Keetru Ani
Ani Logo
மே - ஜூலை 2008

மண்ணோடும் மண்ணின் வேரோடும்
விழி. பா. இதயவேந்தன்

“நான் கவிஞன் என்பது முக்கியமல்ல
எழுத்துக்களை மனிதனின் சேவைக்காகப்
பயன்படுத்துகின்றவன் நான் அது தான்
முக்கியமானது'' விளாதிமிர் மாயோகோவஸ்கி.

கவிஞனின் படைப்புக்கள் கால ஓட்டத்தில் வலுவிழந்து போகாமல் அவற்றின் உயிர்ப்பு என்பது மனதில் பிடிப்போடு நின்று அவற்றின் சாரத்தோடு உறுதியாய் பற்றி நிற்கவேண்டும். அவ்வாறு உள்ளபோதுதான் வெகுசன மக்களுக்கும் கூட ஓர் உயர்ந்த இடத்தில் வைத்து மதிப்பிடக்கூடிய அளவிற்கு கவிதை என்பது உன்னதமான ஒன்றாக நமது கலாச்சாரத்தின் மற்றொரு குறியீட்டு வடிவமாகக் கொள்ளமுடியும்.

ஆனால் நிகழ்கால போக்கில் கவிதையின் சாரம் உயிர்த்துடிப்பற்று படைக்கப்படுவதால் பல கவிதைகள் இயங்கு தளத்தில் எத்தகைய பதிவினையோ பாதிப்பினையோ நிகழ்த்தக்கூடியதாக இல்லை. மாறாக கவிதையின் வேர்கள் நம் மண்ணோடும் நம் மண்ணின் வேரோடும் இரண்டறக் கலந்து ஓர் உயர்ந்த இலட்சியத்திற்கானதாய் ஈடுபாட்டோடு உருவாக வேண்டிய தேவை இங்குள்ளது.

மொழியின் கற்பிதங்கள் நமக்கு நிறைய சன்னல்களை திறந்து வைத்து புதிய காற்று உள்ளே வரச் செய்திருக்கிறது. அவற்றில் குளிரும் வறட்சியுமான புயலாக இருந்தாலும் சரி கவிதைகளில் ஊடாடி புதிய செய்திகள் பலவற்றை அவ்வப்போது வழங்கிவிடமுடிகிறது.

ஹைகூ கவிதைகள் என்னும் வடிவம் சப்பானிய மொழியிலிருந்து வரப் பெற்றாலும் அவை தமிழ் மொழியில் எவ்வாறு நிகழ்த்தப்படுகின்றன என்பதுதான் நமக்கு முன்பான சவாலாக உள்ளது. இவ்வடிவத்தினைக் கொண்டு பலரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ‘துளிப்பா’ என்னும் பெயரில் சமூகப் பொறுப்போடு ‘பதுங்கு குழி’ என்னும் தொகுப்பினை அண்மையில் தந்திருக்கிறார் பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன்

“பாறாங்கல்
பட்டாம்பூச்சி சிறகில்
பாடத்திட்டம்”

தந்தைப் பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகள் பல இவர் கவிதைகளில் மேலோங்குகிறது. பெண் விடுதலை, சுதந்திர சிந்தனை, விடுதலை முழக்கம், இன விடுதலை உணர்வு, வறுமை, மூட நம்பிக்கை, தீண்டாமை, ஏழ்மை, கல்லாமை... எனப் பன்முகமாய் சிந்தித்து கவிதைகள் இயம்புவதை புதுவைத் தமிழ் நெஞ்சனின் தனிச்சிறப்பு எனலாம்.

“கணியன் பார்த்த
கலியாணம்
மண விலக்கு”'

இயைபுத் துளிப்பாக்கள் என்னும் இயைபு நகைத் துளிப்பாக்கள் பாவலரின் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. ஹைகூ வடிவங்கள் பல விதமாக கையாளப்பட்டாலும் இவரின் மொழி நடையும் அவை உணர்த்தும் செய்தியும் நம் சிந்தையைக் கிளர்த்தெழச் செய்ய வைக்கின்றன. பாக்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாய் வாசிக்கும் போது சமூகத்தில் ஏமாற்றப்பட்ட மக்களின் அறியாமை நிலையும் கடவுள், மதம் பெயரால் ஏமாற்றிக் கொண்டிருக்கிற இன்னொரு உலகையும் ஆழ்ந்த விமர்சனத்திற்குள்ளாகி விடுவதை நாம் பார்க்க முடிகிறது.