Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo

கம்ப்யூட்டர் தராசும் சமகால ஹைகூவும்

நக்கீரன்@நறுமுகை.காம்

தராசு தனியே தனக்குள் எதையோ யோசித்தவாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. தராசு தட்டில் ஏதோ கவிதைப் புத்தகம். அதன் விளக்குகள் மின்னி மின்னி எரிந்து அதனிருப்பை சொல்லிக் கொண்டிருந்தது. கடைக்குள் எவரோ நுழையும் அரவம் கேட்டு தராசு கண் திறந்தது.

"அடடே வாரும் விமர்சகரே... சவுக்கியமா பார்த்து வெகு நாட்களாயிற்றே'' என்றது.

தராசு பேசுமா, என்றால் பேசும்! பாரதி காலத்தில் பேசவில்லையா...? இது நவீன காலம்! மெஷின் யுகம்!
எதுவு நடக்கும்! காலத்திற்கேற்ப இப்போது கணினித் தராசு.

"சவுக்கியந்தான் கம்பராசு!''

விமர்சகருக்கு கம்ப்யூட்டர் தராசு என்று சொல்லி சொல்லி நாக்கு சுளுக்கி, இப்போதெல்லாம் கம்பராசு! அது சரி! சிநேகிதர்களுக்குள் நெருக்க வார்த்தைகள் சகஜந்தானே!

விமர்சகரே வந்த விஷயத்தைச் சொல்லும்... நாம சந்திச்சு ரொம்ப காலமாச்சே.. ஒரு விஷயமில்லாமல் வரமாட்டீரே என்னை பார்க்க... என்ன விசேஷம்....''

"ஒரே நேரத்தில் இவ்வளவு வினாக்களை என்மீது தொடுத்தால் யான் யாது செய்வேனடா... தோழா..''

"அய்யா நீர் சாதா தமிழ்லயே பேசு... செந்தமிழுக்கெல்லாம் போக வேணாம்! செம்மொழி பேசி நீரும் பிரச்னையை உருவாக்க வேண்டாம் செம்மொழியை புரிந்துகொள்ளும் ப்ரோக்ரோம் என்னிடம் இல்லை.. சரியா''

"சரிதான் நண்பரே... புரிகிறது... சமீபத்தில் என்ன புஸ்தகம் படித்தீர்....''

"எனக்கென்று விருப்பங்கள் இல்லை; கடைக்கு வருகிற பழைய புத்தகங்களை மேய்வேன்! சமீபத்தில் ஹைக்கூ என்று அழைக்கப்படும் ஜப்பானிய வகை புஸ்தகங்களை படிக்க நேர்ந்தது... ஏன் என்ன சங்கதி... ''

"இப்போ தமிழ்ல எழுதற ஹைகூ பத்தி தராசோட அபிப்ராயம் என்னவோ...''

"வேணாம் சாமி! நான் உண்மையச் சொல்லப்போய் விவகாரமா ஆயிடும்.. ஆள விடு!''

"தராசு எப்பவு நியாயத்தைப் பேசணும்! நெஜத்தப் பேசணும்.. இப்படி ஓடி ஒளிஞ்சா தராசு முள் தடுமாறுதுன்னு தானே அர்த்தம்!''

"என்னய சீண்டிப் பார்க்கிறீர்... சரி வாரும் ஒரு ரவுண்டு ஆடிப் பார்க்கலாம்.. கேக்க வேண்டியதை கேளும்..''

`தற்கால தமிழ் ஹைகூ கீறித்து?

எங்கவே இருக்கு ஹைகூ பெரும்பாலும் பொய்க்கூ!''

"இப்படி நடுமண்டைல ஒரே போடா போட்டா எப்படி.. விளக்கமா சொல்ல வேணாமா.. . ''

"சரியான ஆளுய்யா .. நீர்... சொல்றன். சொல்றன் .. ''

"செத்த இரு... ஒரு வாய் தாம்பூல தரிசிக்கிறேன்..''

