Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo

இந்தியக் கவிஞர் வரிசை - மகாதேவி வர்மா : (1907 - 1987)

Mahadevi Varma மகாதேவி வர்மா இந்தி இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான நவீன கவிஞர். அவர் நவீன மீரா என்றப் பெயரில் இலக்கிய உலகிலும் வெளியிலும் அழைக்கப்பட்டார். சாயாவத் தலைமுறைக் கவிஞர்கள் முக்கியமான நான்கு பேர்களில் இவர் முக்கியமானவர். நவீன இந்திக் கவிதையின் ரொமான்டிசிச காலத்தில் தீவிரமாய் இயங்கியவர்.

உத்திரப் பிரதேசத்தின் பாருக்காபாத்தில் வழக்கறிஞர்கள் குடும்பம் ஒன்றில் மகாதேவி வர்மா பிறந்தார். மத்தியப் பிரதேசத்தில் கல்வி கற்றார். இரண்டு சகோதரர்கள் மற்றும் சகோதரிக்கு மூத்தவர். இவருடைய ஒன்பதாவது பிஞ்சு வயதில் 1914ல் இந்தோரைச் சேர்ந்த ஸ்வரூப நரைன் வர்மா என்பவருடன் திருமணம் முடித்து வைக்கப்பட்டது. இவரது கணவர் லக்னோவில் படித்து வந்தார். கணவரின் படிப்பு முடியும் வரை தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். இந்த காலகட்டத்தில் அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதத்தில் M.அ. பட்டம் பெற்றார். 1920ல் தனது கணவருடன் தம்கோய் என்னும் இடத்தில் வசித்து வந்தார். பின் தனது கவிதைப் பணிகளை மேற்கொள்ள தனது கணவரின் அனுமதியோடு அலஹாபாத் வந்து விட்டார்.

மகாதேவி வர்மாவும் அவரது கணவரும் தத்தம் துறைகளில் ஈடுபட வேண்டி பிரிந்து இருந்தனர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சந்தித்துக் கொண்டனர். 1966ல் மகாதேவி வர்மா தனது கணவரை இழந்தார். அதன்பின் அவர் தனது இறுதி காலம் வரை அலஹாபாத்திலேயே தங்கி விட்டார்.

மகாதேவி வர்மாவுக்கு புத்த மதத்தில்மிகுந்த ஈடுபாடு இருந்து வந்தது. இவர் விடுதலைப் போராட்டத்திலும் கலந்து கொண்டார். அவர் புத்தபிட்சுனியாகக் கூட மாற முயன்றார்.

அலஹாபாத் மகளிர் பல்கலைக் கழகத்தின் முதல் பெண் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார். இந்தி மொழி வழியாக மாணவிகளுக்கு இலக்கியத்தை கற்பிக்கும் சிறப்பைப் பெற்றார். பின் அப்பல்கலைக் கழகத்தின் மேலாளராகவும் பொறுப்புயர்வு பெற்றார். இந்தி இலக்கிய உலகில் சாயாவத் காலகட்டத்தில் சிறந்து விளங்கிய சூர்யகாந்த் திரிபாட்டி நிராலா, ஜெய்சங்கர் பிரசாத் மற்றும் சுமித்ரநந்தன் பந்த் போன்ற நான்கு கவிஞர்களுள் மகாதேவி வர்மாவும் ஒருவர்.

மகாதேவி வர்மா ஒரு ஓவியரும்கூட இவர் தனது தீப்ஷிகா, மற்றும் “யாத்திரா” போன்ற கவிதைகளை ஓவியமாக வரைந்தார். இவருடைய நினைவு குறிப்புகளாக வெளிவந்த ‘அதித கே சல்சித்ர’ (கடந்தகால சித்திரச் சட்டங்கள்) மற்றும் ‘ஸ்மிரிதி கி ரேகாயேன்’ (நினைவுக் கோடுகள்) ஆகியனவும் அவரது “தீப்ஷிகா” தொகுதியும் காலத்தால் அழியாதவை.

