ஹைபுன்கள் நிலாமுகி
மவுனம் மனதுக்கு இனியமொழி
மவுனத்தால்
சொல்ல முடியாத வார்த்தைகளால்
எதைச் சொல்ல முடியும்
பதட்ட வார்த்தைகளால்
சிதறவும் கூடும் உணர்வுகள்,
தொலைநோக்குப் பயணத்துக்கு மட்டும்
சிறகு விரிக்கட்டுமே
வார்த்தைப் பறவைகள்
கண்களால் அளக்கும் இடைவெளிகளிலும்
வரித்து வருந்துவானேன்
இறகுச் சொற்களை,
நாப்பசையில் ஒட்டிக் கொள்கின்றன
வார்த்தைத் திரட்சிகள்
மிகை இன்பத்திலும் அதி துன்பத்திலும்
கருணையோடு உதவுபவை
கண்களெனும் துலாக்கோல்
புரியாதவரை நோக்கியவை
வார்த்தைப் புறப்பாடுகள்
புரிந்தவர்க்குப் போகுமே
மவுனப் பார்வைகள்
பேசுவோம் மவுனமாய்
பார்த்திருக்கும் நேரங்களில்
வார்த்தைகளின்றி
ஆடிப்பதினெட்டில்
கூடுதுறையில் நீராடி
கரைக்கிறார்கள் பாவங்களை
குளிர்பதன அறைக்குள்
நுழைய முடியாமல் கரைகின்றன
ஏழையின் அழுகுரல்கள்
மனைவியரோடு வசதியாய் மகிழ்ந்திருந்து
பூமிக்கு இறங்கிவர மறுக்கும்
அவதாரங்கள்
செங்கல்லும் _ கலவையும் கொண்டு
புனைகிறார்கள் எழிலார்ந்த வீடுகள்
இனிய இல்லமாக்க
விழைவோடு கூடிய இசைவின்றித்
தொடர்கின்றன இல்லறங்கள்
முள்காட்டுள் நுழைந்து
தேன்தேடித் திரும்புகின்றன
பட்டாம்பூச்சிகள்
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|