Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo

இந்தியக் கவிஞர் வரிசை - குல்ஜார்

இந்தி மட்டுமல்ல இந்திய கவிதை உலகிலும் மிகவும் நேசிக்கப்படும் ஒரு அற்புதக் கவிஞர் குல்ஜார். தற்போது பாகிஸ்தானில் இருக்கும் தீனா பகுதியில் ஆகஸ்டு மாதம் 1934ம் ஆண்டு பிறந்தார். பிரிவினைக்குப் பின் குல்ஜார் இந்தியா வந்தார். அகா சம்பூரன் சிங் என்ற இயற் பெயரை குல்ஜார் என்று மாற்றிக் கொண்டார்.

திரைப்பட மேதை பிமல் ராய்க்கு உதவியாளராக தனது பயணத்தை துவங்கினார். மற்றும் இயக்குனர் ரிஷிகேஷ் முகர்ஜியின் துவக்க காலத்தில் அவருடனும் குல்ஜார் பணியாற்றினார். பிமல் ராயின் ‘பந்தினி' படத்தில் "மோரா கோரா அங் லாயி லே'' என்ற பாடல் இவரது முதல் பாடலாகும். ‘பந்தினி'யை தொடர்ந்து ‘கபுலிவாலா', ‘சன்னாட்டா' ‘பிவி அவுர் குலாம்' ‘து துனி சார்' ‘காமோஷி' ஆகிய படங்களுக்குப் பாட்டெழுதி படிப்படியாக ஏறி வெற்றி சிம்மாசனத்தில் உட்கார்ந்தார். இதுவரை இன்னும் இறங்கவில்லை.

சிறந்த திரைப்படப் பாடலாசிரியராக அங்கிகரிக்கப்பட்ட குல்ஜார் திரைப்படங்களுக்கு கதை வசனங்கள் எழுதத் துவங்கினார். 1971ல் ‘மேரே அப்னே' என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் பரிணாமம் அடைந்தார். அதிலிருந்து அழகும், மென்மையும், நகைச்சுவையும் கலந்த பல திரைக் காவியங்களை தந்துள்ளார். சுமார் அறுபது படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதி உள்ளார். பதினேழு படங்களுக்கும் மேல் இயக்கியும் உள்ளார்.

1987 முதல் 1996 இடையில் குல்ஜாரின் பணிகளில் தொய்வு ஏற்பட்டு விட்டது. இந்த பத்தாண்டு கால கட்டத்தில் இவர் ஏழு படங்களில் பாடலும் 2 படங்களை இயக்கியும் இருந்தார். ஆனால் இந்த கால கட்டங்களில் அவர் முழு அற்பணிப்புடன் கவி மிர்ஜா காலிப்பின் வாழ்க்கை வரலாற்றை தொலைக்காட்சித் தொடராகவும் பணியில் முழுமையாய் ஈடுபட்டு விட்டார். நடிகர் நஷிர்தின் ஷா இந்த தொடரில் காலிப்பாக நடித்து இருந்தார்.

1996ல் குல்ஜார் இளைய தலைமுறையுடன் கைகோர்த்து தீவிரவாதத்தை மையமாக வைத்து "மாச்சீஸ்'' என்ற படத்தை இயக்கினார். இப்படம் தேசிய விருது பெற்றது. பின் இவர் ‘ தில் சே' படத்துக்கு எழுதிய பாடல்கள் மந்திரமாக இந்தியா முழுவதும் பாடப்பட்டது. குல்ஜாருக்கு பிலிம்பேர் விருதும் கிடைத்தது. அரசியலை விமர்சித்து குல்ஜார் இயக்கிய " ஹூ து து'' படம் இந்திய மக்களிடையே சலனத்தை ஏற்படுத்தியது.

பாடலாசிரியருக்கான அனைத்து விருதுகளையும் சிறப்புகளையம் குல்ஜார் பெற்று விட்டார். சமீபமாக இந்தி எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்தின் கதைகளை மையமாகக் கொண்டு "தெஹரிர்... முன்ஷி பிரேம்சந்த் கி'' என்ற தொலைக்காட்சித் தொடரை இயக்கி உள்ளார்.

குல்ஜார் திரைப்படப் பணிகளில் தீவிரமாக இயங்கினாலும் தனது கவிதைப் பணிகளை புதிய காதலைப் போல் காத்து வந்தார். "எக் பூந்த் சாந்த்'' என்ற கவிதைத் தொகுதி 1962ல் வெளியானது. சமீபமாக "திரிவேணி'' "ராத் சாந்த் அவுர் மெய்ன்'' "ராத் பாஷ்மைன் கி'' ஆகிய கவிதை தொகுதிகள் சமீபத்தில் வெளியாகின.

