Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo

விட்டு விடுதலையாகும் றஞ்சனி கவிதைகள்
மதியழகன் சுப்பையா

முதலிரவு அறைக்குள் நுழைய மறுக்கும் மகள் தன் தாயைப் பார்த்து "நேற்று ஒரு ஆம்பிளை கிட்ட என்னை இப்படி அனுப்பிருப்பியா? இன்றைக்கு தாலிங்கிற இந்த கயிற கட்டின உடனே நான் என்னை அவனுக்கு கொடுத்திடனுமா? வேண்டாம்மா” என்று மறுப்பதாய் தனது நாயகியை வசனம் பேச வைத்திருந்தார் இயக்குனர் மணிரத்தினம். ‘எவனோடவாவது நான் போயிட்டு வந்தா நீ ஏத்துக்குவியா' என இயக்குனர் பாலு மகேந்திரா பெண் மொழியில் பேசியிருந்தார். இப்படி பெண்களுக்காய் ஆண்கள் மெனக்கிட்டு சிந்தித்து வந்தார்கள் அன்று.

‘எங்களுக்கான சுதந்திரத்தை நாங்களே வாங்கிக் கொள்கிறோம். எங்கள் மொழியில் எங்கள் பிரச்சனைகளை நாங்களே சொல்லிக் கொள்கிறோம்' என பெண்களே பொறுப்பேற்றுக் கொண்டார்கள் இன்று.

சமீப படைப்பிலக்கிய முயற்சிகளில் காணும் பெண் குரல் பதிவுகள் யாவும் ஆணாதிக்கச் சமூகத்தில் அதிர்ச்சியான சவுக்கடியாக உணரப்பட்டு வருகிறது. வலி பொறுக்காமல் ஓலமிடும் ஆண் சமூகம், கண்டு கொள்ளாமல் தனது சாட்டை வீச்சுகளை மேலும் துரிதமாகவும் பலமாகவும் வீசுகிறது பெண்மை. குருதியொழுக மறு தாக்குதலுக்கு தயாராகும் ஆண்வர்க்கம் மீண்டும் காயப்பட்டு அவமானப்படுகிறது.

உலகமெங்கும் பெண்களின் மொழி ஒன்றாகவே ஒலிக்கிறது. பெண்களின் படைப்புகளில் சமூக அக்கறை இல்லையென்ற குற்றச்சாட்டை ஆண்வர்க்கம் வைக்கிறது. அது ஏற்புடையதா எனத் தெரியாது. ஆனால் தனித்தனி மனிதர்களின் சேர்க்கை தான் சமூகம் என்பது. இவ்வாறு தனி மனித பிரச்சனைகள் ஒரே மாதிரியான பிரச்சனைகளாக இருக்கும் போது அதற்கு பொதுத் தீர்வு வேண்டப்படுகிறது. அப்படியானால் அது பொதுப் பிரச்சனையாகிறது. தனிப் பிரச்சனை என்பது பொதுப் பிரச்சனையாகிவிட்டது. இனி பொதுப் பிரச்சனை என்பது தனித்தனியானவர்களின் பிரச்சனைதான்.

அப்படியானால் சுய புராணங்கள், அழுகுணிக் கவிதைகள் ஏக்கங்கள், காம வேட்கை, என பலவாறாக வர்ணிக்கப்பட்டு வரும் பெண்களின் கவிதைப் பகுதியில் அதிகப்படியாகக் காணப்படும் பிரச்சனைகள் யாவும் சமூகப் பிரச்சனைகள்தாம்.

குற்றவாளியிடம் அவன் செய்து வரும் குற்றங்களை சுட்டிக் காட்டுகையில் கோபத்துடன் மறுக்கிறான். அப்படியில்லையென சாதிக்கிறான். அது போல பிரச்சனையான ஒரு வர்க்கத்திடமே தனது பிரச்சனையை வைக்கிறது எதிர் வர்க்கம். அதனால்தான் இன்று சரியாக அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறது.