"இது வேறவா! ஹைகூ என்ற வடிவ ஜப்பானில் தோன்றியது என்கிற விவரமும் ஜென் தத்துவத்தை பின்னணியாக் கொண்டது என்பது உமக்குத் தெரியும் தானே! ஆனா தமிழ்ல ஹைகூ எழுத வருகிற பெரும்பாலானவர்களுக்கு ஜென் பற்றி தெரிந்து கொள்ள நேரமும் பொறுமையுமிருப்பதில்லை. தனக்கு முன்பாக யாரெல்லாம் ஹைகூ எழுதியிருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளக்கூட ஆர்வமில்லை. தான் படித்த சமீபத்திய ஹைகூ வடிவ கவிதை வரிகளையே, வார்த்தைகளையோ மாற்றி தன்னுடைய கவிதைகளாக (!) அவசர அவசரமாக ஏதாவது இதழுக்கு அனுப்பி `எப்படியாவது' வெளியிட வைத்துவிடும் சாதுர்யமும் சாமர்த்தியமுன் இன்றைய ஹைகூ புலவர்களுக்கு வாய்த்திருப்பது தமிழின் பாக்கியமன்றி வேறென்ன... ?

"இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா ஓய்! ''

" வெளிய சொன்னா வெக்கக்கேடு! விவரமா சொன்னா அசிங்கம்! பலதடவை, பலபேரை அம்பலப்படுத்தியாச்சு. ஆனாலும் இன்னமும் இதுபோன்ற சித்து வேலைகள் தொடர்ந்து கொண்டு தானிருக்க்ன்றன.''

"விட்டுத்தள்ளு... `மூன்று வரி'ன்றது எளிமையான வடிவமா இருக்குறதால பலபேர் எழுது வர்ராங்க...பயிர் வளர்ரப்போ களையும் வளரும் தானே...!''

" இந்த மூன்றுவரி தான் விமர்சகரே சிக்கலே.. இப்போ எழுதற துளிப்பா புலவர்கள் கிட்ட நாலாவது வரி எழுதச் சொன்னா நாண்டுகிட்டு செத்துடுவான். திடீர்னு நம்ம ராஜாங்கத்துல `இன்னைலயிருந்து ஹைக்கூ மூன்று வரியில்லை... நான்கைந்து வரிகளில் எழுதப்பட வேண்டும்' என ஒரு அவசர சட்டம் பிறப்பித்தால்..

`துளிப்பா இருக்கு
ரொம்ப புளிப்பா
நான் வர்ரம்பா... '

என்று தூர ஓடிவிடுவார்கள் தமிழின் பல ஹைக்கூப் புலவர்கள்.

"தராசுக்கு கூட இவ்வளவு கோபம் வருமா...''

"கோபமில்லை விமர்சகரே வருத்தம்! ஒரு நல்ல வடிவம் கரைந்து சிதிலமாகும் கவலை! தயவுசெய்து தராசின் மனக்குமுறல்களை சரியான அலைவரிசையில் புரிந்து கொள்ளுங்கள்.''

"சரி சரி! ரொம்ப வருத்தப்படாதேயும்... ஆனா தராசுத் தோழா ஹைகூவைப் பொறுத்தவரைக்கும் புதுசுபுதுசாய் நெறய எழுது வர்ராங்களே.....அது தராசுக்கு ஏற்புடையது தானே!''

"புதிதாக எழுத வருபவர்களை வரவேற்கிறது தராசு... ஆனால் புதுசா எழுதுறாங்களா... அதுதான் கேள்வி?''

"ஏன் அதுல என்ன தராசுக்கு அய்யம்''

`விமர்சகர் இப்போ ஹைகூ தொகுப்புக்களே படிக்கிறதில்ல போலிருக்கு. ஒவ்வொரு தொகுப்பிலேயும் பட்டாம்பூச்சி, அய்யனார், நிலா, விதவை (கைம்பெண் என்றுகூட எழுத மாட்டார்கள்) பூக்காரி (ஹைகூவில் எல்லா பூக்காரிகளும் விதவை.. மன்னிக்கவும் கைம்பெண்களாகவே இருப்பதுதான் சுவாரஸ்யம்... கணவனை இழந்தவர்கள் பூ வைத்துக்கொள்ள ஆசைப்பட்டாலும் நம் ஐக்கூப் புலவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்) இப்படி சின்னக் குட்டையிலேயே நீச்சலடிக்கத்தான் பெரும்பாலான புலவர்கள் ஆசைப்படறதால குட்டைக் கலங்கி சேறாகி நாற்றந்தான்... நாலாபுறமும்..''

தராசோட கவலைதான் என்ன?

புரிதல்! சரியான புரிதலன்றி, எழுதுகிறார்களே என்று கவலை! பெரிய பட்டணத்தில் வசிக்கிற ஒருவர் நாற்று நடுவதைப் பற்றி அனுபவமே இல்லாமல் எழுதுவது படைப்புக்கு செய்கிற துரோகமாகாதா... ?

