Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo

‘சனங்களின் கதை' தொடங்கி வைத்த கவிஞர் பழமலயின் கவிதை மரபு
விழி.பா. இதயவேந்தன்

கவிதைகளின் வடிவங்கள் உத்திகள் கையாளும் விதங்கள் பற்றி 19ஆம் நூற்றாண்டில் நிறைய சோதனைகள் நிகழ்ந்தன. மரபுக் கவிதையின் பிடியிலிருந்து மெல்ல விலகத் தொடங்கிய பாரதியின் கவிதைகளும் அதன் பின்னர் பாவேந்தர் கவிதைளும் மக்களுக்கான வடிவங்களைத் தேர்ந்தெடுத்து கவிதைகளை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றன.

1959க்குப் பிறகு எழும்பிய ‘எழுத்து' வானம்பாடி காலக்கட்டக் கவிதைகள் உருவம் உள்ளடக்கம் இவைகளோடு கவிதை மொழியினை இன்னும் எளிமைபடுத்த முயன்றன எனலாம். ஆனாலும் அவற்றின் தொடர்ச்சியாய் பலர் மரபுக்கும் புதுமைக்குமாக ஒரு ஊசலாட்டமாய் இருந்தார்கள். பாடு பொருள் இருந்து கவிதைகள் புரியாமலும் கவிதைகளிலிருந்து கரு சிதைந்து போயும் உள்ள நிகழ்வுகள் பலவற்றை அறிய முடிகிறது.

மாறாக, முறையாக தமிழ்ப் படித்து மரபுகள் அறிந்த பேராசிரியர், கவிஞர் த. பழமலய் நூற்றாண்டுகால கவிதை மரபுகளை உடைத்துக் கொண்டு எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையில் இடைவெளியேதுமின்றி புதுக் கவிதையில் ஓர் நவீனத் தன்மையை ஏற்படுத்தியப் பெருமை 1988 இல் வந்த ‘சனங்களின் கதை' யைச் சொல்லலாம். 1996 இல் இது மறுபதிப்பு கண்டது.

மன்னர்களின் பெருமைகள் பற்றியும், காதல், வீரம் வான், நிலவு சோலை வனங்கள் பற்றியே புகழ்ந்து பாடிய கவிதைச் சூழலில் பிரச்சனையை வெகுமக்கள் மொழியிலேயே எளிமையாகக் கையாண்டவர் பழமலய். அவர் கவிதைகள் காட்டும் உலகம், கவிதைகள் மனிதர்களிடமிருந்து அந்நியப் பட்டுப் போகாமல் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.

சனங்களின் கதையின் கவிதைகள் அனைத்தும் உண்மைகள் தாம். இட்டுக்கட்டிய கற்பனைகள் அன்று. வேளாண் குடும்ப சூழலின் பின்னணியில் உள்ள மனித உறவுகளின் பலம் மற்றும் பலவீனங்களை கவிதைகள் பேசுகிறது. "எம். தங்கவேல் படையாக்ஷி'' யின் குடும்பக் கவிதையாகப் பார்த்த சிலருக்கு மத்தியில், பரந்துபட்ட விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைப் பதிவானதை அவ்வந்த வட்டார மக்களின் உணர்விலிருந்து புரிந்துகொள்ள வைக்கிறது; வர்க்க முரண்பாடுகளை விரிவாக அலசுகிறது.

இவர் கவிதையில் வரும் அம்மா, அப்பா, ஆயி, மாமா, அத்தை, மனைவி, தாத்தா, என எல்லாரும் நம்மின் சூழலோடும் பொருந்துபவர்கள் அரிதாரம் பூசாத இயல்பு வாழ்க்கையில் வாழும் மனிதர்கள்தாம் இவர்கள்.

"அம்மா, உன் வறுமை
வாழைப்பழத்தின்
தோலும் நாங்கள் எறிந்தால் தான்!”

எனத் துவங்குகிறது இந்நூலின் முதல் கவிதை.

வாழ்வில் துவண்டுபோன எளிய மக்கள் தங்களுக்கு பொன்னான வாழ்க்கை கிடைக்காத பட்சத்தில்

"எங்கள் சனங்களைப்
பொன் படுத்தும்பாடு, புண்படுத்தும்பாடு!
கதைகளைக் கேட்டால்
நிமிசங்கள் கைக்கும்; நிறங்களை இழக்கும்''

என்கிறார்.

"கீழைக் காட்டு வேம்பு கசந்தது
அம்மா சோகம் கேட்டுக் கேட்டுத்தான்''

மண்ணின் கலைகளை மண் சார்ந்தும் அதன் வேர்கள் சார்ந்தும் கவிதைகளாய்ப் படம் பிடித்துத் தருவது இவரின் தனிக் கலையாக இருக்கிறது.

‘பழமலய் பாணி என்றெல்லாம் ஒண்ணுமில்ல' என்று தன்னடக்கத்தோடு குறிப்பிடும் கவிஞரின் இப்புதுக் கவிதையின் நவீன மொழியைப் பற்றிக்கொண்டு இளைஞர்கள் பலர் அவ்வந்த மண் சார்ந்து கடந்த பத்தாண்டுகளாக எழுதி வெற்றி கண்டிருக்கிறார்கள். இன்னும் எழுதுகிறார்கள். பல கவிஞர்கள் விமர்சகர்களுக்கு இடையே இவரது கவிதைகள் மிகுந்த வரவேற்பையும் நெஞ்சில் சலசலப்பையும் உண்டாக்கியிருக்கிறது.

இன்று கவிஞரிடமிருந்து பல கவிதைத் தொகுப்புகள் வரப் பெற்றாலும், சாதாரண மக்களின் பேச்சு வழக்கையும், உடைநடையையும் கவிதைக்கான கருவிகளாக்குகிறது. என்று கவிஞர் இந்திரன் சொல்வதுபோல் ‘சனங்களின் கதை'யைப் படிக்கிற எவர்க்கும் "இது நம்ம சனங்களின் கதை” என்னும் உணர்வினையும் தாக்கத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது எனலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com