Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo
ஜூலை - ஆகஸ்ட் 2006

மென்மையும், மவுனமும், அளவில்லாக் காதலுமாய் மல்லிகைக்காடு
சூர்யோதயா

வலிகள் வார்த்தையாகி, வார்த்தைகள் கைப்பிணைத்து வரிகளாகி நிற்கும்போது, கவிகளாய் இதயத்திற்குள் வந்து உட்கார்ந்து விடுகின்றன. வேகவாழ்வும், அதிவேக உறவும், அதைவிட வேகமாய் முறிவும், நிகழக்கூடிய மும்பை என மாநகர வாழ்வை முன்னுரையில் படம் பிடித்துவிட்டு, அந்தப் பதற்றமேயில்லாமல் நூல் முழுவதும் மென்மையும், மௌனமும், அளவில்லாக் காதலுமாய்ப் பயணிக்கின்றன கவிதைகள்.

இதயம் புரியாமல் இயல்பாய்ப் பேசி ஒருவர் விலக, இயக்கமே தடைப்பட்டு நிற்கும் இவரின் காதல் நிரம்பிய இதயம் பல இடங்களில் காட்சிப் படுத்தப்படுகிறது. ஒரே பொருண்மை குறித்து பல கோணங்களில் எழுதியுள்ளது, எந்தக் கவிஞராலும் மிகுதியாகச் செய்யப் பெறவில்லை எனினும் சில நேரங்களில் அலுப்பூட்டுகின்றன.

பேசுவது குறித்து நிறையவே ‘வளவளவென்று' பேசுகிறார். நாம் வாழ்வில் சந்திக்கும் நிகழ்வைப் போலவே,

வாய்ப்புகளை / நழுவ விட்ட பின் /அழுகிறது மனம்
அடுத்து வரும்/ வாய்ப்புகளை / அறியாமலேயே

என நழுவவிட்ட வாய்ப்புக்காக அழுவதோடு, வார்த்தையோ வாக்கியமோதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பதை தீர்மானமாய்க் கூறிவிடமுடிகிறது கவிஞரால்.

காதலியோடு பேசும் பகுதிகள் சுவையானவை காத்திருக்கையில் அசைபோடும், அதற்கு முன்பே பேசிய பேச்சுகள், ஒருவர் கேட்க மற்றொருவர் சொல்லவென மணிக்கணக்காய் நீளும் பேச்சுகள், இதையெல்லாம் மனதில் பதியவிடாதபடி காதலியின் கைரேகைப் பதிவு அழுத்தம் இனிக்கவே செய்கிறது கவிஞருக்கு.

மனம் வலிக்கப் பேசும் தருணங்களில் உதிர்ந்துபோகும் மனப்பூவைப் பார்க்கத் தெரிகிறது கவிஞருக்கு. அதே நேரத்தில் அப்படிப் பேசுவது மற்றவர்க்கு வருத்தம் தருவது மீண்டும் தொடரும் மட்டரகப் பேச்சால் இவரைவிட்டுப் பிரிந்துப் போகும் இத்துணைக்காய் நம்மையும் வருந்துமாறு உயிர்க்கிறது இவரின் கவிதை.

அடுத்ததாக முத்தங்கள் குறித்து பல முத்தான விளக்கங்களைத் தந்துள்ளார்.

"நெற்றியில் தருவது வாழ்த்துதலாகும்
கைகளில் தருவது அன்பின் வெளிப்பாடு
கன்னத்தில் தருவது கவிதைக்கு ஒப்பு...

என நீள்கிறது கவிதை.

வெண்ணைப் பூச்சியின் வரவுக்காக மின்விசிறியைக் கழற்றிவைத்துக் காத்திருக்கும் கவிதைக்கே உரிய மென்மனம் இயல்பாய் வாய்த்துள்ளது கவிஞருக்கு. சூழ்நிலைகளால் தாக்குறுபவர்களும், இளகிய இதயம் பெற்றவர்களுமே தரமுடியும் உயிர்த்துடிப்பான படைப்புகளை நினைவுகளின் அலைக்கழிப்பால் உறங்காமல் தவிக்கும் கவிஞர் அவ்வுணர்வை,

"தூக்கக் கொப்புளங்களை
குத்திப் பார்க்கிறது கருப்பின் கூர்மை
நிகழ்வுகள் அனைத்தும் நினைவுகளாகிறது.
நித்தம் நீள்கிறது
நித்திரை தொலைத்த
இரவுகள்''

என்கிறார். கழிந்தற்கு இரங்கும் இயல்பு புறநானூற்று ‘தொடித்தலை விழுத்தண்டூன்றினார்' முதல், இன்றைய மதியழகன் சுப்பையா வரை அனைவர்க்கும் உரிய பொதுமைக் குணமாகும். ஒவ்வொரு நாளும் நாம் வயதைத் தொலைப்பதோடு. அந்தந்த வயதிற்கேயுரிய நிகழ்வுகளையும் தொலைக்கிறோம். என்பதை அவர்தன் பாணியில் பதிவு செய்துள்ளார்.