"அது மட்டுமல்ல... குழந்தைகளைப் பற்றிய ஒரு ஹைகூ தொகுப்பு வந்திருக்கு... மூணு வரி_ன்கிற வடிவத்தைத் தவிர ஹைகூவையே பார்க்க முடியல... அந்த புஸ்தகத்துக்கு ரொம்ப படிச்ச பேராசிரியர்களெல்லாம் முன்னுரை எழுதி வரவேற்கிறார்கள். களைகளைப் பயிர் செய்பவர்களுக்கு இங்கே விவசாயிகள் என்றே பெயர். அது மட்டுமல்ல.. நண்பரே ஹைகூ எழுத வருபவர்களையெல்லா `இதுவல்லவோ இனிய ஹைகூ' என்று கொண்டாடி விமர்சனப் பார்வையை வைக்காததால் வந்த வினை... ஹைகூ முயற்சிகளில் பலவும் புரையோடி வழிகின்ற புண்ணாகவே இருப்பதுதான் தராசின் கவலை.

சரி.. கவலையை உணர்கிறேன்... இதற்கு தீர்வுதான் என்ன?

1. முதலில் தேர்ந்தெடுப்பு...

ஹைகூ முயற்சிகளுக்கு நாற்றாங்காலாய் இருக்கின்ற கரந்தடி, இனிய ஹைகூ, அருவி, ஏழைதாசன், மகாகவி, சிறகு, நறுமுகை, புதியகாற்று, மதுமலர், தச்சன் போன்ற சிற்றிதழ்கள் சரியான ஹைகூகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சற்றே சுமாரானவற்றை படைப்பாளிக்கே அனுப்பி திருத்தித் தரச் செய்ய வேண்டும்.

2. நகலெடுக்கிறவர்களை... அப்பட்டமாக பிறர் படைப்புகளை கபளீகரம் செய்பவர்களை அம்பலப்படுத்த வேண்டும்.

3. முக்கியமாக கடுமையான விமர்சனம்! ஹைகூ எழுதுபவர்களை யெல்லாம் `உலகமகாகவி' அளவுக்கு புகழ்ந்து முதுகு தட்டி கொடுப்பதை இனிமேலாவது, இதழாசிரியர்களும் விமர்சகர்களும் நிறுத்த வேண்டும். மாறாக அவர்களை வளர்க்கும் வகையில் முறையான விமர்சனம் செய்யப்பட வேண்டும்.

4. பேரிதழ்களில் இடமடைப்பானாக (Gap filling) மூன்றுவரி வாமனர்கள் பயன்படுத்தப்படுவதை நாமறிவோம். இதழாசிரியர்கள் தரமான ஹைகூ முயற்சிகளை வெளியிடுபோதும், ஹைகூக்கு மரியாதை கிடைப்பதோடு பரவலான வாசகர்களிடம் செல்வதினால் படைப்பாளியும் கவனிக்கப்படுவான்.

5. புதிதாக எழுத வருபவர்கள் தனக்கு முன் வெளிவந்த ஹைகூ குறித்த படைப்பகளைப் படித்து புரிந்து கொள்ளல் மிக முக்கிய. கூடவே எல்லோரும் சொல்லிவிட்ட பாடுபொருள்களைத் தாண்டியும் சிந்திக்க, அனுபவங்களைப் பதிவு செய்யப் பழக வேண்டும்.

6. முக்கியமாக ஹைகூவை ஹைகூவாக எழுதவேண்டும். விடுகதைகளும், புதிர்களும் ஹைகூ ஆகாது. பெரிய வாக்கியங்களை மூன்று வரிகளில் மடக்கிப்போட்டு இதுதான் ஹைகூ என அடம்பிடித்தல் ஆகாது.

7. ஹைகூ எழுதுவது என்பது அனுபவப் பதிவு. தயவுசெய்து இனிமேலாவது பட்டாம்பூச்சிகளை, அய்யனார்களை, சிட்டுக் குருவிகளை, நிலாவை, பூக்காரிகளை குறிப்பாக விதவைகளை...விட்டு விடுங்கள் ஹைகூப் புலவர்களே.. அவர்கள் அவைகள் பிழைத்துப் போகட்டும்.

"ரொம்பத்தான் அனல் வீசுகிறது தராசின் வார்த்தைகளில்... அதெல்லாம் சரி... இந்தப் பெயர்க் குழப்பம் எப்போ தான் தீரும்.. ?

