Keetru Ani
Ani Logo
மே - ஜூலை 2008

உருது மொழியின் உன்னதக் கவிஞர் - கைஃபி ஆஜ்மி (1918-2002)
தமிழில்: ஆனந்த செல்வி

கைஃபி ஆஜ்மி உத்திரப் பிரதேச மாவட்டம் அஜாம்காட்டில் 1918ம் ஆண்டு ஒரு ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சையத் அக்தர் ஹூசைன் ரிஜ்வி ஆகும். கைஃபி தனது பதினோறாவது வயதில் “இத்னா தோ ஜிந்தகி மெய்ன் கிஸி கி கலால் படே”' என்ற கஜலை எழுதினார். இந்தக் கஜலைப் பாடி அதற்கு உயிர் கொடுத்தவர் பிரபல பாடகி பேகம் அக்தர். இந்தக் கஜல் இன்னமும் பாடப்பட்டு வருகிறது.

கைஃபி தனது 19வது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். மேலும் அலி சர்தார் ஜப்ரியுடன் சேர்ந்து கட்சிக்காக "குவாமி ஜங்'' என்ற பத்திரிக்கைக்கு எழுதி வந்தார். இந்தக் காலக்கட்டத்தில் மும்பைக்கு வந்தார்.

கைஃபி தனது தோழர்கள் பைஃஜ் மற்றும் மக்தூம் ஆகியோருடன் சேர்ந்து நவீன உருது கவிதையில் புரட்சியை உண்டாக்கினார். உலகம் முழுவதுமுள்ள உருது மொழிப் பிரியர்களுக்கு மூன்று தலைமுறைக்கான கவிதைகளை எழுதியுள்ளார். இவர்களின் கவிதைகள் இன்பியல் மற்றும் மக்கள் பிரச்சனை குறித்ததாக அமைந்தது. கைஃபியின் முதல் கவிதைத் தொகுதியான "ஜான்கார்'' 1943ம் ஆண்டு வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆவாரா சஜ்தே', ஆகீர் ஷாப், கைஃபியாத்', கைஃபி ஆஜ்மியின் தேர்ந்தெடுத்தக் கவிதைகள் மற்றும் ஸர்மாயா' ஆகியத் தொகுதிகளும் வெளிவந்தன.

கைஃபியின் கவிதைகள் காகிதப் பக்கங்களை அலங்கரிக்கும் அடுக்குச் சொற்களாக இல்லாமல் அவை சமூக மாற்றத்திற்கான கருவியாக இருந்தது. தனது இளைய பருவத்தில் வர்த்தக யூனியனில் இருந்தவர் பின் சமூக மாற்றம் விரும்பிய மனிதனாக தீவிரமாக செயல்பட்டார்.

இவர் சமூகத்தில் மாற்றத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்படியாக கவிதைகளை எழுதினார். மதம், ஜாதியம், சமூகத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வுகள் மற்றும் பெண் விடுதலை மற்றும் உரிமை குறித்து மிக தைரியமாக கவிதைகளை எழுதினார்.

மேலும் இவர் உருது பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகள் நபி குலிஸ்தான்' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மேலும் இவரின் திரைப்படப் பாடல்கள் மேரி ஆவாஜ் சுனோ' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மற்றும் இவர் எழுதிய திரைக்கதை வசனங்களும் புத்தகமாக வந்துள்ளது.

இந்திய விடுதலைக்குப் பிறகு கவிஞர்கள் மற்றும் கதாசிரியர்கள் பிழைப்புக்காக மும்பை நகரில் தஞ்சம் புகுந்தனர். 19551975 காலகட்டம் இந்தி திரைப்படப் பாடல்கள் மற்றும் வசனங்களில் மாபெரும் மாற்றத்தையும் புதுமைகளையும் படைத்த காலங்கள். புதிய அலை திரைப்பட இயக்குனர்கள் வழக்கமான காதல் கதைகளைத் தவிர்த்து சமூக அக்கறையுள்ள படங்களை இயக்கினார்கள். கைஃபி ஆஜ்மி 1952ல் ஷாஹித் லதிஃப் இயக்கிய புஜ்திலி' என்ற படத்திற்கு பாடல் எழுதி தனது திரைப்பட பாடலாசிரியர் கணக்கைத் துவங்கினார். இதனைத் தொடர்ந்து பலத் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். இதில் ஷமா, காகஜ் கே பூல், ஷோலா அவுர் ஷப்னம், அனுபமா, ஆக்ரி கத், ஹஷ்தே ஹக்ம், ஆர்த் ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கன.

