Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo
நூல் மதிப்புரை


மொழியின் சுழலில் நீந்தித் திளைக்கும் கவிதைகள்
- அன்பாதவன்

உலகமயம் என்கிற ஒற்றைச் சொல் இன்று எல்லாவற்றையும் புரட்டிப் போடுகிறது. எந்தக் கிராமத்துக்குள் நுழைந்தாலும் குடிக்க குளிர்ந்த நீர்தந்த கிராமத்து வெள்ளந்திகள் இன்று வரவேற்பைக் கோலாவில் வழங்குகிறார்கள். மனிதர்கள் சாஷேவாக சுருங்கி விட கிராமம் சிறுநகரம், நகரம், மாநகரம் என மனிதரின் உறைவிடங்கள் யாவுமே தனது சுயமுகத்தினை தொலைத்து விட்டு விளம்பர பெரும் பலகைகளைத் தமது முகங்களாக்கி கொண்டிருக்கின்றன. தோளில் தொட்டழைக்கும் ஏதாவது ஒரு குரலும் நம்மை நிறுத்தி ‘இதை வாங்கு' ‘அதை உபயோகி' என வற்புறுத்தும் குரலாகவே இருக்கையில் மாறும் மதிப்பீடுகளை தொலைந்து போன விழுமியங்களை எண்ணி மருகுபவனின் மனம் என்ன பாடுபடும்? அம்மனிதன் படைப்பாளியாக குறிப்பாக உணர்வின் கொநிலையில் கவி படைக்கும் கவிஞனாக இருந்து விட்டால். இலக்குமி குமாரன் ஞான திரவியம் தந்திருக்கும் கவிதைத் தொகுப்பான ‘வீட்டிற்கு கிழிருக்கும் கங்கு' பதிலாகிறது.

கவிஞனாக வாழ்வதற்கு மிக அதிகமான விலையைத் தர வேண்டியுள்ளது என விசனப்படும் ஞான திரவியம் தனியார் கல்லூரி யொன்றில் துணை முதல்வர். இது காரும் இரண்டு கவித் தொகுப்புகளை தந்துள்ளவர் முழுக்க முழுக்க கவிதைத் தளத்தில் மட்டுமே இயங்குபவரின் மூன்றாம் தொகுப்பு இது. ஞானதிரவியம் ‘பழமலய்த் தடத்தில்' கவிப் பயணம் மேற்க்கொள்பவர் சுயத்தை இழந்து பரிதவிக்கும் கிராமத்து ஆத்மாவை வார்த்தைகளால் படம்பிடிப்பவர்.

‘அறை யெனப் படுவதோர்
ஆடம்பரமென்றிருந்த காலமொன்றில்
வைக்கோற் போர் மறைவிலே தான்
கருவானோம் '

என வேளாண்குடிகளின் வாழ்க்கையை இயல்பாக எவ்வித மனக் கிலேசமுமின்றி கவிதையில் பதிபவர் கிராமிய விழுமியங்களில் சொந்த நிலமும் வீடும் ஒன்று இரண்டையும் இழக்கிற விவசாயி படுகிற வேதனை சொல்லில் வடிக்க முடியாது மல்லிகை வாசம் வீசும் வீட்டை இழந்தவனின் சோகத்தை காட்சிகளால் கவிஞன் காண்பிக்கையில் வாசிப்பவனுக்கும் வந்து விடுகிறது இழப்பின் வலி:

‘எல்லாம் மூழ்கிய போது
மிதந்த உங்கள் உணர்ச்சிகளற்ற
உடலின் நெஞ்சுக் கறியில்
ஒட்டியிருக்கிறதிந்த வீடு
கண்முன்னே பறிபட்டுப் போன போது
இப்போது சுற்றுச் சுவர்களுக்கும்
மூலையில் நின்று பார்த்தீர்களல்லவா
அந்தப்பார்வை'

‘மனம்பருபனையின் கிழங்கு பிளந்தன்ன இனியார்க்குப் புரியும்' என்ற இறுதிக் கேள்விகளோடு ஞானதிரவியம் காட்டும் பனைச் சுவை இந்தத் தலைமுறை அறிய வாய்ப்பேயில்லை பதனீரைப் போன்றதொரு பானமில்லை

பதனீர்ப் பொங்கல் போல்
பொங்கல் இனியில்லை
நுங்குத் தண்ணீர் சுவைத்தறியாமல்
அமுதம் பற்றி அவன்
எழுதியிருக்கவே முடியாது

கழுகிடம் அலகாயிருக்கும் பணியில் சேர நேர்வதும் அசைவற்றுக் கிடக்கும் நிணம் கொத்துவதென்றால் கூட சமாதானமாகி விடும் மனநிலையும் வயிற்றுப்பாட்டின் வாழ்வு முரண்களின்றி வேறென்ன. காலந்தோறும் கவிதையோ பருவம் தோறும் மாறும் பெண் நிலைகுறித்து பரிவோடு பதிவு செய்கிறது.