அதொன்றும் பெரிய விஷயமில்லை விமர்சகரே.... HAICOO என்பதை எப்படி வாசிக்கிறமோ அதே பெயரில் `ஹைகூ' என்றே அழைக்கலாம் என்பது என் கட்சி. ஜப்பானின் இலக்கிய வடிவத்தை ஏற்பவர்கள் அந்தப் பெயரை ஏற்கலாகாதா... `சுனாமி' (TSUNAMI) என்ற சொல்லைக் கேட்டவுடன் கடலின் கோரத்தாண்டவம் நமக்குமுன் வரிகிறதல்லவா.. அதைப்போலவே `ஹைகூ'வின் அனுபவங்களும் இருந்துவிட்டுப் போகட்டுமே! தமிழுக்கு ஒரு திசைச்சொல்லும் கிடைக்குமே!

ஹைகூ, ஹைக்கூ, ஐக்டு... அய்க்கு... துளிப்பா.... குறும்பா... அப்பப்பா... தமிழ்ல ஹைகூ வடிவத்துக்கு தான் எத்தனை பெயர்கள்?

தராசு நண்பா... இன்னொரு அய்யம்?

"கூறும் கூறிப்பாரும்...''

தமிழ்ல ஒருவரி.. ஒண்ணே முக்காலடி.. ரெண்டு

வரின்னு இலக்கிய வடிவங்கள் இருக்கும்போது

எதற்கு இன்னொரு நாட்டு இலக்கிய வடிவத்தை

இறக்குமதி செய்ய வேண்டும் என்று கேட்பவர்களுக்கு உன் பதில் என்ன... ?

"அது அறியாமையன்றி வேறென்ன! நீங்கள் குறிப்பிடுவது ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், குறள் போன்ற வடிவங்களைத்தான்! விமர்சகரே சற்றே கூர்ந்து கவனியும்! மேலே சொன்ன வடிவங்கள் யாவும் வாழ்க்கைக்கு வழிகாட்டுபவை... அறிவுரை சொல்பவை.. கட்டளையிடுபவை!

`அறம் செய விரும்பு' `கோல் கை கொண்டு வாழ்!'

`ஆலயம் தொழுவது சாலவும் நன்று!'

`கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக'

பாருங்கள்! எல்லாவற்றிலும் ஒரு குரல் `அதைச்செய்!' `இதைச்செய்யாதே' என ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும். ஆனால் ஹைகூ அப்படியில்லை. அது ஒரு அனுபவத்தைச் சொல்லி விட்டு மவுனமாகி விடுகிறது.

`நாற்று நடும் பெண்களின்
பாட்டில் மட்டும்தான்
சேறு படவில்லை'

`புகழ்பெற்ற ஜப்பானிய ஹைகூ இது! எதையாவது போதிக்கிறதா.. கட்டளையிடுகிறதா.. ஹைகூ பிரியர்கள் யோசிக்க வேண்டும்.

"சரிதான்! தமிழகச் சூழலில் ஜென் தத்துவங்கள் பொருந்துமெனத் தோன்றவில்லை. தமிழுக்கு ஏற்ற ஹைகூவை எப்படி உருவாக்குவது!''

"முடியாது என்று ஒன்றில்லை விமர்சகரே!

ஜென்னின் பின்னணி தாவோ மற்று புத்தமதக் கொள்கைகள். அதனால் அதன் அடிப்படை அனுபவத்தை உணர்வது.. சேகரிப்பது.... பதிவு செய்வது... தமிழில் அதை மிகச் சரியாகச் செய்யலாமே!

மேலு தமிழில் இயற்கை சார்ந்த, சூழலியல் சார்ந்த வெற்றிகரமான படைப்புகள் படைக்கப்பட்டே உள்ளன.

அங்கதச் சுவையோடு `சென்ரியூ' வகைக் கவிதைகளும் செய்யப்பட்டுள்ளன. சந்தமுடன் கூடிய நையாண்டிக்கு லிமரைக்கூ... உரைநடையும் ஹைகூவும் இணைந்து `ஹைபுன்'.. இப்போது ஹைபுன்னனில் ஒரு ஹைகூவோடு முத்தாய்ப்பு வைக்கப்படுகிறது. இரண்டு மூன்று ஹைகூ கூட எழுதலாம் என்கிறார்கள்.

நான் சொல்வதெல்லாம் புதிய அனுபவங்களுக்காக தவமிருங்கள்! ஹைகூ என்கிற வரம் வாய்க்கும். தமிழ் செழிக்கும்.


- நக்கீரன்@நறுமுகை.காம்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com