ஆகஸ்ட் 15
பெரணமல்லூர் சேகரன்
குண்டு துளைக்காத
கண்ணாடி கூண்டுகள்
பாதுகாப்பு பற்றி பேசுவார்
பிரதமர்
வல்லமை காட்ட
அணிவகுக்கும்
அணு ஆயுத பீரங்கி டாங்குகள்
தேச வறுமையை
வசதியாய் மறைக்கும்
வறுமை வேலையின்மையை
விரட்டுவதாய் வாய்வீசும்போது
மான்யக் குறைப்பும்
ஆட்குறைப்பும்
வேலை நியமனத் தடையும்
பூமராங்காய்...
குடிநீர் கிடைப்பது அரிது
அபாயச் சங்கூதுவோர்
அபயமளிப்பர்
பெப்சிக்கும் கோக்கிற்கும்
மகளிர் முன்னேற்றம்
மகோன்னத மென்பர்
இட ஒதுக்கீட்டை
மடைமையாக்குவர்
உணவு தானிய இருப்பு
நிரம்பி வழிவதாய்
தம்பட்டமடிப்பர்
பிரிதொருபுறம்
பட்டினிச் சாவுகள்
பாரதத்தில் பறையறையும்
மானுட ஒற்றுமை
ஊருக்கு உபதேசிக்க
வேருக்கு வெந்நீரூற்றும்
பிரிவினை சக்திகள்
இவர்களுக்கு
வாய்ப்பு வாசலின்
கதவுகள் அடைத்தலும்
மனிதம் பேணுவோரையே
இனிநாம் சிவப்புக்
கம்பளத்தில்
இனிதே வரவேற்றலும்..
வேற்றுமையில் ஒற்றுமை
தோற்றுப் போகாதென
தோற்றம் கொள்வதும்
போற்றும் சுதந்திரத்தின்
கீற்றுச் சபதம்.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|