கிராமியக் குடிசாமிகள் உழைக்கும் மக்களின் ஒரே நம்பிக்கை மட்டுமல்ல அவர்களுக்கு மனத்துணை, கூடவே ஆற்றுப்படுத்தும் மையங்கள் கிராமப்பக்தியின் பன்முகப் பதிவினைக் காட்டும் ‘ஊன்று' ஒரு குறும்படம் பெருகிவரும் நுகர்வு பண்பாட்டினைக் குறித்து மிக எளிய மொழியில் சொல்கிறது ஞான திரவியத்தின் ஒரு காட்சி:

மடியப் புடிச்சு வித்துப்புட்டு
குடுமியப் புடிச்சு வசூல் பண்ணும்
தந்திர யுத்தங்களால்
வீடு முழுதும் வந்து ஒட்டிக்கொள்கின்றன
பல்லி மலத்தைப் போல
வாழ்வதற்குத் தேவையற்ற ஆக்கிரமிப்புகள்.

"செங்கண்மாலும் விடியக்காலை கனவும்'' கவிதையில் குரூரயதார்த்தம் குச்tடிணூஞு ஆக வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஞான திரவியத்தின் குறுங்கவிதைகள்.

‘மொழி பெயர்த்ததில்லை
உலகில் எம்மொழியும்
விழியை'

‘மலை விளிம்புகள் ஆபத்தானவை
உச்சியிலிருந்து
மகிழ்ச்சி
தொட்டியில் தங்கும் நீரில்
காலைப் பனிக்குள்
சிலிர் முள் முளைத்து விடுகிறது.

கவிதைகளோடு அழகியலும் கலந்து புதிய பொருள்களை வாசகருக்கு ஊட்டிவிடும் வரிகளின் சில அடையாளங்கள் இவை. கிராமத்து மரபுகளையும் பண்டாட்டையும் தன்னுள் வைத்திருக்கும் மொழி கவிதைக்கு தனித்துவத்தைக் கொடுக்கிறது. இதில் வட்டார அடையாளம் அடங்கியிருக்கிறது உலகத் தரத்திற்கான கவிதை யென்பது இந்து வட்டார பழக்கிலிருந்தும் வட்டார மனோபாவத்திலிருந்துமே உருவாவது என்று குறிப்பிடும் கரிகாலனது மதிப்பீடு ஞான திரவியம் படைப்புகளுக்கு மிகக் சரியாய்ப் பொருந்தக் கூடியது.

மாறுவதொன்றே மாறாதது என்கிறது சமூக விஞ்ஞானம் அத்தகைய மாற்றங்களில் நல்ல அம்சங்களே இல்லையா இழப்புகளை மட்டுமே எண்ணி அவஸ்திக்கும் படைப்பாளிகள் நவீன வாழ்வின் நல்ல அம்சங்களை குறிப்படுவதில்லை ஏனோ? ஞானதிரவியமும் இதற்கு விதி விலக்கல்ல மிகச் சிறப்பாக மொழியில் பல கவிதைகளை காட்சிப்படுத்த படிமங்களால் படிப்பவர்க்கு தரும் ஞான திரவியம் சில நேரங்களில் நவீனம் என்கிற மாயச் சுழலில் சிக்கிக் கொண்டு வாசிப்பவனையும் அதன் அடி ஆழத்துக்குள் இழுத்து விடுகிறார்

கால காலமாய்
காலம் இருப்பது போல்
கால காலமாய் காலமில்லை.
காலம் மேய்வதாய்
கற்பிதம் உருவாக்கும் காலம்
கால காலமாய்.

எத்தனைக் காலம் இவற்றையெல்லாம் நவீனக் கவிதையென நம்புவது? பொருள் வயின் பிரிவை நாடும் கிராமப்புறங்களின் ஆற்றாமையாக ஒலிக்கிறது ஞான திரவியத்தின் கவிதைக்குரல் மனித இருப்போடு பின்னிக் கிடக்கும் பிற உயிரிகளின் அசைவுகளையும் உள்ளுணர்வுகளையும் தொட்டுத் திரும்புகின்றவையாக இருக்கின்றன இவரது கவிதைகள் நள்ளிரவில் சலனமற்று கிடக்கும் சிற்×ரின் ஆன்மாவைப் போன்று அமைதியும், ஆற்றலும், அழகும் கூடிய ஞானதிரவியத்தின் படைப்புகள் என மதிப்பிடும் கரிகாலனின் (நவீனத் தமிழ்க்கவிதையில் போக்குகள் பக்கம் 38) மதிப்பீடுகளையும் தாண்டும் வீட்டிற்கும் கீழிருக்கும் கங்கு வாசிப்பவர் மனதில் வனத்தீயாய் எரியும்.

வீட்டிற்குக் கீழிருக்கும் கங்கு
கவிதைகள்
இலக்குமிகுமாரன் ஞான திரவியம்
அகரம் வெளியீடு



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com