தனது தாய் நாடான இலங்கையை விட்டு ஜெர்மனியில் புலம்பெயர்ந்திருக்கும் கவிஞர் றஞ்சினி மிக மிக எளிய நடையில் எதார்த்த மொழியில் தனது கவிதைகளை தந்துள்ளார். புலம் பெயர்ந்து அகதிகளாய் ஜெர்மனியில் குடியேறியது குறித்து முன்னுரையில் அவர் குறிப்பிட்டுள்ள விதம் அவரது அனுபவங்களையும் பக்குவத்தையும் உணர்த்துகிறது. ஆனால் ஏனோ அந்த வாழ்வியல் குறித்தப் பதிவுகளைத் தனது கவிதைத் தொகுதியில் இணைக்காமல் விட்டு விட்டார்.

றஞ்சினி தனது முதல் கவிதைத் தொகுப்பில் தனது சிறிய வட்டத்தைப் பற்றியும் அதற்கு தான் அனுமதித்தப்படி வந்து போனவர்கள் பற்றியும் நிறையவே எழுதியுள்ளார்.

‘ஆண்' என்ற தலைப்பிட்ட கவிதையில் பல ஆண்களின் வாய்ச் சொல் ஒரே அச்சிலிருந்து வடிவமைக்கப்பட்டது போல உணரச் செய்யும்படியான பதிவு செய்துள்ளார்.

அவள் பொறுமை இழந்து
நீ ஆண் என்கிறாள்
அவன் ஒரேயடியாக மறுக்கிறான்

என்று முடிக்கும் போது ஆண்கள் தங்கள் முகத்திரை கிழிய கைகளால் மெய்முகங்களை பொத்திக் கொண்டு ஓடுவது போல் இருக்கிறது.

எதற்குள்ளும் / எவர்க்குள்ளும்
அடங்கிவிட முடிவதில்லை என்னால்
இவை புரிதலின் விளைவுகள்
வாழ்வை உறவை நேசிக்கிறேன்

என்று தனது புரிதல்களை நமக்கும் புரியச் செய்கிறார்.

உன் நெருக்கமில்லா
ஒவ்வொரு பொழுதும் பிந்தியே
விடிகிறது

என்று படுக்கையில் தனது அருகே உள்ள சூன்யத்தை உறக்கத்தால் நிரப்புகிற கடும் தனிமையை மென்மையாய் தெரிவித்தலாக எடுத்துக் கொள்ளலாம்.

அன்பை கொடுக்கவும் / அன்பை எடுக்கவும்
எமக்கிருக்கும் உரிமை பறிபோகாத வரை
நாம் காதல் செய்வோம்

என்று சம உரிமையை அறிவிக்கிறார்.

ஓவியனே
என்னை நிர்வாணமாக்கும் நினைவை விட்டு விடு
அது என்னாலேயே முடிவதில்லை இலகுவாக
என் உடல் பற்றிய பிரஞ்ஞை சிறுவயதிலேயே
அளிக்கப்பட்டு
அடக்கப்பட்டுவிட்டது.
என் கலாச்சார விழுமியங்களை இன்னமும்
முழுதாகத் தாண்டிவிட முடியவில்லை
இது எமது கலாச்சார தாக்கங்கள்
தூக்கி எறிந்தாலும் தொடரும் எம்முடன்

பல்வேறு தேசங்களில் வாழ்வியல் துயரம் காரணமாக புலம்பெயர நேர்ந்தாலும், தமது தமிழ்ப் பண்பாட்டினை பாதுகாக்கும் பெண்மையின் வரிகள் இவை.

"எனது நோக்கம் பெண்களால் தமது எண்ணங்களை, ஆற்றலை, உணர்வுகளை எந்தக் கலாச்சாரக் கட்டுப்பாடுகளும் தடைகளுமின்றி பயமின்றி துணிந்து எழுத முடியுமென்ற சுதந்திரத்தை வலியுறுத்துவதே'' என முன்னுரையில் குறிப்பிடும் கவிஞர் றஞ்சனியின் கவிதைகள் சுதந்திரத்தைப் பேசுபவை, பேணுபவை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com