அணுத்துவம் இலக்குமி குமாரன் ஞானத்திரவியம்
வான் மட்டுமே மூடியிருக்கும்
உரச்சாக்குகளால் வேயப்பட்ட
குளிப்பறையில் காலைக்கருக்கலில்
நீராடும் கட்டடத் தொழிலாளப் பெண்ணை
மொட்டை மாடியில் நிற்பவர்
யதேச்சையாப் பார்த்துவிட்டு
நடுங்கிப் போய்
நீளும் பார்வை யொளியை
மீண்டும் உறிஞ்சிக்கொள்வதைப் போல்
விழிமலர்களை திருப்பிக் கொள்ளவியலாமல்
சடசடவென இறங்கியோடமுடியாமல்
உள் நடுங்கி நின்றன மரங்கள்.
பாலமைப்பருவத்தில் இழைக்கப்பட்ட
ஒரு அவமானமென
சிறுநீர்வீங்கி உறுத்திக் கொண்டிருக்க
கிளுவை வேலிக்கருகில்
தவிர்க்கவியலாமல் அமரும் பெண்ணை
காணக்கூடாத இடத்திலிருந்து
குறுகுறுப்பாய் பார்க்கும்
மனிதனின் முகத்தில் உமிழும்
இல்லக் கிழத்தி போல
காறியுமிழ இயலாமல்
தவித்தன குறுஞ்செடிகள்...
மேலடுக்கில் இருக்கும்
குறிப்பேடுகளை எடுத்துத்தாவென
ஏணியேற்றி விட்டுவிட்டு
கீழிருந்து அண்ணார்ந்துப் பார்க்கும்
எட்டாம் வகுப்பாசிரியரை
செருப்பாலடிக்கும் பால்காரக்கிழவியைப்போல்
ரோசம் கொள்ள கையற்றுத்தவித்தன
புல்கூட்டமெல்லாம்...
இந்தியப்பிதாவின் சமாதியை
கொழுப்பேறிய நாயொன்று
முகர்ந்தபோது....
(அணுத்துவம் = சிறுமை)
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|