மேலும் "மேரா குச் சாமான்'' மற்றும்" “சைய்யா சைய்யா'' என அவர் இதுவரை எழுதிய திரைப்பட பாடல்கள் தொகுப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபமாக பல சோதனை முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இவரது சிறுகதைகளை மையமாகக் கொண்டு சலிம் அரிப் "கராஷேன்'' என்ற நாடகத்தை உருவாக்கினார். இசை கோர்ப்பாளர் அபிஷேக் ராயுடன் சேர்ந்து "உதாஸ் பானி'' என்ற இசை ஆல்பத்தை தனது கவிதைகள் மூலம் அலங்கரித்தார். மேலும் ஓவியர் அஜய் குமார் சமிர் ‘பொயட்ரி ஆன் கான்வாஸ்' என்ற ஓவியங்களை வரைந்தார். இவ்வாறு பலதரப்பட்ட புது வடிவங்களில் தனது கவிதையை வெளிப்படுத்தினார் குல்ஜார்.

குல்ஜார் ஐந்து தேசிய விருதுகளையும் 18 பிலிம்பேர் விருதுகளையும் வாங்கி உள்ளார். இவருடைய "துவான்'' என்ற சிறுகதைகளை தொகுப்பு நூலுக்காக 2003ம் ஆண்டிற்கான சாஹித்திய அகடமி விருது பெற்றுளார்.
பிலிம்பேரின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அரசு பத்மபூஷன் விருதும் வழங்கி இவரை கௌரவித்து உள்ளது.

1. சிறுவர்களாய் இருந்தோம்,
அம்மா வரட்டித் தட்டுவாள்
கண்கள் வைத்து காது செய்து
மூக்கு அலங்கரித்து
வரட்டியில் முகம் வரைவோம்
முண்டாசுகார தொப்பிக்கார
எனது வரட்டி உனது வரட்டி
நாங்கள் அறிந்த தெரிந்த
பெயர்கள் கூவி வரட்டி தட்டுவோம்.

பாடி சிரித்தோடி வரும் பகலவன்
சாண வரட்டிகளில் விளையாடுவான்
இரவில் எரிகையில் அடுப்பை சுற்றியிருந்து
எந்த வரட்டி எரிகிறது
யாருடைய வரட்டி சாம்பலாகியது
பார்த்திருப்போம்
அது பண்டித் அது முன்னா
அது தஷாரத் ஆண்டுகள் கழித்து
சுடுகாட்டில் அமர்ந்து
சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்
இன்று இரவு எரிந்து
கொண்டிருக்கும் அடுப்பில்
மேலும் ஒரு நண்பனின் வரட்டி.

2. வழக்கமாய் கொடுத்தாய் வாக்குறுதி
வழக்கமாய் நானும் காத்திருந்தேன்

உனது பாதையில் கால் கடுக்க நின்று
நான் எனக்காக காத்திருந்தேன்

இனி வாழ்க்கையோ வரமோ கேட்க மாட்டேன்
அந்தக் குற்றத்தை ஒருமுறை செய்து விட்டேன்

3. கண்களை எரிக்கிறது அணையாத புகை
திரண்டு கருக்கிறது மேகம்போல்
பொழிவதேயில்லை புகை

அடுப்பு எரிக்கவில்லை
சேரியே எரிந்து போனது
கொஞ்ச நாட்களாக
கிளம்புவதில்லை புகை

கண்களிடம் கேட்டபோது
கிடைத்தது அதன் முகவரி
முகத்தை திருப்பிக் கொள்வதால்
மறைந்து போகாது புகை

கண்களுக்கும் கண்ணீருக்கும்
உறவு அதிபழசு
விருந்தாளிகள் வீட்டிற்கு வந்தாலும்
மறைந்து கொள்வதில்லை இந்தப் புகை.

4. சேரிகளின் முடுக்குகளில் பரதேசிகளின் கூட்டத்தில்
வாருங்கள் திரியலாம் நாற்சந்தி காணலாம்

காலம் அவர்களை உறிஞ்சி கொண்டு
பாதையில் எறிந்து விட்டதாக
பாடம் சொன்னார்கள்
இவர்கள் அனைவரும் சேரியில்
சேகாரமடைந்து விட்டார்கள்
இவர்கள் வாழ்க்கையின்
தோல் உரிக்கப்பட்டு வீசப்பட்டவர்கள்
இவர்களின் வியர்வை உறிஞ்சப் பட்டு
விஷம் ஏற்றப் படுகிறார்கள்.

தமிழில் : ஆனந்த செல்வி


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com