நிலாப்படுக்கை ப. சிவகாமி IAS
கசியும் பார்வையின் ஈரம் உலருமுன்
காதவழி செல்லவேண்டும்
நிலா உலர்த்திய
வெதுவெதுப்பான படுகைக்கு
அதுவரை
பக்குவமாக உருட்டவேண்டும்
சர்க்கரை துகளை
ஒரு எறும்பைப் போல்
அல்லது
நீர்க்கலத்தை உள்ளடக்கிய
பாலைவன ஒட்டகம்போல்
அல்லது
சகுனியின் தாயம்போல்
ஈரேழு வருடங்கள் காத்திருக்க
இடையில்
பேச்சுக்கள் உதிர்ந்திடாதிருக்க
முத்தங்கள் மழையாகலாம்
தயாரிக்கப்பட்ட
ஏவுகணை பறந்துவிடாதிருக்க
கவிதைகள் பயன்படலாம்
நீட்டித்த விடுமுறைகள்
முத்தங்களைப்போல்
தழும்புகள் கொணரும், கவனம்
புல்லோ பூவிதழோ கொடுத்து
பத்திரப்படுத்தியவை
அழுகுமுன் புதுப்பிக்க தடையேதுமில்லை
இடைக்கால ஒப்பந்தமாய்
மாலைகளோ சரடுகளோ
அணிந்தும் கொள்ளலாம்
எனினும்
வேட்கை தீர்ந்தவுடன் வேகத்துடன்
தப்பிக்கும் இப்பறவையை
கண்ணிவைத்து மட்டும் பிடிக்கமுடியாது
ஈரத்துடன் நிலா உலர்த்திய படுக்கையில்
நிலைத்தவர் எவருமில்லை
இதுவுமிருக்கட்டும் ஓரமாய்
அன்றலர்ந்த மலர்கள்
புகைமூட்டமானதொரு மங்கலான வெளிச்சம்
கனவுக்கொடியில் தொங்கும் திரைச்சீலைகள்
நட்சத்திரக்கோடிகளின் சாட்சிகள்
நரம்பில் லயத்துடன் ஊடுருவும் கீதம்
இவற்றுடன்
எப்போதுமுனது நிரந்தரமாய்
வெற்றிகொள்ளவியலாத
அந்நிலாப்படுக்கை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|