மகாதேவி வர்மாவின் பெரும்பாலக் கவிதைகளின் கருப்பொருளாக மனவலி இருந்திருக்கிறது. இந்த வலி தனது இறைவனை பிரிந்ததால் ஏற்ப்பட்ட வலி என்று குறிக்கப் படுகிறது. விமர்சகர்கள் இவரை பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் துறவி மீராபாய் க்கு ஒப்பிடுவார்கள். மீராவைப் போல் மகாதேவி வர்மாவும் தனது திருமண வாழ்க்கையை விட்டு தன்னை முழுமையாக எழுத்திற்கு அர்ப்பணித்துக் கொண்டவர்.

இவரது கவிதைகளில் தொலைவிலிருக்கும் தனது தலைவனை நினைத்து ஏங்குவது போல் இருக்கிறது. விமசகர்கள் இதனை கடவுளை நினைத்து நினைத்துப் பாடுவதாக குறிப்பிடுகின்றனர். இவரது மொழி தட்சம் மற்றும் தப்தவ் வார்த்தைகளால் ஆனது. தனது தீப்ஷிகா தொகுதியில் 51 மாறுபட்ட முறையில்கவிதைகளை அமைத்துள்ளார். இந்தி மொழியில் ரகஷ்யாவாதம் என்று புதிய யுகத்தை துவக்கி வைத்தவர் என்ற பெருமைக்குரியவர்.

இவரது யாமா (1940) என்னும் கவிதை தொகுதிக்காக ஞானபீட விருது பெற்றார். மேலும் இந்திய அரசு சார்பாக பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. 1979 ல் சாஹித்திய அகாடமி சார்பில் பெல்லோஷிப் வழங்கப்பட்ட முதல் பெண்மணி இவரே ஆவார்.

கவிதையையும் வாழ்க்கையும் வேறுபடுத்திப் பார்க்காதவர் இவர். வாழ்வியலுக்கு இடையில் கவிதைகள் எழுதும் கவிஞர்கள் மத்தியில் கவிதைக்காக தவமிருந்து கவிதை எழுத வேண்டி வாழ்ந்தவர். காலம் உள்ள மட்டும் கவிதைகள் உள்ள மட்டும் மகாதேவி வர்மாவின் பெயர் இருக்கும்


அதிகாரம்

மரித்துப் போகத் தெரிந்த
புன்னகைக்கும் பூக்களல்ல
அணைந்து போகத் தெரிந்த
விண்மீன் தீபங்களல்ல

கரையும் ஆசை கொண்ட
நீலவண்ண மேகமல்ல
போகும் திசை நோக்கும்
ஆனந்த காலமும் அல்ல

கண்ணீர் சொரியும்
அமைதியான கண்களல்ல
துன்பங்கள் உறையும்
உயிரின் கூடுகள் அல்ல

உந்தன் வேதனையில்
வேறுபாடு இல்லை
எரிதல் அறியாத நீ
அழிவை அறிந்திருந்தாய்

கிடைக்குமா எனக்கு
கருணையின் கனிவு
இருக்கட்டும் கடவுளே!
மரிப்பது எனது அதிகாரம்


ஒருமுறை நீ வந்து விடு

எத்தனை அன்பு எத்தனை தூது
பாதையில் வைத்தேன் பார்வைகளை
உயிரின் கம்பி துடிக்கப் பாடுகிறேன்
உன்மத்த ராகத்தை சுகமாக

கண்ணீரை வாங்குகிறது காலம்
ஒருமுறை நீ வந்தால் உயிர் மீளும்
நொடியில் மலரும் விழிப்பூ
உதட்டில் மணக்கும் சிரிப்பூ
வாழ்வில் படரும் வசந்தம்
தருவேன் உனக்கெனைச் சொந்தம்

கண்களால் என்னை கொட்டிவிடு
ஒருமுறை, ஒரேயொருமுறை
நீ மட்டும் வந்துவிடு.

தமிழில் : ஆனந்த செல்வி


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com