த நமக்கு வெறும் அயர்ச்சியை மட்டுமே தருவதாய் உள்ளன. இந்நூல் அப்படி அல்ல ஆயினும், இன்னும் செறிவாய் தர முயன்றிருக்காலம்.

மு. முருகேஷ் 

3. அடக்கம் செய்யப்பட்ட பிரேதத்தின் மண்மேட்டிலிருந்து கவிந்து எழும் மலர்களின் வீச்சத்தைப்போல இனம்புரியாத ஓர் உணர்வு ஆட் கொண்டது.

தவிர்த்திடும் எண்ணத்திலேதான் ஆங்காங்கே காதலெனும் மின்மினிகளை பதித்து வைத்திருக்கிறீர்கள் போல அவை கொடுக்கின்ற அளவான வெளிச்சத்திலே தனிமை கவிந்த அறை அற்புதமாய் ஜொலிக்கிறது.

தொகுப்பின் பிரதான நோக்கத்தைப் போலவே கவிதை வடிவமைப்பிலே மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய முயற்சிகள் ஈர்க்கின்றன. புதுமைக்கே உரித்தான சிற்சில பலகீனங்கள் ஆங்காங்கே ஊடாடி நின்றாலும் அவையாவும் புதுமையின் அழகையும், கம்பீரத்தையும் அணிசேர்த்திடவே பயன்பட்டிருக்கின்றன.

1. காதலியைத் தடுக்கின்ற தடைகளை காதலன் தாண்ட வேண்டியதன் அவசியம் என்ன?

2. மௌனம் என்பதே ஒரு ரகசியமில்லையா?

3. விடுதலையை சமையலறைச் சாடிக்குள் ஒளிக்க வேண்டியதன் அவசியம் என்ன?

4. காம தகனத்துக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் கழுவேற்றம் அவசியந்தானா?

போன்ற இன்னுஞ்சில கேள்விகள் தங்களின் கூர்மையின்பாலும், தைரியத்தின்பாலும் (வார்த்தை சரியில்லாமல்) சிற்சில சலன அலைகளை ஏற்படுத்தினாலும், தொகுப்பெங்கும் விரவிக்கிடக்கின்ற தனிமை எனும் ஆழ் அமைதி அவற்றை கரை தொட அனுமதிப்பதில்லை.

சில கவிதைகளுக்கு வாய்த்திருக்கும் நேரடித் தொனி மிகுந்த வருத்தமடையச் செய்திருக்கிறது. மெல்லிய மேகம் அப்பிய மலைச் சிகரத்தின் ஒரு மூலையில் தீப்பற்றி எரிவதுபோல அத்தகைய கவிதைகள் மொத்த அமைதிக்கும் கொள்ளிமூட்டிடுமோ என்னும் அச்சம் தான் அந்த வருத்தத்துக்கு காரணம்.

தமிழ் கவியுலகம் தங்களைப் போன்ற புலம்பெய்ந்து வாழ்வோரிடம் உள்ளடக்கரீதியிலே வித்தியாசமான கவிதைகளை எதிர்பார்த்துப் கொண்டிருக்கும் தருணத்தில் காமக் கடும்புனலில் திளைக்கும் அனேக கவிகளின் தவறுக்கு தாங்களும் ஆட்பட்டிட வேண்டாம் என்பதென் ஆழ் விருப்பு.

வாசித்து முடித்ததும் மெல்லியக்குரலில் ஒலித்திடும் இனம்புரியா கீதமொன்றினை என் செவி விட்டு அகற்றிட அனேக நேரம் பிடித்தது.

சி. பாவெல் 

4. அன்பாதவன் கவிதைகள் ஆழ்மனப்படிமங்கள். கண்ணாடி குடுவையில் பாதி அளவு நீர் நிறைக்கப்பட்டு அதில் ஒரு துண்டு பனிக்கட்டியை மிதக்கவிட்டால் அதன் அடிப்பகுதி நீரில் மறைந்திருப்பதைக் கூர்ந்து கவனித்தால் தான் தெரியும் உளவியலில் இதனை ஆழ்மனப்பதிவுகள் என்பர். இந்த ஆழ்மனப்பதிவு தான் தனிமை கவிந்த அறையாக வெளிப்பட்டிருக்கிறது கவிதையை உணர்ச்சியின் திருப்பு மையம் என்று சொல்லி விட முடியாது. அதற்காக உணர்ச்சியே கவிதை என்றும் கூறிட முடியாது கவிதை வீரியமுள்ள விதை அது மண்ணை கிளரும், அப்படியே உள்ளத்தையும் நையப்புடைக்கும். அன்பாதவனின் படைப்பாளுமை இருள் கிழித்து முளைவிடும் விடியலை போன்றது மழையின் நனைதலில் சிலிர்த்திடும் உணர்வு சார்ந்தது நூலில் கவிதையாகி இருக்கும் காமம் காக்கையின் கூர் அழகானது. தனிமையோடு கை குலுக்கும் வனவாசிகளுக்கு ஜீவ முடிச்சு. தனிமையின் மௌனம் மொழியாகியிருக்கிறது. தமிழ் சமூகங்களில் தனி மனித வாழ்வியல் சார்ந்த படைப்புகளின் அழகியல் கூறுகளில் காமம் மீவியல் தன்மை கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வாழ்தலின் அடிப்படையான இணைவும் - பிரிவும், காதல் - போர் என்ற கருத்தாக்கமாக விரிகிறது. எந்த ஒரு படைப்பும் உணர்வுக் களத்தின் உக்கிரத்தில் பிறப்பது தான். நேரிடையாக உணர்த்த முடியாத போது படைப்பாக மாற்றுவது சாத்தியமாகிறது. தீராக் காதலும் காமமும் கவிதையாக மாறும் போது நாய் குதறுவது போல படைப்பாளியை (ஆண்/பெண்) தாக்குவது கண்களில் காமலென்ஸ் பொருத்திப் பார்க்கும் காமுகனின் பார்வையாகும். அது அன்பாதவன் கவிதைகளில் நிகழக் கூடும். ஆனால் அப்படியான காமப்பதிவுகள் தனிமை கவிந்த அறையில் இல்லை.

மழைக்கும் உனக்குமான உறவில்
என்னையும் கை சேர்த்துகொள்ளும்
உன்னிலிருந்து பொங்கி / என்னுள் இறங்கிப் பரவி
நனைதலின் சுகமும் / இப்போது இனிக்கின்ற
இன்ப மழை / தவிப்போடும் தகிப்போடும்
அவஸ்த்திக்கும் என் தனிமை / புரியாமல் பொழிகிறது குளிர் மழை.

இப்படியான நுண் உணர்வுகள் பல கவிதைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசிக்கப்பட்ட மிக அருமையான ஒரு கவிதை நூல் தனி மனிதரின் தனிமையை இணைக்கும் பாலம் இந்நூல் மனிதரின் மனதை வாசிக்க தெரிந்திருக்கிறது அன்பாதவனுக்கு.

முனைவர் அரங்க. மல்லிகா. 

தனிமை கவிந்த அறை
அன்பாதவன்
அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை 11.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com