ஆதிக்கச் சமூக நிறம்கழுவி வெளுக்கத் தயாராகும் கவிஞர், அதற்காகக் காரியுமிழ்தலையும் ஏற்கத் தயங்கவில்லை என்பது ஆண்மையச் சமூகத்தில் அரிதான நிகழ்வே.

உணரவும் உணர்த்தவும் வார்த்தைகளே தேவையில்லை. புரிதலுள்ள இடத்தில் என்பதைக் கவிஞர் தம் கவிதையில்,

"அண்டம் முழுவதும்
அப்பியிருக்கும் ஆற்றல்மிகு
மௌனச் சொல்லால் உணர்த்தப் பார்க்கிறேன்
என் உயிர்குடையும்
உணர்வுகளை''

என்கிறார். ஆற்றல்மிகு அழகான சொல்லாய் கவிஞரால் தெரிவு செய்யப் பெறுவது மௌனம். அதைப் புரிந்துகொள்ளாத, மனதைக் கல்லாக்கிப் பிரியும் ஏற்காத காதலுக்காகவும் ஏங்குகிறது கவிஞரின் இளகிய இதயம். காதலி ஒருமுறைகூட இவரின் கண்களைக் காணாததால், காதலை உணராதவளாகவே இருப்பதைச் சுட்டுகிறது.

தொலைபேசி எண்ணைக் குறித்துவிட்டு பெயர் எழுதாமல் விட்டுவிடுவதும், பிறகு ஒருநாள் பெயர் குறிக்க மறந்துபோன எண்ணைப் பார்த்துப் பதைப்பதும், அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் சந்திக்கும் சாதாரண நிகழ்வுதான் ஆயினும் அவ்வனுபவமும் கவிதையாவது, கவித்துவம் மிக்கவர்க்கே சாத்தியம். "மௌனம் சம்மதம்” என்பது பழமொழி ஆயினும் எல்லா நேரங்களிலும் மௌனம் சம்மதத்திற்கான அறிகுறியாய் இருப்பதில்லை, என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

உனக்கு / புன்னகை மூட்ட
புன்னகை மூடி பொருத்திக் கொண்டுள்ளேன்

என்றெழுதி நனையச் செய்துவிடுகிறார் மகிழ்வில்.

‘நித்திரை ஆழியுள்ள விழுந்து மறைகிறேன்
தட்டி எழுப்புகிறதுன் நினைவு விரல்கள்'
‘ஊழிக்காற்றையே சுவாசித்தும்
மூச்சுத் திணறுகிறேன்
ஆறுதல் ரத்தம் அவசியப்படும்
இந்நிலையில் அப்புறமென்னும்
நச்சுச் சொல்
உறிஞ்கிறதென் உயிரை'

ஏதோவோர் அன்பில் தொலைந்து போன இவரை மீட்டெடுக்காது, மேலும் அழுத்துகிற உறிஞ்சுகிற ‘அப்புறம்' என்னும் சொல்லைச் சாடுகிறார் கவிஞர்.

சில வேலைகள் பெண்களுக்கேயானது என்னும் சமூகப்பார்வையும் இவர் கவிதையில் வெளிப்பட்டுள்ளது. அம்மாவிற்கு ஒத்தாசையாய் அடுக்களையில் இருந்ததால் கேலிசெய்யப்படும் இவரின் ஆண்தன்மையையும் சுட்டிக் காட்டி வருந்துகிறார். நம்மையும் வருந்தச் செய்கிறார்.

‘கண்களின் பீழையைப் போல்
மிக எளிமையாய் / அகற்றுகிறாய் என்னை'

என்பது வித்தியாசமான புதுவித உவமையாகும்.

பேருந்தில் கை தூக்கி நின்றவளின் கிழிந்த ரவிக்கைக் காட்சி, செங்குத்துப் படுக்கைப் போன்ற கவிதைகளில் எந்தக் கவித்துவமும் இல்லை. இத்தகைய அனுபவங்களை கவிதைக் கருவாய்த் தேர்வதைத் தவிர்க்கலாம். எதிர்காலத்தில் கவிஞர்,

எழுத்தாளர்களுக்கு சமுதாய அக்கறையும் பொறுப்புணர்வும் மிகவும் அவசியம். மேலும் எழுத்துப்பிழைகள் நிறையவே இடம்பெற்றுள்ளன. இனிவரும் பதிப்புகளில் பிழைகளைத் தவிர்க்கலாம்

பன்மொழி அறிந்த இவர் வேற்றுமொழியின் இனிய கவிதை வளங்களை தமிழ் மொழியின் பேரேட்டில் வரவு வைக்கலாம்.

மல்லிகைக் காடு கவிதைகள் - மதியழகன் சுப்பையா, மருதா பதிப்பகம், சென்னை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com