இயக்குனர் சேத்தன் ஆனந்த் இயக்கிய ஹீர் ரான்ஜா' காதல் காவியத்தில் பாடல்கள் மற்றும் வசனப் பொறுப்பை ஏற்றார். இப்படத்தின் கவித்துவமான வசனத்திற்காக அப்படம் தேசிய விருதைப் பெற்றது. மேலும் எம் எஸ் சத்யுவின் கரம் ஹவா படத்திற்காக பிலிம்ஃபேர் விருதையும் பெற்றார். பிரபல இயக்குனர் ஷாயித் மிர்ஜாவின் விருது பெற்ற நசீம் படத்தில் கைஃபி நடிக்கவும் செய்தார்.

தனது இறுதி காலம் வரை இலக்கிய நிகழ்வுகள், நாடக அரங்குகள் மற்றும் கவிதை அரங்குகள் என அயராது ஓடினார். ஒரு கவிஞர் தன் கவிதையை வாசிக்கையில் கேட்பது அலாதி இன்பம். கைஃபி தனது கரகரப்பான குரலால் கவிதை வாசிப்பதற்கு ஈடு எதுவுமில்லை.

இந்தியாவில் அதிகம் விருது பெற்ற உருது கவிஞர் இவரே ஆவார். சாகித்திய அகடமி பெல்லோசிப் பெற்ற முதல் உருது கவிஞர் இவர்தான். மேலும் இந்திய அரசாங்கம் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் மகாராஷ்டிர கவுரவ் விருது, யுவ பாரதிய விருது, டெல்லி அரசு விருது மற்றும் சர்வ தேசிய விருதான ஆப்ரோஆசிய எழுத்தாளர்களின் லோடஸ் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும் சாந்தி நிகேதனின் விஸ்வ பாரதி பல்கலைக் கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இந்தியன் பியுபில்ஸ் தியேட்டர் அசோசியேஷன் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் அமைப்பின் தலைமைப் பொறுப்புகளையும் வகித்தார். கைஃபி தன்னை நாடக உலகில் ஈடுபடுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாது, இளைய சமுதாயத்தில் நாடகத்தின்பால் ஒரு ஈர்ப்பையும் ஈடுபாட்டையும் உண்டாக்கினார்.

இறுதி காலத்தை தான் பிறந்த கிராமத்தில் கழித்தார். இங்கு இவர் மூன்று பள்ளிக்கூடங்கள், பிரசவ மருத்துவமனை மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை உண்டாக்கி மக்களுக்கு சேவை செய்ததோடு மட்டுமல்லாமல் தனது கிராமத்தை நவீன கிராமமாக மாற்றி உள்ளார்.

கைஃபியின் நினைவாக உத்திரப் பிரதேச மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றிற்கு கைஃபி ஆஜ்மி ஹைவே என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் டெல்லியிலிருந்து அஜாம்காட் செல்லும் ரயிலுக்கு கைஃபியாத் என்று பெயரிடப்பட்டுள்ளது. மும்பையின் ஜூகு பகுதியில் கைஃபி பார்க் என்று ஒரு பூங்காவுக்கு பெயரிடப்பட்டுள்ளது. மேலும் பூர்வாஞ்சல் பல்கலைக் கழகத்தின் கைஃபி ஆஜ்மி மீடியா சென்டர் என்ற பெயரிலும் உ.பி. மாநிலம் லக்னவில் கைஃபி ஆஜ்மி அகடமி என்ற பெயரிலும் கல்விப் பிரிவு ஏற்படுத்தியுள்ளது.

கைஃபி அவர்களிடம் இருந்த ஊக்கமும், எந்நிலையிலும் தளராத மனமும் கடுமையான உழைப்பும் பிரமிக்கக்கூடியது. அவர் சோர்ந்து இருந்ததாக யாரும் கண்டிருக்கவில்லை. உருது மொழியில் ஆளுமையின் பிரவாகமாக கவிதை படைக்கும் திறனும் இவருக்கு வாய்த்தது போல் யாருக்கும் வாய்க்காது. தனது கவிதைகளை வாசித்து சுகம் காணும் ரகமாக இருக்கக் கூடாத எனவும் எவை மக்களைச் சிந்திக்கவும் அவர்கள் தங்களை மாற்றத்திற்கு உட்படுத்திக் கொள்ளவும் பயனுள்ளதாக அமைய வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார்.

தோளில் கனக்கிறது கடந்த காலம்

பண்பாட்டின் வெற்றியா இல்லை தோல்வியா
தோளில் கனக்கிறதின்னுமென் கடந்த காலம்
இன்றும் ஓடிப்போய் அனைத்துக் கொள்கிறேனதனை
எனது மார்பில் உயிர்த்து செழிக்கிறதொரு ஆரண்யம்
முன்மண்டையில் முளைக்கிறது கொம்புகள்.

கடந்த காலத்தின் நிழல் படர்ந்து கொண்டிருக்கிறதென் மேல்
குருதியிலான யுகத்தினை கடந்துள்ளேன் மறைப்பதெப்படி
குருதியில் மூழ்கியபடி தெரிகிறது எனது பற்கள்

யாரையெல்லாம் நாம் விரும்பவோ வெறுக்கவோ இல்லையோ
அவர்களைத் தாக்குகிறேன்
அவர்களை வேட்டையாடுகிறேன்
இப்படியாக என் பிறவியை பூசி நிறைகின்றேன்

உடலென்பது வெறும் வயிறுதான், மனதில்லை, இதயமில்லை
கையில் விளக்குடன் எத்தனை அவதாரங்கள் போய்விட்டது
கடந்தகாலக் கறையைக் கழுவ இயலாது பார்த்துக்
கொண்டிருக்கிறோம்

பண்பாட்டின் பொடியை நெற்றியில் பூசிக் கொண்டோம் ஆனாலும்
மிருகத்தனத்தின் கறை இன்னும் அழியவே இல்லை
ஊரை வெறுமையாக்கி நகரத்தை உருவாக்கினோம்
காடுகளுடனான நம்முறவு இன்னும் அறுந்து போகவில்லை

வீடு

இன்று இரவு கடுமையான சுடுகாற்று வீசுகிறது
இன்று இரவு நடைபாதையில் தூக்கம் வராது
எல்லோரும் எழுங்கள், நானும் நீங்களும் எழுவோம், நீயும் எழு,
இந்த சுவற்றிலேயே ஒரு ஜன்னல் திறக்கக் கூடும்

இந்நிலையிலும் நம்மை விழுங்கவே காத்திருக்கிறது பூமி
முறிகின்ற கிளைகளிலிருந்து கால்கள் இறங்குகையில்
இந்த வீட்டிற்கும் தெரியாது அதில் வசிப்பவருக்கும் தெரியாது
குகைகளில் கழிந்த நம்முடைய நாட்கள் பற்றி

அச்சில் அமிழ்ந்து போகும் கைகள் கலைப்பதில்லை
சிலைகளுக்குப் பின் புதுச் சிலைகளை உருவாக்கினோம்
சுவரை வலிமையாக, மேலும் வலிமையாக இன்னும் வலிமையாக்கினோம்
கூறையை அழககாக்கினோம், கதவுகள் அமைத்து பலமாக்கினோம்

எளிமையாய் ஜ்வாலையை பறித்துப் போகிறது கடுவளி
மின்சார விண்மீன்கள் கொண்டு வெளிச்சமாக்குவோம் வானை
மாளிகை கட்டப்பட்டு விட்டதும், காவலுக்கு அமைகிறார் ஒருவர்
சில்லுகள் மேலும் கட்டுமான பெருஞ்சத்தத்திலும் தூங்கிப் போனோம்

நாளங்கள் அனைத்திலும் உழைப்பின் வலி தாங்கினோம்
மூடிய கண்களில் இந்த மாளிகையின் ஓவியம் பெற்று
இப்படித்தான் நாளென்பது உருகுகிறதெங்கள் தலைமேல் இதுவரை
இப்படித்தான் கழிகிறது தூங்காத எங்கள் இரவுகள்

இன்று இரவு கடுமையான சுடுகாற்று வீசுகிறது
இன்று இரவு நடைபாதையில் தூக்கம் வராது
எல்லோரும் எழுங்கள், நானும் நீங்களும் எழுவோம், நீயும் எழு,
இந்த சுவற்றிலேயே ஒரு ஜன்னல் திறக்கக் கூடும்

தமிழில்: ஆனந்த செல்வி